Friday, 10 February 2012

தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும்தான் தலித் அடையாளமா? – 2

(“பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டுவிழாவை முன்வைத்து)


-  ஸ்டாலின் ராஜாங்கம்


கடந்த சனவரி 26-ந் தேதி மதுரையில் சுந்தர வந்தியத்தேவன் எழுதிய “பிறமலை கள்ளர் வாழ்வும் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டுவிழா நடந்தது.  சாதிகளின் வரலாறு திரட்டப்படவேண்டுமென்ற எண்ணமும், இந்நூலாசிரியரின் உழைப்பு பற்றிய தகவல்களும் இவ்விழாவை நோக்கி என்னை உந்தியது.  என் நம்பிக்கைக்குப் பங்கம் செய்யாத வகையில் அக்கூட்டத்தின் பேச்சுகளும் அமைந்திருந்தன.  அந்த வகையில் என்னுடைய இப்பதிவு இந்நூலை பற்றியதல்ல.  இந்நூல் சார்ந்து விழாவிலும் விழாவிற்கு வெளியிலும் கேட்ட தகவல்கள் பற்றியதே.

இந்நூல் வெளியீட்டுவிழாவிற்கு வேறு வகையிலான முக்கியத்துமொன்று கிடைத்திருந்தது.  அண்மையில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலுக்கான ஆவணங்களைத் திரட்டிய பணியில் வந்தியத்தேவனின் பங்களிப்பு இருந்தும் நாவலாசிரியரால் எங்கும் சொல்லப்படவில்லையென்றும், இந்நிலையில் நீண்ட நாட்களாக ஆவணச் சேகரிப்பிலும் எழுத்துப் பணியிலும் இருந்த இந்நூல் விரைந்து முடிக்கப்பட்டு வெளியீடு நடப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப நாவலுக்கான ஆவணங்களை நூலாக வெளியிடப் போவதாக சு.வெங்கடேசன் அண்மைப் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.  இத்தகைய பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்விழா அமைந்திருந்தது.  சகபங்களிப்புகளைச் சொல்லும் வகையில் “மக்கள் வரலாற்றை மக்களிடமே வழங்கும் விழாஎன்ற பதாகை, மேடையில் அத்தகையோரைக் கௌரவித்தல், நாவலை 1000 பக்க அபத்தம் என்று முன்பு விமர்சித்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் பங்கெடுப்பு, சு.வெங்கடேசன் மீது ஈகோ கொண்டிருக்கும் சில முன்னாள், இன்னாள் தமுஎகசவினரின் துருதுரு பங்களிப்பு ஆகியவற்றை இவ்வாறு பார்க்க முடிந்தது.

முதலில் இக்கூட்டம் வழக்கமான நூல் வெளியீட்டு விழாவல்ல.  மதுரையில் படித்த கள்ளர் சாதிப் பிரமுகர்கள், கிராமங்களிலிருந்து கொணரப்பட்ட கள்ளர் வகுப்பு மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் வெளியீட்டு விழாவுக்கெனக் கொண்டுவரப்பட்டிருந்த இந்நூலின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.  இவ்வாறு சாதித் திரட்சி இருந்தும் விழா மேடையில் சாதிப் பெருமையைப் பேசாமல் தவிர்க்கும் ஓர்மையைக் கொண்டிருந்தனர்.  ஏறக்குறைய பிரமலைக் கள்ளர் பற்றிய ‘வரலாறு’, தெய்வங்கள், அரசியல், வழக்காறுகள் என்று நூலில் தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகத் தெரிகிறது.  ஒரு சாதியின் வரலாறு என்பதைத்; தாண்டி சாதிப்பெருமிதம் பேசும் நூலாக கருதப்பட்டு விடாத வகையில் தமிழ்நாட்டில் பிரபலமான இரு முற்போக்கு அடையாளங்களுக்கு அங்கு அழுத்தம் தரப்பட்டன.  அவற்றில் ஒன்று கம்யூனிசம், இரண்டு தலித் அடையாளம்.  எனில் இவ்விரண்டு அடையாளங்களையும் இந்நூல் தான் பேசும் வரலாற்றினுள் ஏற்றியிருக்கிறதா?

விழாவில் நூலை மதிப்பிட்டுப் பேசிய நவமணி, புவனேஸ்வரன், நூலாசிரியர் ஆகியோர் தலித்துகள் பற்றிய தகவல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டனர்.  நவமணி கடந்த கால அரசியல் ரீதியான உறவு சிலவற்றைக் குறிப்பிட, புவனேசும், நூலாசிரியரும் கள்ளர்களின் கோயிலுக்குப் பறையர்கள் பூசாரிகளாக இருப்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டனர். இதனால் அவர்களோடு ‘நல்லுறவு பேணப்படுவதை வரலாற்றுத் தகவலாகச் சிலாகித்தனர்.

இதே போன்று வெளியீட்டு விழாவன்றே ஆனந்தவிகடன் இதழில் இந்நூலைப்பற்றி நூலாசிரியரின் பேட்டி வெளியாகியிருந்தது (எப்படித்தான் இதெல்லாம் சாத்தியமாகிறதோ?) அதில் ஊனமுற்ற தன்னால் எழுதமுடியாத போது கொச்சம்மாள் என்ற தலித் பெண் எழுதித் தந்ததாகக் கூறியிருக்கிறார்.  இத்தகைய சித்தரிப்பைத் தருவதன் மூலம் இக்குறிப்பிட்ட கள்ளர் சாதி, தலித் சாதிகளோடு இணக்கமானது என்றும், கள்ளர்மீதான சாதிவெறிப் பிம்பம் இல்லாமலாக்கப்பட்டு அதுவும் ஒடுக்கப்பட்ட சாதியே என்ற பொருளையும் தர முயலுகிறார்கள்.

ஏறக்குறைய கள்ளர் சாதியை ஒடுக்கப்பட்ட சாதியாகக் காட்ட பல தளங்களில் எடுத்து வரும் முயற்சிக்கு இத்தோற்றம் தோதானது.  அவர்கள் ஒடுக்கப்பட்டதையோ, இணக்கமாகி விடுவதையோ மறுப்பது நம் நோக்கமாய் இருக்கப் போவதில்லை.  ஆனால் உண்மை அதுதானா?  பிரமலைக் கள்ளர்கள் வறிய சாதிதான்.  அதனாலேயே அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? ஒரு சாதியின் கடந்த காலம் மட்டுமே வரலாறாகி விடுமா?  அச்சாதியின் நிகழ்கால வளர்ச்சி அதன் வரலாறாகாதா?  இதற்கெல்லாம் பதில் இல்லை என்றால் பிரமலைக் கள்ளர் பற்றிய அண்மைக் காலத்தைய இத்தகைய சித்தரிப்புகள் எல்லாம் ஒரு பக்கச் சார்பானது: சாதிச் சார்பானது.

அரசில் காவல் பணிபுரிந்ததாகக் கூறப்படும் இவ்வகுப்பினரிடமிருந்து காலனியம் அப்பணியைப் பறித்தபோது கள்ளர்களாகப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது.  அதற்கடுத்ததாக காலனியத்தால் குற்றப் பரம்பரை தடைச் சட்டத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டவர்களாக இருந்தமை நாமறிந்தது.  இந்நிலையில் இது காலனியத்தின் ஒடுக்குமுறை. இதுவும் ஒடுக்குமுறைதான். ஆனால் சமூக அமைப்பின் கொடும்விதியினால் நிர்வகிக்கப்படும் சாதிஒடுக்குமுறையும் இதுவும் ஒன்றல்ல. இந்நிலையில் தலித்துகளோடு இணைந்து பேசி அதற்கிணையான ஒடுக்குமுறை போலத் தோற்றம் காட்டுவது சரியல்ல. அதனால் தான் காலனிய ஒடுக்குமுறையிலிருந்து நீங்கிவிட்டாலும் சாதி ஒடுக்குமுறையைக் கையாளுபவர்களாக தற்போது இவர்களே இருக்கின்றனர். எனவே சாதிமுறை எல்லாவற்றைக் காட்டிலும் கொடியது.

காலனியத்தால் ஒடுக்கப்பட்டவர்களான இச்சாதியினரின் இன்றைய நிலை என்ன?  தலித்துகளை சாதியின் பலத்தால் எதிர்கொள்ளும் இச்சாதியினரின் சமகால  ஆகிருதி என்ன?  சமூக அதிகாரமும் அரசியல் அதிகாரமும் இங்கு இணைந்துள்ளது.  நகரம் என்ற அளவில் மதுரையில் மட்டும் அரசியல் அதிகாரம் முதல் அரசாங்கத்தின் சிறுசிறு ஏலங்கள்வரை ஏறக்குறைய 95 சதவீதம் இச்சாதியினரால் நிர்வகிக்கப்படுகின்றன.  அதேபோன்று ‘ஒடுக்கப்பட்டுள்ள பிறசாதிகளின் முன்னேற்றம் என்ன? பிறசாதிகள் வன்முறையாக ஒதுக்கப்படுகின்றனர். இப்போக்குகளுக்கும் சமூகங்களின் சீரான வளர்ச்சிக்கும் தொடர்பு ஏதுமில்லை.  உள்ளுர் வட்டி தொடங்கி கோடம்பாக்கம் பைனான்ஸ் வரை செயற்படும் பொருளாதாரத்தின் உள்ளீடு எங்கிருக்கிறது?  இதுபோன்ற இன்றைய நிலைப்பற்றி ஆராயாமல் கடந்தகால ஒடுக்குமுறையைப் பற்றி மட்டுமே திரும்ப பேசி ஒற்றைக் கருத்தாக மாற்றுவதால் சமகாலத்தில் அவர்கள் தலித்துகளை ஒடுக்குவது மறைக்கப்படுகிறது.  இவை தற்கால அறிவுலகில் எழுந்துள்ள ஆபத்தான போக்கு.

பறையர்கள் பூசாரிகளாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. பறையர்களுக்கும் கள்ளர்களுக்கும் உள்ள உறவு நெருக்கமானது என்பதும் உண்மைதான்.  ஆனால் அது சாதிய வரையறையை மறந்ததாக இல்லை.  ஒரு ஆன்மீக அதிகாரம் என்பதைத் தாண்டி பூசாரியாக இருப்பதற்கு எந்த அர்த்தமும் அங்கு இல்லை.  பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி மட்டுமல்ல. இன்னும் உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட திருமாவளவன் நடத்த முடிந்ததில்லை.  முன்பு 1999 நாடாளுமன்றத் தேர்தலில் மூப்பனாரோடு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கல்வீசி தாக்கப்பட்டார்.  பாப்பாப்பட்டி வந்தபோது அதிகாரிகள் முன்னிலையிலேயே ஊருக்குள் நுழைய முடியவில்லை.  டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் இதே நிலைதான்.  சாதிப் பிரச்சினைக்கு என்றில்லை.  முல்லைப் பெரியாறு போன்ற ‘பொது’ப் பிரச்சினைக்காகவது அந்த ஊhpல் ஒரு கூட்டத்தை தலித் அமைப்புகளால்  நடத்திவிட முடியுமா?  இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரியாறு அணை என்ற ‘பொது’ப் பிரச்சினைக்காக பிரச்சாரம் சென்ற போதே பெரியகுளம் அருகில் திருமாவளவன் பேனர் கிழிக்கப்பட்டது.  இதையெல்லாம் எந்த வரலாற்றில் சேர்ப்பது?  ஒருமாதிரி தோதாக இருப்பதை மட்டும் வரலாறாகப் பேசிவிட்டு, பிரச்சினைகளைப் பேசாமல் விடுவதுதான் வரலாறா?

நூலாசிரியருக்கு தலித் பெண் உதவியதைக் குறிப்பிடுவதன் மூலம் சொல்லவரும் விசயம் என்ன?  அப்பெண் தலித் ஒடுக்குமுறைக்குத் தீர்வாக இந்நூல்  அமையும் என்ற நோக்கத்தில் எழுதினாரா?  அப்பெண்ணிற்குச் சாதி சமன்பாடுகள் சார்ந்துள்ள புhpதல் என்ன?  பழகியவர், தொpந்தவர் என்று பலரும் செய்த உதவியைப் போல அப்பெண்ணும் உதவியிருப்பார் என்பதைத் தாண்டி அப்பெண்ணின் உதவியை மட்டும் சொல்வதன் மூலம் ஏற்படுத்த விரும்பும் அர்த்தம் என்ன?  இவையெல்லாமே இந்நூல் மீது ஏற்படுத்த விரும்பும் முற்போக்கு அடையாளத்திற்காகப் பூணப்படும் முகமூடியே.  பலத்தை மட்டுமே பேசுவது வரலாறல்ல.  வெளிப்படையாக சாதியைப் பேசும் நூல்களை காட்டிலும் இது போன்ற நூல்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும்.  உண்மையில் இதுபோன்ற சாதிய பிம்பஎழுச்சி என்பதெல்லாம் கடந்த 20 ஆண்டுகாலமாகச் சமூகத்தளத்தில் எழுந்த தலித் அடையாளத்திற்கான மறைமுக எதிர்வினைகளே.

இந்தக் கூட்டத்தில் மேடையில் மட்டுமல்ல பார்வையாளர் வரிசையிலும் மதுரையின் பல்வேறு முற்போக்குச் சக்திகளும் காணப்பட்டனர்.  முதல்வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நிர்வாகிகள் பலர்  அமர்ந்திருந்தனர்.  பேச்சாளர்களில் இருவர் தம் பேச்சினூடே  குற்றப் பரம்பரை தடைச்சட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகளும் போராடினர் என்று சொன்னாh;கள்.  ஜார்ஜ் ஜோசப், பி.ராமமூர்த்தி போன்றோர் வெவ்வேறு தருணங்களில் இச்சட்டத்திற்கு எதிராக செயற்பட்டிருப்பினும் சாதிநோக்கம் காரணமாக முத்துராமலிங்கத் தேவாpன் பிம்பம் மட்டுமே ஆராதிக்கப்பட்டு வரும் சூழலில் இப்பேச்சுக்காக கம்யூனிஸ்டுகள் மகிழ்ந்திருப்பர். (அப்பாடா நாமும் அங்கீகாpக்கப் பட்டுவிட்டோம்). என்னதான் இருந்தாலும் நூலாசிரியர் ஒரு கம்யூனிஸ்ட் இல்லையா!  அதற்காக அவர் தன் பேச்சை ஆரம்பிக்கும் போது முத்துராமலிங்கத் தேவரை கம்யூனிஸ்ட் என்று சொல்லியதையும் நாம் கேட்க வேண்டியிருந்தது.  அதாவது பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் முத்துராமலிங்கத்தேவருக்கு இந்த பெருமை.  (சாதி கம்யூனிசம் ஆனதா? கம்யூனிசம் சாதிமயம் ஆனதா?).
  
அடுத்து முன்பொருமுறை ‘இம்மானுவேல் சேகரனுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் (ஆதரவான தீர்மானம் போட்டதால் வெட்டியவனுக்கும் வெட்டப்பட்டவனுக்கும்) சமமான இடமா?’  என்று திருமாவளவனை நோக்கிக் கேள்வியெழுப்பிய, தலித் முரசு இதழிலும் எழுத முடிகிற அ.முத்துக்கிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணனை வரவேற்பது, இது அது என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார் (எல்லோருக்கும் நல்லவனாக காட்டிக் கொள்வது  என்பது இதுதானா?) ‘மார்க்சிய பார்வையில் அமைந்த உன்னதமான மக்கள் வரலாறு என்று தன்முக நூலில் இந்நூலைப்பற்றி தெரிவித்திருந்தார். இந்நூலை முன்னிறுத்த இவர் ஈடுபட்ட மீடியா லாபியெல்லாம் தனிக்கதை.  ஏனெனில் கடந்த ஆண்டு நூல் தயாராகும் முன்பே “காவல் கோட்டம் ஆனந்தவிகடனின் சிறந்த நூல் பட்டியலில் இடம்பெற்றது.  அதேபோல இந்த ஆண்டு நூல் தயாராகும் முன்பே அப்பட்டியலில் இந்நூலை முன்வைக்க முயற்சி நடைபெற்றது.  அதனாலென்ன பேட்டிதான் வந்துவிட்டதே! தலித்துகள் பிராமணர் நடத்தும் ஊடகங்களில் இடம்பெறுவதை சோரம் போவதாக சித்தரிக்கும் பிராமணரல்லாதோர், ஆனந்தவிகடன் என்னும் பிராமணர் ஊடகத்தைப் பயன்படுத்தும் அரசியலே தனி.

சு.வெங்கடேசன், அவருக்கு எதிராக காட்டிக்கொள்வோர் என்ற இருதரப்பும் எழுதுவதென்னவோ ஒரே சாதியின் வரலாற்றைதான். இருப்பதாக சொல்லிக்கொள்வதென்பதோ ஒரே கட்சியில்தான். இந்த நூலை வரவேற்று மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல சாதிரீதியாக வாக்கு திரட்டும் அரசியல்வாதியைப் போல் இங்கு பேசிய எஸ்.ராமகிருஷ்ணனின் சாதிப்பேச்சு இங்கு எழுதுவதற்குக் கூடப் பொருட்டானதல்ல.

அடுத்துப் பேசவந்த முனைவர் இ.முத்தையா அந்நூல் தரும் சாதிபிம்பத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்தும் எச்சரிக்கையோடு நூலாசிரியரைப் பன்முறை தோழர் என்று விளித்துப் பேசி முடித்ததோடு.  உழைக்கும் அடித்தள மக்களின் வரலாறாக அந்நூலைச் சொல்லத் தவறவில்லை. காலனியத்திற்கு எதிராக உருவான பல்வேறு மக்கள் குழுவினரின் போராட்டங்களைத் தொகுப்பதில் ஈடுபட்ட சபால்டர்ன் (விளிம்பு நிலை)  ஆய்வுக் குழுவினரின் தாக்கத்தால் தமிழில் அடித்தள மக்கள் ஆய்வு பற்றி பேச்சுவந்தபோது, அப்பாணியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலேயருக்கு எதிரான ‘பெருங்காமநல்லூர் கள்ளர் போராட்ட’த்தை முன்வைத்தது இ.முத்தையாவின் கட்டுரை.  ஆய்வுப்புலத்தில் இந்த கட்டுரைதான் ஆரம்ப வரவு.  எனவே இத்தகைய பேச்சில் வியப்பேதுமில்லை.  ஆனால் இன்றைய அடித்தள மக்கள், அவைதீகமரபு போன்ற சொல்லாடல்கள் மீது சாதி சார்ந்து விரிவான ஆய்வு நடைபெற வேண்டியுள்ளது.

சபால்டர்ன் ஆய்வுகள் வெளிவந்தபோது முதல் ஆறு தொகுதிகள் வரை (ரணஜித்குகாவின் சந்திராவின் மரணம் என்ற கட்டுரையைத் தவிர) அக்குழுவிiரால் சாதி ஒரு விவாதப் பொருளாகவே எடுத்துக்கொள்ளப் படவில்லை. ஆனால் இதுவே தமிழில் அறிமுகமானபோது வேறுவிதமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டது.  உழைக்கும் மக்கள் என்ற ஒற்றையான அடையாளத்தில் மறைக்கப்படும் பிற அடையாளங்கள் பற்றிய விவாதங்கள் மேலெழுந்தபோது, மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் அதை எதிர்கொள்ளும் விதமாக இன்னும் ஆழமாக சென்று சேர்ந்த இடம்தான் அடித்தள மக்கள் ஆய்வு. வைதீக மரபுகளால் விலக்கப்பட்ட அவைதீக மரபுகளைக் கொண்ட மக்கள் குழுவினரை இது அடிப்படையாகக் கொண்டது. வைதிகம் மட்டுமே தீட்டுக் கோட்பாட்டைப் பேசக் கூடியதாகச் சொல்லப்பட்டது.

அடித்தள மக்களிடையே இயங்கும் வேறுபாடுகளையோ, வட்டாரத் தன்மையையோ அது கணக்கில் கொள்ளவில்லை.  ஆனால் வைதீகப் பரப்பிற்கு வெளியே அவைதீக பரப்பிலும் தீட்டு, சடங்குவெளி என்ற பெயரில் சாதி கடைபிடிக்கப்படுகிறது. தங்கள் நிலத்திற்குள் நுழையும் காலனியத்திற்கு எதிரான கள்ளர்களின் ‘போர்க்குணம் தலித்துகளுக்கும் எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது.  பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி இதற்கான சிறு உதாரணம்.  இந்த விதிகளை மீறும்போது கொலை உள்ளிட்ட வன்முறைகள் சாதாரணமாக நிகழ்கின்றன.  இந்த வகையில் தமிழில் அடித்தள மக்கள் ஆய்வு என்பது ‘பிராமண எதிர்ப்பு அரசியலின் நவவடிவ’மாக கீழிறங்கிப்போனது. தென்பகுதி மார்க்சியப் பண்பாட்டு ஆய்வாளர்கள் இருப்பது இப்போது இந்த வலைக்குள்தான்.  இங்கிருந்துதான் முனைவர் இ.முத்தையா போன்றோரின் அடித்தளம், அவைதீகம் போன்ற சொல்லாடல்கள், ஆய்வுகள் மீது இடைமறிப்பு தேவைப்படுகிறது.

அடித்தள மக்கள் என்ற வாதத்தைத் தட்டையான அணுகுமுறையாகக் கொள்ளமுடியாது. அவர்கள் சாதியற்ற வர்க்கத் தன்னிலை அல்ல.  அடித்தள மக்களிடையே சாதி உள்ளிட்ட தீர்க்கமான வேறுபாடுகளால் ஒன்றுக்கொன்று முரணாக நிற்கும் அம்சங்கள் குறித்த ஆய்வு வளர்த்தெடுக்கப்படவில்லை.  இந்த ஆய்வாளர்களுக்கு இவை தெரியாதவையாக இருக்க வாய்ப்பில்லை.  எனில் அடித்தள ஆய்வில் இத்தகைய கேள்விகளோ, அதை நோக்கிய ஆய்வுகளோ ஏனில்லை?  இந்நிலையில் தான் இதுபோன்ற மேடைகளில் அடித்தள மக்கள் வரலாறு போன்ற ஆய்வுச் சொல்லாடல்களைக் கொண்டு அரவணைக்கும் போது சாதி போன்ற முரண்பாடுகள் கேள்வியில்லாமல் போவதோடு அவர்களின் சமகால அதிகார அரசியலும் மறைக்கப்பட்டு விடுகிறது என்பதாலேயே இக்குறிப்பை எழுத வேண்டியுள்ளது.

(தொடரும்)

5 comments:

  1. ஒரு ஆய்வாளராக நீங்கள் ”ஆனந்தவிகடன் என்னும் பிராமணர் ஊடகம்” என்று கண்டுபிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    அது சரி தாங்கள் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் காலச்சுவடு என்ன வகை ஊடகம் என்பதை கொஞ்சம் விரிவாக இதே போல எழுதினீர்கள் என்றால் என போன்ற சாமானியர்களுக்கு ஒரு திரட்சியான தெளிவு கிட்டும்.

    ReplyDelete
  2. 600 ஆண்டு வரலாற்றில் தலித் நீக்கம் செய்யபட்ட ஒரு நாவலை வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம சலம்பும் தலித ஆய்வாளர்கள் கள்ள மெளனம் காத்து இத்தனை (4) ஆண்டுகள் இருந்த அரசியல் என்ன,

    இப்போழுது ஒரு நூல் வெளிவந்து அதை வாசிக்காமலே அதன் மீது விழுந்து புரளுவதற்கு பின் உள்ள அரசியல் என்ன.

    ReplyDelete
  3. கள்ளர் பற்றிய நூல் அல்லது கள்ளர் எழுதிய நூல் என கலவரம் அடைகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது, அனால் நீங்களும் உங்கள் நண்பர்களும் தமிழகம் எங்கும் அதே தேவம்மார் எழுதிய முதுகலத்தூர் கலவரம் என்ற நூலை தூக்கி சுமந்தீர்கள், அந்த சமயம் அந்த நூலுக்கு நீங்கள் செய்த லாபி யின் வகைகள் பற்றி விரிவான தகவல்கள் உள்ளது.

    ReplyDelete
  4. 'படம் பார்க்காமல் கதை சொல்வது'...'புத்தகத்தை படிக்காமல் விமர்சனம் எழுதுவது'...உங்களைப் போன்ற ஆய்வாளர்களுக்கு 'கை வந்த கலை'...போலும்.

    'கரிகால் சோழனின்' உண்மையான பெயர் தான் 'திருமாவளவன்'. ஆனால் ஓவ்வொரு தடவையும் தேர்தல் நேரத்துல...பெரிய கட்சிகள் கிட்ட “பெட்டி” வாங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் உங்கள் தலைவரின்(திருமாவளவன்) செய்கையை பார்த்து...இன்று கரிகால் சோழன் உயிரோடு வந்தால், ‘தற்கொலை’ செய்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமா...அவருடைய அப்பா பேயரையே மாத்தினவராச்சே?

    இப்படி புகழ் பெற்ற திருமாவளவன் மற்றும் (மதிப்பிற்குரிய மருத்துவர்?) கிருஷ்ணசாமி போன்ற நேர்மை இல்லாத அரசியல்வாதிகள் தான்,'தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும்தான் தலித் அடையாளம்'எடுக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

    இதுக்கு மேல...என்னத்த சொல்ல? இனிமேலாவது ஒரு புத்தகத்தை படித்து விட்டு விமர்சனம் எழுத முயற்சிக்கவும்.

    ReplyDelete