Showing posts with label அடையாளம். Show all posts
Showing posts with label அடையாளம். Show all posts

Saturday, 11 February 2012

தருணத்திற்காகவும் தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும் தான் தலித் அடையாளமா? – 3

(ரவிக்குமாரின் தலித் தொடர்பான விமர்சனக் குறிப்பொன்றையும்,
மீனா கந்தசாமி குறித்த அவரது மௌனத்தையும் முன்வைத்து…)


- ஸ்டாலின் ராஜாங்கம்


ரவிக்குமார்
எழுத்தாளர் ரவிக்குமார் “தமிழ் தலித் இலக்கியத்துக்கு புதுச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் கட்டியிருக்கும் கல்லறை என்ற விமர்சனக் குறிப்பொன்றைத் தன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் (nirapprigai.com, 29.09.2011). அதாவது ஒன்பது தமிழ் தலித் எழுத்தாளர்களின் சுய அனுபவம் பற்றிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பை 2004-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் இன்ஸ்டியூட் வெளியிட்டது.  ஏழாண்டுகள் கழித்து (2011) அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை Tamil Dalit Literature : My Own Experience  என்ற தலைப்பில் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொகுப்பாளர்களான டேவிட் பக், கண்ணன்.எம் ஆகிய இருவரும் எழுதியுள்ள முன்னுரைதான் ரவிக்குமாரின் இந்த விமர்சனத்திற்குக் காரணமாகியுள்ளது.

தமிழில் தலித் இலக்கியம் தேங்கிப் போய்விட்டதாக அறிவிக்கும் இம்முன்னுரை இத்தொகுப்பு தமிழில் 2004-இல் வெளிவந்தபோது தலித் இலக்கியம் பற்றி இருந்த நம்பிக்கை கூட தற்போது இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறது. இவ்வாறு நம்பிக்கை தராத ஒன்றை ஏன் தொகுக்க வேண்டும்?  அதை ஆங்கில மொழியில் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி யாருக்கும் எழும்.  உலக அளவில் தமிழ் தலித் இலக்கியம் பற்றி தரங்குறைந்த கருத்து உருவாகவே இது வழிவகுக்கும்.  அதிலும் இத்தொகுப்பிலுள்ள இரண்டொரு படைப்பாளிகளைத் தவிர மற்றவர்கள் நேரடியான படைப்பிலக்கியத்தோடு தொடர்பில்லாதவர்கள் என்பதோடு முக்கியமான ஆக்கங்களைத் தந்தவர்களாகவும் இல்லாத நிலையில், தலித் இலக்கியம் பற்றிய ஆங்கில உலகத்திற்கான இந்த அறிமுகம் தலித் பற்றிய அவநம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்யும்.  இத்தகைய ‘குறைகளோடு ஆங்கிலத்திற்கு இத்தொகுப்பைக் கொண்டு செல்ல தலித்தியத்தை வைத்துப் போடப்பட்ட ப்ராஜெக்ட்தான் காரணமாக இருக்க முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.

இம்முன்னுரை மீதான பிரச்சினைப்பாடுகளை கண்டுகொண்டு விமர்சனத்தினை முன்வைத்திருப்பது ரவிக்குமாரின் வலைத்தளப் பதிவு மட்டும்தான். பால் ஸெலான், ரால் ஸீரிடா, பேட்ரிக் சமோஸீ போன்று தலித் படைப்பாளிகளிலிருந்து யாரும் உருவாக முடியவில்லை என்ற தொகுப்பாளர்களின் ‘கவலை’யை அவ்வாறான படைப்பாளிகள் தமிழ் தலித் அல்லாதவரிடமிருந்து உருவாகாதது ஏனென்றும், இத்தொகுப்பாளாகளாவது அத்தகைய ஒரு வரியைக் கூட எழுதாதது ஏனென்றும் கேட்டு ரவிக்குமார் எதிர்கொண்டிருக்கிறார். அந்தவகையில் ரவிக்குமாரின் இந்த விமர்சனம் முக்கியமானதே.

மேலும் தலித் அடையாளத்தின் சார்பாகப் பேசும் இந்த விமர்சனத்தில் தமிழ் தலித் இலக்கியம் தமிழுக்கும் வெளியே கிளர்ந்தெழுந்து வருவதாக ரவிக்குமார் கூறுகிறார்.  ஆனால் அவரின் தமிழ் தலித் இலக்கியம் பற்றிய அசலான பார்வை இதுதானா?  என்ற கேள்விதான் இந்த விமர்சனத்தினை ஐயத்திற்கு உரியதாக்குகிறது.

உண்மையில் இத் தொகுப்பின் முன்னுரை தலித் இலக்கியம் பற்றிக் கூறும் கருத்துகளோடு ரவிக்குமாரின் கருத்து பெரிதும் முரண்படுவதில்லை. அவருக்குத் தமிழ் தலித் இலக்கியம் பற்றி மரியாதையேதும் இல்லை.  ஸ்டீரியோ டைப் போல, யாரும் சரியில்லை / எழுதுவதில்லை, படைப்பூக்கம் இல்லை என்பதையே நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆனால் இப்போது பிரெஞ்சு இன்ஸ்டியூட்டை எதிர்கொள்ள வேண்டுமென்னும்போது தலித் இலக்கியம் சிறப்பானது என்று மாறிப் பேசுகிறார்.  எனில் தலித் இலக்கியத்தைக் காப்பாற்றும் நோக்கமென்று இதைக் கருதலாமா?  அதுதான் இல்லை. இம்முன்னுரையில் ரவிக்குமாரை மனதில் வைத்து எழுதப்பட்ட வரிகளே இதற்குக் காரணம்.  அவரே தன் விமர்சனக் குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ள “தலித் எழுத்தாளர்கள் சந்தைகளின் விதிகளால் ஆளப்படுகிறார்கள்;; தமது பத்திரிகைகளில் வலைப்பூக்களில் புகழையும் பெருமையையும் இடைவிடாமல் விரட்டிக் கொண்டிருப்பவர்கள் என்று பேசும் வரிகளே இதற்குக் காரணம்.  இதை எதிர்கொள்வதற்காகவே தலித் இலக்கியத்திற்கு ஆதரவாகக் குரலெப்பி அவர்களை ரவிக்குமார் தாக்குகிறார்.  அதாவது அசலான கருத்தாக இல்லாவிட்டாலும் எதிரிகளை எதிர்கொள்ள தலித் அடையாளத்தைக் கையாளும் உத்திதான் இது. அந்தவகையில் இந்த விமர்சனம் பாவனையானது.

தலித் இலக்கியம் பற்றிய அக்கறை இருக்குமானால், அது எழுச்சி பெற்றிருப்பது உண்மையானால் தான் செயற்படும் தளங்களில் அதைப்பற்றிய பேச்சே இல்லாமல் இருப்பது ஏன்?  ரவிக்குமார் நடத்தும் மணற்கேணி இதழில் இதற்கான இடம் என்ன? தலித் இலக்கியம் இயங்குவது உண்மையானால் அவர் ஏற்கனவே நடத்திய தலித், போதி என்ற தலித் அடையாளம் பூண்ட பெயர்களிலான இதழ்களை நிறுத்திவிட்டு மணற்கேணி என்ற தலித் அடையாளம் இல்லாத ‘பொது இலக்கிய பெயரில் இதழ் ஏன்?  அதில் தலித் அடையாளம் பற்றிய மௌனம் ஏன்?

அவர் அரசியலில் அதிகாரத்திற்குத் துதிபாடிக்கொண்டிருந்த காலத்தில் இந்தக் களங்களில் முழுமையாக ஈடுபடமுடியாததால்தான் தலித் அடையாளத்திலிருந்து விலகியதை மறைப்பதற்காகத் தலித் அடையாளம் பூணாத பொதுவான பேச்சுகளை அவர் பேசத் தொடங்கிக் கொண்டார்.  தான் அம்பலமாவதை மறைப்பதற்கான பாசாங்கு இது.  தன்னை விமர்சித்தால் மட்டுமே அதனை எதிர்கொள்ள தலித் அடையாளம், மற்றைய காலங்களில் தானே அந்த அடையாளத்தைக் கிண்டலடிப்பது / மௌனமாக்குவது இவர் பாணி.  இதற்கு உதாரணமாக மீனா கந்தசாமியை பற்றிய தகவலைக் கூறலாம்.

தலித் அடையாளத்திற்கு ஆங்கில உலகில் கிடைக்கும் மார்க்கெட் வேல்யூ கருதி, தன்னைத் தலித் என்றும், தலித் போராளி என்றும் கூறி அதன் லாபங்களைப் பெற்று வருகிறார் மீனா.  அவர் தலித்தாக இல்லாததோ, தலித் அல்லாத ஒருவர் தலித் பற்றிப் பேசுவதோ இங்கு பிரச்சினை இல்லை.  மாறாக இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொள்வதுதான் பிரச்சினை.  மீனாவின் இப்போலித்தனம் பற்றி ரவிக்குமாருக்குக் தெரியாததல்ல.  மீனா தலித் அடையாளத்தால் லாபம் அடைவது மட்டுமல்ல தன்னை விமர்சிப்பவர்களை நோக்கித் திருமாவளவன் பெயரைக் கூறி  மிரட்டுவதையும் தொடர் போக்காக கொண்டுள்ளார்.  (இதைப்பற்றி 30.09.2011 தேதியிட்டு தமிழச்சியின் கட்டுரையொன்று இணையதளத்தில் வெளியாகி மீனா அம்பலப்பட்டமை பலருக்கும் தெரியும்).

மேலும் தலித் இலக்கியம் தமிழுக்கு அப்பால் கிளர்ந்து வருவதாக ரவிக்குமார் அந்த விமர்சனத்தில் கூறுவது பெங்குவின், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் போன்ற ஆங்கில பதிப்பங்களின் அண்மைய தமிழ் தலித் இலக்கிய தொகுப்புகளைப் பற்றிதான்.  இதைச் சொல்வது கூட இத்தொகுப்புகளின் தொகுப்பாளராக இவர் இடம்பெற்றிருப்பதால்தான்.  அவரும் எஸ்.ஆனந்தும் இணைந்து ஆங்கிலத்தில் நடத்தும் நவயானா பதிப்பகத்தையும் கூடவே சொல்லிக் கொள்கிறார்.  இவையெல்லாம் முக்கியமான முயற்சிகள்தாம். 


ஆனால் தமிழ் தலித் இலக்கியம் பற்றி ஆங்கில உலகில் தப்பான கருத்து உருவாகக் காரணமென பிரெஞ்சு இன்ஸ்டியூட் தொகுப்பை விமர்சிக்கும் அதே ஆங்கில உலகில் தலித் அடையாளத்தை சுரண்டிப் பிழைக்கும் மீனாவை நவயானா பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியிடவும் (MS Militancy) அவரோடு சேர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு நூல் வெளியிடவும் (Waking is Another Dream) செய்வது என்னவகை நிலைப்பாடு?  தலித் அடையாளம் பற்றி ஒரேவிதமான - நேர்மையான நிலைப்பாடு இருக்குமானால் மீனாவின் சுரண்டலுக்கு எதிராக விமர்சனச் சாட்டையை சொடுக்கியிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு இணைந்து செயற்பட்டிருக்கவும் கூடாது.  முன்பு வே.மதிமாறன் தலித் முரசு இதழில் தலித் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோது பலரும் அவரை தலித் என்றே கருதியிருந்தனர்.  ஆனால் அவரை தலித் அல்லாதவர் தலித் விமர்சன முறைக்கும் தொடர்பில்லாத தி.க.காரர் என்று எழுதி முடக்கிய ரவிக்குமார் அதைவிட மாபெரும் புரட்டில் ஈடுபட்ட மீனா கந்தசாமிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்?  இங்குதான் அவர் தலித் அடையாளத்தை அதற்குரிய சமன்பாடுகளோடு கையாளுவதை விடுத்து தன்னுடைய நலனை மட்டுமே வைத்து வாளைப் போலச் சுழற்றுவதும் தலித் அடையாளத்தின் பெயரிலான சுரண்டல் என்கிறோம்.

(தொடரும்)

Monday, 22 August 2011

தலித் அடையாளம்: அங்கீகாரத்தின் நிறங்கள்

- ஸ்டாலின் ராஜாங்கம்

தலித் அடையாளத்தின் இன்றைய நிலை குறித்துப் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களிலிருந்து விலகி, வேறொரு அம்சத்தைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. 1990 தொடங்கி தலித் அடையாளம் தலித் அல்லாத தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் அவற்றை தலித் அல்லாதார் எதிர்கொண்டுவரும் விதம் குறித்தும் விளங்கிக்கொள்வது மேற்கண்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அமையும்.

அரசியல் என்னும் சொல்லாடல் வெறுமனே நாடாளுமன்ற அரசியல் நடவடிக்கைகளை மட்டும் குறிப்பதாக இல்லாமல் சமூகவியல், பண்பாட்டு நடவடிக்கைகளையும் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றது தலித் அடையாள உருவாக்கத்தின் போதுதான். இச்சொல் ஏற்கெனவே அறிவுத் துறையில் புழங்கிவந்திருந்தாலும் விரிவான பொருளில் கையாளப்பட்டது இப்போதுதான். எனவே தலித் அரசியல் என்னும் சொல்லில் இலக்கியம், கலை, அரசியல் போன்ற அம்சங்களும் உள்ளடங்கின. இன்றைக்கு நிறுவனரீதியான ஆய்வுகளிலும் இச்சொல்லாடல் நிலைபெற்றுவிட்டது. இந்நிலையில் தமிழ்ச் சூழலில் நடைபெறும் அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகள் யாவுமே ஒரு விதத்தில் தலித் எழுச்சியின் தாக்கத்தினையும் எதிர்வினையையும் உட்கொண்டுள்ளன.

தலித் அடையாளத்தின் கீழ் இலக்கியத்தில் தன் வரலாறுகளும் கவிதைகளும் புனைகதைகளும் எழுதப்பட்டன. கலக குணமும் அதிர்ச்சி மனோபாவமும் இதன் அடிப்படை என்று பேசப்பட்டன. புனைவிலக்கியத்தைக் காட்டிலும் தலித் விமர்சனம் சூழலில் கூடுதலான பதற்றத்தைக் கூட்டின. பிரதிகள்மீதான மறுபார்வையும் இலக்கிய அழகியல் குறித்த புதிய கருதுகோள்களும் தலித் விமர்சனத்தினூடாக வெளிப்பட்டன. தலித் இசை, தலித் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கி தலித் கலை விழாக்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டன. இவற்றைச் சாத்தியமாக்கிய இந்த அடையாளம் குறித்த எதிர் விமர்சனங்களை 'வலதுசாரிகள் மட்டுமல்ல இடதுசாரி' முகாமினரும் எழுப்பினர். ஆனால் தலித் அடையாளத்தின் நிலைத்த தொடர் போராட்டத்தால் இவர்களது எதிரான போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்நிலைமைக்குப் பிறகு, தலித் அரசியல் இயக்கம், தலித் வரலாறு என்று தனித்துவமான அம்சங்களை நோக்கி தலித் அடையாளம் நகர்ந்தபோது ஏற்பட்ட விளைவுகள் குறித்துத்தான் இன்றைய நிலையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாகப் பார்ப்பனரல்லாத இயக்கமாகக் கருதப்படும் திராவிட இயக்கங்கள் மீதும் பெரும்பான்மை சாதியினர் மீதும் முன்வைக்கப்பட்ட தலித் விமர்சனங்கள். சொந்தச் சாதி அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டே தலித்துகளுக்கும் ஆதரவாகப் பேச முடியும் என்ற போக்கினை இவ்விமர்சனங்கள் நிறுத்தின. எனவே இதனை எதிர்கொள்ளும் புதிய உத்திகளும் கண்டறியப்பட்டன. அதனைப் புரிந்துகொள்ள 1990களில் எழுந்த தலித் எழுச்சி குறித்த சூழலையும் நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.

1990களின் தலித் எழுச்சி அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை ஒட்டியதாகயிருந்தாலும் அச்சூழலில் எழுந்த அறிவுலகம் அம்பேத்கரின் சிந்தனையையும் தலித் மக்களின் அதுவரையிலான போராட்டங்களையும் எந்த அளவிற்கு எடுத்துக்கொண்டது என்பது இன்று கேள்விக்குரியது. ஏனெனில் 1990களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு புதிய சிந்தனைகள், மேலை நாட்டுக் கோட்பாடுகள் வழியமைந்த விளக்கங்கள், விளிம்புநிலை எழுத்துகள் ஆகியவற்றின் மூலமே தலித் சார்ந்த ஆதரவு பெருமளவு அறிவாளிகளிடம் வெளிப்பட்டன. பிராமண எதிர்ப்பு, அதிகாரத்திற்கு எதிரான கலகம் போன்றவற்றைச் சொல்லுவதற்கான அரசியலாக தலித் அடையாளத்தை எடுத்துப் பலரும் விளக்க முன்வந்தனர். நடைமுறையில் தலித்துகள் பிராமணர் அல்லாத சாதியினரால் எதிர்க்கப்பட்டாலும், பிராமணர் அல்லாத சாதியின் அடையாளமாகவே கண்டுகொள்ளப்பட்டனர். இதனை மறுத்தவர்கள் விவாதங்கள் ஏதுமின்றிச் சூழலிலிருந்து அகற்றப்பட்டனர். ஆனால் தலித் மக்களின் கடந்த காலப் போராட்ட அனுபவங்களையும் நிகழ் காலத்தின் சாதி அதிகார முரண்பாடுகளையும் கணக்கில்கொண்டு பார்க்கிறபோது அறிவுலகம் காட்டிய தலித் அடையாளம் மட்டுமல்ல அவர்கள் விரும்பிய பிராமணரல்லாதார் கருத்தியலும் உடைபடுகின்றது. இதனைச் செய்தது 1990களின் கடைசி ஆண்டுகளில் உருவான தனித்துவம் நோக்கிய தலித் விமர்சனம்தான். இவ்வாறு தாங்கள் முன்வைத்த அதுவரையிலான விளக்கங்கள் விடைபெற்ற நிலையில் அறிவுலகத்தில் பலரும் தலித் பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்கின்றனர். சாதிய அணுகுமுறையில் குறிப்பான அடையாளச் சிக்கல்கள் வலியுறுத்தப்படுவதற்கு எதிராக ஒடுக்கப்பட்டோர் செலுத்த வேண்டிய விசுவாசம் வலியுறுத்தப்படுகிறது. தலித் என்ற அடையாளத்திற்கு மறைமுகமான எதிர் நிலைப்பாடு இது. தற்காலத்தில் மீண்டும் பேசவந்துள்ள சில அறிவாளிகள் தலித் சார்ந்த உரையாடல்கள் நடந்ததாகவோ அதன் தாக்கங்களையோ காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. மேலும் தலித் விவாதத்தில் இருந்தவர்களைப் புறக்கணிப்பதும் நடக்கிறது. அடுத்ததாக அரசியல் தவிர்த்த தளங்களில் இவ்வடையாளம் எதிர்கொள்ளப்படும் நிலை குறித்தும் பேசலாம்.

தலித் மக்கள் அரசியல் அமைப்புகளைத் தொடங்கிப் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கட்டமைத்ததற்கு எதிர்நிலையாக ஆதிக்கச் சாதிகள் பலவும் சாதிச் சங்கங்களைத் தொடங்கின. ஏற்கனவே சாதிச் சங்கங்களை வைத்திருந்தோர் மேலும் பலப்படுத்தினர். வேறு சிலர் தலித்துகளுக்கு எதிரான கோரிக்கைகளை எழுப்பிப் போராடவும் செய்தனர். எதிர் ஜனநாயகமாக உருவான இப்போக்கு நேரடியானது. இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் உருவாகியுள்ள எதிர்வினைகள் அத்துணை வெளிப்படையானவையல்ல. மாறாக நுட்பமானவையாகும். இலக்கியம், ஊடகம், கலை சார்ந்து இவை வெளிப்படுகின்றன.

தலித் இலக்கியம் என்பதைச் சாதி இலக்கியமாகக் கருதித் தத்தம் சாதி இலக்கியங்களுக்கான 'நியாயங்களை' உருவாக்கி இலக்கியம் படைக்கும் போக்கு உருவானது. சுயம், வட்டாரம் சார்ந்த சொல்லாடல்கள் இதற்குப் பயன்பட்டன. முன்னெப்போதையும்விடச் சாதியடையாளம் கொண்ட படைப்புகள் பெருகின. தொடக்கத்தில் புதுச்சேரியிலும் தொடர்ந்து மதுரையிலும் தலித் கலை விழாக்கள் நடத்தப்பட்டன. இவை அனைத்தின் பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் இருந்த தலித் அல்லாதோர் இதே போன்று தங்கள் அடையாளங்களையும் தேடத் தொடங்கினர். கலை விழாக்களில் கலந்துகொண்ட வேறுசில படைப்பாளிகள் தலித்துகளின் அடையாளங்களையும் தம் சொந்த அடையாளங்களையும் சேர்த்தே தங்கள் படைப்புகளில் சித்தரித்தனர். தங்கர்பச்சானின் 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற திரைப் பிரதிகள் இதற்கு உதாரணம். இதே போன்று தங்கள் அடையாளங்களுக்கு அறிவுலக அங்கீகாரங்களை உருவாக்கும் பின்னணியில் பத்திரிகைகளையும் பதிப்பகங்களையும் (காவ்யா) ஏற்படுத்திக்கொண்டனர்.. தலித் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த இப்பத்திரிகைகளும் இப்பதிப்பகங்களும் சொந்தச் சாதிப் பிரதிகளையும் உருவாக்கத் தொடங்கியுள்ளன. தலித் வரலாற்று அடையாளம், சிந்தனை வரலாறு போன்றவை மீட்கப்பட்ட சூழலில் தங்கள் அடையாளம் பூண்டு வரலாற்றினைக் கட்டுவதற்கும் தலித் ஆளுமைகளோடு ஒப்பிட்டு, பேதம் பாராட்டுவதற்கும் இவை முற்படுகின்றன. ஆனால் இவற்றில் எதையும் முன்பைப் போல் சாதியடையாளத்தைச் சொல்லி விமர்சிக்க முடியாது. அவ்வாறு சொல்ல முடியாத நிலைமையையும் வாய்ப்பையும் இவர்கள் சேர்த்தே உருவாக்கினர். அதாவது இவர்கள் தலித் அடையாளங்களை மறுப்பதில்லை. மாறாக அதையும் சேர்த்தே பதிவுசெய்தனர். இந்த அங்கீகாரத்தை வழங்கிக்கொள்ளும் அதே வேளையில் தம் சொந்தச் சாதி அடையாளங்களையும் மீட்டெடுத்துப் பேசுகின்றனர். இப்போக்கு ஒரு ஜனநாயக அம்சமாகத் தோற்றம் தரலாம். ஆனால் இச்சூழலை அவ்வாறு விளக்க முடியாது என்பதே உண்மை. ஒடுக்கிறவருக்கும் ஒடுக்கப்படுவோர்க்கும் ஒரேவித நியாயத்தைத் தர இந்நிலை முயல்கிறது. தலித் சாதிகளோடு தங்கள் சொந்தச் சாதி 'பாதிப்பையும்' அடையாள மீட்பையும் உருவாக்கும் ஆதிக்க வகுப்பின் இப்போக்கிற்குச் சுய அடையாள அரசியல் மட்டுமல்லாது தமிழகத்தின் புகழ்பெற்ற சமூக நீதிச் சொல்லாடலான பிராமணர் அல்லாதார் என்னும் அடையாளமும் பயன்படுகிறது. வல்லினம் இதழில் (2008 ஜூலை) பழமலை எழுதிய "பங்காளிகள், பகையாளிகளாய்" என்ற கவிதையையும் ஒரு சான்றாகச் சொல்லலாம். இதனால்தான் இச்சொல்லாடல் மீது விமர்சனம் வைக்கப்படும்போது பதற்றம் ஏற்படுகிறது.

தமிழ் சினிமாவின் வட்டாரச் சித்தரிப்புகளிலும் இதன் தாக்கமுண்டு. தற்காலத்தில் வெளியான சில படங்கள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டிருக்குமானால் நிச்சயம் வேறு மாதிரியாகவே இருந்திருக்கும். இன்றைக்குப் பாத்திரச் சித்தரிப்பிலும் இசையிலும் பாடல்களிலும் தலித் அடையாள அரசியலின் தாக்கமிருக்கிறது. 'பருத்தி வீரன்', 'சுப்ரமணியபுரம்' போன்ற படங்களின் கிராமியப் பாடல்களில் ஏதோவொரு விதத்தில் தலித் கலை விழாக்களின் தாக்கமிருக்கின்றது. அதேபோல அமீர், பாலாஜி சக்திவேல், பாலா போன்றோரின் படங்களில் தனித்துப் பேச வாய்ப்பு வந்தால் தலித் பாத்திரங்களைக் காட்டுவதும் முரண்படும் சாதி சார்ந்த குழுக்களைச் சித்தரித்தால் தலித் பாத்திரங்களின் அடையாளங்களை மட்டும் பொதுவாக்கிவிடுவதும் நடக்கிறது. இவ்விடத்தில் ஆவணப் படங்களைக் குறித்தும் பேச வேண்டியுள்ளது. தலித் பிரச்சினைகள் ஆவணப் படங்களாக எடுக்கப்பட்ட சூழல் மாறிச் சொந்தச் சாதி அடையாளங்களை விடுதலைப் போராட்டம், தமிழன் போன்ற பொது அடையாளங்களின் பெயரால் மறு உற்பத்தி செய்துகொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. கி. தீனதயாள பாண்டியனின் 'ரேகை', 'காலம்' போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள்.

மேலே பேசப்பட்ட இப்போக்குகளுக்குப் பின்னால் தலித் அடையாள அரசியலின் தாக்கம் மட்டுமல்ல, அதனை எதிர்கொள்ளும் நோக்கமும் இருக்கிறது. நேரடியான சாதியடையாளம் இல்லாதவை போன்ற தோற்றம் தரும் இவற்றின் பின்னால் இருப்பவை சாதி நோக்கம் மட்டுமே என்பது நம் வாதம். தலித் அடையாளத்தை அங்கீகரிப்பதன் மூலம் சாதி குறித்து தலித் அடையாளம் எழுப்பிய கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொள்வதும் மறுவகையில் சாதி அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதுமான அனுகூலங்கள் கிடைக்கின்றன. ஏனெனில் ஜனநாயக அடையாளம் பூண்ட இந்த வகையினர் நெருக்கடியான சூழ்நிலையின்போதோ சாதி முரண்பாடுகள் அடிப்படையில் மோதல் நடக்கும்போதோ தங்கள் சொந்தச் சாதியினர் பக்கமே நிற்பார்கள். அதோடு தலித் அடையாளமும் வெறுமனே சாதி சார்ந்த ஒன்று என்னும் தோற்றத்தையும் இச்சூழல் உருவாக்கிவிடுகிறது.

இவையெல்லாவற்றையும்விடப் பிராமணரல்லாத சாதியினர் தங்களது அதிகாரத்தைப் புதியதொரு வகையில் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். உதாரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம். சொந்தச் சாதிப் படைப்பாளிகளை மட்டுமே பொறுப்பாளர்களாகக் கொண்டு தொடங்கப்பட்ட அதன் தொடக்க விழாவில் பல்வேறு சமூகச் செயல்பாட்டாளர்களையும் சிந்தனையாளர்களையும் பங்கேற்கவைத்தனர். சாதியடையாளத்திற்கு ஜனநாயக அங்கீகாரம் இவ்வாறு கட்டப்பட்டது. அதற்கேற்றாற்போல் அதில் கலந்துகொண்டவர்களில் யாரும் பெரிய அளவில் அதன் சாதி நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தளத்தில் தலித் பிரதிநிதிகளையும் அழைக்கின்றனர். இதற்காக நிலவும் அரசியல் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்கின்றனர். தலித் அடையாளத்திற்குத் தங்கள் தரப்பு வழங்கிய 'அங்கீகாரத்திற்கு'ப் பதிலியாக ஜனநாயக முகத்திற்காக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சூழலை 1910, 1920 ஆகிய காலகட்டங்களோடு ஒப்பிட்டும் புரிந்துகொள்ளலாம். அதாவது பிராமணரல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி போன்ற அமைப்புகள் தங்கள் மேடைகளில் தலித் பிரதிநிதிகளைப் பங்கேற்கச்செய்வதன் மூலம் தங்கள் தரப்பைப் பாதுகாத்துக்கொண்டனர். ஆனால் அன்று முதல் இன்றுவரையிலும் இந்நடவடிக்கைகளின் நோக்கம் குறித்த விழிப்புணர்வு தலித் பிரதிநிதிகளுக்கு இருந்தேவருகிறது. தலித் அல்லாத ஆதிக்கப் பிரிவினரின் இப்போக்கு பண்பாட்டுத் தளங்களுக்கு மட்டுமல்லாது அரசியல் தளங்களுக்கும் பொருந்தும்.

தலித் அடையாள அரசியலின் எதிர்வினைகளை இவ்வாறான அரசியல் பின்புலத்தில் வைத்து விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் தலித் அடையாள அரசியல் சார்ந்து ஏற்பட்டுள்ள ஒருவித 'தேக்கத்திற்கு' தலித்துகளை மட்டுமே காரணமாக்கு வதைத் தவிர்க்க முடியும். தலித் அடையாளம் தாங்கள் வரையறுத்த எல்லையின் அடிப்படையில் இருந்தால் மட்டுமே அதை ஆதரிப்பது என்ற நிலைதான் இன்று தலித் மீதான அக்கறையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் காந்திய அணுகுமுறையாகும். ஆனால் தலித்துகளின் தனித்துவத்தை அங்கீகரித்த தலித் ஆதரவே இங்கு அவசியப்படுகிறது. தமிழ்ப் பண்பாட்டு செயற்பாட்டாளர்கள் காந்திய அணுகுமுறையோடுதான் இப்பிரச்சினையைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையே இந்த எதிர்வினைகள் சொல்கின்றன.