Monday, 14 May 2012

தி.மு.க.வின் நூற்றாண்டு பற்றிய திரிபுவாத நிலைபாட்டிற்கு நீங்களும் ஒத்துப் போகலாமா?

திராவிட இயக்க நூற்றாண்டு : இரண்டு எதிர்வினைகள் (எதிர்வினை 2)

அருணன்
செம்மலர் - 2012 ஏப்ரல் இதழில் ‘திராவிட இயக்கம் 100’ – என்பதன் நினைவாக அருணன், அண்ணாவின் படைப்புகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையின் உள்ளடக்கம் பற்றியதல்ல இக்கடிதம். மாறாக, திராவிட இயக்கம் 100 - என்பதைப் பொதுவுடைமை இயக்கக் கட்சியும் கேள்வியின்றி ஏற்பதெப்படி என்பதைத் தோழமையுடன் சுட்டுவதற்காகவே இக்கடிதம்.

"திராவிடம் என்ற சொல்லைத் தங்களது கட்சிப் பெயரில் இணைத்துள்ள இதரக் கட்சிகள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாத நிலையில் தி.மு.க.வாவது கொண்டாடுவது வரவேற்கத் தக்கதே" என்று குறிப்பிடுவதன் மூலம் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தையும், நூற்றாண்டுக்காகக் கருணாநிதி ஏற்படுத்திக் கொண்ட காலவரையறைகளையும் ஏற்றுக் கொண்டு கொண்டாட்டம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை மட்டும் சொல்லிருக்கிறீர்கள்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்
தி தி.மு.க. ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய மாற்றத்தைப் பேசுவது உங்களின் நோக்கமாய் இருக்கலாம். அதற்காக வரலாற்று நிலையில் சந்தேகத்திற்குரிய வரையறையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்பது எவ்வகையில் சரியாகும்?

திராவிட இயக்கத்தின் தொடக்கமாக எக்காலத்தை, எந்த இயக்கத்தை, எந்தத் தலைவரைக் கொள்வது என்பது பற்றிப் பல்வேறுபட்ட கருத்துகள் இங்குள்ளன. இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்க ஆய்வாளர்களிடையேயும் இதில் ஒருமித்த கருத்து இல்லை. இந்நிலையில் எதை வைத்து கருணாநிதி 1912-2012 என்பதை நூற்றாண்டாகக் கணக்கிட்டார்? அவர் கொண்ட கணக்கு சரியா? அவ்வாறு கொண்டிருப்பதன் நோக்கம் என்ன? போன்ற பரிசீலனை தேவை. கருணாநிதியின் இந்த வரையறை திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டதை வைத்தெனில் குறிப்பிடப்படும் 1912ல் எந்தப் பொருளில் இச்சொல் கையாளப்பட்டது? இதற்கு முன்பு திராவிடம் என்ற அடையாளத்தை யாருமே கையாளவில்லையா? இக்கேள்விகள் எல்லாவற்றிற்கும் தீர்க்கமான - சரியான பதிலைச் சொல்லமுடியாதெனில் ஏனிந்த வரையறையும் கொண்டாட்டமும்?

தன்னுடைய காலத்தின் போதே இதை நடத்திட வேண்டுமென்று 'வரலாற்றுப் பெருமை'களை வலிய கட்டமைக்கும் கருணாநிதியின் வேட்கையே இதற்குக் காரணம். 'வரலாற்றுப் பெருமிதத்திற்காக' திராவிட அடையாள வரலாற்றின் சிறு சம்பவத்தைத் தம் ஆதரவு அறிவுஜீவிகள் - ஊடகங்கள் மூலம் பூதாகாரப்படுத்தி அதை நூற்றாண்டு என்கிறார். இதுவும் ஒருவகை அதிகாரமே.

1912-இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் யுனைட்டெட் லீக், திராவிடர் சங்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது திராவிடர் என்ற சொல்லிற்கு அவ்வமைப்பினர் கொண்டிருந்த பொருள் என்ன? அதன் கருத்தியல் மற்றும் செயற்பாட்டின் அளவு என்ன? இவற்றோடு ஒப்பிடும் போது திராவிடம் என்ற அடையாளத்தோடு இதற்கு முன்பே செயற்பட்ட தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் தந்த உள்ளடக்கம் எனன? போன்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன. எனவே கருணாநிதி தரும் வரையறையை அப்படியே ஏற்பதில் சிக்கல் இருக்கிறது.

இந்திய தேசியம் கால்கொண்ட காலத்திலேயே அதன் பிராமண சாதி ஆதரவு நோக்கத்தை அம்பலப்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்ட முன்னோடிகளே. இதைத்தான் பின்னர் திராவிட இயக்கமும் பேசியது. ஆங்கிலேய அரசு இந்திய நிர்வாகத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ஐ.சி.எஸ். தேர்வை இங்கிலாந்தில் நடத்திய போது தங்களின் கடல் தாண்டக் கூடாதென்ற வேதவிதியை மனதில் கொண்ட பிராமணர்கள் இத்தேர்வை இந்தியாவிலேயே நடத்த வேண்டுமென்று இந்திய தேசிய தோற்றத்தில் 400க்கும் குறைந்த கையொப்பங்களோடு விண்ணப்பம் அனுப்பினர். சாதிபேதம் காணும் பிராமணர்கள் தங்களை ஆளும் நிர்வாகிகளாக வரக்கூடாதென்று தேர்வை இங்கிலாந்திலேயே நடத்தக்கோரி 1894ஆம் ஆண்டே இரட்டைமலை சீனிவாசன் தலைமையிலான பறையர் மகாசபை சார்பாக 3412 பேரின் கையொப்பத்தோடு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. பின்னாளில் நீதிக்கட்சியில் இடம்பெற்ற பல பிராமணரல்லாத தலைவர்களும் இக்காலத்தில் காங்கிரசில் இருந்தனர். அமைப்பின் பெயர் திராவிடமாக இல்லாவிட்டாலும் பின்னாளைய திராவிட இயக்கத்தின் உள்ளடக்கத்தையே இந்தச் செயற்பாடுகள் பிரதிபலிக்கின்றன. இம்முயற்சி பறையர் வகுப்பு தொடர்புடையதாக இருந்தாலும் இவற்றையெல்லாம் திராவிட இயக்கத்தின் தொடக்க முயற்சியாகக் கூட கொள்ளாத இன்றைய திராவிட இயக்கத் தலைவர்களின் நோக்கத்தை என்னவென்பது? நாமும் இதை அப்படியே ஏற்பதால் வரலாற்றுப் பொய் மறுஉறுதியைப் பெற்றுவிடுகிறது.

மேலும், திராவிட என்ற அடையாளத்தோடு ஜான் ரத்தினமும் (1882 திராவிடர் கழகம்) அயோத்திதாசரும் (1891ல் திராவிட மகாஜன சபை) பிறரும் (1892 சென்னை ஆதிதிராவிட மகாஜன சபை) அமைப்புகளை நடத்தினார்கள் என்பதையெல்லாம் மறைத்துவிட்டு 1912இல்தான் திராவிடம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டதாகக் கூறுவது வரலாற்றுத் திரிபு. இதுபோன்ற வரலாற்றுத் திருத்தங்களை தலித் வரலாற்று எழுதியல் கோரி வருவதைத் தாங்கள் அறியவில்லையா?

1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் களப்பலியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நடராசன் பெயரை முதலாவதாகக் கொள்ளாமல், இரண்டாவதாகப் பலியான தாளமுத்து பெயரை முதலாவதாகக் கொண்டு தாளமுத்து நடராசன் என்றே வரலாற்றில் எழுதிவருவதை மாற்ற வேண்டுமென்று தலித்துகள் கோரியதைக் கூட தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் இதுவரை சரிசெய்து கொள்ளவில்லை. (இதைத் தலித் இயக்கங்கள் கூட பின்பற்றவில்லை என்பதையும் மறுக்கவில்லை). எனவே நூற்றாண்டு பற்றிய திரிபைக் கடும் இடித்துரைப்பு இல்லாமல் தி.மு.க. சரிசெய்து கொள்ளாது. இந்நிலையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பொதுவுடைமைக் கட்சியும் தி.மு.க. வின் நூற்றாண்டு பற்றிய திரிவுவாத நிலைபாட்டிற்கு ஒத்துப்போவது சரியல்ல என்பதே எம்முடைய வேண்டுகோள்.

எனவே, சமகால அதிகார நோக்கத்தில் கட்டமைக்கப்படும் வரலாற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்பதை விடுத்து தங்கள் சார்பிலும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஒப்புதலைத் தரும் விதத்தில் கட்டுரைகளை எழுதுவது சரியாக இருக்கமுடியாது. நாம் செய்ய வேண்டியது நம்பப்படும் வரலாற்றுக்கு விளக்கமளிப்பதல்ல. மாறாக வரலாற்றை மாற்றுவதுதான்.

- ஸ்டாலின் ராஜாங்கம்

No comments:

Post a Comment