Wednesday 16 May 2012

சுகுமாரனின் 'சுதாரிப்பு'

கோ.சுகுமாரன்
எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்திராத புதுச்சேரி கோ.சுகுமாரன் எழுதிய சிறுபதிவொன்றை முகநூலில் (Facebook) காணமுடிந்தது. ஏப்ரல் 14ந்தேதி நெய்வேலி விருதுகள் வழங்கும் விழாவில் "பெரியார் பிறக்காத உ.பி.யில் தலித் முதலமைச்சராக முடிகிறது. ஆனால் பெரியார் பிறந்த தமிழக மண்ணில் முதல்வராக முடியவில்லை" என்று திருமாவளவன் பேசியதான ஒரு கூற்றை மட்டும் எடுத்துக்காட்டி மறுப்பு எழுதியிருக்கிறார். அண்மையில் பேட்டியொன்றிலும் (ஆழம் மே 2012) திருமாவளவன் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர் அல்லாத பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளின் அதிகாரத் தளத்தில் தேர்தல் அரசியல் சார்ந்து இயங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியும் மேற்கண்ட பெரும்பான்மைவாதத்திற்குக் கட்டுப்படவேண்டியிருப்பதால் சமரசத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அது அவ்வப்போது கருத்தியல் தளத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் விழிப்புணர்ச்சியைக் கூட முடக்கும் எத்தனம்தான் சுகுமாரனின் இப்பதிவு.

முதலில் அவர் திருமாவளவனின் இக்கூற்றை எடுத்துக்காட்டி பிரச்சினைக்குரியதாகக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறு உண்மை கூட பெரியார் என்னும் திருவுரு மீதான விமர்சனமாக மாறிவிடக்கூடாது என்ற அச்சம் அவருக்கிருக்கிறது. இதேபோல்தான் முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆராதிப்பதற்காக அக்கட்சி சமத்துவப் பெரியார் என்ற பட்டத்தைத் தந்தபோது அச்சீரழிவைப் பற்றி ஒருவரி கூட விமர்சிக்காமல் சமத்துவப் பெரியார் என்ற பெயரைப் பற்றி மட்டுமே அவர் வல்லினம் இதழில் விமர்சித்து எழுதியிருந்தார். அதாவது கருணாநிதியைச் சமத்துவப் பெரியார் என்று சொன்னால் பெரியார் ஈ.வே.ரா. 'சமத்துவமற்றவரா?' என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் எழுதியிருந்தார்.

முன்பு பெரியார் - திராவிட இயக்கம் பற்றி விமர்சனம் செய்ததாக வெவ்வேறு காரணங்களின் பெயரால் திருமாவளவனைக் கொத்தித் தீர்த்த பலரும், தலித் பிரச்சினைகளுக்கு அழுத்தம் தராமல் தமிழ் அரசியல், எந்தவொன்றிலும் தனித்துக் கருத்து கூறாமல் பொத்தாம்பொதுவான பிராமண எதிர்ப்பு கருத்து நிலை என்றெல்லாம் வந்துவிட்ட பின்னால் அவரை அது சார்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டனர். திருமாவளவனையோ தலித் கட்சிகளையோ விமர்சிப்பதில் ஈழத்தை ஆதரிப்பவரும், ஆதரிக்காதவரும் ஒன்றுபடும் புள்ளி இது. யாரும் சீரழியும் போது வராத மறுப்பு சீரடையும் போது வந்துவிடுகிறது.

காஞ்சி மடத்தைப் பற்றிப் பேசுவோர் கிராமக் கோயில்களில் தலித்துகள் நுழையமுடியாமலிருப்பதைப் பேசுவதில்லை என்று முன்பொருமுறை திருமாவளவன் கூறியிருந்தபோது "இரண்டும் ஒன்றா?" எனக் கேட்டு அக்கூற்றைப் பிராமண ஆதரவு கொண்டது என்ற அளவிற்கு மாற்றியிருந்தார் ஓர் அறிவுஜீவி. மேலிருப்பவரை மட்டுமே எதிரியாகக் காட்டிக்கொண்டு கீழிருக்கும் தலித்துகளுக்குச் சமத்துவம் அளிக்காததுதான் இன்றைய பிராமணரல்லாத அரசியல் என்கிற பொருள் கொண்டது திருமாவின் அவ்விமர்சனம்.

பிராமணர் அடையாளங்களை மட்டுமே எதிரியாகக் காட்டும்போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் பொத்தாம்பொதுவாகப் பேசி தப்பித்துக்கொள்பவர்களுக்கு, பதிலளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஆனால் இப்படியொரு விமர்சனம் செய்தாலே பிராமணர் ஆதரவு என்றாக்கிவிடும் எளிமைப்படுத்தல்தான் இங்கிருக்கிறது. "தலித்துகள் பேசும் கருத்து பிராமண ஆதரவாகிவிடக் கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கத்தைப் பேசாமல் அவர்களையும் அரவணைத்துப் பேசவேண்டும்; இவ்வாறு பேசினாலும் அவர்கள் கிராமந்தோறும் வெட்டிக்கொண்டே இருப்பார்கள். தலித்துகள் செத்துக்கொண்டே இருக்கவேண்டும்" என்பதுதான் நியதியாக இருக்கிறது.

கிராமப்புறக் கோயில்களின் தலித் புறக்கணிப்பு போன்றவற்றை அவ்வப்போதான கூற்றுகளாக உதிர்க்காமல் செயல்திட்டமாகக் கொண்டுசெல்லாமலிருப்பது அக்கட்சியின் குறைபாடுகளாக இருந்தாலும் எப்போதாவது இப்படியொரு கேள்வியை எழுப்புவதையும் மறுக்கவேண்டுமா? தலித்துகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் சார்பாக உண்மையறியும் குழு செல்வது மட்டுமே உண்மையறிதலாகிவிடாது. அவர்களை ஒடுக்கிய / ஒடுக்கும் சக்திகள், அதில் நடந்துள்ள சமகால மாற்றங்கள், சாதிமுறையால் பலன்பெறும் சாதிகள் - அவற்றிற்குக் கிடைக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் பரிசீலனை செய்வதும் உண்மையறிதல்தான்.

திருமாவளவன்
திருமாவளவனின் கூற்று பெரியாரை விமர்சிப்பதாகக் கருதி சுகுமாரன் அதை மறுத்திருக்கிறார். பெரியார் பணியாற்றியும் கூட அம்மண்ணில் தலித்துகளுக்கு எதிரான மனோபாவத்தை மாற்ற முடியாத அளவிற்கு அது ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்று நேர்மறையாகக் கூட இதை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சுகுமாரன் உண்மையை அறிபவராயிற்றே. தலித்துகள் அதிகாரம் பெறாமலிருப்பதற்குப் பெரியார் காரணமல்ல. மாறாக தலித்துகளே காரணம் என்று கூறி அவர்களையே குற்றவாளியாக்கியிருக்கிறார்.

தலித்துகள் உட்சாதிகளாகவே இருக்கிறார்கள், தலித் அரசியல் தலைமைகள் அவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்று கூறி, குறிப்பாக திருமாவளவனையே சுட்டிவிட்டு, ஆனால் உ.பி.யில் தலித்துகளை மாயாவதி ஒருங்கிணைத்ததாலேயே முதல்வரானார் என்கிறார். மற்றெந்த காரணத்தையும் அவர் கூறவில்லை. சுகுமாரனின் இப்பதிவிற்கு "முதல்வர் பதவிக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?" என்று பின்னூட்டமிட்டு, அதைத்தான் சுகுமாரனும் கேட்கிறார் என்று சுகுமாரனை ஆமோதித்து பின்நவீன 'அறிஞர்' ஒருவரின் கூற்றும் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் தலித் சாதி ஒருங்கிணைப்பு பற்றி பல்வேறு தலித் தலைவர்களின் நிலைபாடும், முயற்சியும், வரையறையும் என்ன? தலித் சாதிகளின் ஒருங்கிணைவில் தலித் அல்லாதோரின் தலையீடும் பங்களிப்பும் என்ன? போன்றவற்றை விரிவாகப் பேசும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும். அவ்வாறு வெளிப்பட்டால் தலித் ஒருங்கிணைப்பில் தலித் தரப்பு குறைபாடு மட்டுமல்ல, தலித் அல்லாத தரப்பின் குறைபாடும் தெரியவரலாம். எனவே என்னுடைய குறிப்பு அதை விடுத்து சுகுமாரனின் மறுப்பில் அடங்கியுள்ள வேறுசில பிரச்சினைப்பாடுகளைச் சொல்ல முயற்சிக்கிறது.

தலித்துகளின் அதிகாரம் பற்றிய கருத்தில் தலித்துகளின் ஒற்றுமைக்குறைவை மட்டுமே காரணம் காட்டி தலித் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மற்ற பிரச்சினைகளைப் பேசாமல் விடுவது அல்லது மறைப்பது நியாயமல்ல. அதிலும் தலித்துகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதும் யாரும் தங்கள் தரப்பின் குறைபாடுகளை விவாதிக்காமல் தலித்துகளையே குறைகூறுவது தலித் மக்களுக்கு நன்மை செய்வதாகாது என்பதைப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.

முதலில் சுகுமாரனும் அவரை ஆதரிப்போரும் திருமாவளவனின் கூற்றை எளிமைப்படுத்தி, தாங்கள் பதிலளிப்பதற்கு ஏதுவாகக் குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் கூற்று பெரியாரை மட்டுமே காரணமாக்கியிருக்கிறது என்று கொள்வதைக் காட்டிலும், அவர் நடத்திய அரசியல் பணிகளின் விளைவு, அவருடைய அரசியல் வாரிசுகளின் தலித் பற்றிய மனோபாவம், அவருடைய கருத்தியல் மற்றும் பணி, சாதி எதிர்ப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்றெல்லாம் அதை விவரிக்கமுடியும். அதில் எந்தப் பெரியார் புறக்கணிப்பும் இல்லை. பெரியாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் அவர் மீதான சிறு விமர்சனமாகவும் அது அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்த அளவிலான விமர்சனத்தைக் கூட ஒடுக்கப்பட்டோர் அரசியல் இயக்கம் முன்வைக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது மோசமான மனோபாவம். 

இங்கு செல்வாக்கு செலுத்திவரும் பிராமண எதிர்ப்புவாதம் பிராமணரல்லாத சாதிகளின் பெரும்பான்மையை வலியுறுத்துகிறது. இப்பெரும்பான்மைவாதம் ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள எண்ணிக்கைப் பெரும்பான்மை இடைநிலை சாதியினரை வலிமையாக்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்துவந்த நிலவுடைமை, பிராமண இந்து மதத்திற்கான ராணுவ சேவை போன்றவற்றால் சமூக அதிகாரம் பெற்றிருந்த பிராமணரல்லாத சாதியினருக்கு, திராவிட இயக்கம் பேசிய கருத்தியல் "அரசியல் அதிகாரத்தை"க் கொண்டுவந்திருக்கிறது. வட்டார அளவில் தலித்துகளை ஒடுக்கிவந்த பெரும்பான்மை இடைநிலைச் சாதியினருக்குக் கிடைத்த இந்த அரசியல் அதிகாரம் தலித்துகளை அதிக பலத்தோடு ஒடுக்குபவர்களாக மாற்றியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகாலத்தில் அரசியல் தளத்தில் நடந்துள்ள மாற்றம் இது. இதற்குப் பிராமணரல்லாத அரசியல் பெரும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. பிராமணரை அகற்றமுடிந்த இவர்களால் சாதி என்கிற அளவில் தங்களுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளை அரவணைக்க முடிவதில்லை.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் மட்டுமல்ல; உள்ளாட்சி பிரதிநிதித்துவம், கட்சிகளின் கிளை, ஒன்றிய, வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகங்களிலும் கோலோச்சிவரும் பிற சாதியினர் தலித்துகளைப் புறக்கணித்து வருகின்றனர். இப்போக்கைப் பிரதிபலிப்பதில் திராவிடக் கட்சிகளும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களும் முதன்மை; தற்போதிருக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் மட்டுமே தலித்துகளுக்குப் பாதுகாப்பு. இச்சலுகைகள் கிடைத்ததில் திராவிட இயக்கங்களுக்கு எவ்விதப் பங்கும் இருந்ததில்லை. மாறாக இச்சலுகைகள் அமுல்படுத்தப்படாமல் இருப்பது இவர்கள் ஆட்சியிலேதான். தற்போது பெரியாரிடமிருந்து திராவிடக் கட்சிகள் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அதிகாரம் பெற்றிருப்பதும், அதிகாரத்தைத் தக்க வைப்பதும் அவர் உருவாக்கிய பிராமண எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் பணியின் விளைவுதான் என்பதை மறுக்கமுடியாது. இவ்விடத்தில் பெரியாரை முற்றிலுமாகப் புறக்கணிப்பது நம் நோக்கமில்லை என்றாலும் அவரை விமர்சிக்காமல் செல்லவேண்டும் என்று கோருவது நியாயமல்ல.

பிராமணர்களால் ஒதுக்கப்பட்டவர்களென்று அரசியல் நியாயம் கோரிய பிராமணரல்லாதார் தற்காலத்தில் அதிகாரம் பெற்று, பிராமணர்களைக் கட்டுப்படுத்தியிருப்பதோடு, தலித்துகளையும் ஒடுக்குகிறார்கள் என்கிற உண்மை, மாற்றத்திற்குட்படாத பிராமணரல்லாதோர் என்ற கருத்தியலால் தற்கால அதிகாரத்துவத்தை மறைக்கப்படுகிறது. அதே வேளையில் கிராம அளவில் இந்த பிராமணரல்லாத சூத்திரச் சாதியினரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறவர்களாக இருந்தும் தலித் கட்சிகளால் இம்முரண்பாடு அரசியல் தளத்திற்குக் கொண்டுவரப்படும்போது நாமெல்லாம் பிராமணரல்லாதார் / திராவிடர் / தமிழர் என்ற அடையாளங்களால் முடக்கப்படுகிறார்கள். 

எனவே  இந்த பிராமணரல்லாதார் என்ற அரசியலின் வரலாறு, அதில் தலித்துகள் இருத்தி வைக்கப்பட்ட இடம் போன்றவற்றையெல்லாம் பேசும்போது பெரியாரும் அதில் வருவார். அவர் பேசி வந்த பிராமணரல்லாதார் அரசியலால் அவர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். அதை மீறுவதற்கு அவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செய்ததாகக் கூறமுடியாது. தன்னுடைய அரசியல் வரலாற்றில் குறிப்பான தலித் பிரச்சினை என்ற அளவில் ஒரு போராட்டத்தைக் கூட அவர் நடத்தியதில்லை. மற்றபடி அவர் நடத்திய வேறு சில போராட்டங்களை மொத்தத்தில் பார்க்கும்போது அது தலித்துகளுக்கும் சாதகமானதாக அமைந்திருந்தது என்று வேண்டுமானால் கூறலாம். 

பெரியார்
பெரியார் சூத்திரர்களின் இழிவு பற்றிப் பேசி வந்த அதே காலத்தில்தான் கிராம அளவில் சூத்திரர்களால் திணிக்கப்பட்ட பிணக்குழி தோண்டுதல், செத்த மாடெடுத்தல், பறையடித்தல் போன்றவற்றை எதிர்த்து தலித்துகள் போராடியபோது மௌனமாக இருந்தார். கருத்து ரீதியாகச் சூத்திர சாதி முதலாளிகளைச் சாதகமாகப் பார்த்த அவரால் தலித் சாதித் தொழிலாளிகளைத் திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திட்டமட்டுமே முடிந்தது. எனவே தமிழகத்தில் நடைபெற்ற சமூகநீதி அரசியல் என்பது பிராமணரல்லாதார் என்ற பெயரால் தன்னைச் சாதுர்யமாகப் பாதுகாத்துக் கொண்டு தலித்துகளையும் மேலெழ முடியாமல் தடுத்துவருகிறது. சாதியுணர்வு அரசியல்மயப்படுத்தப்பட்டு, கண்ணுக்குத் தெரியாமல் இறுக்கமடைந்துள்ளது. அரசியல்மயமாகாத இடத்தை விட அரசியல்மயப்பட்ட இந்த இடம் இன்னும் ஆபத்தானது.

பெரியார் போன்றோர் பணியாற்றாத உ.பி.யில்  சாதி இந்துக்களை எதிர்கொள்வது தமிழகத்தைவிட எளிமையாக இருக்கலாம். அங்கு தலித்துகளைக் கட்டுப்படுத்த பிம்பங்களோ கருத்தியல்களோ இல்லை. இந்த அர்த்தத்தில்தான் திருமாவளவன் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய வாசிப்பிற்கே அதிக சாத்தியம். சுகுமாரன் கொண்டிருந்த அர்த்தத்தை இங்கிருந்தும் மறுக்கமுடியும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சூத்திரசாதியினரின் வன்முறை பற்றி சுகுமாரனோ, அவருடைய நண்பர்களோ அறியாதவர்கள் என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனால் சூத்திரர்களின் ஏகபோகம், வன்முறை பற்றிய சிக்கல் வரும்போது அதை ஒத்துக்கொள்வதோ, கடுமையாகக் கண்டனம் செய்வதோ மட்டும் அதற்கு எதிராகச் செயல்பட்டதாக முடியாது. இச்சூழலைக் காப்பாற்றிவரும் / மௌனமாக்கிவரும் அரசியல் சூழல், கருத்தியல் எவையெவையெனப் பேசுவதும் தேவை. ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி அறிவுஜீவியைப் போல் பேசியிருப்பதும், அறிவுஜீவியென்போர் அரசியல்வாதியைப் போல் வாதத்தை எளிமைப்படுத்தி ஒற்றையான பதிலைச் சொல்வதும்தான் நம் அறிவுச்சூழலின் கதி போலும்!

சுகுமாரனின் மறுப்பில் சூத்திர சாதியின் பெரும்பான்மைவாதம், தலித்துகளின் மீதான அரசியல் புறக்கணிப்பு பற்றி ஒருவரி விமர்சனம் கூட கிடையாது. உ.பி.யில் மாயாவதியின் வெற்றி தலித் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல. தலித்துகளை நேரடியாக ஒடுக்கும் பெரும்பான்மை சாதியைக் குறிப்பாக அடையாளம் காட்டி, அப்பெரும்பான்மை சாதியைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் தலைமையில் பிற எண்ணிக்கைச் சிறுபான்மையினரை ஒன்று சேர்த்ததால் பெற்ற வெற்றி அது என்பதை அவர் கூறவில்லை. கூறவிரும்பவும் மாட்டார்.  தமிழகத்தில் ஒரு தலித் கட்சியை அப்படி விடுவார்களா? எப்பாடுபட்டாவது அக்கட்சியைப் பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்குள் உள்ளடக்காமல் விடமாட்டார்கள். இப்போது கூட ஒரு சிறு விமர்சனத்திற்குதான் இத்துணை மறுப்பு.

அதே போல தமிழகத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மை இல்லாத சாதிகளின் கூட்டு, அதற்கான தலித் கட்சிகளின் முயற்சி என்பதெல்லாம் எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதோடு அப்படியான முயற்சி கூட இல்லை. மேலும் உ.பி.யில் தலித் உட்சாதிகளிடம் முரண்பாடே இல்லையென்பதும் சரியல்ல. எனவே, திருமாவளவனின் கூற்றை மறுப்பதற்கு நியாயமற்ற காரணத்தையும் அர்த்தத்தையும் கைக்கொண்டது தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள சுகுமாரனுக்குப் பயன்பட்டிருக்கிறது எனலாம். இதையெல்லாம் எழுதினால் சுகுமாரனின் மனித உரிமைச் செயற்பாடுகளை மறந்துவிட்டு எழுதுகிறார்கள் என்று பதில்கள் வரும். ஒருவரை விமர்சிக்கிறோம் என்று சொன்னால் அவரது பிற செயற்பாடுகளையும் மறுக்கிறோம் என்று எதிர்கொள்வது தமிழ்ச்சூழலில் விமர்சனத்திற்கு எதிராகக் கையாளப்படும் ஓர் கவசம் மட்டுமே.

- ஸ்டாலின் ராஜாங்கம்

Monday 14 May 2012

தி.மு.க.வின் நூற்றாண்டு பற்றிய திரிபுவாத நிலைபாட்டிற்கு நீங்களும் ஒத்துப் போகலாமா?

திராவிட இயக்க நூற்றாண்டு : இரண்டு எதிர்வினைகள் (எதிர்வினை 2)

அருணன்
செம்மலர் - 2012 ஏப்ரல் இதழில் ‘திராவிட இயக்கம் 100’ – என்பதன் நினைவாக அருணன், அண்ணாவின் படைப்புகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையின் உள்ளடக்கம் பற்றியதல்ல இக்கடிதம். மாறாக, திராவிட இயக்கம் 100 - என்பதைப் பொதுவுடைமை இயக்கக் கட்சியும் கேள்வியின்றி ஏற்பதெப்படி என்பதைத் தோழமையுடன் சுட்டுவதற்காகவே இக்கடிதம்.

"திராவிடம் என்ற சொல்லைத் தங்களது கட்சிப் பெயரில் இணைத்துள்ள இதரக் கட்சிகள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாத நிலையில் தி.மு.க.வாவது கொண்டாடுவது வரவேற்கத் தக்கதே" என்று குறிப்பிடுவதன் மூலம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தையும், நூற்றாண்டுக்காகக் கருணாநிதி ஏற்படுத்திக் கொண்ட காலவரையறைகளையும் ஏற்றுக் கொண்டு கொண்டாட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை மட்டும் சொல்லிருக்கிறீர்கள்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்
தி தி.மு.க. ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய மாற்றத்தைப் பேசுவது உங்களின் நோக்கமாய் இருக்கலாம். அதற்காக வரலாற்று நிலையில் சந்தேகத்திற்குரிய வரையறையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்பது எவ்வகையில் சரியாகும்?

திராவிட இயக்கத்தின் தொடக்கமாக எக்காலத்தை, எந்த இயக்கத்தை, எந்தத் தலைவரைக் கொள்வது என்பது பற்றிப் பல்வேறுபட்ட கருத்துகள் இங்குள்ளன. இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்க ஆய்வாளர்களிடையேயும் இதில் ஒருமித்த கருத்து இல்லை. இந்நிலையில் எதை வைத்து கருணாநிதி 1912-2012 என்பதை நூற்றாண்டாகக் கணக்கிட்டார்? அவர் கொண்ட கணக்கு சரியா? அவ்வாறு கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? போன்ற பரிசீலனை தேவை. கருணாநிதியின் இந்த வரையறை திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டதை வைத்தெனில் குறிப்பிடப்படும் 1912ல் எந்தப் பொருளில் இச்சொல் கையாளப்பட்டது? இதற்கு முன்பு திராவிடம் என்ற அடையாளத்தை யாருமே கையாளவில்லையா? இக்கேள்விகள் எல்லாவற்றிற்கும் தீர்க்கமான - சரியான பதிலைச் சொல்லமுடியாதெனில் ஏனிந்த வரையறையும் கொண்டாட்டமும்?

தன்னுடைய காலத்தின் போதே இதை நடத்திட வேண்டுமென்று 'வரலாற்றுப் பெருமை'களை வலிய கட்டமைக்கும் கருணாநிதியின் வேட்கையே இதற்குக் காரணம். 'வரலாற்றுப் பெருமிதத்திற்காக' திராவிட அடையாள வரலாற்றின் சிறு சம்பவத்தைத் தம் ஆதரவு அறிவுஜீவிகள் - ஊடகங்கள் மூலம் பூதாகாரப்படுத்தி அதை நூற்றாண்டு என்கிறார். இதுவும் ஒருவகை அதிகாரமே.

1912-இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் யுனைட்டெட் லீக், திராவிடர் சங்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது திராவிடர் என்ற சொல்லிற்கு அவ்வமைப்பினர் கொண்டிருந்த பொருள் என்ன? அதன் கருத்தியல் மற்றும் செயற்பாட்டின் அளவு என்ன? இவற்றோடு ஒப்பிடும் போது திராவிடம் என்ற அடையாளத்தோடு இதற்கு முன்பே செயற்பட்ட தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் தந்த உள்ளடக்கம் எனன? போன்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. எனவே கருணாநிதி தரும் வரையறையை அப்படியே ஏற்பதில் சிக்கல் இருக்கிறது.

இந்திய தேசியம் கால்கொண்ட காலத்திலேயே அதன் பிராமண சாதி ஆதரவு நோக்கத்தை அம்பலப்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்ட முன்னோடிகளே. இதைத்தான் பின்னர் திராவிட இயக்கமும் பேசியது. ஆங்கிலேய அரசு இந்திய நிர்வாகத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஐ.சி.எஸ். தேர்வை இங்கிலாந்தில் நடத்திய போது தங்களின் கடல் தாண்டக் கூடாதென்ற வேதவிதியை மனதில் கொண்ட பிராமணர்கள் இத்தேர்வை இந்தியாவிலேயே நடத்த வேண்டுமென்று இந்திய தேசிய தோற்றத்தில் 400க்கும் குறைந்த கையொப்பங்களோடு விண்ணப்பம் அனுப்பினர். சாதிபேதம் காணும் பிராமணர்கள் தங்களை ஆளும் நிர்வாகிகளாக வரக்கூடாதென்று தேர்வை இங்கிலாந்திலேயே நடத்தக்கோரி 1894ஆம் ஆண்டே இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான பறையர் மகாசபை சார்பாக 3412 பேரின் கையொப்பத்தோடு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. பின்னாளில் நீதிக்கட்சியில் இடம்பெற்ற பல பிராமணரல்லாத தலைவர்களும் இக்காலத்தில் காங்கிரசில் இருந்தனர். அமைப்பின் பெயர் திராவிடமாக இல்லாவிட்டாலும் பின்னாளைய திராவிட இயக்கத்தின் உள்ளடக்கத்தையே இந்தச் செயற்பாடுகள் பிரதிபலிக்கின்றன. இம்முயற்சி பறையர் வகுப்பு தொடர்புடையதாக இருந்தாலும் இவற்றையெல்லாம் திராவிட இயக்கத்தின் தொடக்க முயற்சியாகக் கூட கொள்ளாத இன்றைய திராவிட இயக்கத் தலைவர்களின் நோக்கத்தை என்னவென்பது? நாமும் இதை அப்படியே ஏற்பதால் வரலாற்றுப் பொய் மறுஉறுதியைப் பெற்றுவிடுகிறது.

மேலும், திராவிட என்ற அடையாளத்தோடு ஜான் ரத்தினமும் (1882 திராவிடர் கழகம்) அயோத்திதாசரும் (1891ல் திராவிட மகாஜன சபை) பிறரும் (1892 சென்னை ஆதிதிராவிட மகாஜன சபை) அமைப்புகளை நடத்தினார்கள் என்பதையெல்லாம் மறைத்துவிட்டு 1912இல்தான் திராவிடம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டதாகக் கூறுவது வரலாற்றுத் திரிபு. இதுபோன்ற வரலாற்றுத் திருத்தங்களை தலித் வரலாற்று எழுதியல் கோரி வருவதைத் தாங்கள் அறியவில்லையா?

1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் களப்பலியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நடராசன் பெயரை முதலாவதாகக் கொள்ளாமல், இரண்டாவதாகப் பலியான தாளமுத்து பெயரை முதலாவதாகக் கொண்டு தாளமுத்து நடராசன் என்றே வரலாற்றில் எழுதிவருவதை மாற்ற வேண்டுமென்று தலித்துகள் கோரியதைக் கூட தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் இதுவரை சரிசெய்து கொள்ளவில்லை. (இதைத் தலித் இயக்கங்கள் கூட பின்பற்றவில்லை என்பதையும் மறுக்கவில்லை). எனவே நூற்றாண்டு பற்றிய திரிபைக் கடும் இடித்துரைப்பு இல்லாமல் தி.மு.க. சரிசெய்து கொள்ளாது. இந்நிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பொதுவுடைமைக் கட்சியும் தி.மு.க. வின் நூற்றாண்டு பற்றிய திரிவுவாத நிலைபாட்டிற்கு ஒத்துப்போவது சரியல்ல என்பதே எம்முடைய வேண்டுகோள்.

எனவே, சமகால அதிகார நோக்கத்தில் கட்டமைக்கப்படும் வரலாற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்பதை விடுத்து தங்கள் சார்பிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஒப்புதலைத் தரும் விதத்தில் கட்டுரைகளை எழுதுவது சரியாக இருக்கமுடியாது. நாம் செய்ய வேண்டியது நம்பப்படும் வரலாற்றுக்கு விளக்கமளிப்பதல்ல. மாறாக வரலாற்றை மாற்றுவதுதான்.

- ஸ்டாலின் ராஜாங்கம்

Friday 11 May 2012

ரவிக்குமார் எழுதிய மறதியின் புதைமணல் (குமுதம் தீராநதி - ஏப்ரல் 2012) கட்டுரை மீதான எதிர்வினை

திராவிட இயக்க நூற்றாண்டு : இரண்டு எதிர்வினைகள்


(குறிப்பு : இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் மீது தவிர்க்க இயலாத சூழலில்       மட்டுமே எதிர்வினை செய்வது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நான் அந்த வகையில் எழுதிய எதிர்வினைகளே இந்த இரண்டும்.


தீராநதியின் இரவிக்குமார் கட்டுரை மீது (ஏப்ரல் 2012) எழுதப்பட்ட எதிர்வினையின் சிறுபகுதி மட்டுமே மே மாத தீராநதி இதழில் வெளியிடப்பட்டது. எனவே எதிர்வினையின் முழுவடிவம் இங்கே வெளியிடப்படுகிறது.


செம்மலர் இதழுக்கு நான் எழுதிய மற்றொரு எதிர்வினையை அவ்விதழ் முழுமையாக வெளியிட்டது. அவ்வெதிர்வினையும் இங்கே வெளியிடப்படுகிறது. ஆனால் எதிர்வினை பிரசுரமான மே இதழிலேயே திராவிட இயக்க நூற்றாண்டின் நினைவாக எஸ்.ஏ.பெருமாள் எழுதிய நீதிக்கட்சியும் சமூக நீதியும் என்ற கட்டுரையும் வெளியாகியுள்ளது.


ஒரு சுட்டிக்காட்டல் என்ற வகையில் எழுதப்பட்ட என் எதிர்வினையைத் தாண்டி அவ்விதழின் அரசியல் நிலைப்பாடு என்ற வகையில் அக்கட்டுரையைப் புரிந்து கொள்ளலாம் எனில், அக்கட்டுரை பல வரலாற்றுப் பொய்களைக் கண்மூடித்தனமாகக் கட்டவிழ்த்துள்ளது என்பதுதான் விந்தை. மீண்டும் மீண்டும் அவ்விதழுக்கே எதிர்வினையெழுவது நமக்கே வெட்கமாகயிருக்கிறது. அத்துணை மோசடியானது அக்கட்டுரை. நீதிக்கட்சி பற்றி பரவலாக அறியப்பட்ட ‘பிராமணரல்லாத உயர்சாதியினரின் கட்சி’ என்ற சிறுவிமர்சனத்தைத் தாண்டி நீதிக்கட்சியைப் புரட்சிகரக் கட்சியளவிற்கு உயர்த்தியிருக்கிறது அக்கட்டுரை.


‘1920 முதல் 1927 வரையில் ஆட்சிசெய்த நீதிக்கட்சியின் சீர்திருத்தச் சாதனைகளாக 21 அம்சங்களைப் பட்டியலிடுகிறது அக்கட்டுரை. அதில் 11 அம்சங்கள் தலித்துகளுக்காகச் செய்யப்பட்ட சாதனை. அப்பட்டியலில் அநேகம் பொத்தாம்பொதுவானவை; ஆதாரமற்றவை; பொதுப்புத்தி சார்ந்தவை. ஆங்கிலேயர் காலம் முதற்கொண்டே இருந்துவரும் சலுகைகள், தலித் முன்னோடிகளால் போராடிப் பெறப்பட்ட சலுகைகள் ஆகியவற்றையும் நீதிக்கட்சியின் சாதனைகளாக அக்கட்டுரை கூறுகிறது.


உதாரணத்திற்குச் சில : தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதியை முதன்முதலாக நீதிக்கட்சி அமைச்சராக நியமித்தது என்றொரு தகவல். இது எந்த ஆண்டு? நியமிக்கப்பட்ட அமைச்சரின் பெயர் என்ன? போன்ற தகவல்களை எஸ்.ஏ.பெருமாள் வெளியிடவேண்டும். அதே போல மற்றொன்று : சென்னை பின்னி மில் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட திரு.வி.க.வை பிரிட்டிஷார் பேச்சைக் கேட்டு நீதிக்கட்சி நாடுகடத்த மறுத்தது என்பது. அதே வேளையில் தாழ்த்தப்பட்டோரைச் சென்னை நகரில் ஒரே இடத்தில் குடிவைக்கக் கூடாது, சென்னையிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நீதிக்கட்சி தியாகராயச் செட்டியாரின் அறிக்கையைப் பற்றி நம்மூர் மார்க்சிஸ்டுகள் அறிவார்களா? வரலாறு என்னும் பெயரில் தலித்துகளின் கருத்தியலில் சுமத்தப்படும் அடிமைத்தனம் இது! இதைப் படித்தால் தலித்துகளுக்காக இப்படியொரு கட்சி இந்தியாவில் இருந்ததில்லை என்றுதான் யாரும் பொய்யாக நம்பவேண்டிவரும்.


திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளை கணக்கில் கொள்ளத் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தைச் சரிசெய்யும் அவசரத்தில் அவ்வியக்கம் கற்பித்துள்ள திரிபுகளையெல்லாம் ஆராய்ச்சி ஏதுமில்லாமல் ஏற்கவேண்டிய அவசியம் இடதுசாரிகளுக்கு வந்துவிட்டதை நினைக்கும்போது வருத்தமாயிருக்கிறது. மொத்தத்தில் தி.க. இதழில் வந்திருக்கவேண்டிய கட்டுரை செம்மலரில் வெளியாகியிருக்கிறது.


- ஸ்டாலின் ராஜாங்கம்
 
திராவிட இயக்க நூற்றாண்டு : இரண்டு எதிர்வினைகள் (எதிர்வினை 1)


கருத்துரீதியாக ரவிக்குமார் கட்டுரையோடு முரண்பாடில்லாத எனக்கு எழும் கேள்வியென்னவெனில் விமர்சனச் செயற்பாட்டை மேற்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்கென அறம் என்று ஏதுமில்லையா, எதையும் எப்போதும் யாரும் கவனிக்கமாட்டார்களென்று எழுத முடியுமா என்பதே.  கருணாநிதி திராவிட இயக்கத்தின் தொடக்கமாக அயோத்திதாசரை கொள்ளாததில் வியப்பில்லை. ஆனால் எதை எப்போது மறந்திருக்க வேண்டும், எப்போது ஞாபகத்தில் கொள்ள வேண்டும் என்ற தன் கணக்கை எல்லோரும் மறந்திருக்க வேண்டும் என்று ரவிக்குமார் எதிர்பார்ப்பதுதான் வியப்பாயிருக்கிறது. ரவிக்குமாரின் தலித் பற்றிய மறதிக்கும், தற்போதைய ஞாபகத்திற்கும் இடையில் எஞ்சியிருப்பது சுயநலத்தோடு முரண்படாத அவரின் அறிவு ஜீவித்தனம் மட்டுமே.

தமிழக தலித் இயக்கம் பற்றி ஓர்மை கொண்ட ரவிக்குமார் அதனடிப்படையிலேயே திராவிட இயக்கம் தலித் இயக்கத்தை உள்வாங்கியது, மேலும் அது சமகால தலித் அரசியலுக்கும் எதிரானது என்பதை முன்பு உரக்கப் பேசினார். இடையில் தலித் இயக்கமொன்றின் சட்டமன்ற பிரதிநிதியாகிய அவர் திராவிட இயக்க திமுகவோடு காட்டிய நெருக்கம் கூட்டணி அரசியலைத் தாண்டியதாக அமைந்திருந்தது. ஏறக்குறைய ஆறேழு ஆண்டுகளில் திமுகவை போற்றியதில் மட்டுமல்ல, பிரதான தலித் அரசியல் கோரிக்கைகள் எதையும் உரி விதத்தில் எடுத்து வைக்காமலும் இருந்துகொண்டார். ஆனால் சட்டமன்ற பிரதிநிதியாய் இல்லாத தற்போது திராவிட இயக்கத்தின் தலித் பற்றிய மௌனத்தை இக்கட்டுரை மூலம் பேசத் தொடங்கியுள்ளார். எனில் தலித் அடையாளம் என்பதோ தலித் பிரச்சினை என்பதோ அவருக்கு என்னவாகவிருக்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. சட்டமன்ற பிரதிநிதியாய் இருந்த இந்த இடைக்காலத்தில் தலித் பிரச்சினைகளோ, இதுபோன்ற தலி;த் பற்றிய மௌனங்களோ இல்லாமல் இருந்தது என்பது இதன் பொருளா? அல்லது தான் பேசவரும் போது மட்டும் தான் தலித்துகளுக்கு பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தமா?

ரவிக்குமார்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்ட தலித் பிரச்சினைகளை  அரசியல் அதிகார தளத்தில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வந்தபோது ஒரு அறிவு ஜீவி என்கிற முறையில் அரசியல் வெளியில் அவற்றை விவாதித்தற்கான சான்றுகள் ஏதேனும் உண்டா? அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியையாவது சந்தித்ததுண்டா? மாறாக நாங்களும் பேசியிருக்கிறோம் என்பதற்கான சில பேச்சுகளைத் தாண்டி ஆட்சியாளா;களுக்குத் தொந்தரவு தராத அவா;களால் எளிதில் நிறைவேற்ற முடிகிற நலவாரியம் போன்ற கோரிக்கைகள் குறிப்பான பிரச்சினைகளின் போது யாரையும் பகைத்துக் கொள்ளாத மௌனங்கள் மட்டுமே சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் கையாளப்பட்டன.

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதிதிராவிட முன்னேற்ற கழகம் என்று புகழ்ந்தமை, கருணாநிதியைத் தலைவர் கலைஞர்; என்றே விளித்தமை, நந்தன் பற்றிய தலித் வரலாற்று நூலுக்கு தலித் கருத்தியலுக்குத் தன்னையே முன்னோடியாகக் காட்டும் கருணாநிதியின் முன்னுரையைப் பெற்று வெளியிட்டமை, தமிழக அரசின் இலவச டிவிக்கான நிதியை தலித் மக்களின் சிறப்பு உட்கூறு திட்ட நிதியிலிருந்து திருப்பியபோது காட்டிய மௌனம் (பார்க்க: சவுக்கு இணையதளத்தில் நிதியை திருப்பியதற்கான அரசாணை நகல்கள்) இவ்வாறு பலவற்றைச் சொல்ல முடியும். அரசியல் நிர்பந்தம் காரணமான சரணாகதி என்பதிலிருந்து சுயநலனுக்கான மோசமான சரணாகதிக்கு சென்றதுதான் மிச்சம். கட்சியின் ஒரு தொண்டரை கூட ஈர்க்காத ஒருவர் ஒரு கட்சியையே தன் விருப்பத்திற்கான அரசியல் நிலைபாட்டிற்கு இணங்க வைப்பது அல்லது கட்சி தன்னை கட்டுப்படுத்தாத இடத்தில் இருத்திக் கொள்வது என்பதுதான் இவரின் அறிவு கட்டமைத்த அதிகாரம். தலித், போதி என்று தலித் அடையாளம் பேசிய இதழ்களை மூடிவிட்டு மணற்கேணி என்ற பொதுப்பெயரில் பொதுவான இலக்கியம் பேசும் இதழை தொடங்கிக் கொண்டதும் இவ்வாறுதான். தன் பழைய நூல்களை வெவ்வேறு தலைப்புகளில் மறுபதிப்பு செய்து கொண்ட அவர் மறுபதிப்பு செய்யாத ஒரே நூல் கொதிப்பு உயர்ந்து வரும். கட்டுரைக்கு கட்டுரை கருணாநிதியைத் தலித் எதிரியாகக் காட்டியிருக்கும் அந்நூலை மறப்பதுதான் அவர் மேற்கொண்டிருந்த கருணாநிதி ஆதரவு அரசியலுக்கு செய்த ஒரேபரிகாரம். இவ்வாறு உடனடியாகவோ நீண்டகால நோக்கிலோ தலித் அடையாளத்திற்கு எவ்வகையிலும் பயன்படாத சமரசங்களுக்காக தலித் நலன்களை பலி தந்துவிட்டார்கள்.

தலித் பிரச்சினைகளுக்கான அரசியல் வெளியை அழித்துவிட்டு அடையாளத்தை பேசுவது மட்டும்தான் தலித் அக்கறையா? ஆக்கப்பூர்வமான அரசியல் நடைமுறைகளுக்காக போராடுவதும் அடையாளத்தை மீட்டெடுப்பதும் வேறு வேறல்ல. அயோத்திதாசர் உள்ளிட்ட முன்னோடிகளைப் பேசுவதன் பொருள் அவர்கள் விரும்பிய அரசியல் வெளியை ஒர்மையோடு விரிவுப்படுத்துவதுதான்.  1998-ஆம் ஆண்டு பிரப்வரி மாதம் திண்டிவனத்திற்கு அருகில் தலித் ஒருவர் கொல்லப்பட்ட போது கொந்தளிக்காத தலித்மக்கள், சில நாள் கழித்து அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை போட்ட போது கொந்தளித்ததைத் தன் கட்டுரை ஒன்றில் (பார்க்க : Venomous touch page :149) குறிப்பிடுவதன் மூலம் உயிருள்ளவருக்காகப் போராடுவதைக் காட்டிலும் உயிரற்ற சிலை என்ற அடையாளத்திற்காகப் போராடுவதை விமரிசனமாக எழுதியிருப்பார் ரவிக்குமார். ஆனால் ஆக்கபூர்வ அரசியலைக் கைவிட்டு விட்டு இக்கட்டுரையில் அதே அடையாளத்தைக் காட்டிதான் அவர் கவலைப்படுகிறார் என்பதை மறந்து விட முடியாது. பொதுவாக அடையாள ரீதியான கோரிக்கைகளை எழுப்புவதும், அதை ஆட்சியாளர்கள் நிறைவேற்றிருத் தருவதும் புதிதல்ல. திமுக ஆட்சியில் ரவிக்குமாரும் கலந்துக் கொண்ட இரட்டைமலை சீனிவாசன் சிலைதிறப்பு கூட அதிமுக ஆட்சியின் போது செ.கு.தமிழரசன் வைத்த கோரிக்கையினால் உறுதி செய்யப்பட்டதேயாகும். எனவே தன்னுடைய கோரிக்கையினால் அயோத்தி தாசருக்குக் கிடைத்த அங்கீகாரங்களென சிலவற்றை இக்கட்டுரையில் ரவிக்குமார் கூறிக்கொள்வது பெரி விசயமில்லை.

அதிலும் கடந்த திமுக ஆட்சியில் (2006-2011) தன்னுடைய கோரிக்கையினால் அயோத்திதாசருக்காக நடந்த சிறப்புகளில் தபால்தலை வெளியிட்டதையும் கூறிக்கொள்ளுகிறார். ரவிக்குமார் மாநிலசட்டமன்ற உறுப்பினரானது 2006-இல். தபால்தலையை மத்தியஅரசு வெளியிட்டது   21.10.2005-இல். அயோத்திதாசருக்குக் தபால்தலை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அயோத்திதாசர் பெயர் போன்றவை தலித் எழில்மலை மத்திய இணை அமைச்சராக இருந்தபோது கால்கோள் இடப்பட்டு பிந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவு செய்யப்பட்டது என்பதே உண்மை. தலித் எழில்மலை, அன்பு பொன்னோவியம், ஞானஅலாய்சியஸ் போன்றோரின் பங்களிப்புகளை அழித்துவிட்டு, அதன் மீது தன் பெயரை எழுதி ஒட்டிக்கொள்வதுதான் தலித் வரலாற்றை நேர்செய்வதா?  

இதுவரை எழுதப்பட்ட சொற்பமான தலித் வரலாற்று நூல்களில் தலித் இயக்கங்களை, ஆளுமைகளை உள்வாங்கிய மறைத்த பிற அடையாளங்கள் பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம். அத்தகைய உள்வாங்குதலில் தலித் தரப்புக்கிருந்த சிக்கல்கள் பற்றிய அவ்வளவாக பேசவில்லை. அயோத்திதாசரின் பௌத்த இயக்கத் தேக்கத்தைத் திராவிட இயக்கத்தின் எழுச்சியோடு மட்டுமல்ல பௌத்த இயக்கத்தைச் சேர்ந்த அப்பாதுரையாரின் செயற்பாட்டோடும் சேர்த்து ஆராயவேண்டும். எனவே தலித் இயக்கத்தை இருபுறமாகவுமிருந்து ஆராயவேண்டும். அப்போதுதான் சமகால தலித் இயக்கத்தோடு சேர்ந்து செயற்பட்ட ரவிக்குமார் போன்றோர் கடந்த கால வரலாற்றையும் அடையாளத்தையும் மட்டும் பேசி நிகழ்காலச் செயற்பாட்டின் தேக்கத்தில் தங்களுக்கிருந்த பங்கை மறைத்துக் கொள்வதை புரிந்துகொள்ள முடியும்.(தொடரும்)