(ரவிக்குமாரின் தலித் தொடர்பான விமர்சனக் குறிப்பொன்றையும்,
மீனா கந்தசாமி குறித்த அவரது மௌனத்தையும் முன்வைத்து…)
எழுத்தாளர் ரவிக்குமார் “தமிழ் தலித் இலக்கியத்துக்கு புதுச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் கட்டியிருக்கும் கல்லறை” என்ற விமர்சனக் குறிப்பொன்றைத் தன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் (nirapprigai.com, 29.09.2011). அதாவது ஒன்பது தமிழ் தலித் எழுத்தாளர்களின் சுய அனுபவம் பற்றிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பை 2004-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் இன்ஸ்டியூட் வெளியிட்டது. ஏழாண்டுகள் கழித்து (2011) அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை Tamil Dalit Literature : My Own Experience என்ற தலைப்பில் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொகுப்பாளர்களான டேவிட் பக், கண்ணன்.எம் ஆகிய இருவரும் எழுதியுள்ள முன்னுரைதான் ரவிக்குமாரின் இந்த விமர்சனத்திற்குக் காரணமாகியுள்ளது.
மீனா கந்தசாமி குறித்த அவரது மௌனத்தையும் முன்வைத்து…)
- ஸ்டாலின் ராஜாங்கம்
ரவிக்குமார் |
தமிழில் தலித் இலக்கியம் தேங்கிப் போய்விட்டதாக அறிவிக்கும் இம்முன்னுரை இத்தொகுப்பு தமிழில் 2004-இல் வெளிவந்தபோது தலித் இலக்கியம் பற்றி இருந்த நம்பிக்கை கூட தற்போது இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறது. இவ்வாறு நம்பிக்கை தராத ஒன்றை ஏன் தொகுக்க வேண்டும்? அதை ஆங்கில மொழியில் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி யாருக்கும் எழும். உலக அளவில் தமிழ் தலித் இலக்கியம் பற்றி தரங்குறைந்த கருத்து உருவாகவே இது வழிவகுக்கும். அதிலும் இத்தொகுப்பிலுள்ள இரண்டொரு படைப்பாளிகளைத் தவிர மற்றவர்கள் நேரடியான படைப்பிலக்கியத்தோடு தொடர்பில்லாதவர்கள் என்பதோடு முக்கியமான ஆக்கங்களைத் தந்தவர்களாகவும் இல்லாத நிலையில், தலித் இலக்கியம் பற்றிய ஆங்கில உலகத்திற்கான இந்த அறிமுகம் தலித் பற்றிய அவநம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்யும். இத்தகைய ‘குறைகளோடு’ ஆங்கிலத்திற்கு இத்தொகுப்பைக் கொண்டு செல்ல தலித்தியத்தை வைத்துப் போடப்பட்ட ப்ராஜெக்ட்தான் காரணமாக இருக்க முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.
இம்முன்னுரை மீதான பிரச்சினைப்பாடுகளை கண்டுகொண்டு விமர்சனத்தினை முன்வைத்திருப்பது ரவிக்குமாரின் வலைத்தளப் பதிவு மட்டும்தான். பால் ஸெலான், ரால் ஸீரிடா, பேட்ரிக் சமோஸீ போன்று தலித் படைப்பாளிகளிலிருந்து யாரும் உருவாக முடியவில்லை என்ற தொகுப்பாளர்களின் ‘கவலை’யை அவ்வாறான படைப்பாளிகள் தமிழ் தலித் அல்லாதவரிடமிருந்து உருவாகாதது ஏனென்றும், இத்தொகுப்பாளாகளாவது அத்தகைய ஒரு வரியைக் கூட எழுதாதது ஏனென்றும் கேட்டு ரவிக்குமார் எதிர்கொண்டிருக்கிறார். அந்தவகையில் ரவிக்குமாரின் இந்த விமர்சனம் முக்கியமானதே.
மேலும் தலித் அடையாளத்தின் சார்பாகப் பேசும் இந்த விமர்சனத்தில் தமிழ் தலித் இலக்கியம் தமிழுக்கும் வெளியே கிளர்ந்தெழுந்து வருவதாக ரவிக்குமார் கூறுகிறார். ஆனால் அவரின் தமிழ் தலித் இலக்கியம் பற்றிய அசலான பார்வை இதுதானா? என்ற கேள்விதான் இந்த விமர்சனத்தினை ஐயத்திற்கு உரியதாக்குகிறது.
உண்மையில் இத் தொகுப்பின் முன்னுரை தலித் இலக்கியம் பற்றிக் கூறும் கருத்துகளோடு ரவிக்குமாரின் கருத்து பெரிதும் முரண்படுவதில்லை. அவருக்குத் தமிழ் தலித் இலக்கியம் பற்றி மரியாதையேதும் இல்லை. ஸ்டீரியோ டைப் போல, யாரும் சரியில்லை / எழுதுவதில்லை, படைப்பூக்கம் இல்லை என்பதையே நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆனால் இப்போது பிரெஞ்சு இன்ஸ்டியூட்டை எதிர்கொள்ள வேண்டுமென்னும்போது தலித் இலக்கியம் சிறப்பானது என்று மாறிப் பேசுகிறார். எனில் தலித் இலக்கியத்தைக் காப்பாற்றும் நோக்கமென்று இதைக் கருதலாமா? அதுதான் இல்லை. இம்முன்னுரையில் ரவிக்குமாரை மனதில் வைத்து எழுதப்பட்ட வரிகளே இதற்குக் காரணம். அவரே தன் விமர்சனக் குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ள “தலித் எழுத்தாளர்கள் சந்தைகளின் விதிகளால் ஆளப்படுகிறார்கள்;; தமது பத்திரிகைகளில் வலைப்பூக்களில் புகழையும் பெருமையையும் இடைவிடாமல் விரட்டிக் கொண்டிருப்பவர்கள்” என்று பேசும் வரிகளே இதற்குக் காரணம். இதை எதிர்கொள்வதற்காகவே தலித் இலக்கியத்திற்கு ஆதரவாகக் குரலெப்பி அவர்களை ரவிக்குமார் தாக்குகிறார். அதாவது அசலான கருத்தாக இல்லாவிட்டாலும் எதிரிகளை எதிர்கொள்ள தலித் அடையாளத்தைக் கையாளும் உத்திதான் இது. அந்தவகையில் இந்த விமர்சனம் பாவனையானது.
தலித் இலக்கியம் பற்றிய அக்கறை இருக்குமானால், அது எழுச்சி பெற்றிருப்பது உண்மையானால் தான் செயற்படும் தளங்களில் அதைப்பற்றிய பேச்சே இல்லாமல் இருப்பது ஏன்? ரவிக்குமார் நடத்தும் மணற்கேணி இதழில் இதற்கான இடம் என்ன? தலித் இலக்கியம் இயங்குவது உண்மையானால் அவர் ஏற்கனவே நடத்திய தலித், போதி என்ற தலித் அடையாளம் பூண்ட பெயர்களிலான இதழ்களை நிறுத்திவிட்டு மணற்கேணி என்ற தலித் அடையாளம் இல்லாத ‘பொது இலக்கிய’ பெயரில் இதழ் ஏன்? அதில் தலித் அடையாளம் பற்றிய மௌனம் ஏன்?
அவர் அரசியலில் அதிகாரத்திற்குத் துதிபாடிக்கொண்டிருந்த காலத்தில் இந்தக் களங்களில் முழுமையாக ஈடுபடமுடியாததால்தான் தலித் அடையாளத்திலிருந்து விலகியதை மறைப்பதற்காகத் தலித் அடையாளம் பூணாத பொதுவான பேச்சுகளை அவர் பேசத் தொடங்கிக் கொண்டார். தான் அம்பலமாவதை மறைப்பதற்கான பாசாங்கு இது. தன்னை விமர்சித்தால் மட்டுமே அதனை எதிர்கொள்ள தலித் அடையாளம், மற்றைய காலங்களில் தானே அந்த அடையாளத்தைக் கிண்டலடிப்பது / மௌனமாக்குவது இவர் பாணி. இதற்கு உதாரணமாக மீனா கந்தசாமியை பற்றிய தகவலைக் கூறலாம்.
தலித் அடையாளத்திற்கு ஆங்கில உலகில் கிடைக்கும் மார்க்கெட் வேல்யூ கருதி, தன்னைத் தலித் என்றும், தலித் போராளி என்றும் கூறி அதன் லாபங்களைப் பெற்று வருகிறார் மீனா. அவர் தலித்தாக இல்லாததோ, தலித் அல்லாத ஒருவர் தலித் பற்றிப் பேசுவதோ இங்கு பிரச்சினை இல்லை. மாறாக இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொள்வதுதான் பிரச்சினை. மீனாவின் இப்போலித்தனம் பற்றி ரவிக்குமாருக்குக் தெரியாததல்ல. மீனா தலித் அடையாளத்தால் லாபம் அடைவது மட்டுமல்ல தன்னை விமர்சிப்பவர்களை நோக்கித் திருமாவளவன் பெயரைக் கூறி மிரட்டுவதையும் தொடர் போக்காக கொண்டுள்ளார். (இதைப்பற்றி 30.09.2011 தேதியிட்டு தமிழச்சியின் கட்டுரையொன்று இணையதளத்தில் வெளியாகி மீனா அம்பலப்பட்டமை பலருக்கும் தெரியும்).
மேலும் தலித் இலக்கியம் தமிழுக்கு அப்பால் கிளர்ந்து வருவதாக ரவிக்குமார் அந்த விமர்சனத்தில் கூறுவது பெங்குவின், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் போன்ற ஆங்கில பதிப்பங்களின் அண்மைய தமிழ் தலித் இலக்கிய தொகுப்புகளைப் பற்றிதான். இதைச் சொல்வது கூட இத்தொகுப்புகளின் தொகுப்பாளராக இவர் இடம்பெற்றிருப்பதால்தான். அவரும் எஸ்.ஆனந்தும் இணைந்து ஆங்கிலத்தில் நடத்தும் நவயானா பதிப்பகத்தையும் கூடவே சொல்லிக் கொள்கிறார். இவையெல்லாம் முக்கியமான முயற்சிகள்தாம்.
ஆனால் தமிழ் தலித் இலக்கியம் பற்றி ஆங்கில உலகில் தப்பான கருத்து உருவாகக் காரணமென பிரெஞ்சு இன்ஸ்டியூட் தொகுப்பை விமர்சிக்கும் அதே ஆங்கில உலகில் தலித் அடையாளத்தை சுரண்டிப் பிழைக்கும் மீனாவை நவயானா பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியிடவும் (MS Militancy) அவரோடு சேர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு நூல் வெளியிடவும் (Waking is Another Dream) செய்வது என்னவகை நிலைப்பாடு? தலித் அடையாளம் பற்றி ஒரேவிதமான - நேர்மையான நிலைப்பாடு இருக்குமானால் மீனாவின் சுரண்டலுக்கு எதிராக விமர்சனச் சாட்டையை சொடுக்கியிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு இணைந்து செயற்பட்டிருக்கவும் கூடாது. முன்பு வே.மதிமாறன் தலித் முரசு இதழில் தலித் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோது பலரும் அவரை தலித் என்றே கருதியிருந்தனர். ஆனால் அவரை தலித் அல்லாதவர் தலித் விமர்சன முறைக்கும் தொடர்பில்லாத தி.க.காரர் என்று எழுதி முடக்கிய ரவிக்குமார் அதைவிட மாபெரும் புரட்டில் ஈடுபட்ட மீனா கந்தசாமிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்? இங்குதான் அவர் தலித் அடையாளத்தை அதற்குரிய சமன்பாடுகளோடு கையாளுவதை விடுத்து தன்னுடைய நலனை மட்டுமே வைத்து வாளைப் போலச் சுழற்றுவதும் தலித் அடையாளத்தின் பெயரிலான சுரண்டல் என்கிறோம்.
ஆனால் தமிழ் தலித் இலக்கியம் பற்றி ஆங்கில உலகில் தப்பான கருத்து உருவாகக் காரணமென பிரெஞ்சு இன்ஸ்டியூட் தொகுப்பை விமர்சிக்கும் அதே ஆங்கில உலகில் தலித் அடையாளத்தை சுரண்டிப் பிழைக்கும் மீனாவை நவயானா பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியிடவும் (MS Militancy) அவரோடு சேர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு நூல் வெளியிடவும் (Waking is Another Dream) செய்வது என்னவகை நிலைப்பாடு? தலித் அடையாளம் பற்றி ஒரேவிதமான - நேர்மையான நிலைப்பாடு இருக்குமானால் மீனாவின் சுரண்டலுக்கு எதிராக விமர்சனச் சாட்டையை சொடுக்கியிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு இணைந்து செயற்பட்டிருக்கவும் கூடாது. முன்பு வே.மதிமாறன் தலித் முரசு இதழில் தலித் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோது பலரும் அவரை தலித் என்றே கருதியிருந்தனர். ஆனால் அவரை தலித் அல்லாதவர் தலித் விமர்சன முறைக்கும் தொடர்பில்லாத தி.க.காரர் என்று எழுதி முடக்கிய ரவிக்குமார் அதைவிட மாபெரும் புரட்டில் ஈடுபட்ட மீனா கந்தசாமிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்? இங்குதான் அவர் தலித் அடையாளத்தை அதற்குரிய சமன்பாடுகளோடு கையாளுவதை விடுத்து தன்னுடைய நலனை மட்டுமே வைத்து வாளைப் போலச் சுழற்றுவதும் தலித் அடையாளத்தின் பெயரிலான சுரண்டல் என்கிறோம்.
(தொடரும்)
what you have pointed out can not be brushed aside slightly Though i have lot of respect for Shree Ravikumar the point is well taken
ReplyDelete