Showing posts with label கோ.சுகுமாரன். Show all posts
Showing posts with label கோ.சுகுமாரன். Show all posts

Tuesday, 12 June 2012

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் (சுகுமாரனின் சுதாரிப்பு 2)

-          ஸ்டாலின் ராஜாங்கம்

புதுவை கோ.சுகுமாரனின் கூற்றொன்றினை ஒட்டி நான் எழுப்பியிருந்த விவாதத்திற்கு அவர் தன் முகநூலில் “ராசாங்கத்தின் ராஜாங்கம்” (மே23) என்ற தலைப்பில் ‘பதில்’ எழுதியிருக்கிறார். தலித் பிரச்சினைகளின் போது அவர்களுக்கு ஆதரவாயிருந்தால் மட்டும் போதாது. ஒடுக்குமுறையைச் செலுத்தும் சக்திகளை மறைக்கும் தத்துவம், ஆளுமை, அடையாளம் பற்றியெல்லாம் பரிசீலிக்கவேண்டும். எனவே, ஒடுக்கப்படுவோரிலிருந்து பிரச்சினையை அணுகுவதைக் காட்டிலும் ஒடுக்குவோரிலிருந்தே மதிப்பிடவேண்டும் என்பதே என்னுடைய விவாதத்தின் சாரமாக இருந்தது. சுகுமாரனின் பதிவொன்றினை முன்வைத்து எழுதப்பட்ட இவ்விவாதம் பிராமணரல்லாதோர் என்ற அரசியல் நம்பிக்கையை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வியே. மற்றபடி சுகுமாரனையோ, அவருடைய பணிகளையோ நான் அவதூறு செய்யவில்லை. ஆனால், நான் எழுப்பிய பிரதான கேள்விகளிலிருந்து அவர் விலகியிருப்பதோடு, விவாதத்தில் என்னை மையப்படுத்தி தமிழ் அறிவுலகில் விலைபோகும் சில பெயர்களை ஏவியிருக்கிறார். ஏற்கனவே, என்னைப் பற்றிய பல பொய்கள், நான் மறுக்காததால், மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு உண்மையாக்கப்பட்டுள்ளன என்பதால் இக்குறிப்பை எழுதவேண்டிவந்தது.

புதுவை சுகுமாரன்
சுகுமாரனுக்கும் எனக்கும் இடையில் விவாதத்தின் அடிப்படையிலேயே முக்கிய வேறுபாடு இருக்கிறது. பிராமணர் x பிராமணரல்லாதோர் என்கிற எதிர்வு அவருடையது. இந்த எதிர்வைக் கேள்வி எழுப்பும் நான் சாதி x சாதி எதிர்ப்பு அல்லது தீண்டப்படுவோர் x தீண்டப்படாதோர் என்கிற எதிர்விலிருந்து பேசுகிறேன். பிராமண எதிர்ப்பின் தேவையை மறுக்காமலேயே, ஆனால் அவர்களின் அதிகாரத்தைக் கட்டுக்குள் கொணர்ந்துள்ள பிராமணரல்லாதோர், தலித்துளைக் கூடுதலாக ஒடுக்குவோராக மாறியுள்ள நிலையில், பிராமணரல்லாதோர் அடையாளத்தை விமர்சனப்படுத்துகிறோம். ஆனால், இப்போக்கைப் பிராமணரல்லாத அறிவுஜீவிகள் பிராமண ஆதரவு என்று மட்டுமே தட்டையாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள். தலித்துகளின் எதிரி / நண்பர் என்ற வகையில் பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் ஒன்றே. ஏனெனில் இங்கு சாதியுணர்வை எதிர்ப்பது மட்டுமே மையம். ஆனால், பிராமணர்களோடு சமூக, அரசியல் ஊடகத் தளத்தில் பிராமணரல்லாதோர் கலந்திருப்பதை மிக இயல்பாகக் கருதும் பலரும் தலித்துகள் சிறிய அளவில் பங்குபெறுவதை மட்டும் பிராமண சதியாகவும் தலித் குறையாகவும் விளக்குகிறார்கள்.

சாதி x சாதி எதிர்ப்பு என்னும்போது, அதில் பிராமரைக் காட்டி பிராமணரல்லாதோரோ, பிராமணரல்லாதோரைக் காட்டி பிராமணரோ தப்பமுடியாது. அதனால்தான் பிராமணியத்தை விரிவாகக் கட்டுடைத்த அம்பேத்கர் பிராமணர் x பிராமணரல்லாதோர் என்ற எதிர்வைப் பிரதானமாக்காமல் தீண்டப்படாதோர் x தீண்டப்படுவோர் என்ற எதிர்வைப் பேசினார். அது மட்டுமல்ல. அவர் பிராமணியம் என்பதை பிராமணர் என்ற சாதியிலிருந்து மட்டும் வரையறுக்கவில்லை. பார்ப்பனியமும் முதலாளியமும்தான் இந்தியப் புரட்சியின் எதிரிகள் என்று சுகுமாரன் காட்டியுள்ள அம்பேத்கர் மேற்கோளின், அவர் காட்ட விரும்பாத அடுத்த வரிகளை நான் காட்டுகிறேன்.

இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளோடு போராட வேண்டியுள்ளது. பிராமணியமும் முதலாளியமும்தான் அந்த இரண்டு எதிரிகள். பிராமணியத்தைப் பற்றிச் சொல்லும்போது பிராமணர்கள் ஒரு வகுப்பினராக இருந்து பெறும் அதிகாரம், உரிமைகள் ஆகிய நலன்களைச் சொல்லவில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான பண்பையே பிராமணியம் என்கிறேன். இந்த எதிர்மறைப் பண்பு எல்லா வகுப்பினரிடையேயும் உண்டு. பிராமணர்களோடு மட்டும் அது நின்றுவிடவில்லை. பிராமணர்களே இதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும் மற்ற வகுப்பினரின் சிந்தனை, செயல்களிலும் ஊடுருவியிருப்பதை மறுக்கமுடியாது

என்பதே அவரது மொத்தக் கூற்று.

ஆனால், சாதிக் கோளாறுகளுக்குப் பிராமணரை மட்டுமே காரணமாக்கிவிட்டு, மற்றவர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறியையும், அதற்கான அரசியல் தத்துவப் பின்னணியையும் உரியமுறையில் எடுத்துரைக்காமல் மறைக்க விரும்பும் சுகுமாரன் போன்றோர் முதல் இரண்டு வரிகளோடு நகன்றுவிடுகின்றனர். அடுத்த வரிகள் தமக்கு ஆபத்து விளைவிப்பன என்பதால் காட்டுவதில்லை. மேலும் இவை அம்பேத்கரைப் படித்துக் கண்டுபிடித்த வரிகளல்ல. யாரோ ஒருவர் எப்போதோ கையாண்ட இம்மேற்கோளைச் சூத்திரம் போல ஒப்புவிப்பவர்கள் இவர்கள்!

இந்நிலையில், பிராமணர்களுக்கு எதிரணியாகக் காட்டப்படும் பிராமணரல்லாதோர் பகுப்பிலுள்ள தலித்துகள் மட்டும் பிராமண எதிர்ப்பை மட்டுமே பேச நிர்ப்பந்திக்கப்படுவதும், முக்குலத்தோர் உள்ளிட்ட பல்வேறு இடைநிலைச் சாதிகள் அத்தகைய ஓர்மையையே அறியாமல் சாதிபலத்தில் ஆகிருதியாகிக் கொண்டே போவதும், அவர்கள் தலித்துகளை மோசமாக ஒடுக்குவதும் அதிகரித்துக்தகொண்டே போவதும்தான் நடந்துகொண்டிருக்கின்றன. (மொத்தத்தில் சாதியின் தோற்றம், வளர்ச்சி பற்றியே மறுஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.)

இந்நிலையில்தான் பிராமணரல்லாதோர் அடையாளம், அதைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவம், ஆளுமை பற்றியெல்லாம் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது. நாம் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்ததும் திராவிட அடையாளத்தை – பிராமணரல்லாதோர் அரசியலைத் தாங்கிப் பிடிப்பவர்கள் பெரியாரும் திராவிட இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்ற வாக்கியத்தை முன்னொட்டாக மட்டும் எழுதிவிட்டு, அது என்ன விமர்சனம் என்று கடைசி வரை சொல்லாமலேயே எழுதிச் செல்கிறார்கள். சுகுமாரனும் அப்படித்தான் எழுதியிருக்கிறார். நான் கேட்கிறேன் : பெரியார் – திராவிட இயக்கம் பற்றிய தங்களின் விமர்சனம்தான் என்ன?

0 0 0

என்னுடைய விமர்சனத்திற்குப் ‘பதிலெழுத’ வந்த சுகுமாரன் பதிலெழுதுவதைக் காட்டிலும் முதலில் எனக்குச் சில முத்திரைகளைக் குத்தி எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகிறார் (அரசுக்கு எதிராகப் போராடுகிறவர் மீது பயங்கரவாதி, மாவோயிஸ்ட் என்றெல்லாம் முத்திரை குத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட்டு, பிறகு அவர்களைக் கேள்வியேதுமின்றி அழித்தொழிக்க அரசு சதி செய்வதைப் போல). அவை : பார்ப்பன அடிவருடி, அருந்ததியர் விரோதி என்ற இரண்டுமேயாகும். தமிழில் பிராமணரல்லாதோர் அடையாளம்  பற்றி கேள்வியெழுப்புவோர் மீது தேடித் தேடி சுமத்தப்படும் பழிகளே இவை. பழிசுமத்தக் ‘காரணம்’ கிடைக்காவிட்டால் பொய்யாகப் புனையவும் தயங்கமாட்டார்கள். இந்த பதிவில் சுகுமாரன் செய்திருப்பதும் அதைத்தான்.

என்னைப் பற்றிய முதல் குறிப்பையே ‘காலச்சுவடு ஆசிரியர் குழு’ என்றுதான் சுகுமாரன் தருகிறார். காலச்சுவட்டில் இருப்பதால் நான் ஒரு பிராமண அடிவருடி என்பது அவர் தரவிரும்பும் சித்திரம். முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் காலச்சுவட்டில் இருப்பதால் பிராமணரல்லாதோர் அடையாளம் பற்றி விமர்சிக்கிறேன் என்றில்லை. பிராமணர் எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பல்ல என்பதைப் புரிந்ததால்தான், காலச்சுவடு ஆசிரியர் குழுவில் மட்டுமல்லாது, என் கருத்தைப் பேச வாய்ப்புள்ள அனைத்து ஊடகங்களிலும் பங்குபெறுகிறேன். இதற்கு காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இடம்பெறும் முன்பிருந்த என் எழுத்துகளே ஆதாரம். என்னுடைய தனித்துவத்திற்கும் காலச்சுவடு பங்கேற்பிற்குப் பிறகும் எவ்வித முரணும் ஏற்பட்டதே இல்லை. ஆனால் காலச்சுவட்டிடம் நான் விலைபோயிருப்பதாகப் பின்னூட்டம் தருகிறார்கள் (விலைபோவதைப் பற்றி யாரெல்லாம் பேசுவது?).

என் மீதான அடுத்த குற்றச்சாட்டு ‘அருந்ததியர் விரோதி’(?) என்பது. திராவிட இயக்கத் – பிராமணரல்லாதோர் அடையாளம் மீது விமர்சனம் எழுந்தபோது தங்களைக் காத்துக்கொள்ள இடைநிலைச் சாதிகள் கடைசியாகக் கண்டுபிடித்த கேடயம்தான் அருந்ததியர் ஆதரவு. அதுவரை அருந்ததியர்கள் தனியாகவும் – பிற தலித் அமைப்புகளுடனும் போராடிய போது பேசாதவர்கள் – தாங்கள் செயற்படும் தளங்களில் அவர்களைப் பற்றிச் சிறிதும் யோசித்திராதவர்களெல்லாம் தலித் அரசியலின் விமர்சனம் வந்தவுடன் ஒரு சேர சென்று சேர்ந்த இடம்தான் அருந்ததியர் பிரச்சினை. இருந்தும் கூட அருந்ததியர் பிரச்சினையை அவர்கள் மீதான அக்கறையிலிருந்து பேசாமல், பிற தலித் சாதிகளைக் குறை கூறவும், அதன் மூலம் தங்களைக் காத்துக்கொள்ளவும்தான் பேசினார்கள். தங்களுக்குத் தேவையான போதெல்லாம் தலித்துகளைச் சேர்ப்பது நீதிக்கட்சி காலத்திலிருந்து வரும் நடவடிக்கைதான்.

அருந்ததியர்களுக்கும் பிற தலித் சாதிகளுக்கும் ஏற்பட்டது அரசியல் முரண். உள் ஒதுக்கீடு கோரிக்கையின்போது இம்முரணுக்கு அழுத்தம் தேவைப்பட்டது. இது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. அதற்காக ஒரு ஊரில் வாழும் தலித்துகளுக்கிடையே நல்லுறவு நிலவுகிறது என்பது என் கருத்தல்ல. அதே வேளையில் முரணும் நிலவுவதில்லை. ஒவ்வொரு தலித் சாதியும் தனித்தனியாக வாழ்கிறார்கள். சமூக அதிகாரம் என்ற அளவிலும், உடைமை ஆதிக்கம் என்ற அளவிலும் அருந்ததியர்களை ஒடுக்கும் தன்மை பெற்றவர்களாகப் பிற தலித் சாதிகள் இருப்பதில்லை. மிகக் கொடூர வன்முறையான கரடிச்சித்தூர் போன்ற சில சம்பவங்கள் நடந்திருப்பதை மறுக்கமுடியாது. ஆனால், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமாக ஒரு ஆய்வென எடுத்துக்கொள்வோமானால், அருந்ததியர்களையும் பிற தலித் சாதிகளையும் ஒடுக்குவோர் யார்? இடைநிலைச் சாதிகள்தானே! ஆனால், அது இங்கு போதுமான அளவு – பிற தலித் சாதிகளைப் பேசிய அளவிற்கேனும் - பேசப்பட்டிருக்கிறதா? 

எதார்த்தம் இவ்வாறு இருக்கும்போது இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கவேண்டியது என்ன? உண்மையிலேயே அருந்ததியர்கள் மீதான ஒடுக்குமுறைகளைப் பேசுவதென்றால், தங்கள் சொந்த சாதிக்கு எதிராகப் பேசியிருக்கவேண்டும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் அருந்ததியினர் தொடர்பான இடைநிலைச் சாதியினரின் பேச்சுகளை – எழுத்துகளை – நடைமுறைகளை ஆராய்ந்து பாருங்கள். பிற தலித் சாதிகளைக் குற்றம் சாட்டி இடைநிலைச் சாதியினரைக் காப்பாற்றும் / மௌனமாக நகரும் பதிவுகள் மட்டுமே இருப்பதைப் பார்க்கமுடியும். மேற்கு மாவட்டங்களில் சேவைச் சாதிகளாக – விவசாயக் கூலிகளாக அருந்ததியர்களைக் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஒடுக்குவதைப் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் விவாதங்களோ – தொடர் போராட்டங்களோ நடத்தப்படவில்லை.

இங்கு அரசியல் முரண் பற்றிப் பேசுவது எளிது. சமூக அதிகார முரண் பற்றிப் பேசுவதுதான் கடினம். அதனால்தான் இடைநிலைச் சாதியினரின் அருந்ததியர் உள்ளிட்ட தலித் வகுப்பினர் மீதான சமூக அதிகாரம் பற்றி மௌனம் நிலவுகிறது.

இப்படியான இடைநிலைச் சாதி மனநிலையிலிருந்துதான் சுகுமாரன் என் மீது மற்றுமொரு முத்திரை குத்தி, நான் எழுப்பிய விமர்சனத்திலிருந்து தப்ப முயற்சிக்கிறார். முதலில் அவர் காட்டுவது சாதிவாரிக் கணக்கீடு குறித்த என் கருத்தைத்தான். முத்திரை குத்துவது என்று முடிவெடுத்துவிட்டால் விவாதவெளிக்கு  அப்பாலிருந்தெல்லாம் விஷயத்தைக் கொணர்வது இவர்களுக்குக் கைவந்த கலை. கணக்கெடுப்பு தொடர்பான என் கருத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் அதைச் செய்வதை விட கணக்கெடுப்பை அருந்ததியர்கள் ஆதரிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டவே அவர் ஆர்வம் காட்டுகிறார். அதாவது அருந்ததியர் ஆதரிப்பதால் நான் எதிர்க்கிறேன் என்ற சித்தரிப்பைத் தர முயற்சிப்பதே அவர் நோக்கம். கணக்கெடுப்பைப் பள்ளர் – பறையர் வகுப்பினரிலும் சில குழுவினர் ஆதரக்கின்றனர். என்னை யார் பக்கம் என்று சொல்வது? இதுபோன்ற வாதங்களுக்குப் பின்னாலிருப்பது வெறும் சூத்திர சூதுதான்.

அடுத்ததாக, அருந்ததியர் ஒதுக்கீட்டிற்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற வழக்கில், நான் உள்ளிட்ட பலரும் பின்னணியில் இருக்கிறோமென்றும், அதற்காக இரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார் சுகுமாரன். இது அப்பட்டமான பொய். பொய்யைச் சொல்லித் தலித்துகளைக் கொச்சைப்படுத்தும் சாதி உளவியல் இது. உண்மையிலேயே இவ்விவாதம் என்னை மையப்படுத்தி அமைவதற்கு நானும் காரணமாகிவிட்டதை நினைக்கும்போது வருந்துகிறேன். இருந்தும் இக்குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

சுகுமாரன் கூறும் இரகசியக் கூட்டம் யாரால் எங்கு எந்த தேதியில் கூட்டப்பட்டது? அங்கு எடுக்கப்பட்ட முடிவு என்ன? கலந்துகொண்டோர் யார் யார்? உயர்நீதிமன்ற வழக்கைத் தொடுத்தவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அவர் என்னையோ – நான் அவரையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்ததோ – பேசியதோ உண்டா? ஆம் எனில், எங்கு? எந்த தேதி? இக்கேள்விகளுக்கு உரிய – தகுந்த – சரியான – நம்பும்படியான ஆதாரங்களை அளித்து ‘உண்மையறியும் நிபுணரான’ கோ.சுகுமாரன் நிறுவவேண்டும் என்பதே இந்தக் குறிப்பை நான் எழுதியதின் நோக்கம்.

0 0 0 0 0

Wednesday, 16 May 2012

சுகுமாரனின் 'சுதாரிப்பு'

கோ.சுகுமாரன்
எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்திராத புதுச்சேரி கோ.சுகுமாரன் எழுதிய சிறுபதிவொன்றை முகநூலில் (Facebook) காணமுடிந்தது. ஏப்ரல் 14ந்தேதி நெய்வேலி விருதுகள் வழங்கும் விழாவில் "பெரியார் பிறக்காத உ.பி.யில் தலித் முதலமைச்சராக முடிகிறது. ஆனால் பெரியார் பிறந்த தமிழக மண்ணில் முதல்வராக முடியவில்லை" என்று திருமாவளவன் பேசியதான ஒரு கூற்றை மட்டும் எடுத்துக்காட்டி மறுப்பு எழுதியிருக்கிறார். அண்மையில் பேட்டியொன்றிலும் (ஆழம் மே 2012) திருமாவளவன் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிராமணர் அல்லாத பெரும்பான்மை இடைநிலைச் சாதிகளின் அதிகாரத் தளத்தில் தேர்தல் அரசியல் சார்ந்து இயங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியும் மேற்கண்ட பெரும்பான்மைவாதத்திற்குக் கட்டுப்படவேண்டியிருப்பதால் சமரசத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், அது அவ்வப்போது கருத்தியல் தளத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் விழிப்புணர்ச்சியைக் கூட முடக்கும் எத்தனம்தான் சுகுமாரனின் இப்பதிவு.

முதலில் அவர் திருமாவளவனின் இக்கூற்றை எடுத்துக்காட்டி பிரச்சினைக்குரியதாகக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறு உண்மை கூட பெரியார் என்னும் திருவுரு மீதான விமர்சனமாக மாறிவிடக்கூடாது என்ற அச்சம் அவருக்கிருக்கிறது. இதேபோல்தான் முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆராதிப்பதற்காக அக்கட்சி சமத்துவப் பெரியார் என்ற பட்டத்தைத் தந்தபோது அச்சீரழிவைப் பற்றி ஒருவரி கூட விமர்சிக்காமல் சமத்துவப் பெரியார் என்ற பெயரைப் பற்றி மட்டுமே அவர் வல்லினம் இதழில் விமர்சித்து எழுதியிருந்தார். அதாவது கருணாநிதியைச் சமத்துவப் பெரியார் என்று சொன்னால் பெரியார் ஈ.வே.ரா. 'சமத்துவமற்றவரா?' என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் எழுதியிருந்தார்.

முன்பு பெரியார் - திராவிட இயக்கம் பற்றி விமர்சனம் செய்ததாக வெவ்வேறு காரணங்களின் பெயரால் திருமாவளவனைக் கொத்தித் தீர்த்த பலரும், தலித் பிரச்சினைகளுக்கு அழுத்தம் தராமல் தமிழ் அரசியல், எந்தவொன்றிலும் தனித்துக் கருத்து கூறாமல் பொத்தாம்பொதுவான பிராமண எதிர்ப்பு கருத்து நிலை என்றெல்லாம் வந்துவிட்ட பின்னால் அவரை அது சார்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டனர். திருமாவளவனையோ தலித் கட்சிகளையோ விமர்சிப்பதில் ஈழத்தை ஆதரிப்பவரும், ஆதரிக்காதவரும் ஒன்றுபடும் புள்ளி இது. யாரும் சீரழியும் போது வராத மறுப்பு சீரடையும் போது வந்துவிடுகிறது.

காஞ்சி மடத்தைப் பற்றிப் பேசுவோர் கிராமக் கோயில்களில் தலித்துகள் நுழையமுடியாமலிருப்பதைப் பேசுவதில்லை என்று முன்பொருமுறை திருமாவளவன் கூறியிருந்தபோது "இரண்டும் ஒன்றா?" எனக் கேட்டு அக்கூற்றைப் பிராமண ஆதரவு கொண்டது என்ற அளவிற்கு மாற்றியிருந்தார் ஓர் அறிவுஜீவி. மேலிருப்பவரை மட்டுமே எதிரியாகக் காட்டிக்கொண்டு கீழிருக்கும் தலித்துகளுக்குச் சமத்துவம் அளிக்காததுதான் இன்றைய பிராமணரல்லாத அரசியல் என்கிற பொருள் கொண்டது திருமாவின் அவ்விமர்சனம்.

பிராமணர் அடையாளங்களை மட்டுமே எதிரியாகக் காட்டும்போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் பொத்தாம்பொதுவாகப் பேசி தப்பித்துக்கொள்பவர்களுக்கு, பதிலளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஆனால் இப்படியொரு விமர்சனம் செய்தாலே பிராமணர் ஆதரவு என்றாக்கிவிடும் எளிமைப்படுத்தல்தான் இங்கிருக்கிறது. "தலித்துகள் பேசும் கருத்து பிராமண ஆதரவாகிவிடக் கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கத்தைப் பேசாமல் அவர்களையும் அரவணைத்துப் பேசவேண்டும்; இவ்வாறு பேசினாலும் அவர்கள் கிராமந்தோறும் வெட்டிக்கொண்டே இருப்பார்கள். தலித்துகள் செத்துக்கொண்டே இருக்கவேண்டும்" என்பதுதான் நியதியாக இருக்கிறது.

கிராமப்புறக் கோயில்களின் தலித் புறக்கணிப்பு போன்றவற்றை அவ்வப்போதான கூற்றுகளாக உதிர்க்காமல் செயல்திட்டமாகக் கொண்டுசெல்லாமலிருப்பது அக்கட்சியின் குறைபாடுகளாக இருந்தாலும் எப்போதாவது இப்படியொரு கேள்வியை எழுப்புவதையும் மறுக்கவேண்டுமா? தலித்துகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் சார்பாக உண்மையறியும் குழு செல்வது மட்டுமே உண்மையறிதலாகிவிடாது. அவர்களை ஒடுக்கிய / ஒடுக்கும் சக்திகள், அதில் நடந்துள்ள சமகால மாற்றங்கள், சாதிமுறையால் பலன்பெறும் சாதிகள் - அவற்றிற்குக் கிடைக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் பரிசீலனை செய்வதும் உண்மையறிதல்தான்.

திருமாவளவன்
திருமாவளவனின் கூற்று பெரியாரை விமர்சிப்பதாகக் கருதி சுகுமாரன் அதை மறுத்திருக்கிறார். பெரியார் பணியாற்றியும் கூட அம்மண்ணில் தலித்துகளுக்கு எதிரான மனோபாவத்தை மாற்ற முடியாத அளவிற்கு அது ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்று நேர்மறையாகக் கூட இதை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சுகுமாரன் உண்மையை அறிபவராயிற்றே. தலித்துகள் அதிகாரம் பெறாமலிருப்பதற்குப் பெரியார் காரணமல்ல. மாறாக தலித்துகளே காரணம் என்று கூறி அவர்களையே குற்றவாளியாக்கியிருக்கிறார்.

தலித்துகள் உட்சாதிகளாகவே இருக்கிறார்கள், தலித் அரசியல் தலைமைகள் அவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்று கூறி, குறிப்பாக திருமாவளவனையே சுட்டிவிட்டு, ஆனால் உ.பி.யில் தலித்துகளை மாயாவதி ஒருங்கிணைத்ததாலேயே முதல்வரானார் என்கிறார். மற்றெந்த காரணத்தையும் அவர் கூறவில்லை. சுகுமாரனின் இப்பதிவிற்கு "முதல்வர் பதவிக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?" என்று பின்னூட்டமிட்டு, அதைத்தான் சுகுமாரனும் கேட்கிறார் என்று சுகுமாரனை ஆமோதித்து பின்நவீன 'அறிஞர்' ஒருவரின் கூற்றும் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் தலித் சாதி ஒருங்கிணைப்பு பற்றி பல்வேறு தலித் தலைவர்களின் நிலைபாடும், முயற்சியும், வரையறையும் என்ன? தலித் சாதிகளின் ஒருங்கிணைவில் தலித் அல்லாதோரின் தலையீடும் பங்களிப்பும் என்ன? போன்றவற்றை விரிவாகப் பேசும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும். அவ்வாறு வெளிப்பட்டால் தலித் ஒருங்கிணைப்பில் தலித் தரப்பு குறைபாடு மட்டுமல்ல, தலித் அல்லாத தரப்பின் குறைபாடும் தெரியவரலாம். எனவே என்னுடைய குறிப்பு அதை விடுத்து சுகுமாரனின் மறுப்பில் அடங்கியுள்ள வேறுசில பிரச்சினைப்பாடுகளைச் சொல்ல முயற்சிக்கிறது.

தலித்துகளின் அதிகாரம் பற்றிய கருத்தில் தலித்துகளின் ஒற்றுமைக்குறைவை மட்டுமே காரணம் காட்டி தலித் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மற்ற பிரச்சினைகளைப் பேசாமல் விடுவது அல்லது மறைப்பது நியாயமல்ல. அதிலும் தலித்துகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதும் யாரும் தங்கள் தரப்பின் குறைபாடுகளை விவாதிக்காமல் தலித்துகளையே குறைகூறுவது தலித் மக்களுக்கு நன்மை செய்வதாகாது என்பதைப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.

முதலில் சுகுமாரனும் அவரை ஆதரிப்போரும் திருமாவளவனின் கூற்றை எளிமைப்படுத்தி, தாங்கள் பதிலளிப்பதற்கு ஏதுவாகக் குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் கூற்று பெரியாரை மட்டுமே காரணமாக்கியிருக்கிறது என்று கொள்வதைக் காட்டிலும், அவர் நடத்திய அரசியல் பணிகளின் விளைவு, அவருடைய அரசியல் வாரிசுகளின் தலித் பற்றிய மனோபாவம், அவருடைய கருத்தியல் மற்றும் பணி, சாதி எதிர்ப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்றெல்லாம் அதை விவரிக்கமுடியும். அதில் எந்தப் பெரியார் புறக்கணிப்பும் இல்லை. பெரியாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் அவர் மீதான சிறு விமர்சனமாகவும் அது அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்த அளவிலான விமர்சனத்தைக் கூட ஒடுக்கப்பட்டோர் அரசியல் இயக்கம் முன்வைக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது மோசமான மனோபாவம். 

இங்கு செல்வாக்கு செலுத்திவரும் பிராமண எதிர்ப்புவாதம் பிராமணரல்லாத சாதிகளின் பெரும்பான்மையை வலியுறுத்துகிறது. இப்பெரும்பான்மைவாதம் ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள எண்ணிக்கைப் பெரும்பான்மை இடைநிலை சாதியினரை வலிமையாக்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்துவந்த நிலவுடைமை, பிராமண இந்து மதத்திற்கான ராணுவ சேவை போன்றவற்றால் சமூக அதிகாரம் பெற்றிருந்த பிராமணரல்லாத சாதியினருக்கு, திராவிட இயக்கம் பேசிய கருத்தியல் "அரசியல் அதிகாரத்தை"க் கொண்டுவந்திருக்கிறது. வட்டார அளவில் தலித்துகளை ஒடுக்கிவந்த பெரும்பான்மை இடைநிலைச் சாதியினருக்குக் கிடைத்த இந்த அரசியல் அதிகாரம் தலித்துகளை அதிக பலத்தோடு ஒடுக்குபவர்களாக மாற்றியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகாலத்தில் அரசியல் தளத்தில் நடந்துள்ள மாற்றம் இது. இதற்குப் பிராமணரல்லாத அரசியல் பெரும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. பிராமணரை அகற்றமுடிந்த இவர்களால் சாதி என்கிற அளவில் தங்களுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளை அரவணைக்க முடிவதில்லை.

தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் மட்டுமல்ல; உள்ளாட்சி பிரதிநிதித்துவம், கட்சிகளின் கிளை, ஒன்றிய, வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகங்களிலும் கோலோச்சிவரும் பிற சாதியினர் தலித்துகளைப் புறக்கணித்து வருகின்றனர். இப்போக்கைப் பிரதிபலிப்பதில் திராவிடக் கட்சிகளும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களும் முதன்மை; தற்போதிருக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் மட்டுமே தலித்துகளுக்குப் பாதுகாப்பு. இச்சலுகைகள் கிடைத்ததில் திராவிட இயக்கங்களுக்கு எவ்விதப் பங்கும் இருந்ததில்லை. மாறாக இச்சலுகைகள் அமுல்படுத்தப்படாமல் இருப்பது இவர்கள் ஆட்சியிலேதான். தற்போது பெரியாரிடமிருந்து திராவிடக் கட்சிகள் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அதிகாரம் பெற்றிருப்பதும், அதிகாரத்தைத் தக்க வைப்பதும் அவர் உருவாக்கிய பிராமண எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் பணியின் விளைவுதான் என்பதை மறுக்கமுடியாது. இவ்விடத்தில் பெரியாரை முற்றிலுமாகப் புறக்கணிப்பது நம் நோக்கமில்லை என்றாலும் அவரை விமர்சிக்காமல் செல்லவேண்டும் என்று கோருவது நியாயமல்ல.

பிராமணர்களால் ஒதுக்கப்பட்டவர்களென்று அரசியல் நியாயம் கோரிய பிராமணரல்லாதார் தற்காலத்தில் அதிகாரம் பெற்று, பிராமணர்களைக் கட்டுப்படுத்தியிருப்பதோடு, தலித்துகளையும் ஒடுக்குகிறார்கள் என்கிற உண்மை, மாற்றத்திற்குட்படாத பிராமணரல்லாதோர் என்ற கருத்தியலால் தற்கால அதிகாரத்துவத்தை மறைக்கப்படுகிறது. அதே வேளையில் கிராம அளவில் இந்த பிராமணரல்லாத சூத்திரச் சாதியினரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறவர்களாக இருந்தும் தலித் கட்சிகளால் இம்முரண்பாடு அரசியல் தளத்திற்குக் கொண்டுவரப்படும்போது நாமெல்லாம் பிராமணரல்லாதார் / திராவிடர் / தமிழர் என்ற அடையாளங்களால் முடக்கப்படுகிறார்கள். 

எனவே  இந்த பிராமணரல்லாதார் என்ற அரசியலின் வரலாறு, அதில் தலித்துகள் இருத்தி வைக்கப்பட்ட இடம் போன்றவற்றையெல்லாம் பேசும்போது பெரியாரும் அதில் வருவார். அவர் பேசி வந்த பிராமணரல்லாதார் அரசியலால் அவர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். அதை மீறுவதற்கு அவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செய்ததாகக் கூறமுடியாது. தன்னுடைய அரசியல் வரலாற்றில் குறிப்பான தலித் பிரச்சினை என்ற அளவில் ஒரு போராட்டத்தைக் கூட அவர் நடத்தியதில்லை. மற்றபடி அவர் நடத்திய வேறு சில போராட்டங்களை மொத்தத்தில் பார்க்கும்போது அது தலித்துகளுக்கும் சாதகமானதாக அமைந்திருந்தது என்று வேண்டுமானால் கூறலாம். 

பெரியார்
பெரியார் சூத்திரர்களின் இழிவு பற்றிப் பேசி வந்த அதே காலத்தில்தான் கிராம அளவில் சூத்திரர்களால் திணிக்கப்பட்ட பிணக்குழி தோண்டுதல், செத்த மாடெடுத்தல், பறையடித்தல் போன்றவற்றை எதிர்த்து தலித்துகள் போராடியபோது மௌனமாக இருந்தார். கருத்து ரீதியாகச் சூத்திர சாதி முதலாளிகளைச் சாதகமாகப் பார்த்த அவரால் தலித் சாதித் தொழிலாளிகளைத் திரட்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திட்டமட்டுமே முடிந்தது. எனவே தமிழகத்தில் நடைபெற்ற சமூகநீதி அரசியல் என்பது பிராமணரல்லாதார் என்ற பெயரால் தன்னைச் சாதுர்யமாகப் பாதுகாத்துக் கொண்டு தலித்துகளையும் மேலெழ முடியாமல் தடுத்துவருகிறது. சாதியுணர்வு அரசியல்மயப்படுத்தப்பட்டு, கண்ணுக்குத் தெரியாமல் இறுக்கமடைந்துள்ளது. அரசியல்மயமாகாத இடத்தை விட அரசியல்மயப்பட்ட இந்த இடம் இன்னும் ஆபத்தானது.

பெரியார் போன்றோர் பணியாற்றாத உ.பி.யில்  சாதி இந்துக்களை எதிர்கொள்வது தமிழகத்தைவிட எளிமையாக இருக்கலாம். அங்கு தலித்துகளைக் கட்டுப்படுத்த பிம்பங்களோ கருத்தியல்களோ இல்லை. இந்த அர்த்தத்தில்தான் திருமாவளவன் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய வாசிப்பிற்கே அதிக சாத்தியம். சுகுமாரன் கொண்டிருந்த அர்த்தத்தை இங்கிருந்தும் மறுக்கமுடியும்.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சூத்திரசாதியினரின் வன்முறை பற்றி சுகுமாரனோ, அவருடைய நண்பர்களோ அறியாதவர்கள் என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனால் சூத்திரர்களின் ஏகபோகம், வன்முறை பற்றிய சிக்கல் வரும்போது அதை ஒத்துக்கொள்வதோ, கடுமையாகக் கண்டனம் செய்வதோ மட்டும் அதற்கு எதிராகச் செயல்பட்டதாக முடியாது. இச்சூழலைக் காப்பாற்றிவரும் / மௌனமாக்கிவரும் அரசியல் சூழல், கருத்தியல் எவையெவையெனப் பேசுவதும் தேவை. ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி அறிவுஜீவியைப் போல் பேசியிருப்பதும், அறிவுஜீவியென்போர் அரசியல்வாதியைப் போல் வாதத்தை எளிமைப்படுத்தி ஒற்றையான பதிலைச் சொல்வதும்தான் நம் அறிவுச்சூழலின் கதி போலும்!

சுகுமாரனின் மறுப்பில் சூத்திர சாதியின் பெரும்பான்மைவாதம், தலித்துகளின் மீதான அரசியல் புறக்கணிப்பு பற்றி ஒருவரி விமர்சனம் கூட கிடையாது. உ.பி.யில் மாயாவதியின் வெற்றி தலித் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல. தலித்துகளை நேரடியாக ஒடுக்கும் பெரும்பான்மை சாதியைக் குறிப்பாக அடையாளம் காட்டி, அப்பெரும்பான்மை சாதியைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் தலைமையில் பிற எண்ணிக்கைச் சிறுபான்மையினரை ஒன்று சேர்த்ததால் பெற்ற வெற்றி அது என்பதை அவர் கூறவில்லை. கூறவிரும்பவும் மாட்டார்.  தமிழகத்தில் ஒரு தலித் கட்சியை அப்படி விடுவார்களா? எப்பாடுபட்டாவது அக்கட்சியைப் பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்குள் உள்ளடக்காமல் விடமாட்டார்கள். இப்போது கூட ஒரு சிறு விமர்சனத்திற்குதான் இத்துணை மறுப்பு.

அதே போல தமிழகத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மை இல்லாத சாதிகளின் கூட்டு, அதற்கான தலித் கட்சிகளின் முயற்சி என்பதெல்லாம் எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதோடு அப்படியான முயற்சி கூட இல்லை. மேலும் உ.பி.யில் தலித் உட்சாதிகளிடம் முரண்பாடே இல்லையென்பதும் சரியல்ல. எனவே, திருமாவளவனின் கூற்றை மறுப்பதற்கு நியாயமற்ற காரணத்தையும் அர்த்தத்தையும் கைக்கொண்டது தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள சுகுமாரனுக்குப் பயன்பட்டிருக்கிறது எனலாம். இதையெல்லாம் எழுதினால் சுகுமாரனின் மனித உரிமைச் செயற்பாடுகளை மறந்துவிட்டு எழுதுகிறார்கள் என்று பதில்கள் வரும். ஒருவரை விமர்சிக்கிறோம் என்று சொன்னால் அவரது பிற செயற்பாடுகளையும் மறுக்கிறோம் என்று எதிர்கொள்வது தமிழ்ச்சூழலில் விமர்சனத்திற்கு எதிராகக் கையாளப்படும் ஓர் கவசம் மட்டுமே.

- ஸ்டாலின் ராஜாங்கம்