(வன்னியரசு பழ.நெடுமாறனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை முன்வைத்து…)
- ஸ்டாலின் ராஜாங்கம்
வன்னியரசு |
மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா? என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் அவர்களுக்கு பகிரங்கக் கடிதம் என்ற கட்டுரையொன்றை சனவரி 26 (2012) தேதியிட்டு இணையத்தில் காண நேர்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மதிப்புமிகு நண்பர் வன்னியரசு அக்கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் என்ற விளிப்போடு எழுதப்பட்டுள்ளதன் மூலம் அக்கட்டுரையைக் ‘கட்சியின் கருத்தாக’ மாற்றியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தலித் அரசியல் காரணங்கள் அடிப்படையில் விமர்சிக்கும் அதே வேளையில் தேவையான இடங்களில் அக்கட்சியின் பங்களிப்பை, தேவையை எடுத்துவைக்கத் தயங்காதவனான நான் அதை அக்கட்சி கவனிக்கும், அங்கீகரிக்கும் என்ற எந்த பயன்பாட்டு நோக்கமும் இல்லாமல் செய்கிறேன். இதை என் தலித் செயற்பாடுகளில் ஒன்றாகக் கருதிவருகிறேன். அந்த வகையில் வன்னியரசுவின் நெடுமாறன் பற்றிய கட்டுரையிலுள்ள பிரச்சனைகளை விவாதிப்பது என்பொறுப்பு.
தமிழ்த் தேசிய அரசியலில் இக்கட்டான தருணங்களில் துணை செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் புறந்தள்ளும் பழ.நெடுமாறன் சாதி மனப்பான்மை கொண்ட அரசியல் புரோக்கர் நடராசனின் தலைமைக்கு வழிசெய்கிறார் என்கிறது இக்கட்டுரை. மொத்தத்தில் தாங்கள் தலித்தாக இருப்பதே இப்புறக்கணிப்பிற்குக் காரணம் என்பதாக முடிகிறது.
பழ.நெடுமாறன் சாதி எதிர்ப்பு அரசியலிலிருந்து விலகியவர் என்பது புதிய செய்தியல்ல. தமிழகத்தின் பல்வேறு தமிழ்த் தேசியத் தலைவர்களையும் போல தலித் மேடைகளில் வாய்ப்பளிக்கப்பட்டபோது மட்டுமே தலித்துகள் பற்றிப் பேசியவர். அவருடையது முழுக்க தமிழ்த் தேசிய அரசியல். ஆனால் அவர் மீது இப்போது புதிதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம் இதுவரை இல்லாத ஒன்று இப்போதுதான் ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தாங்களே கண்டுபிடித்துவிட்டதைப் போலவும் பேசுவதுதான் புதிதாய் இருக்கிறது. இக்கட்டுரை பேசும் குற்றசாட்டுகள் பொய்யானது என்பது நம் வாதமல்ல. இதை இக்கட்சி இப்போது பேசுவது ஏன் என்பதும், இது தலித்துகள் மீதுள்ள அக்கறையினாலா என்பதும்தான் நாம் கேட்கும் கேள்வி. சாதி ஒழிப்பை பிரதானமாகக் கொள்ளாத தமிழ் அமைப்புகளோடு மேடையைப் பகிர்ந்து கொள்ளும் இக்கட்சியை விமர்சித்தால் முட்டாள்கள், முண்டங்கள் என்று சாடிவிட்டு இப்போது அதே குற்றச்சாட்டை தாங்களே வரித்துக் கொண்டால் என்ன சொல்வது? நெடுமாறனின் இப்புறக்கணிப்பில் வியப்பென்ன இருக்க முடியும்? அவா; அவராகத்தான் இருக்கிறார். குற்றம் சாட்டுபவர்கள் யாராக இருக்கிறாh;கள் என்பதுதான் கேள்வி. இக்கட்சி மேடைகளில் நெடுமாறன் தோன்றும்போது தமிழனாகச் சொல்லப்படுவதையும், அவரோ பிறரோ தங்களைக் கைவிட்டுவிட்டால் தலித் எதிர்ப்பாளராகக் காட்டுவதையும் தலித்துகள் நம்பவேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் எதிர்பார்ப்பா?
இக்கட்சி பழ.நெடுமாறனோடு கூட்டாக இருந்தபோதும் அவரிடம் இதே அணுகுமுறைதான் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் பேசாமல் இருந்ததோடு அவர் போன்ற பலரின் சாதிமுகத்தை மறைத்துக் கொள்வதற்கான மேடைகளைத் தந்துகிடந்ததோடு இன்றைக்குத் தமிழ்த்தேசியம் போன்ற குறிப்பான அம்சம் சார்ந்து முரண்பாடு எழுமானால் தங்கள் கூட்டணியின் நிபந்தனையாகக் கொண்டிராத சாதிஒழிப்பு என்ற விடுதலை அடையாளத்தைக் கவசம்போல கையாளுவது அந்த அடையாளத்திற்குச் செய்யும் துரோகம் இல்லையா? நெடுமாறன் காங்கிரஸில் இருந்தகாலம் தொடங்கி விழுப்புரம், உஞ்சனை, மேலவளவு போன்ற கலவரங்கள் நடந்தது. அப்போதெல்லாம் அவர் பேசியதில்லை என்பதை இக்கட்டுரை இப்போது சொல்வது ஏன்?
இக்காலத்திற்குப் பின்பும் அவரோடு ஓடி ஓடி மேடையை இக்கட்சி பகிர்ந்து கொண்டபோது இதையெல்லாம் சொல்லியதேயில்லை. அவர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது தந்தபோதும், அதற்குப் பின்பும் விமர்சிக்காமல் கூடிக் குலாவிவிட்டு இப்போது கண்டிப்பது என்ன நியாயம்? இவ்வாறு தங்களின் தற்கால அரசியல் லாபிக்காக சாதிஒழிப்பை உள்ளீடாகக் கொண்ட தலித் அடையாளத்தைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது.
இக்கட்சி தீவிரமாக தமிழ் அடையாளம் பேசியதே சாதி அடையாளத்தை மறைக்கத்தான். (சாதியை அழிப்பது வேறு, மறைப்பது வேறு. அதேபோல தமிழ்த் தேசியம் என்பது வேறு, தமிழ் அடையாளம் என்பது வேறு. ஆனால் இங்கே தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பேசப்படுவதெல்லாம் தமிழ் அடையாளம் மட்டுமே). இத்தமிழ் அடையாள அரசியலில் சாதித் தமிழா;களால் புறக்கணிக்கப்படும்போது அத்தகைய இடத்தை இழந்துவிட்ட கோபத்தைதான் தலித் அடையாளத்தைச் சொல்லி எதிர் கொள்கிறார்கள்.
இன்றைய உலக / இந்திய அரசியல் நிலைமையில் இந்தியாவிலிருந்து கொண்டு, வரையறையை கணக்கில் கொள்ளாமல் உணர்ச்சியைக் கைக்கொண்டு ஈழஆதரவு பேசும் எந்தவொரு தேர்தல் சனநாயகக் கட்சிக்கும் நேரக்கூடிய விபத்தையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சந்தித்திருக்கிறது. ஆனால் இதைச் சமரசம், சோரம் என்று விமர்சித்தார்கள். தேர்தல் சனநாயகத்தில் பல சாதிகளின் ஆதரவையும் பெறவேண்டுமானால் சாதிமுகத்தை மறைக்க வேண்டியுள்ளது. பிறகட்சிகளை விட ஒடுக்கப்பட்ட கட்சிக்கு இதுவொரு மாபெரும் சவாலாகிவிடுகிறது. அதற்காகத் திருமாவளவன் கண்டெடுத்தது அவரின் ஆரம்பகாலம் முதல் ஆர்வம்காட்டி வந்த தமிழ் அடையாளத்தைதான். ஒருவகையில் தமிழ் அரசியலில் தன்னை நிரூபிக்க வேண்டுமென்று ஈழஅரசியலை தீவிரமாக பேசி அந்நாடகத்தில் அக்கட்சியே மாட்டிக்கொண்டது. இதைச் சாக்காக்கிக் கொண்டார்கள் சாதித் தமிழர்கள்.
தற்போது நெடுமாறன் உருவாக்கி வரும் முள்ளிவாய்க்கால் என்ற வரலாற்று நினைவிடம் உருவாக்கத்தில் இக்கட்சியினரையும், இக்கட்சி தற்போது நண்பர்களாகக் கருதும் பிற தமிழ்த்தேசியர்களையும் கருணாநிதியினூடனான நெருக்கம் கருதி புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த வரலாற்று இழப்பைக் கருதிய கோபத்தில் தான் இக்கட்டுரை எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இவர்களைச் சேர்க்காமல் ம.நடராசன் சேர்க்கப்படுவதால்தான் நடராசன்கூட இக்கட்டுரையில் விமர்சிக்கப்படுகிறார். உடனே நடராசனின் சாதிவெறி, வேலுநாச்சியார், புலித்தேவன் போன்ற சுயசாதிபிம்பங்களின் ஆராதனையெல்லாம் தோண்டப்படுகிறது. ஆனால் நடராசனோடு இதேபோன்று தஞ்சாவூர் பொங்கல் விழாவில் திருமாவளவன் மேடை ஏறியவர்தான். அப்போதும் நடராசன் இதே போலத்தான் இருந்தார். இப்போதுகூட இந்த நினைவிடத்திற்காக நடராசனோடு இவர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தால் நடராசனின் சாதிவெறி பேசப்பட்டிருக்காது.
எனில் இதுவரை தமிழ் அரசியல் என்ற பெயரால் சாதியை மறைப்பதற்கும், அதை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்கும் துணை நின்றார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இனிமேலாவது அத்தகைய விழிப்புணர்வோடு இக்கட்சி இயங்குமா? என்றால் அதற்கான அறிகுறியே இக்கட்டுரையிலோ கட்சியிலோ தென்படவில்லை. மீண்டும் நெடுமாறனோடு அதே பழைய பாணியிலேயே இணைந்து நிற்க வாய்ப்பு வந்தால் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இன்றைக்கு இக்கட்டுரை மூலம் பழ.நெடுமாறன் மீது குற்றம் சாட்டுகிறார்கள். சீமான், சோழ நம்பியார், கலைக்கோட்டுதயம், ‘புரட்சி’நடிகர் மன்சூரலிகான் இன்னபிற நபா;களுக்கும் இக்கட்சி மேடையை தந்தது. அவர்களில் இப்போது யாருமில்லை. ஆனால் இன்னமும் இக்கட்சியும் இந்த கட்டுரையும் ‘பிறருக்காகவே’ வக்காலத்து வாங்குகிறது. இக்கட்டுரையில் பழ.நெடுமாறனை எதிர்ப்பதற்குதான் தலித்துகளின் பெயரே தவிர அது தலித் அரசியலுக்காக அல்ல.
இக்கட்டுரையைச் சரியாக வாசித்து பார்த்தால் கருணாநிதி, கி.வீரமணி, ராமதாஸ், சுபவீரபாண்டியன் (அண்ணன் அறிவுமதியைக் காணவில்லையே!) போன்றவர்களுக்காகவே நெடுமாறனைச் சாடுவதைப் பார்க்கலாம். கருணாநிதி உள்ளிட்டவர்கள் எப்போது தலித்துகளைச் சேர்த்துப் பேசுவார்கள், எப்போது மௌனமாவார்கள் என்பது அறியாததல்ல. தலித் இயக்கங்களின் எழுச்சியின் போது நடந்த சூத்திரசாதி வன்முறைகளுக்கு எதிராக கி.வீரமணி ஒரு அறிக்கை, ஒரு போராட்டம் இப்படி எதையாவது அசைத்ததுண்டா?
தலித்துகள் திராவிட இயக்கத்தை விமர்சித்தால் பார்ப்பனக் கைக்கூலி என்று கூறும் சுபவீரபாண்டியன் தற்போது தலித்துகள் இவர்களுக்காக எழுதும்போது மட்டும் மகிழ்வார். தலித் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்களோ அப்படி இருக்கிறது இக்கட்சி. தலித்துகளையும் சேர்த்துப் பேசித் தங்களுக்கு மட்டுமே லாபம் பார்த்ததைத் தவிர இந்நபர்கள் செய்தது எதுவுமில்லை.
இக்கட்சியின் ஆரம்பகாலம் முதலாக பல்வேறு அரசியல் பார்வைகளில் ஒன்றாயிருந்த ஈழ ஆதரவையே பிரதானத் திட்டமாக்கிக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தலித் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிகொண்டது அல்லது தமிழ் அரசியலையும் தலித் அரசியலையும் முரண்பாடில்லாத வகையில் இணைத்துச் செல்லமுடியாத நிலை. ஆனால் நாங்களும் பேசியிருக்கிறோம் என்று அடையாளத்திற்காக அழுத்தம் இல்லாத வகையில் ஆங்காங்கு சிலவற்றைப் பேசியிருக்கிறார்கள்.
தமிழ் வாழ்வின் சகல நெருக்கடிகளையும் கணக்கில் கொண்டு சமகால மாற்றங்களுக்கேற்ப அரசியலை வடிவமைக்காமல் வழக்கமான உணர்ச்சி அரசியலான ஈழ ஆதரவை மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலாகக் காட்டியும், தமிழ் கொன்று தன்னலம் பாடும் கருணாநிதியின் புகழ் பேசியும் இயங்கிய கடந்த ஆண்டுகளில் தலித் பிரச்சினைகள் தீர உடனடியாகவோ, நீண்டகால நோக்கிலோ தந்த அழுத்தங்கள் என்ன? நடத்திய போராட்டங்கள் எவை? இவற்றால் தலித்துகளுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க நலன்கள் என்று எதையாவது சொல்ல முடியுமா?
தேர்தல் பாதையும் கூட்டணி அரசியலும் கட்சிகளிடம் சமரசத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. ஆனால் சமரசத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளைச் சமூகத்தின் பிரதான நலன்களோடு இணைப்பதே முக்கியம். அரசுப் பணியிடங்களில் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் எல்லா ஆட்சியிலும் நிரப்பப்படாமலேயே உள்ளது. கல்விச் சலுகை, பஞ்சமர் நிலம் போன்று பெறவேண்டிய சட்டரீதியான சலுகைகள் மீது கூட எந்த அழுத்தமும் இருந்ததில்லை. SC/ST சிறப்பு உட்கூறு நிதியை கருணாநிதி இலவச டி.வி.க்காக செலவிட்டார் என்பதற்கான ஆவணம் வெளியிடப்பட்டும் கூட இக்கட்சி மௌனம் காத்தது.
இத்தகைய சமரசத்திற்குப் பின்பு கருணாநிதி கூட்டணியில் போட்டியிட்டு சட்டமன்ற பிரதிநிதித்துவத்தையும் இக்கட்சி இழந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டோரின் இயக்கம் என்ற வகையில் அதன் ஐந்தாண்டுகால உழைப்பு வீணாவது எளிய விஷயமா? தமிழ், ஈழம் என்ற பெயரில் எத்தனை கைது, சிறை, பொருளிழப்பு, ஆர்ப்பாட்டம், மாநாடு? சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் திரண்ட வறிய தலித் சாதி இளைஞர்களைக் கொண்டு தலித் பிரச்சினைகளுக்காக இத்தகைய தொடர் அழுத்தம் இருந்ததுண்டா?
இதனால் தலித் அரசியலை பிற அரசியலோடு இணைப்பதை எதிர்க்கிறோம் என்று பொருளல்ல. அது போன்ற பார்வை வேண்டும் என்பதே உண்மை. ஆனால் அத்தகைய இணைவு திரண்டிருப்போரின் பிரதான நலனை பலியாக்காதவாறு அமைய வேண்டும். ஆனால் இந்தத் தமிழ் அரசியல் பிரதான நலனை பலியாக்கியிருக்கிறது. குறிப்பான சாதிப் பிரச்சினைகளை விடப் பேரளவிலான தமிழ் அரசியல் மூலம் சூத்திரக் கூட்டு மட்டுமே உருவாகியிருக்கிறது.
ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் தமிழ் அரசியலில் தனித்துவமான பார்வைகளை உருவாக்காமல் ஏறக்குறைய திராவிடக் கட்சிகளின் நீர்த்துப்போன தமிழ் வாதத்தின் அருகிலேயே தன்னை இக்கட்சி நிறுத்திக்கொண்டுவிட்டது. இவ்வாறு தமிழ் அரசியலின் பெயரால் சாதித் தமிழர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல் தானும் தலித் நிலைப்பாடுகளிலிருந்து விலகிப்போனது. இந்நிலையில்தான் வன்னியரசுவின் கட்டுரை தங்களைப் புறக்கணித்த தமிழ்த் தேசியவாதிகளை நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும், அதற்காக தலித் அடையாளத்தை பலியாக்க வேண்டாம் என்று வேண்டுகிறோம்.
இவ்விடத்தில் நேரு அமைச்சரவையிலிருந்து விலகிய அம்பேத்கரின் அறிக்கையிலிருந்து சில வரிகளை நினைவுபடுத்துவதோடு இதை முடிக்கலாம் : “என் சிறுவயது முதல் நான் பிறந்த தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பாதையில் என் கவனத்தை ஈர்க்க முனைந்த விஷயங்கள் இல்லை என்று கூறமுடியாது. என்னுடைய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்பட்டிருந்தேனென்றால், நான் விரும்பும் எந்த நிலையையும் என்னால் அடைந்திருக்கமுடியும். காங்கிரசுடன் இணைந்து பணியாற்றியிருந்தால் அந்தக் கட்சியின் உயர்ந்த பதவியைக் கூட அடைந்திருக்க முடியும். ஆனால் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டபடியால் ஒரு கொள்கையை நிறைவேற்றும் குறுகிய வேகத்தில் இருப்பதில் தவறில்லை என்று நம்புகிறேன். ஆனால் இங்கு தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை ஒன்றுமேயில்லாத பிரச்சினையாக நீர்த்துப் போயிருப்பதைக் கண்டு நான் எவ்வளவு வேதனையை அடைந்திருப்பேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்”.
இவ்விடத்தில் நேரு அமைச்சரவையிலிருந்து விலகிய அம்பேத்கரின் அறிக்கையிலிருந்து சில வரிகளை நினைவுபடுத்துவதோடு இதை முடிக்கலாம் : “என் சிறுவயது முதல் நான் பிறந்த தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பாதையில் என் கவனத்தை ஈர்க்க முனைந்த விஷயங்கள் இல்லை என்று கூறமுடியாது. என்னுடைய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்பட்டிருந்தேனென்றால், நான் விரும்பும் எந்த நிலையையும் என்னால் அடைந்திருக்கமுடியும். காங்கிரசுடன் இணைந்து பணியாற்றியிருந்தால் அந்தக் கட்சியின் உயர்ந்த பதவியைக் கூட அடைந்திருக்க முடியும். ஆனால் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டபடியால் ஒரு கொள்கையை நிறைவேற்றும் குறுகிய வேகத்தில் இருப்பதில் தவறில்லை என்று நம்புகிறேன். ஆனால் இங்கு தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை ஒன்றுமேயில்லாத பிரச்சினையாக நீர்த்துப் போயிருப்பதைக் கண்டு நான் எவ்வளவு வேதனையை அடைந்திருப்பேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்”. இதுதான் இந்த கட்டுரையில் பிடித்த ஒன்று, மற்றபடி அப்பட்டமாக தமிழ் தேசிய புழுகு மூடைக்ளுக்கும், நடரானனுக்கும் வக்காலத்து வாங்கும் கட்டுரை.
ReplyDelete