Monday 22 August 2011

பரளிப்புதூர் தலித்துகள் மீது தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை

திண்டுக்கல்  மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் கிராமத்தில்  2011  பிப்ரவரி 13  இரவு தலித்துகள் மீது முத்தரையர் வகுப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து உண்மை அறியும் குழு அறிக்கை


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர்  என்னும் கிராமம் மதுரை மாவட்டம் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் திண்டுக்கல் மாவட்ட கிராமம். இங்கு  தலித் பிரிவினைச் சேர்ந்த பறையர்கள் 84 வீடுகளும் முத்தரையர் சமூகத்தினர் 600  வீடுகளும் உள்ளனர். இங்கு முத்தரையர் சமுதத்தினரே பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர்.

இங்கு சாதி தொடர்பான பெரும்மோதல்களும், வெளிப்படையான  பிரச்சனைகளும் இதுவரையிலும் நடந்திராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு புகைச்சல்கள் எழுந்து அடங்கி வந்துள்ளன. இக்கிராமம்  மதுரையிலிருந்து நத்தம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலைவழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. அவ்வாறு செல்லும் சாலையில் முதலில் தலித் குடியிருப்பும்,  அதிலிருந்து பிரிந்து செல்லும் சாலை வழியாக அரைகிலோ மீட்டர் தூரத்தில் முத்தரையர் வசிக்கும்  குடியிருப்பும் அடுத்ததாக அமைந்துள்ளது.

இங்கு கடந்த 2011  பிப்ரவரி 6ம் நாள் தலித் பகுதியில் நடந்த திருமண நிகழ்சிக்காக தலித் மக்கள் சார்ந்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கொடியும், தி மு க கொடியும் அம்மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள காலனி நீர் தேக்கத்தொட்டி மீது அம்மக்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடிகள் நீர்த்தேக்கத் தொட்டி மீதே மூன்று நாட்கள் வரையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் முத்தரையர் சிங்கச்சின்னம் பொறித்த முத்தரையர் சாதிச்சங்க கொடியினை கொணர்ந்து தலித் மக்கள் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டி மீது கட்டினர். ஊரின் முகப்பிலேயே தலித் தரப்பு அடையாளம் ஒன்று தான் எல்லோரையும் வரவேற்பது போல் அமைந்திருக்கிறது என்ற சாதிசார்ந்த பொறாமையினால் அது கட்டப்பட்டது என்பதே தலித்மக்களின் குற்றச்சாட்டு. சாதி சமுகத்தின் அத்தகைய உளவியல் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இச்சிக்கலான நிலையை புரிந்து கொண்ட தலித் பகுதி அடங்கியுள்ள பகுதியின் ஒரேயொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பஞ்சு என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சமூகத்தினை சேர்ந்த நல்லியப்பன் என்பவரிடம் நிலைமையை சொன்னார்.

"உங்கள் கொடியை கழற்றிவிடுங்கள், எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்க கூறுகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். 

இதற்கு மறுநாள் மாலை பஞ்சு தலித்தரப்பு கொடியை அவிழ்க்க சென்ற போது முத்தரையர் சாதிசங்கக்கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்பு கொடியோடு அச்செருப்பையும் அகற்ற முயற்சித்தார். அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக்கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப்புதூரை சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள்  15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலைகளில் வந்திறங்கினர். அதனாலேயே அந்த செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர் தரப்பு கூறியிருந்ததாக தெரிகிறது.

தலித்துகள் செருப்பைகட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் தனித்துவ அடையாளத்தை முடக்குவதற்ககான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது" என்று அதனை தலித் தரப்பு மறுக்கிறது.

நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை  மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு பத்துக்கும் குறைந்த காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது  தாங்கள் சற்றும் எதிர்ப்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். 

பெட்ரோல்,கம்பு, கடப்பாரை, ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300  பேர்  பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளை தாக்கினர். ஓட்டு வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்பைக்குகளும், சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும்  பாத்திரங்கள் டிவி பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு  கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து விடுதலைச்சிறுத்தைகள்  கட்சியின் கொடிகம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப்பட்டது. திருமாவளவன் படம் வரையைப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அரைமணிநேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது. ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில்  இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.

தாக்குதல் நடந்து இரண்டு நாளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. காவல்துறையின் நடவடிக்கை திருப்திதரக்கூடியதாக இல்லை.  உரிய பிரிவுகளில்  வழக்குபதிவு செய்யப்படவில்லை. SC/ST (ACT)1989 - ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.
  
தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினைச் சேர்ந்த நைனார் என்பவரையும்  அய்யாவு என்பவரையும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போதுவரையிலும் பரளிப்புதூர் தலித்மக்களுக்கு தெரியாது. இது நியாயமற்ற கைது.

உண்மை அறியும் குழு நேரடியாக பார்வையிட்டதன் அடிப்படையில் சேதங்களின் அளவானது. தலித் காலனியில் 98 சதவிகித வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடமும்,கோயிலும் மட்டுமே விடப்பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள வீடுகளில் ஓடுகள் சேதம் என்ற அளவில் 25 சதவிகிதமும், பொருட்கள் சேதம் தீவைப்பு எனும்- அளவில் 75 சதவிகித வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட மோட்டார்பைக்குகள், 10-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், வைக்கோல்படப்பு,பாத்திரங்கள்,டிவிகள் ஆகியவை சேதப்பட்டுள்ளன. குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகி வீட்டுக்குள் இருந்த அழகுமீனா என்ற பெண்ணும் கூட வீட்டிலிருந்து ஓட முடியாமல் ஓடியிருக்கிறார்.கர்ப்பம் இருந்த மாரிதேவி என்ற பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியுள்ளது. பெண்கள் அச்சத்தினால் வீடு ஒன்றில் மறைந்த பின்பும் கடப்பாறையை கொண்டு வீட்டை இடித்து மிரட்டியுள்ளனர். பழநி என்பவரின் டீக்கடையோடு கூடிய சிறு மளிகைகடையும் தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோழிகள், ஒரு டஜன் ஆடுகள் எரிக்கப்பட்டன. காயம் என்றளவில் நைனா என்பவரும் செல்லம்மாள் என்பவரும் சிறுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்த மின்மாற்றியை (ட்ரான்ஸ்பர்ம்) தாக்கி மின்சாரத்தை நிறுத்திவிட்டே தாக்குதலை தொடங்கியுள்ளனர்.தாக்குதலை முடித்துவிட்டு நத்தம் சென்ற அக்கும்பல் செல்லும் சாலையிலிருந்த தலித் குடியிருப்புகளை எல்லாம் தாக்கிக்கொண்டே சென்றுள்ளனர். குறிப்பாக வத்திப்பட்டி என்றும் கிராமத்திலிருந்த திருமாவளவன் படம் போட்ட பேனரும், மூன்று குடிசைகளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பரளிபுதுரை  நோக்கி போலீசார் திசை திரும்பியிருந்த நேரத்தில் நேராக நத்தம் சென்ற கும்பல் இரவு 1 மணியளவில் அங்கிருந்த ரவுண்டானாவில் முத்தரையர் பெரும்பிடுகு  சிலையை சட்டவிரோதமாக  நிறுவ முயற்சித்தது. போலீசார் தடுத்து கும்பலை விரட்டிய காரணத்தால் அம்முயற்சி நின்று போனது.

இப்பிரச்சனை தொடர்பாக பரளிபுதூர் தலித் குடியிருப்பினை பார்வையிட்டு ஊரில் இருந்த பெண்கள், ஊரை விட்டு வெளியேறியிருந்த ஆண்களை சந்தித்த நம் உண்மையறியும் குழு முத்தரையர் குடியிருப்பில் யாரும் இல்லாததால் ஊரில் கடைக்கோடியிருந்த  சில வீடுகளின் சில பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஊராட்சி மன்றத்தலைவரும் இல்லாததால் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொது அதுவும் அணைத்து வைக்கப்பட்டுயிருந்தது. இது தவிர காவல்துறை டி எஸ் பி ராஜராமனை சந்தித்து தகவல் திரட்ட முடிந்தது.
மேற்கண்ட யாவரின் வாதங்களாவன.

 தலித்மக்கள்:-

எங்களுக்குள் பெரிய மோதல்கள் இருந்தது இல்லை. எங்களின் இரண்டு பகுதியிலும் தி.மு.க கட்சி சமமாக காலூன்றி இருந்தது. அண்மைக்காலமாக தலித் இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்   முகாமை  தொடங்கி கொடிகட்டுதல், திருமாவளவன் படம் போட்ட சுவரொட்டி ஒட்டுதல், பாடல்களை ஒலிப்பரப்புதல் என்று செயற்பட்டு வருகின்றனர். இது தவிர வெளிப்படையான அரசியில் முரண்கள் இல்லை. ஆனால் கடந்த கிராமபஞ்சயத்து தேர்தலின் பொது தொடர்ந்து பொது பஞ்சயத்தாக இருந்து வரும் பரளிபுதுரை ரீசெர்வ் பஞ்சயத்தாக மாற்றவேண்டுமென்று தலித் தரப்பில் சிறு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றபடி 6 மாதத்திற்கொரு முறை சிறு சிறு மோதல்கள் எழுந்து உடனே சரியாகிவிடும் நிலைமையே இருந்து வந்தது.

தாக்குதல் நன்கு  திட்டமிடப்பட்டது என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு காரணமான கொடிகட்டுதல் சார்ந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே முத்தரையர்கள் பிரச்னை செய்து வந்தனர்.  எங்கள் பகுதியிலிருக்கும் தண்ணீர் தொட்டி மீது கொடியை கட்டும் போதே முத்தரையர் பகுதியிலிருந்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர். கருப்பணன், அபர்ணா-வேன் உரிமையாளர் பாலமுருகன், கண்ணன், கணேசன், சின்னழகு, தேங்காய்வெட்டு - முருகன் ஆகியோர் கட்டக்கூடாது என்று தடுத்தனர். நீங்கள்  கட்டினால் நாங்களும் கட்டுவோம் என்றனர். ஆதே போல கட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்கு ஒன்றை  தேடுவதற்காக செருப்பையும் அவர்களே கட்டியிருக்க வேண்டும்.

அவ்வாறு கட்டிவிட்டு மறியல் செய்தனர். மறியல் செய்து விட்டு பரளிபுதூர் காலனிக்கு முன்பாகவே நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மற்றொரு தலித் குடியிருப்பான அம்பேத்கர் நகரில் 3  வீடுகளை தாக்கினர். அடுத்துதான் பரளிபுதூர் காலனிக்கு ஒரு கும்பல்வந்து பெரும்சத்தம் போட்டு கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான சத்தம் என்றே  நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்கிருந்த மாமரத்தில் நின்றுகொண்டு நெடுஞ்சலையிருந்த மற்றவர்களை போன்போட்டு  அழைத்தனர். அப்போது சில போலிஸ்காரர்கள் இருந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றது. பிறகுதான் பெரும்கும்பல் தாக்குதலில் இறங்கியது.

15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த முத்துரையர்கள் வலசை  , வெள்ளியன்குன்றம் புதூர், கடவூர், புதுகோட்டை, விளாம்பட்டி,புதூர், லிங்கவாடி, பெருமாபட்டி, ஆணையூர், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களாவர்.

எங்கள்  மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரை திசை திருப்பிவிட்டு நத்தம்  ரவுண்டானாவில் முத்துரையர் சிலை வைப்பதே அவர்களின் நோக்கம் என்பது தலித் மக்களில் ஒருதரப்பார் குற்றச்சாட்டு.

இத்தாக்குதலில் உள்ளூர்மக்கள் மட்டுமல்லாது முத்தரையர் சமூக பிரமுகர்களும் பங்கொண்டு உதவினர் என்பது தலித் மக்களின் கூற்று. வத்திப்பட்டி அம்சா - ஸ்டியோ உரிமையாளர் அம்சராசாவின் சுமோ, வத்திப்பட்டி - அழகு என்ற குட்டையன் தந்த பெட்ரோல், தேமுதிக  ஒன்றிய பொறுப்பாளர் பாபு, சரந்தாங்கி ஊராட்சித்தலைவர் முத்தையன், காசம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர்.

அரசாங்கத்தின் உதவி இல்லை. எங்கள் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தந்த அரிசியில் சமைத்து வருகிறோம். அதிகாரிகளில் தவிர கலக்டர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அரசியல் அமைப்புகளும் வரவில்லை.

முத்தரையர் தரப்பு:-

நாங்கள் தாயாய் பிள்ளையாய் தான் பழகினோம். எங்கள் சாதி பெண்கள் இருவரை  தலித் தரப்பு திருமணமே கூட செய்திருக்கிறது. இப்போது வெளியூர்காரர்கள்  தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள். (ஊரில் ஒரு ஆணை கூட பார்க்க முடியாத நிலையில் இரு பெண்கள் மட்டும் தயக்கத்துடன் பதிவு செய்தது.) 

காவல்துறை:-

டி எஸ் பி அவர்களை குழு சந்தித்து, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்ட போது இரு தரப்பும் நடந்துகொண்டது சகிக்க முடியாதது என்றும் இரு தரப்பின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்தது தெள்ள தெளிவாக இருக்கும் போது ஏன் வெறும் சாதியை சொல்லி திட்டிய பிரிவில் வழக்கு தொடுத்துள்ளீர்கள் என கேட்ட போது, அவசரத்தில் நடந்ததாகவும் சார்ஜ் சீட்டில் சரி செய்வதாகவும் சொன்னார். எப் ஐ ஆர் இல் திருத்தலாமே, என சொன்னதற்கு இனி சாத்தியமில்லை என்றார். அவரை பொறுத்தவரை இரு தரப்பும் தவறு என்ற மனநிலையில் மொத்த பிரச்சனையையும்  கருதி நடவடிக்கை எடுத்துள்ளார். 

உண்மையறியும் குழுவின் பார்வை:-

சமூகத்தளத்தில் தனித்தனி சாதிகளின் அடையாள உருவாக்கம் வலுப்பெற்று வரும் சமகாலச் சூழலில் முத்தரையர்களும் அத்தகு முயற்சிகளில் இறங்கி முத்தரையர் பெரும்பிடுகு சிலை   போன்றவற்றை சாதித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தீண்டாத சாதியாக அடங்கி வாழ்ந்த சமூகத்தினரின் அரசியல் எழுச்சி முத்தரையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கிவைக்கவும் , தங்கள் சாதி அடையாளத்தை உறுதியாக்கிக்கொள்ளவும் முத்தரையர்களை உந்தியது. இது நாள் வரையில் சிறு சிறு கோபங்களாக இருந்த இப்போக்கு இப்போது இத்தாக்குதல் மூலம் முழுவடிவம்  பெற்றுளளது. இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதாம் பரளிப்புதூருக்கு அருகிலுள்ள வத்திப்பட்டி என்னும் ஊரில் முத்தரையர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட தலித் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி உள்ளார்.  இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் இத்தாக்குதலில் மும்முரமாய்  இருந்துள்ளனர்.  பரளிப்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பமும், பெயர்பலகையும் தாக்கப்பட்டமை தலித்துகளின் அரசியல் அடையாளம் மீதான கோபத்தையே காட்டுகிறது.

தலித் குடியிருப்பு மீதான இத்தாக்குதல் மற்றுமொரு கொடியங்குளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து இருந்து வருவதோடு, மிகச் சாதரணமாகி சமூக ஒப்புதலை பெற்றும் விட்டன. தாக்குதல் நடந்த பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு தலித் கட்சிகளும் முன் வரவில்லை.  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்  சம்பவம் நடந்து 3 நாள் ஆகியும் வராத நிலையில்   எந்த  சலுகையும் வாங்க மாட்டோம் என்று தலித் பெண்கள் எதிர்த்த போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் , அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுருத்திதாக இளைஞர்கள் பதிவு செய்தனர்.

பரளிபுதுரில் முத்துரையர்களே பெரும்பான்மை. தலித்துகள் சிறுபான்மையினர். பாரளிபுதூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையும் முத்தரையர் கிராமங்களே. குறிப்பாக பரளிபுதூர் பஞ்சாயத்து என்பதே புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி,பொடுகம்பட்டி,அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதேயாகும். அங்கு ஊராட்சிதலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முத்தரையர்களே. மொத்தமுள்ள 9  வார்டுகளில் ஓரயொரு வார்டு மட்டுமே தலித் உறுப்பினரைகொண்டது.இங்கு பெரும் மோதல்கள் நடைபெறவில்லை என்பது உண்மையே.முத்தரையர்கள் மட்டுமே நிலம் உள்ளவர்கள். ஆனால் அவை பெரும் நிலக்கிலாரிய பண்பு கொண்டவை அல்ல. தலித்துகளில் பலரும் அவர்களிடம் வேலை செய்து வருபவர்களே . ஆனால் பல்வேறு மாற்றங்களின் வழியாக தலித்துகள் விவசாயக் கூலி வேலைக்கு செல்வது குறைந்து வருகிறது. தலித்துகளில் படிப்போர் எண்ணிக்கையும் முத்தரையர்களை  ஒப்பிடும் போது   கூடி வருகிறது.

கடந்த  சில வருடங்களில் பரளிப்புதூர் தலித்துகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாமை  தொடங்கியுள்ளனர். அது முதல் பொதுவான விழாக்கள் தொடங்கி குடும்ப விழாக்கள் வரையிலும் அக்கட்சி அடையாளம் தாங்கியே தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திருமாவளவனின் படம் தாங்கிய சுவரொட்டியும் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஆகியனவும் ஒலிபரப்பப்படுவதுண்டு.

20 ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த முத்தரையர் சாதி பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்திருந்தாலும் அவரின் குடும்பத்தோடு உறவு இல்லையே தவிர தாக்குதல் ஏதும் முத்தரையர் தரப்பில் நடத்தப்பட வில்லை. அதே போல மற்றொரு திருமணமும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளின்  தனித்த அரசியல் முயற்சிகள்  முத்தரையர்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போதுதான் அக்கிரமத்தை ரிசெர்வ் பஞ்சயதாக மாற்ற வேண்டும் என்ற பேச்சும் தலித்துகள் மத்தியில் எழுந்து அடங்கியிருக்கிறது. இக்கிராமம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்கள் தோறும் தலித்துகளிடையே  தனித்த அரசியல் முயற்சிகள் எழுந்துள்ளன.

பரிந்துரைகள்: 

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு:

1 . இரண்டு தரப்பும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும் ஆதிக்க சாதியினர் மீதான குற்றத்தை காப்பாற்றுவதாகவும் இருக்கும். உண்மையை திசை திருப்பும் அணுகுமுறையாகவும் இருக்கும்.

2 .   தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 3(10)(x) என்ற பிரிவின் கீழ் சாதியை சொல்லி திட்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனவே பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

 sc/st வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்

3(1) (ii) - காயம் ஏற்படுத்தல் 
3(1) (iii) - ஆடைகளை களைதல்
3(1) (ix) - அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தல்
3(1) (x) - சாதிபெயரை சொல்லி திட்டுதல்
3(1) (xi) - பெண்களை மானபங்கப்படுத்துதல்
3(1) (xiv) - பொது வழிகளை பயன்படுத்த தடை விதித்தல் 
3(1) (xv) - குடியிருப்பிலிருந்து அகற்றுதல்
3(2) (iii) - சொத்துக்களை தீயிட்டு அழித்தல்
3(2) (iv) - குடியிருப்பில் தீவைத்தல்
3(2) (v) - 10  வருடத்திற்கு குறையாத தண்டனை

ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு :

1 . பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண சேதங்களை மதிப்பிட்டு அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரவல்ல நிவாரணமாக அவை அமைய வேண்டும்.
             
2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம்(1989) இன் கீழ் மாவட்ட ஆட்சியரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சேதங்களை பார்வையிட்டு நிவாரணத்தை மதிப்பிட வேண்டும்.
             
3 . தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து மீண்டும் குடியமர்த்துவதொடு  அச்சமற்ற முறையில் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க வகை செய்ய வேண்டும். மேலும் தலித் மக்களை கைது செய்வதற்கு தோதாக வழக்கை பதிவு செய்துவிட்டு காத்திருப்பதையும் காவல் துறை கைவிட வேண்டும்.

தமிழக அரசுக்கு :

1 . அரசு சார்பாக தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் முத்தரையர் தரப்பு ஆக்கிரமிதுக்கொண்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன . தலித்துகளுக்கு நில உரிமை, அரசு சொத்துக்களில் உரிய பங்களித்தல் { குளம், கோவில் , கிராம சொத்து ஏலம் } .

2.தலித்துகள் தாங்கள் விரும்பும் அரசியல் அடையாளத்தை மேற்கொள்வதற்கான சுதந்திர உரிமையை காப்பாற்றுதல்.

3 . சேதங்களை மதிப்பிடவும் சிக்கலை ஆராய்ந்து நிவாரணம் வழங்கவும் தனியான கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும்.

4 . ஊரை விட்டு வெளியேறி அல்லல்படும் தலித் இளைஞர்களை உடனடியாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் குற்றம் சாட்டப்பட்ட முத்தரையர்களை தவிர மற்ற முத்தரையர் ஆண்கள் ஊர் திரும்பும் வகையில் காவல் துறை செயல்பட உத்தரவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கவும், வலியுருத்துகிறோம்.

உண்மை அறியும் குழுவினர்

1 .  பகத்சிங், வழக்குரைஞர்
2 . விஜயபாரதி வழக்குரைஞர்
3 . ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர்
4 . முரளி, ஆய்வாளர்
5 . கண்ணம்மா, ஆசிரியர்
6 . திவ்யா சட்ட மாணவர்
7. விஜயலட்சுமி, சட்ட மாணவர்
8 . விஜயன், சட்ட மாணவர்
9. கிருஷ்ணா, சட்ட மாணவர்
10. பகவன் தாஸ், சட்ட மாணவர்
11. பெரியசாமி, சட்ட மாணவர்
12. பாண்டியன், சமூக ஆர்வலர்
13. தங்கப்பாண்டியன், சமூக ஆர்வலர்.

குறிப்பு 

பரளிபுதூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2011 ஜூலையில் அரசு சார்பாக வீடு ஒன்றுக்கு 50,000 வழங்கப்பட்டது. இதுபோன்ற நிவாரணம் மட்டுமே நம் நோக்கம் இல்லை. எனினும் இதை நாம் மறுதலிக்க முடியாது. பல்வேறு அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் இணைந்து ஏற்படுத்திய அழுத்தமே இதற்கு காரணம். குறிப்பாக அப்போது மதுரைக்கும் பரளிபுதூருக்கும் வருகை தந்த தேசிய SC/ST ஆணைய உறுப்பினர் லதா ப்ரியகுமாரின் வருகை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கும் என்று நம்பலாம். உண்மை அறியும் குழு என்கிற முறையில் மதுரையிலும் திண்டுக்கலிலும் அறிக்கை அளித்தவர்கள் என்ற முறையிலும் லதா ப்ரியகுமாரை நேரடியாக சந்தித்து நிலைமையை விளக்கியவர்கள் என்ற விதத்திலும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திலிருந்து நிவாரணம் குறித்த தகவல் உண்மையறியும் குழுவாகிய நமக்கு முறையாக தெரிவிக்கவும் பட்டது. அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி. 


No comments:

Post a Comment