Wednesday 11 July 2012

சாதி கடந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு : எழுப்பப்படாத கேள்விகள்

-       ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ்நாட்டில் கவுரவக்கொலைகள், சாதிகடந்த மணங்களுக்குத் தடை, கலப்புமணங்களுக்கு எதிரான சாதி அமைப்புகளின் அச்சுறுத்தல் ஆகியவை பற்றி கடந்த இரண்டொரு மாதங்களுக்குள் தமிழின் முன்னணி வார ஏடுகள் சிலவற்றில் தலைப்புக் கட்டுரைகளும் சிறப்புக்கட்டுரைகளும் இடம் பெற்று வருகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி ‘வித்தியாசமான” புதிய செய்திகளுக்குத் தேவை ஏற்பட்டுள்ள நிலையில் காதல்கொலைகள் போன்ற செய்திகள் ஊடகங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக மாறியிருக்கின்றன. எனினும் இப்போக்கு ஒரு வகையில் சாதகமானதே.

சாதி மறுப்பு மணங்களுக்கான தடை பற்றியெழுதும் எந்த ஊடகமும் இப்போக்கு ‘அண்மையில் பெருகிவிட்டதாக” குறிப்பிடுவதன் மூலம் இதற்கு ஓர் அதிசயத் தன்மையை வழங்க முற்படுகின்றன. உண்மையில் சாதி சமூகம் என்ற அளவில் நீண்டகாலமாகவே இப்போக்கு இருந்து வருகின்றது.

கலப்பு மணங்கள் சாதியைக் கடக்கின்றன என்ற வகையில் இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகளே. கௌரவக் கொலைகள் அதிகமும் சாதி காரணமாகவே நடைபெறுகின்றன. எனவே இவை முழுக்க தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளே. ஆனால் கொல்லப்படுவது தலித்துகளே என்பதைக் குறிப்பிட்டுவிடும் ஊடகங்கள் கொலைபுரிபவர்கள் யாரென்பதை எழுதுவதில்லை.

இன்றைக்குச் சாதி அதிகாரம் என்பது பண்பாட்டு மேலாதிக்கமாகவும், அரசியல் அதிகாரம் சார்ந்தாகவும் இருக்கின்ற நிலையில் தமிழகத்தின் வட்டார ரீதியான பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளே மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் இக்கொலைகளில் இறங்குகின்றனர். சாதிய முறையை சமூக நீதி, வட்டாரப் பெருமை என்று மறைமுகமாக வளர்த்து வரும் நம்மிடம் இப்போது சாதி வெளிப்படையாகக் கொக்கரிக்கிறது. தம் சாதியினரை மட்டும் திரட்டிய மாநாட்டில் கலப்பு திருமணத்தைக் கண்டித்துப் பேசினார் வன்னியர் சங்கம் குரு. அடுத்து கொங்குவேளாளர் சங்கம் இதற்கு எதிராக பிரச்சார இயக்கத்தையே தொடங்கியுள்ளது. சாதியைப் பல்வேறு முறைகளில் காத்துக்கொள்ள விழைகின்றன இச்சாதி அமைப்புகள். இவற்றுள் பல சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியதும் தம் சாதி பலத்தை கூட்டுவதற்காகவே.

முன்பு சாதியைப் பாரம்பரிய கிராம அமைப்பு கண்காணித்து வந்தது. இப்போது தொழில்நுட்ப வலைப்பின்னலும் நவீன வாழ்வியல் கூறுகளும் சாதியமைப்பில் தவிர்க்க முடியாத மாற்றங்களை நிர்பந்தித்துள்ள நிலையில் சாதியை நவீன அரசியல் அமைப்புகள் கண்காணிக்க விரும்புகின்றன.  அரசியல் அதிகாரத்திற்கு சாதியே மூலதனமாக இருக்கும் பட்சத்தில் அவற்றில் மாற்றம் ஏற்படுவதைப் பதற்றத்தோடு இந்த சாதிய அமைப்புகள் எதிர்கொள்கின்றன. அதனாலேயே சாதியக் கட்டுமானத்தில் முதல் உடைவை ஏற்படுத்தும் ரத்தக்கலப்பை மறுத்து ஓங்கிக் குரலெழுப்புகின்றன.

இப்போக்கு தற்போதுதான் மேலோங்கியுள்ளதா? இதற்கான வர் எங்குள்ளது? இப்பிரச்சினைக்கான மூலத்தையோ வளர்ச்சியையோ துல்லியமாக ஆராய்ந்திருக்கிறோமா? என்னும் கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்காலத்தில் பல்வேறு பெயர்களில் சாதி காப்பாற்றப்படுகிறது. உதாரணமாக தமிழகத்தில் பண்பாட்டுப் பேச்சாளராக பிம்பம் கட்டமைக்கப்படும் நடிகர் சிவக்குமார் புத்தக விழா போன்ற அறிவுசார் தளங்களில் வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கவலைகளை உற்று கவனித்தால் அதில் சாதியப் பண்பாடு தகர்வதற்கு எதிரான அச்சம் வெளிப்படுவதைக் காணலாம். தம் முதல் மகன் சாதி ஆசாரம் மீறி திருமணம் புரிந்துவிட்டதால் இரண்டாவது மகனுக்குச் சொந்த ஊர் பக்கம் அதாவது சொந்த சாதியில் பெண்பார்த்து திருமணம் முடித்து வைத்து பண்பாட்டைக் காப்பாற்றி விட்டவர் அவர். இன்றைக்கு இக்குடும்ப பிம்பங்கள்தாம் முன்னுதாரணமாக்கப்படுகின்றனர்.

சாதி ஒழிப்புத்துறையில் தமிழகம் என்ன சாதித்திருக்கிறது என்ற கணக்குத்தேவை. கலப்பு மணம் புரிந்தவர்கள் எத்தனை பேர்? எந்ததெந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மணம் புரிந்துள்ளனர்? கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு -  எந்ததெந்த சாதி? கொல்லப்படுவோர் - கொலை புரிவோர் சார்ந்திருக்கும் சாதி எது? என்றெல்லாம் கணக்குத்தேவை. இவ்வாறான புள்ளிவிவரங்கள் எடுப்போமானால் நாம் பேசத் தயங்கும் முக்கியமான வட்டார சாதி மற்றும் சிறுபான்மை எண்ணிக்கையிலான ஆதிக்க சாதியினரே இக்கொலைகளில் ஈடுபடுவோராக இருப்பதை பார்க்க முடியும். இதை அறிய பெரிய புள்ளிவிவரங்கள் கூடத் தேவையில்லை.

இந்நிலையில் சில அழுத்தமான பரிசீலனைகளை முன்வைக்க விரும்புகிறேன். சாதிப் பிரச்சினையை பிராமணர் X பிராமணர் அல்லாதோர் என்ற இரட்டை எதிர்வோடு மட்டுமே தொடர்ந்து தக்கவைப்பது இந்நிலையை புரிந்து கொள்வதில் தடையை உண்டு பண்ணுகின்றது. இங்கு சாதி மறுப்பு திருமணத்தைத் தொடர்ந்து அரசியல் செயற்பாடாக வலியுறுத்திய - நடைமுறையாக்கிய இயக்கங்கள் என்று எவையும் இல்லை. ஆனால் இங்கு சாதி கூடாதென்பது வாயுபச்சாரமாகவே இருந்துள்ளது / இருக்கிறது.  சாதி ஒழிக என்று மேடைக்காக உச்சரிக்கும் நம்மிடம் சாதி வன்முறையை காக்கும் வடிவங்கள் ஸ்தூலமான முறையில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை என்பதே உண்மை.

பிராமணரல்லாத சாதியினரின் இத்தகு எதார்த்தத்தை ஒத்துக்கொண்டு அதற்கு எதிராகச் செயற்படும் போக்கே இங்கெழவில்லை. பிராமணரல்லாதோரின் இவ்வன்முறைகளை சுட்டிக்காட்டிக் கேட்கும்போது மட்டுமே இதைக் கண்டிக்கிறோம் என்று கூறிவிட்டு நகரும் திராவிட / தமிழ்த்தேசிய / இடதுசாரி சக்திகள் பலரை நாம் கண்டுவருகிறோம். கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் இலவச மின்சாரச் சுடுகாடு பிராமணர்களுக்கானது என்ற அறிவிப்பைக் கண்டிக்கும் அதே வேளையில் பிராமணரல்லாதோர் நடத்தும் கொலைகளை பற்றியும் ஆய்வு செய்து எழுத வேண்டும்.

ஜூலை 10, 2012 நாளிட்ட இந்து நாளிதழ் 2-ம் பக்கத்தில் (மதுரை பதிப்பு)                4 செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஏட்டின் இப்பக்கம் பல்வேறு வாசிப்புகளுக்கான சாத்தியத்தைக் கொண்டிருந்தது. அவற்றுள் ஒரு சிறு செய்தியைத் தவிர மற்ற 3 செய்திகள் தலித் பிரச்சினையோடு தொடர்பு கொண்டவை. அன்றாட நிகழ்ச்சிகளின் பதிவு என்ற வகையில் இருந்தாலும் தினசரி வாழ்வின் அங்கமாக சாதிப்பிரச்சினைகள் தொடர்வதையும் சாதியடுக்கின் இன்றைய எதார்த்தையும் சாதி பற்றிய புரிதலில் அமைந்துள்ள முரண்பாட்டையும் ஒரு சேரச் சொல்வதாக அது அமைந்திருந்தது.

செய்தி 1 : 1983-ஆம் ஆண்டில் தலித் வகுப்பு ஆணும் பிராமண வகுப்பைச் சோ;ந்த பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அத்திருமணம் சந்திக்காத எதிர்ப்பை அவர்களின் 26 வயது மகன் தற்போது சந்திப்பதைப் பற்றிய செய்தி அது. அதாவது இத்தம்பதியினரின் மகன் மகேஷ் என்பவர் 2008-ஆம் அண்டு இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த திவ்யா என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் மகேஷ் தலித்தாக கருதப்பட்டு பெண்ணின் குடும்பத்தார் செய்து வந்த எதிர்ப்பைப் பற்றியது அச்செய்தி.

செய்தி 2 : தலித் மற்றும் நாடார் கலப்பு மணத்திற்கு எழுந்த எதிர்ப்பு பற்றிய அச்செய்திக்கு மேல், 1939-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தலித்துகளையும் நாடாரையும் வைத்தியநாதய்யர் தலைமையில் அழைத்துச் சென்றதன் 74-ஆம் ஆண்டு நினைவு நாள் பற்றிய செய்தி இடம் பெற்றிருக்கிறது. இந்நாளையொட்டி குமரி அனந்தன் உள்ளிட்டோர் தலித் குழந்தைகளோடு கோயிலுக்குள் செல்வதைப் பற்றிய செய்தி அது.

செய்தி 3 : தேவக்கோட்டை கண்டதேவி கோயில் தேர்வடத்தைத் தலித்துகளும் இழுப்பதற்கு எதிராக நாட்டார்கள் எனப்படும் கள்ளர்கள் தடைவித்தனர்.  அதையொட்டி இந்த ஆண்டும் தேர் ஓடாமலிருப்பதைப் பற்றிய செய்திக்கட்டுரை அது.

மூன்று செய்திகளுக்கும் இடையே உள்ள அடிப்படை ஒற்றுமை இவை தலித் தொடர்புடையது. முதலிரண்டு செய்திகளும் இரண்டு விஷயங்களை கூறுகிறது. ஒரு காலத்தில் தலித்துகளோடு ஒப்பவைத்து பார்க்கப்பட்ட சாதி தற்போது தலித்துகள் மீது பிரயோகிக்கும் வன்மம் பற்றியது ஒன்று. கலப்புமணம் நிகழும் போது பிராமணர்களால் எழுப்பப்படாத சாதிய எதிர்ப்பை பிராமணரல்லாத வட்டார ரீதியான அதிகார சாதி எழுப்புவது மற்றொன்று. இது வெறும் செய்தி மட்டுமல்ல. ஏறக்குறைய இன்றைய சமூக எதார்த்தைப் பிரதிபலிக்கும் கூறுகள். இன்றைய சாதிகடந்த திருமணங்களில் எதிர்ப்பு என்பது இவ்வாறு தான் அமைந்திருக்கின்றன. இச்சூழல் சாதி பற்றிய பிராமணர் X பிராமணரல்லாதார் என்ற நம்முடைய வழக்கமான எதிர்வில் எந்த மாற்றத்தையேனும் கோருகிறதா? சாதி அமைப்பின் பலன்களெல்லாம் பிராமணர்களுக்கே, அவர்கள் செய்தால்தான் சாதிவன்மம் என்றுதான் கருதிக்கொண்டு இருக்கப்போகிறோமா?

தொடர்ந்து சாதியமைப்பின் பலன்களை அறுவடை செய்துவரும் பிராணரல்லாத உயர்சாதிகளை / வட்டாரப் பெரும்பான்மை இடைநிலை சாதிகளை பிராமணர்களின் ஏவலாட்கள் பிராமணர்களால் தூண்டப்பட்டு அறியாமல் செய்து வரும் பிழைகள் மட்டுமே என்று விளக்கி அவர்களைத் தொடர்ந்து ஏதோவொரு விதத்தில் காப்பாற்றி வைத்திருக்கப் போகிறோமா? என்பதே இங்கு எழுப்ப விரும்பும் கேள்விகள். பிராமணரல்லாதோரின் வன்முறையைக் கவனத்திற்கு கொண்டுவரும் மட்டும் அவற்றைப் பெயரளவில் கண்டிப்பதும். பிராமணர்களின் மோசடிகளை மட்டும் மிகச் சரியாகக் கண்டறிந்து புரட்சிகோஷம் எழுப்புவதும் சூழலில் நிலவும் பொதுபோக்கு. (இவ்வாறு கூறுவது எந்தவிதத்திலும் பிராமணர்களின் சாதியுணர்வை பேசக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல).

சாதி அடுக்குமுறையில் நடந்துள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுத்து எந்தவித விவாதமும் இங்கு நடத்தப்படுவதில்லை. பிராமணீயம் என்பதை ஒரு சாதியோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் நிலைமை மாறி இன்று அச்சொல்லின் பரிமாணம் - சமகால அரசியலதிகாரம் - எண்ணிக்கை பெரும்பான்மை - கலாச்சாரப் பரப்பு என்றெல்லாம் விரிந்து விட்ட நிலையில் பிராமணீயம் என்று எதைக் கூறுவது? எந்தெந்த சாதிகளை அதில் அடக்குவது? ஆகிய கேள்விகளே நம்முன் நிற்கின்றன.




2 comments:

  1. சாதிமறுப்பு திருமணம் சார்ந்த கொலைகளை முழுக்க முழுக்க பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றம் போல காட்ட முயற்சி எடுப்பது போல தோன்றுகிறது.
    இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள். தங்கள் சமூக பெண்களை தான் அவர் குறி வைத்து கொல்கிறார்கள்.
    நீங்கள் குறிப்பிடும் இடைசாதிகள் தங்கள் சமூக ஆண்கள் பிற சாதி பெண்களோடு சாதிமறுத்து திருமணம் செய்யும் போது அதற்க்கு உதவியாக நிற்கிறார்கள்.காடு வெட்டி குரு ஆனந்த விகடன் பேட்டியில் எப்படி அவர் பல காதல் திருமணங்களுக்கு ,அவர் சாதி ஆண்கள் காதலுக்கு துணை நின்றிருக்கிறார் என்று கூறுவதையும் பொருத்தி பார்க்க வேண்டும்
    நாடார் பெண்ணை கள்ளர் ஆண் திருமணம் செய்தாலும் நாடார் சங்கங்கள் ஒத்து கொவதில்லை.அந்த குடும்பத்தை பிரிக்கவும் வெட்டரிவாளோடு தான் அலைகின்றன .
    பட்டியல் இனத்தவரும் தங்கள் இன ஆண்களின் காதலை ஆதரிப்பதை போல பெண்களின் காதல்களை ஆதரிப்பதில்லை.
    ஆணாதிக்கம் சாதியை தோற்கடிக்கும் இடம் இது.

    ReplyDelete
  2. ungal karuthum purakanikkathakkathalla.anyway let's talk.

    ReplyDelete