Saturday, 11 February 2012

தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும்தான் தலித் அடையாளமா? – 4

(வன்னியரசு பழ.நெடுமாறனுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை முன்வைத்து…)

- ஸ்டாலின் ராஜாங்கம்

வன்னியரசு

மேதகு பிரபாகரன் வழியா?  அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?  என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் அவர்களுக்கு பகிரங்கக் கடிதம் என்ற கட்டுரையொன்றை சனவரி 26 (2012) தேதியிட்டு இணையத்தில் காண நேர்ந்தது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மதிப்புமிகு நண்பர் வன்னியரசு அக்கட்டுரையை எழுதியிருக்கிறார்.  கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் என்ற விளிப்போடு எழுதப்பட்டுள்ளதன் மூலம் அக்கட்டுரையைக் ‘கட்சியின் கருத்தாக மாற்றியிருக்கிறார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தலித் அரசியல் காரணங்கள் அடிப்படையில் விமர்சிக்கும் அதே வேளையில் தேவையான இடங்களில் அக்கட்சியின் பங்களிப்பை, தேவையை எடுத்துவைக்கத் தயங்காதவனான நான் அதை அக்கட்சி கவனிக்கும், அங்கீகரிக்கும் என்ற எந்த பயன்பாட்டு நோக்கமும் இல்லாமல் செய்கிறேன்.  இதை என் தலித் செயற்பாடுகளில் ஒன்றாகக் கருதிவருகிறேன்.  அந்த வகையில் வன்னியரசுவின் நெடுமாறன் பற்றிய கட்டுரையிலுள்ள பிரச்சனைகளை விவாதிப்பது என்பொறுப்பு.

தமிழ்த் தேசிய அரசியலில் இக்கட்டான தருணங்களில் துணை செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் புறந்தள்ளும் பழ.நெடுமாறன் சாதி மனப்பான்மை கொண்ட அரசியல் புரோக்கர் நடராசனின் தலைமைக்கு வழிசெய்கிறார் என்கிறது இக்கட்டுரை. மொத்தத்தில் தாங்கள் தலித்தாக இருப்பதே இப்புறக்கணிப்பிற்குக் காரணம் என்பதாக முடிகிறது.

பழ.நெடுமாறன் சாதி எதிர்ப்பு அரசியலிலிருந்து விலகியவர் என்பது புதிய செய்தியல்ல.  தமிழகத்தின் பல்வேறு தமிழ்த் தேசியத் தலைவர்களையும் போல தலித் மேடைகளில் வாய்ப்பளிக்கப்பட்டபோது மட்டுமே தலித்துகள் பற்றிப் பேசியவர்.  அவருடையது முழுக்க தமிழ்த் தேசிய அரசியல்.  ஆனால் அவர் மீது இப்போது புதிதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம் இதுவரை இல்லாத ஒன்று இப்போதுதான் ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தாங்களே கண்டுபிடித்துவிட்டதைப் போலவும் பேசுவதுதான் புதிதாய் இருக்கிறது.  இக்கட்டுரை பேசும் குற்றசாட்டுகள் பொய்யானது என்பது நம் வாதமல்ல.  இதை இக்கட்சி இப்போது பேசுவது ஏன் என்பதும், இது தலித்துகள் மீதுள்ள அக்கறையினாலா என்பதும்தான் நாம் கேட்கும் கேள்வி.  சாதி ஒழிப்பை பிரதானமாகக் கொள்ளாத தமிழ் அமைப்புகளோடு மேடையைப் பகிர்ந்து கொள்ளும் இக்கட்சியை விமர்சித்தால் முட்டாள்கள், முண்டங்கள் என்று சாடிவிட்டு இப்போது அதே குற்றச்சாட்டை தாங்களே வரித்துக் கொண்டால் என்ன சொல்வது?  நெடுமாறனின் இப்புறக்கணிப்பில் வியப்பென்ன இருக்க முடியும்?  அவா; அவராகத்தான் இருக்கிறார்.  குற்றம் சாட்டுபவர்கள் யாராக இருக்கிறாh;கள் என்பதுதான் கேள்வி.  இக்கட்சி மேடைகளில் நெடுமாறன் தோன்றும்போது தமிழனாகச் சொல்லப்படுவதையும், அவரோ பிறரோ தங்களைக் கைவிட்டுவிட்டால் தலித் எதிர்ப்பாளராகக் காட்டுவதையும் தலித்துகள் நம்பவேண்டும் என்பதுதான் இக்கட்டுரையின் எதிர்பார்ப்பா?

இக்கட்சி பழ.நெடுமாறனோடு கூட்டாக இருந்தபோதும் அவரிடம் இதே அணுகுமுறைதான் இருந்தது.  ஆனால் அப்போதெல்லாம் பேசாமல் இருந்ததோடு அவர் போன்ற பலரின் சாதிமுகத்தை மறைத்துக் கொள்வதற்கான மேடைகளைத் தந்துகிடந்ததோடு இன்றைக்குத் தமிழ்த்தேசியம் போன்ற குறிப்பான அம்சம் சார்ந்து முரண்பாடு எழுமானால் தங்கள் கூட்டணியின் நிபந்தனையாகக் கொண்டிராத சாதிஒழிப்பு என்ற விடுதலை அடையாளத்தைக் கவசம்போல கையாளுவது அந்த அடையாளத்திற்குச் செய்யும் துரோகம் இல்லையா?  நெடுமாறன் காங்கிரஸில் இருந்தகாலம் தொடங்கி விழுப்புரம், உஞ்சனை, மேலவளவு போன்ற கலவரங்கள் நடந்தது. அப்போதெல்லாம் அவர் பேசியதில்லை என்பதை இக்கட்டுரை இப்போது சொல்வது ஏன்?

இக்காலத்திற்குப் பின்பும் அவரோடு ஓடி ஓடி மேடையை இக்கட்சி பகிர்ந்து கொண்டபோது இதையெல்லாம் சொல்லியதேயில்லை.  அவர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது தந்தபோதும், அதற்குப் பின்பும் விமர்சிக்காமல் கூடிக் குலாவிவிட்டு இப்போது கண்டிப்பது என்ன நியாயம்?  இவ்வாறு தங்களின் தற்கால அரசியல் லாபிக்காக சாதிஒழிப்பை உள்ளீடாகக் கொண்ட தலித் அடையாளத்தைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது.

இக்கட்சி தீவிரமாக தமிழ் அடையாளம் பேசியதே சாதி அடையாளத்தை மறைக்கத்தான். (சாதியை அழிப்பது வேறு, மறைப்பது வேறு.  அதேபோல தமிழ்த் தேசியம் என்பது வேறு, தமிழ் அடையாளம் என்பது வேறு.  ஆனால் இங்கே தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பேசப்படுவதெல்லாம் தமிழ் அடையாளம் மட்டுமே).  இத்தமிழ் அடையாள அரசியலில் சாதித் தமிழா;களால் புறக்கணிக்கப்படும்போது அத்தகைய இடத்தை இழந்துவிட்ட கோபத்தைதான் தலித் அடையாளத்தைச் சொல்லி எதிர் கொள்கிறார்கள்.

இன்றைய உலக / இந்திய அரசியல் நிலைமையில் இந்தியாவிலிருந்து கொண்டு, வரையறையை கணக்கில் கொள்ளாமல் உணர்ச்சியைக் கைக்கொண்டு ஈழஆதரவு பேசும் எந்தவொரு தேர்தல் சனநாயகக் கட்சிக்கும் நேரக்கூடிய விபத்தையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சந்தித்திருக்கிறது.  ஆனால் இதைச் சமரசம், சோரம் என்று விமர்சித்தார்கள்.  தேர்தல் சனநாயகத்தில் பல சாதிகளின் ஆதரவையும் பெறவேண்டுமானால் சாதிமுகத்தை மறைக்க வேண்டியுள்ளது.  பிறகட்சிகளை விட ஒடுக்கப்பட்ட கட்சிக்கு இதுவொரு மாபெரும் சவாலாகிவிடுகிறது.  அதற்காகத் திருமாவளவன் கண்டெடுத்தது அவரின் ஆரம்பகாலம் முதல் ஆர்வம்காட்டி வந்த தமிழ் அடையாளத்தைதான்.  ஒருவகையில் தமிழ் அரசியலில் தன்னை நிரூபிக்க வேண்டுமென்று ஈழஅரசியலை தீவிரமாக பேசி அந்நாடகத்தில் அக்கட்சியே மாட்டிக்கொண்டது.  இதைச் சாக்காக்கிக் கொண்டார்கள் சாதித் தமிழர்கள்.

தற்போது நெடுமாறன் உருவாக்கி வரும் முள்ளிவாய்க்கால் என்ற வரலாற்று நினைவிடம் உருவாக்கத்தில் இக்கட்சியினரையும், இக்கட்சி தற்போது நண்பர்களாகக் கருதும் பிற தமிழ்த்தேசியர்களையும் கருணாநிதியினூடனான நெருக்கம் கருதி புறக்கணித்துவிட்டதாகத் தெரிகிறது.  அந்த வரலாற்று இழப்பைக் கருதிய கோபத்தில் தான் இக்கட்டுரை எழுதப்பட்டதாகத் தெரிகிறது.  இவர்களைச் சேர்க்காமல் ம.நடராசன் சேர்க்கப்படுவதால்தான் நடராசன்கூட இக்கட்டுரையில் விமர்சிக்கப்படுகிறார்.  உடனே நடராசனின் சாதிவெறி, வேலுநாச்சியார், புலித்தேவன் போன்ற சுயசாதிபிம்பங்களின் ஆராதனையெல்லாம் தோண்டப்படுகிறது.  ஆனால் நடராசனோடு இதேபோன்று தஞ்சாவூர் பொங்கல் விழாவில் திருமாவளவன் மேடை ஏறியவர்தான்.  அப்போதும் நடராசன் இதே போலத்தான் இருந்தார்.  இப்போதுகூட இந்த நினைவிடத்திற்காக நடராசனோடு இவர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தால் நடராசனின் சாதிவெறி பேசப்பட்டிருக்காது.

எனில் இதுவரை தமிழ் அரசியல் என்ற பெயரால் சாதியை மறைப்பதற்கும், அதை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்கும் துணை நின்றார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இனிமேலாவது அத்தகைய விழிப்புணர்வோடு இக்கட்சி இயங்குமா?  என்றால் அதற்கான அறிகுறியே இக்கட்டுரையிலோ கட்சியிலோ தென்படவில்லை.  மீண்டும் நெடுமாறனோடு அதே பழைய பாணியிலேயே இணைந்து நிற்க வாய்ப்பு வந்தால் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இன்றைக்கு இக்கட்டுரை மூலம் பழ.நெடுமாறன் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.  சீமான், சோழ நம்பியார், கலைக்கோட்டுதயம், ‘புரட்சிநடிகர் மன்சூரலிகான் இன்னபிற நபா;களுக்கும் இக்கட்சி மேடையை தந்தது.  அவர்களில் இப்போது யாருமில்லை.  ஆனால் இன்னமும் இக்கட்சியும் இந்த கட்டுரையும் ‘பிறருக்காகவே வக்காலத்து வாங்குகிறது.  இக்கட்டுரையில் பழ.நெடுமாறனை எதிர்ப்பதற்குதான் தலித்துகளின் பெயரே தவிர அது தலித் அரசியலுக்காக அல்ல.
  
இக்கட்டுரையைச் சரியாக வாசித்து பார்த்தால் கருணாநிதி, கி.வீரமணி, ராமதாஸ், சுபவீரபாண்டியன் (அண்ணன் அறிவுமதியைக் காணவில்லையே!) போன்றவர்களுக்காகவே நெடுமாறனைச் சாடுவதைப் பார்க்கலாம்.  கருணாநிதி உள்ளிட்டவர்கள் எப்போது தலித்துகளைச் சேர்த்துப் பேசுவார்கள், எப்போது மௌனமாவார்கள் என்பது அறியாததல்ல.  தலித் இயக்கங்களின் எழுச்சியின் போது நடந்த சூத்திரசாதி வன்முறைகளுக்கு எதிராக கி.வீரமணி ஒரு அறிக்கை, ஒரு போராட்டம் இப்படி எதையாவது அசைத்ததுண்டா?

தலித்துகள் திராவிட இயக்கத்தை விமர்சித்தால் பார்ப்பனக் கைக்கூலி என்று கூறும் சுபவீரபாண்டியன் தற்போது தலித்துகள் இவர்களுக்காக எழுதும்போது மட்டும் மகிழ்வார்.  தலித் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்களோ அப்படி இருக்கிறது இக்கட்சி.  தலித்துகளையும் சேர்த்துப் பேசித் தங்களுக்கு மட்டுமே லாபம் பார்த்ததைத் தவிர இந்நபர்கள் செய்தது எதுவுமில்லை.

இக்கட்சியின் ஆரம்பகாலம் முதலாக பல்வேறு அரசியல் பார்வைகளில் ஒன்றாயிருந்த ஈழ ஆதரவையே பிரதானத் திட்டமாக்கிக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தலித் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிகொண்டது அல்லது தமிழ் அரசியலையும் தலித் அரசியலையும் முரண்பாடில்லாத வகையில் இணைத்துச் செல்லமுடியாத நிலை.  ஆனால் நாங்களும் பேசியிருக்கிறோம் என்று அடையாளத்திற்காக அழுத்தம் இல்லாத வகையில் ஆங்காங்கு சிலவற்றைப் பேசியிருக்கிறார்கள்.
  
தமிழ் வாழ்வின் சகல நெருக்கடிகளையும் கணக்கில் கொண்டு சமகால மாற்றங்களுக்கேற்ப அரசியலை வடிவமைக்காமல் வழக்கமான உணர்ச்சி அரசியலான ஈழ ஆதரவை மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலாகக் காட்டியும், தமிழ் கொன்று தன்னலம் பாடும் கருணாநிதியின் புகழ் பேசியும் இயங்கிய கடந்த ஆண்டுகளில் தலித் பிரச்சினைகள் தீர உடனடியாகவோ, நீண்டகால நோக்கிலோ தந்த அழுத்தங்கள் என்ன? நடத்திய போராட்டங்கள் எவை?  இவற்றால் தலித்துகளுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க நலன்கள் என்று எதையாவது சொல்ல முடியுமா?
  
தேர்தல் பாதையும் கூட்டணி அரசியலும் கட்சிகளிடம் சமரசத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே.  ஆனால் சமரசத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளைச் சமூகத்தின் பிரதான நலன்களோடு இணைப்பதே முக்கியம்.  அரசுப் பணியிடங்களில் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் எல்லா ஆட்சியிலும் நிரப்பப்படாமலேயே உள்ளது.  கல்விச் சலுகை, பஞ்சமர் நிலம் போன்று பெறவேண்டிய சட்டரீதியான சலுகைகள் மீது கூட எந்த அழுத்தமும் இருந்ததில்லை.  SC/ST சிறப்பு உட்கூறு நிதியை கருணாநிதி இலவச டி.வி.க்காக செலவிட்டார் என்பதற்கான ஆவணம் வெளியிடப்பட்டும் கூட இக்கட்சி மௌனம் காத்தது. 
இத்தகைய சமரசத்திற்குப் பின்பு கருணாநிதி கூட்டணியில் போட்டியிட்டு சட்டமன்ற பிரதிநிதித்துவத்தையும் இக்கட்சி இழந்திருக்கிறது.  ஒடுக்கப்பட்டோரின் இயக்கம் என்ற வகையில் அதன் ஐந்தாண்டுகால உழைப்பு வீணாவது எளிய விஷயமா?   தமிழ், ஈழம் என்ற பெயரில் எத்தனை கைது, சிறை, பொருளிழப்பு, ஆர்ப்பாட்டம், மாநாடு?  சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் திரண்ட வறிய தலித் சாதி இளைஞர்களைக் கொண்டு தலித் பிரச்சினைகளுக்காக இத்தகைய தொடர் அழுத்தம் இருந்ததுண்டா?
  
இதனால் தலித் அரசியலை பிற அரசியலோடு இணைப்பதை எதிர்க்கிறோம் என்று பொருளல்ல.  அது போன்ற பார்வை வேண்டும் என்பதே உண்மை.  ஆனால் அத்தகைய இணைவு திரண்டிருப்போரின் பிரதான நலனை பலியாக்காதவாறு அமைய வேண்டும்.  ஆனால் இந்தத் தமிழ் அரசியல் பிரதான நலனை பலியாக்கியிருக்கிறது.  குறிப்பான சாதிப் பிரச்சினைகளை விடப் பேரளவிலான தமிழ் அரசியல் மூலம் சூத்திரக் கூட்டு மட்டுமே உருவாகியிருக்கிறது.

ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் தமிழ் அரசியலில் தனித்துவமான பார்வைகளை உருவாக்காமல் ஏறக்குறைய திராவிடக் கட்சிகளின் நீர்த்துப்போன தமிழ் வாதத்தின் அருகிலேயே தன்னை இக்கட்சி நிறுத்திக்கொண்டுவிட்டது.  இவ்வாறு தமிழ் அரசியலின் பெயரால் சாதித் தமிழர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல் தானும் தலித் நிலைப்பாடுகளிலிருந்து விலகிப்போனது.  இந்நிலையில்தான் வன்னியரசுவின் கட்டுரை தங்களைப் புறக்கணித்த தமிழ்த் தேசியவாதிகளை நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும், அதற்காக தலித் அடையாளத்தை பலியாக்க வேண்டாம் என்று வேண்டுகிறோம்.

இவ்விடத்தில் நேரு அமைச்சரவையிலிருந்து விலகிய அம்பேத்கரின் அறிக்கையிலிருந்து சில வரிகளை நினைவுபடுத்துவதோடு இதை முடிக்கலாம் : “என் சிறுவயது முதல் நான் பிறந்த தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்.  என்னுடைய பாதையில் என் கவனத்தை ஈர்க்க முனைந்த விஷயங்கள் இல்லை என்று கூறமுடியாது.  என்னுடைய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்பட்டிருந்தேனென்றால், நான் விரும்பும் எந்த நிலையையும் என்னால் அடைந்திருக்கமுடியும்.  காங்கிரசுடன் இணைந்து பணியாற்றியிருந்தால் அந்தக் கட்சியின் உயர்ந்த பதவியைக் கூட அடைந்திருக்க முடியும்.  ஆனால் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டபடியால் ஒரு கொள்கையை நிறைவேற்றும் குறுகிய வேகத்தில் இருப்பதில் தவறில்லை என்று நம்புகிறேன்.  ஆனால் இங்கு தாழ்த்தப்பட்டோர் பிரச்சினை ஒன்றுமேயில்லாத பிரச்சினையாக நீர்த்துப் போயிருப்பதைக் கண்டு நான் எவ்வளவு வேதனையை அடைந்திருப்பேன் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

தருணத்திற்காகவும் தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும் தான் தலித் அடையாளமா? – 3

(ரவிக்குமாரின் தலித் தொடர்பான விமர்சனக் குறிப்பொன்றையும்,
மீனா கந்தசாமி குறித்த அவரது மௌனத்தையும் முன்வைத்து…)


- ஸ்டாலின் ராஜாங்கம்


ரவிக்குமார்
எழுத்தாளர் ரவிக்குமார் “தமிழ் தலித் இலக்கியத்துக்கு புதுச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் கட்டியிருக்கும் கல்லறை என்ற விமர்சனக் குறிப்பொன்றைத் தன்னுடைய வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் (nirapprigai.com, 29.09.2011). அதாவது ஒன்பது தமிழ் தலித் எழுத்தாளர்களின் சுய அனுபவம் பற்றிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பை 2004-ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் இன்ஸ்டியூட் வெளியிட்டது.  ஏழாண்டுகள் கழித்து (2011) அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை Tamil Dalit Literature : My Own Experience  என்ற தலைப்பில் அதே நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொகுப்பாளர்களான டேவிட் பக், கண்ணன்.எம் ஆகிய இருவரும் எழுதியுள்ள முன்னுரைதான் ரவிக்குமாரின் இந்த விமர்சனத்திற்குக் காரணமாகியுள்ளது.

தமிழில் தலித் இலக்கியம் தேங்கிப் போய்விட்டதாக அறிவிக்கும் இம்முன்னுரை இத்தொகுப்பு தமிழில் 2004-இல் வெளிவந்தபோது தலித் இலக்கியம் பற்றி இருந்த நம்பிக்கை கூட தற்போது இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறது. இவ்வாறு நம்பிக்கை தராத ஒன்றை ஏன் தொகுக்க வேண்டும்?  அதை ஆங்கில மொழியில் ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி யாருக்கும் எழும்.  உலக அளவில் தமிழ் தலித் இலக்கியம் பற்றி தரங்குறைந்த கருத்து உருவாகவே இது வழிவகுக்கும்.  அதிலும் இத்தொகுப்பிலுள்ள இரண்டொரு படைப்பாளிகளைத் தவிர மற்றவர்கள் நேரடியான படைப்பிலக்கியத்தோடு தொடர்பில்லாதவர்கள் என்பதோடு முக்கியமான ஆக்கங்களைத் தந்தவர்களாகவும் இல்லாத நிலையில், தலித் இலக்கியம் பற்றிய ஆங்கில உலகத்திற்கான இந்த அறிமுகம் தலித் பற்றிய அவநம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்யும்.  இத்தகைய ‘குறைகளோடு ஆங்கிலத்திற்கு இத்தொகுப்பைக் கொண்டு செல்ல தலித்தியத்தை வைத்துப் போடப்பட்ட ப்ராஜெக்ட்தான் காரணமாக இருக்க முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாததல்ல.

இம்முன்னுரை மீதான பிரச்சினைப்பாடுகளை கண்டுகொண்டு விமர்சனத்தினை முன்வைத்திருப்பது ரவிக்குமாரின் வலைத்தளப் பதிவு மட்டும்தான். பால் ஸெலான், ரால் ஸீரிடா, பேட்ரிக் சமோஸீ போன்று தலித் படைப்பாளிகளிலிருந்து யாரும் உருவாக முடியவில்லை என்ற தொகுப்பாளர்களின் ‘கவலை’யை அவ்வாறான படைப்பாளிகள் தமிழ் தலித் அல்லாதவரிடமிருந்து உருவாகாதது ஏனென்றும், இத்தொகுப்பாளாகளாவது அத்தகைய ஒரு வரியைக் கூட எழுதாதது ஏனென்றும் கேட்டு ரவிக்குமார் எதிர்கொண்டிருக்கிறார். அந்தவகையில் ரவிக்குமாரின் இந்த விமர்சனம் முக்கியமானதே.

மேலும் தலித் அடையாளத்தின் சார்பாகப் பேசும் இந்த விமர்சனத்தில் தமிழ் தலித் இலக்கியம் தமிழுக்கும் வெளியே கிளர்ந்தெழுந்து வருவதாக ரவிக்குமார் கூறுகிறார்.  ஆனால் அவரின் தமிழ் தலித் இலக்கியம் பற்றிய அசலான பார்வை இதுதானா?  என்ற கேள்விதான் இந்த விமர்சனத்தினை ஐயத்திற்கு உரியதாக்குகிறது.

உண்மையில் இத் தொகுப்பின் முன்னுரை தலித் இலக்கியம் பற்றிக் கூறும் கருத்துகளோடு ரவிக்குமாரின் கருத்து பெரிதும் முரண்படுவதில்லை. அவருக்குத் தமிழ் தலித் இலக்கியம் பற்றி மரியாதையேதும் இல்லை.  ஸ்டீரியோ டைப் போல, யாரும் சரியில்லை / எழுதுவதில்லை, படைப்பூக்கம் இல்லை என்பதையே நேர்ப் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆனால் இப்போது பிரெஞ்சு இன்ஸ்டியூட்டை எதிர்கொள்ள வேண்டுமென்னும்போது தலித் இலக்கியம் சிறப்பானது என்று மாறிப் பேசுகிறார்.  எனில் தலித் இலக்கியத்தைக் காப்பாற்றும் நோக்கமென்று இதைக் கருதலாமா?  அதுதான் இல்லை. இம்முன்னுரையில் ரவிக்குமாரை மனதில் வைத்து எழுதப்பட்ட வரிகளே இதற்குக் காரணம்.  அவரே தன் விமர்சனக் குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ள “தலித் எழுத்தாளர்கள் சந்தைகளின் விதிகளால் ஆளப்படுகிறார்கள்;; தமது பத்திரிகைகளில் வலைப்பூக்களில் புகழையும் பெருமையையும் இடைவிடாமல் விரட்டிக் கொண்டிருப்பவர்கள் என்று பேசும் வரிகளே இதற்குக் காரணம்.  இதை எதிர்கொள்வதற்காகவே தலித் இலக்கியத்திற்கு ஆதரவாகக் குரலெப்பி அவர்களை ரவிக்குமார் தாக்குகிறார்.  அதாவது அசலான கருத்தாக இல்லாவிட்டாலும் எதிரிகளை எதிர்கொள்ள தலித் அடையாளத்தைக் கையாளும் உத்திதான் இது. அந்தவகையில் இந்த விமர்சனம் பாவனையானது.

தலித் இலக்கியம் பற்றிய அக்கறை இருக்குமானால், அது எழுச்சி பெற்றிருப்பது உண்மையானால் தான் செயற்படும் தளங்களில் அதைப்பற்றிய பேச்சே இல்லாமல் இருப்பது ஏன்?  ரவிக்குமார் நடத்தும் மணற்கேணி இதழில் இதற்கான இடம் என்ன? தலித் இலக்கியம் இயங்குவது உண்மையானால் அவர் ஏற்கனவே நடத்திய தலித், போதி என்ற தலித் அடையாளம் பூண்ட பெயர்களிலான இதழ்களை நிறுத்திவிட்டு மணற்கேணி என்ற தலித் அடையாளம் இல்லாத ‘பொது இலக்கிய பெயரில் இதழ் ஏன்?  அதில் தலித் அடையாளம் பற்றிய மௌனம் ஏன்?

அவர் அரசியலில் அதிகாரத்திற்குத் துதிபாடிக்கொண்டிருந்த காலத்தில் இந்தக் களங்களில் முழுமையாக ஈடுபடமுடியாததால்தான் தலித் அடையாளத்திலிருந்து விலகியதை மறைப்பதற்காகத் தலித் அடையாளம் பூணாத பொதுவான பேச்சுகளை அவர் பேசத் தொடங்கிக் கொண்டார்.  தான் அம்பலமாவதை மறைப்பதற்கான பாசாங்கு இது.  தன்னை விமர்சித்தால் மட்டுமே அதனை எதிர்கொள்ள தலித் அடையாளம், மற்றைய காலங்களில் தானே அந்த அடையாளத்தைக் கிண்டலடிப்பது / மௌனமாக்குவது இவர் பாணி.  இதற்கு உதாரணமாக மீனா கந்தசாமியை பற்றிய தகவலைக் கூறலாம்.

தலித் அடையாளத்திற்கு ஆங்கில உலகில் கிடைக்கும் மார்க்கெட் வேல்யூ கருதி, தன்னைத் தலித் என்றும், தலித் போராளி என்றும் கூறி அதன் லாபங்களைப் பெற்று வருகிறார் மீனா.  அவர் தலித்தாக இல்லாததோ, தலித் அல்லாத ஒருவர் தலித் பற்றிப் பேசுவதோ இங்கு பிரச்சினை இல்லை.  மாறாக இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொள்வதுதான் பிரச்சினை.  மீனாவின் இப்போலித்தனம் பற்றி ரவிக்குமாருக்குக் தெரியாததல்ல.  மீனா தலித் அடையாளத்தால் லாபம் அடைவது மட்டுமல்ல தன்னை விமர்சிப்பவர்களை நோக்கித் திருமாவளவன் பெயரைக் கூறி  மிரட்டுவதையும் தொடர் போக்காக கொண்டுள்ளார்.  (இதைப்பற்றி 30.09.2011 தேதியிட்டு தமிழச்சியின் கட்டுரையொன்று இணையதளத்தில் வெளியாகி மீனா அம்பலப்பட்டமை பலருக்கும் தெரியும்).

மேலும் தலித் இலக்கியம் தமிழுக்கு அப்பால் கிளர்ந்து வருவதாக ரவிக்குமார் அந்த விமர்சனத்தில் கூறுவது பெங்குவின், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் போன்ற ஆங்கில பதிப்பங்களின் அண்மைய தமிழ் தலித் இலக்கிய தொகுப்புகளைப் பற்றிதான்.  இதைச் சொல்வது கூட இத்தொகுப்புகளின் தொகுப்பாளராக இவர் இடம்பெற்றிருப்பதால்தான்.  அவரும் எஸ்.ஆனந்தும் இணைந்து ஆங்கிலத்தில் நடத்தும் நவயானா பதிப்பகத்தையும் கூடவே சொல்லிக் கொள்கிறார்.  இவையெல்லாம் முக்கியமான முயற்சிகள்தாம். 


ஆனால் தமிழ் தலித் இலக்கியம் பற்றி ஆங்கில உலகில் தப்பான கருத்து உருவாகக் காரணமென பிரெஞ்சு இன்ஸ்டியூட் தொகுப்பை விமர்சிக்கும் அதே ஆங்கில உலகில் தலித் அடையாளத்தை சுரண்டிப் பிழைக்கும் மீனாவை நவயானா பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியிடவும் (MS Militancy) அவரோடு சேர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு நூல் வெளியிடவும் (Waking is Another Dream) செய்வது என்னவகை நிலைப்பாடு?  தலித் அடையாளம் பற்றி ஒரேவிதமான - நேர்மையான நிலைப்பாடு இருக்குமானால் மீனாவின் சுரண்டலுக்கு எதிராக விமர்சனச் சாட்டையை சொடுக்கியிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு இணைந்து செயற்பட்டிருக்கவும் கூடாது.  முன்பு வே.மதிமாறன் தலித் முரசு இதழில் தலித் பற்றிய கட்டுரைகளை எழுதி வந்தபோது பலரும் அவரை தலித் என்றே கருதியிருந்தனர்.  ஆனால் அவரை தலித் அல்லாதவர் தலித் விமர்சன முறைக்கும் தொடர்பில்லாத தி.க.காரர் என்று எழுதி முடக்கிய ரவிக்குமார் அதைவிட மாபெரும் புரட்டில் ஈடுபட்ட மீனா கந்தசாமிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்?  இங்குதான் அவர் தலித் அடையாளத்தை அதற்குரிய சமன்பாடுகளோடு கையாளுவதை விடுத்து தன்னுடைய நலனை மட்டுமே வைத்து வாளைப் போலச் சுழற்றுவதும் தலித் அடையாளத்தின் பெயரிலான சுரண்டல் என்கிறோம்.

(தொடரும்)

Friday, 10 February 2012

தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும்தான் தலித் அடையாளமா? – 2

(“பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டுவிழாவை முன்வைத்து)


-  ஸ்டாலின் ராஜாங்கம்


கடந்த சனவரி 26-ந் தேதி மதுரையில் சுந்தர வந்தியத்தேவன் எழுதிய “பிறமலை கள்ளர் வாழ்வும் வரலாறும்” என்ற நூல் வெளியீட்டுவிழா நடந்தது.  சாதிகளின் வரலாறு திரட்டப்படவேண்டுமென்ற எண்ணமும், இந்நூலாசிரியரின் உழைப்பு பற்றிய தகவல்களும் இவ்விழாவை நோக்கி என்னை உந்தியது.  என் நம்பிக்கைக்குப் பங்கம் செய்யாத வகையில் அக்கூட்டத்தின் பேச்சுகளும் அமைந்திருந்தன.  அந்த வகையில் என்னுடைய இப்பதிவு இந்நூலை பற்றியதல்ல.  இந்நூல் சார்ந்து விழாவிலும் விழாவிற்கு வெளியிலும் கேட்ட தகவல்கள் பற்றியதே.

இந்நூல் வெளியீட்டுவிழாவிற்கு வேறு வகையிலான முக்கியத்துமொன்று கிடைத்திருந்தது.  அண்மையில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலுக்கான ஆவணங்களைத் திரட்டிய பணியில் வந்தியத்தேவனின் பங்களிப்பு இருந்தும் நாவலாசிரியரால் எங்கும் சொல்லப்படவில்லையென்றும், இந்நிலையில் நீண்ட நாட்களாக ஆவணச் சேகரிப்பிலும் எழுத்துப் பணியிலும் இருந்த இந்நூல் விரைந்து முடிக்கப்பட்டு வெளியீடு நடப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப நாவலுக்கான ஆவணங்களை நூலாக வெளியிடப் போவதாக சு.வெங்கடேசன் அண்மைப் பேட்டியொன்றில் கூறியிருந்தார்.  இத்தகைய பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்விழா அமைந்திருந்தது.  சகபங்களிப்புகளைச் சொல்லும் வகையில் “மக்கள் வரலாற்றை மக்களிடமே வழங்கும் விழாஎன்ற பதாகை, மேடையில் அத்தகையோரைக் கௌரவித்தல், நாவலை 1000 பக்க அபத்தம் என்று முன்பு விமர்சித்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனின் பங்கெடுப்பு, சு.வெங்கடேசன் மீது ஈகோ கொண்டிருக்கும் சில முன்னாள், இன்னாள் தமுஎகசவினரின் துருதுரு பங்களிப்பு ஆகியவற்றை இவ்வாறு பார்க்க முடிந்தது.

முதலில் இக்கூட்டம் வழக்கமான நூல் வெளியீட்டு விழாவல்ல.  மதுரையில் படித்த கள்ளர் சாதிப் பிரமுகர்கள், கிராமங்களிலிருந்து கொணரப்பட்ட கள்ளர் வகுப்பு மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் வெளியீட்டு விழாவுக்கெனக் கொண்டுவரப்பட்டிருந்த இந்நூலின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.  இவ்வாறு சாதித் திரட்சி இருந்தும் விழா மேடையில் சாதிப் பெருமையைப் பேசாமல் தவிர்க்கும் ஓர்மையைக் கொண்டிருந்தனர்.  ஏறக்குறைய பிரமலைக் கள்ளர் பற்றிய ‘வரலாறு’, தெய்வங்கள், அரசியல், வழக்காறுகள் என்று நூலில் தகவல்கள் இடம்பெற்று இருப்பதாகத் தெரிகிறது.  ஒரு சாதியின் வரலாறு என்பதைத்; தாண்டி சாதிப்பெருமிதம் பேசும் நூலாக கருதப்பட்டு விடாத வகையில் தமிழ்நாட்டில் பிரபலமான இரு முற்போக்கு அடையாளங்களுக்கு அங்கு அழுத்தம் தரப்பட்டன.  அவற்றில் ஒன்று கம்யூனிசம், இரண்டு தலித் அடையாளம்.  எனில் இவ்விரண்டு அடையாளங்களையும் இந்நூல் தான் பேசும் வரலாற்றினுள் ஏற்றியிருக்கிறதா?

விழாவில் நூலை மதிப்பிட்டுப் பேசிய நவமணி, புவனேஸ்வரன், நூலாசிரியர் ஆகியோர் தலித்துகள் பற்றிய தகவல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டனர்.  நவமணி கடந்த கால அரசியல் ரீதியான உறவு சிலவற்றைக் குறிப்பிட, புவனேசும், நூலாசிரியரும் கள்ளர்களின் கோயிலுக்குப் பறையர்கள் பூசாரிகளாக இருப்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டனர். இதனால் அவர்களோடு ‘நல்லுறவு பேணப்படுவதை வரலாற்றுத் தகவலாகச் சிலாகித்தனர்.

இதே போன்று வெளியீட்டு விழாவன்றே ஆனந்தவிகடன் இதழில் இந்நூலைப்பற்றி நூலாசிரியரின் பேட்டி வெளியாகியிருந்தது (எப்படித்தான் இதெல்லாம் சாத்தியமாகிறதோ?) அதில் ஊனமுற்ற தன்னால் எழுதமுடியாத போது கொச்சம்மாள் என்ற தலித் பெண் எழுதித் தந்ததாகக் கூறியிருக்கிறார்.  இத்தகைய சித்தரிப்பைத் தருவதன் மூலம் இக்குறிப்பிட்ட கள்ளர் சாதி, தலித் சாதிகளோடு இணக்கமானது என்றும், கள்ளர்மீதான சாதிவெறிப் பிம்பம் இல்லாமலாக்கப்பட்டு அதுவும் ஒடுக்கப்பட்ட சாதியே என்ற பொருளையும் தர முயலுகிறார்கள்.

ஏறக்குறைய கள்ளர் சாதியை ஒடுக்கப்பட்ட சாதியாகக் காட்ட பல தளங்களில் எடுத்து வரும் முயற்சிக்கு இத்தோற்றம் தோதானது.  அவர்கள் ஒடுக்கப்பட்டதையோ, இணக்கமாகி விடுவதையோ மறுப்பது நம் நோக்கமாய் இருக்கப் போவதில்லை.  ஆனால் உண்மை அதுதானா?  பிரமலைக் கள்ளர்கள் வறிய சாதிதான்.  அதனாலேயே அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? ஒரு சாதியின் கடந்த காலம் மட்டுமே வரலாறாகி விடுமா?  அச்சாதியின் நிகழ்கால வளர்ச்சி அதன் வரலாறாகாதா?  இதற்கெல்லாம் பதில் இல்லை என்றால் பிரமலைக் கள்ளர் பற்றிய அண்மைக் காலத்தைய இத்தகைய சித்தரிப்புகள் எல்லாம் ஒரு பக்கச் சார்பானது: சாதிச் சார்பானது.

அரசில் காவல் பணிபுரிந்ததாகக் கூறப்படும் இவ்வகுப்பினரிடமிருந்து காலனியம் அப்பணியைப் பறித்தபோது கள்ளர்களாகப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது.  அதற்கடுத்ததாக காலனியத்தால் குற்றப் பரம்பரை தடைச் சட்டத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டவர்களாக இருந்தமை நாமறிந்தது.  இந்நிலையில் இது காலனியத்தின் ஒடுக்குமுறை. இதுவும் ஒடுக்குமுறைதான். ஆனால் சமூக அமைப்பின் கொடும்விதியினால் நிர்வகிக்கப்படும் சாதிஒடுக்குமுறையும் இதுவும் ஒன்றல்ல. இந்நிலையில் தலித்துகளோடு இணைந்து பேசி அதற்கிணையான ஒடுக்குமுறை போலத் தோற்றம் காட்டுவது சரியல்ல. அதனால் தான் காலனிய ஒடுக்குமுறையிலிருந்து நீங்கிவிட்டாலும் சாதி ஒடுக்குமுறையைக் கையாளுபவர்களாக தற்போது இவர்களே இருக்கின்றனர். எனவே சாதிமுறை எல்லாவற்றைக் காட்டிலும் கொடியது.

காலனியத்தால் ஒடுக்கப்பட்டவர்களான இச்சாதியினரின் இன்றைய நிலை என்ன?  தலித்துகளை சாதியின் பலத்தால் எதிர்கொள்ளும் இச்சாதியினரின் சமகால  ஆகிருதி என்ன?  சமூக அதிகாரமும் அரசியல் அதிகாரமும் இங்கு இணைந்துள்ளது.  நகரம் என்ற அளவில் மதுரையில் மட்டும் அரசியல் அதிகாரம் முதல் அரசாங்கத்தின் சிறுசிறு ஏலங்கள்வரை ஏறக்குறைய 95 சதவீதம் இச்சாதியினரால் நிர்வகிக்கப்படுகின்றன.  அதேபோன்று ‘ஒடுக்கப்பட்டுள்ள பிறசாதிகளின் முன்னேற்றம் என்ன? பிறசாதிகள் வன்முறையாக ஒதுக்கப்படுகின்றனர். இப்போக்குகளுக்கும் சமூகங்களின் சீரான வளர்ச்சிக்கும் தொடர்பு ஏதுமில்லை.  உள்ளுர் வட்டி தொடங்கி கோடம்பாக்கம் பைனான்ஸ் வரை செயற்படும் பொருளாதாரத்தின் உள்ளீடு எங்கிருக்கிறது?  இதுபோன்ற இன்றைய நிலைப்பற்றி ஆராயாமல் கடந்தகால ஒடுக்குமுறையைப் பற்றி மட்டுமே திரும்ப பேசி ஒற்றைக் கருத்தாக மாற்றுவதால் சமகாலத்தில் அவர்கள் தலித்துகளை ஒடுக்குவது மறைக்கப்படுகிறது.  இவை தற்கால அறிவுலகில் எழுந்துள்ள ஆபத்தான போக்கு.

பறையர்கள் பூசாரிகளாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. பறையர்களுக்கும் கள்ளர்களுக்கும் உள்ள உறவு நெருக்கமானது என்பதும் உண்மைதான்.  ஆனால் அது சாதிய வரையறையை மறந்ததாக இல்லை.  ஒரு ஆன்மீக அதிகாரம் என்பதைத் தாண்டி பூசாரியாக இருப்பதற்கு எந்த அர்த்தமும் அங்கு இல்லை.  பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி மட்டுமல்ல. இன்னும் உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட திருமாவளவன் நடத்த முடிந்ததில்லை.  முன்பு 1999 நாடாளுமன்றத் தேர்தலில் மூப்பனாரோடு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கல்வீசி தாக்கப்பட்டார்.  பாப்பாப்பட்டி வந்தபோது அதிகாரிகள் முன்னிலையிலேயே ஊருக்குள் நுழைய முடியவில்லை.  டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் இதே நிலைதான்.  சாதிப் பிரச்சினைக்கு என்றில்லை.  முல்லைப் பெரியாறு போன்ற ‘பொது’ப் பிரச்சினைக்காகவது அந்த ஊhpல் ஒரு கூட்டத்தை தலித் அமைப்புகளால்  நடத்திவிட முடியுமா?  இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரியாறு அணை என்ற ‘பொது’ப் பிரச்சினைக்காக பிரச்சாரம் சென்ற போதே பெரியகுளம் அருகில் திருமாவளவன் பேனர் கிழிக்கப்பட்டது.  இதையெல்லாம் எந்த வரலாற்றில் சேர்ப்பது?  ஒருமாதிரி தோதாக இருப்பதை மட்டும் வரலாறாகப் பேசிவிட்டு, பிரச்சினைகளைப் பேசாமல் விடுவதுதான் வரலாறா?

நூலாசிரியருக்கு தலித் பெண் உதவியதைக் குறிப்பிடுவதன் மூலம் சொல்லவரும் விசயம் என்ன?  அப்பெண் தலித் ஒடுக்குமுறைக்குத் தீர்வாக இந்நூல்  அமையும் என்ற நோக்கத்தில் எழுதினாரா?  அப்பெண்ணிற்குச் சாதி சமன்பாடுகள் சார்ந்துள்ள புhpதல் என்ன?  பழகியவர், தொpந்தவர் என்று பலரும் செய்த உதவியைப் போல அப்பெண்ணும் உதவியிருப்பார் என்பதைத் தாண்டி அப்பெண்ணின் உதவியை மட்டும் சொல்வதன் மூலம் ஏற்படுத்த விரும்பும் அர்த்தம் என்ன?  இவையெல்லாமே இந்நூல் மீது ஏற்படுத்த விரும்பும் முற்போக்கு அடையாளத்திற்காகப் பூணப்படும் முகமூடியே.  பலத்தை மட்டுமே பேசுவது வரலாறல்ல.  வெளிப்படையாக சாதியைப் பேசும் நூல்களை காட்டிலும் இது போன்ற நூல்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும்.  உண்மையில் இதுபோன்ற சாதிய பிம்பஎழுச்சி என்பதெல்லாம் கடந்த 20 ஆண்டுகாலமாகச் சமூகத்தளத்தில் எழுந்த தலித் அடையாளத்திற்கான மறைமுக எதிர்வினைகளே.

இந்தக் கூட்டத்தில் மேடையில் மட்டுமல்ல பார்வையாளர் வரிசையிலும் மதுரையின் பல்வேறு முற்போக்குச் சக்திகளும் காணப்பட்டனர்.  முதல்வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நிர்வாகிகள் பலர்  அமர்ந்திருந்தனர்.  பேச்சாளர்களில் இருவர் தம் பேச்சினூடே  குற்றப் பரம்பரை தடைச்சட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகளும் போராடினர் என்று சொன்னாh;கள்.  ஜார்ஜ் ஜோசப், பி.ராமமூர்த்தி போன்றோர் வெவ்வேறு தருணங்களில் இச்சட்டத்திற்கு எதிராக செயற்பட்டிருப்பினும் சாதிநோக்கம் காரணமாக முத்துராமலிங்கத் தேவாpன் பிம்பம் மட்டுமே ஆராதிக்கப்பட்டு வரும் சூழலில் இப்பேச்சுக்காக கம்யூனிஸ்டுகள் மகிழ்ந்திருப்பர். (அப்பாடா நாமும் அங்கீகாpக்கப் பட்டுவிட்டோம்). என்னதான் இருந்தாலும் நூலாசிரியர் ஒரு கம்யூனிஸ்ட் இல்லையா!  அதற்காக அவர் தன் பேச்சை ஆரம்பிக்கும் போது முத்துராமலிங்கத் தேவரை கம்யூனிஸ்ட் என்று சொல்லியதையும் நாம் கேட்க வேண்டியிருந்தது.  அதாவது பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் முத்துராமலிங்கத்தேவருக்கு இந்த பெருமை.  (சாதி கம்யூனிசம் ஆனதா? கம்யூனிசம் சாதிமயம் ஆனதா?).
  
அடுத்து முன்பொருமுறை ‘இம்மானுவேல் சேகரனுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் (ஆதரவான தீர்மானம் போட்டதால் வெட்டியவனுக்கும் வெட்டப்பட்டவனுக்கும்) சமமான இடமா?’  என்று திருமாவளவனை நோக்கிக் கேள்வியெழுப்பிய, தலித் முரசு இதழிலும் எழுத முடிகிற அ.முத்துக்கிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணனை வரவேற்பது, இது அது என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார் (எல்லோருக்கும் நல்லவனாக காட்டிக் கொள்வது  என்பது இதுதானா?) ‘மார்க்சிய பார்வையில் அமைந்த உன்னதமான மக்கள் வரலாறு என்று தன்முக நூலில் இந்நூலைப்பற்றி தெரிவித்திருந்தார். இந்நூலை முன்னிறுத்த இவர் ஈடுபட்ட மீடியா லாபியெல்லாம் தனிக்கதை.  ஏனெனில் கடந்த ஆண்டு நூல் தயாராகும் முன்பே “காவல் கோட்டம் ஆனந்தவிகடனின் சிறந்த நூல் பட்டியலில் இடம்பெற்றது.  அதேபோல இந்த ஆண்டு நூல் தயாராகும் முன்பே அப்பட்டியலில் இந்நூலை முன்வைக்க முயற்சி நடைபெற்றது.  அதனாலென்ன பேட்டிதான் வந்துவிட்டதே! தலித்துகள் பிராமணர் நடத்தும் ஊடகங்களில் இடம்பெறுவதை சோரம் போவதாக சித்தரிக்கும் பிராமணரல்லாதோர், ஆனந்தவிகடன் என்னும் பிராமணர் ஊடகத்தைப் பயன்படுத்தும் அரசியலே தனி.

சு.வெங்கடேசன், அவருக்கு எதிராக காட்டிக்கொள்வோர் என்ற இருதரப்பும் எழுதுவதென்னவோ ஒரே சாதியின் வரலாற்றைதான். இருப்பதாக சொல்லிக்கொள்வதென்பதோ ஒரே கட்சியில்தான். இந்த நூலை வரவேற்று மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல சாதிரீதியாக வாக்கு திரட்டும் அரசியல்வாதியைப் போல் இங்கு பேசிய எஸ்.ராமகிருஷ்ணனின் சாதிப்பேச்சு இங்கு எழுதுவதற்குக் கூடப் பொருட்டானதல்ல.

அடுத்துப் பேசவந்த முனைவர் இ.முத்தையா அந்நூல் தரும் சாதிபிம்பத்திலிருந்து தன்னை விலக்கி நிறுத்தும் எச்சரிக்கையோடு நூலாசிரியரைப் பன்முறை தோழர் என்று விளித்துப் பேசி முடித்ததோடு.  உழைக்கும் அடித்தள மக்களின் வரலாறாக அந்நூலைச் சொல்லத் தவறவில்லை. காலனியத்திற்கு எதிராக உருவான பல்வேறு மக்கள் குழுவினரின் போராட்டங்களைத் தொகுப்பதில் ஈடுபட்ட சபால்டர்ன் (விளிம்பு நிலை)  ஆய்வுக் குழுவினரின் தாக்கத்தால் தமிழில் அடித்தள மக்கள் ஆய்வு பற்றி பேச்சுவந்தபோது, அப்பாணியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலேயருக்கு எதிரான ‘பெருங்காமநல்லூர் கள்ளர் போராட்ட’த்தை முன்வைத்தது இ.முத்தையாவின் கட்டுரை.  ஆய்வுப்புலத்தில் இந்த கட்டுரைதான் ஆரம்ப வரவு.  எனவே இத்தகைய பேச்சில் வியப்பேதுமில்லை.  ஆனால் இன்றைய அடித்தள மக்கள், அவைதீகமரபு போன்ற சொல்லாடல்கள் மீது சாதி சார்ந்து விரிவான ஆய்வு நடைபெற வேண்டியுள்ளது.

சபால்டர்ன் ஆய்வுகள் வெளிவந்தபோது முதல் ஆறு தொகுதிகள் வரை (ரணஜித்குகாவின் சந்திராவின் மரணம் என்ற கட்டுரையைத் தவிர) அக்குழுவிiரால் சாதி ஒரு விவாதப் பொருளாகவே எடுத்துக்கொள்ளப் படவில்லை. ஆனால் இதுவே தமிழில் அறிமுகமானபோது வேறுவிதமாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டது.  உழைக்கும் மக்கள் என்ற ஒற்றையான அடையாளத்தில் மறைக்கப்படும் பிற அடையாளங்கள் பற்றிய விவாதங்கள் மேலெழுந்தபோது, மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் அதை எதிர்கொள்ளும் விதமாக இன்னும் ஆழமாக சென்று சேர்ந்த இடம்தான் அடித்தள மக்கள் ஆய்வு. வைதீக மரபுகளால் விலக்கப்பட்ட அவைதீக மரபுகளைக் கொண்ட மக்கள் குழுவினரை இது அடிப்படையாகக் கொண்டது. வைதிகம் மட்டுமே தீட்டுக் கோட்பாட்டைப் பேசக் கூடியதாகச் சொல்லப்பட்டது.

அடித்தள மக்களிடையே இயங்கும் வேறுபாடுகளையோ, வட்டாரத் தன்மையையோ அது கணக்கில் கொள்ளவில்லை.  ஆனால் வைதீகப் பரப்பிற்கு வெளியே அவைதீக பரப்பிலும் தீட்டு, சடங்குவெளி என்ற பெயரில் சாதி கடைபிடிக்கப்படுகிறது. தங்கள் நிலத்திற்குள் நுழையும் காலனியத்திற்கு எதிரான கள்ளர்களின் ‘போர்க்குணம் தலித்துகளுக்கும் எதிராகப் பிரயோகிக்கப்படுகிறது.  பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி இதற்கான சிறு உதாரணம்.  இந்த விதிகளை மீறும்போது கொலை உள்ளிட்ட வன்முறைகள் சாதாரணமாக நிகழ்கின்றன.  இந்த வகையில் தமிழில் அடித்தள மக்கள் ஆய்வு என்பது ‘பிராமண எதிர்ப்பு அரசியலின் நவவடிவ’மாக கீழிறங்கிப்போனது. தென்பகுதி மார்க்சியப் பண்பாட்டு ஆய்வாளர்கள் இருப்பது இப்போது இந்த வலைக்குள்தான்.  இங்கிருந்துதான் முனைவர் இ.முத்தையா போன்றோரின் அடித்தளம், அவைதீகம் போன்ற சொல்லாடல்கள், ஆய்வுகள் மீது இடைமறிப்பு தேவைப்படுகிறது.

அடித்தள மக்கள் என்ற வாதத்தைத் தட்டையான அணுகுமுறையாகக் கொள்ளமுடியாது. அவர்கள் சாதியற்ற வர்க்கத் தன்னிலை அல்ல.  அடித்தள மக்களிடையே சாதி உள்ளிட்ட தீர்க்கமான வேறுபாடுகளால் ஒன்றுக்கொன்று முரணாக நிற்கும் அம்சங்கள் குறித்த ஆய்வு வளர்த்தெடுக்கப்படவில்லை.  இந்த ஆய்வாளர்களுக்கு இவை தெரியாதவையாக இருக்க வாய்ப்பில்லை.  எனில் அடித்தள ஆய்வில் இத்தகைய கேள்விகளோ, அதை நோக்கிய ஆய்வுகளோ ஏனில்லை?  இந்நிலையில் தான் இதுபோன்ற மேடைகளில் அடித்தள மக்கள் வரலாறு போன்ற ஆய்வுச் சொல்லாடல்களைக் கொண்டு அரவணைக்கும் போது சாதி போன்ற முரண்பாடுகள் கேள்வியில்லாமல் போவதோடு அவர்களின் சமகால அதிகார அரசியலும் மறைக்கப்பட்டு விடுகிறது என்பதாலேயே இக்குறிப்பை எழுத வேண்டியுள்ளது.

(தொடரும்)

தருணத்திற்காகவும் தற்காப்பிற்காகவும்தான் தலித் அடையாளமா? - 1

(மே 17 இயக்கத்தை முன்வைத்து...)



- ஸ்டாலின் ராஜாங்கம்

அருந்ததி ராய்
கடந்த சனவரி  7-ந் தேதி சென்னையில் காலச்சுவடு நூல்வெளியீட்டு விழா நடந்தது.  அதில் கலந்துக் கொண்டிருந்த அருந்ததிராய் முன் காலச்சுவடுஎதிர்ப்புப் புரட்சியினை நிகழ்த்திக் காட்டவிரும்பிய மே 17 என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.  Anti ஈழம், Anti தமிழ், Anti பெரியார், Anti முசுலீம், Anti காஷ்மீர் என்று பலவாக கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் எதிர்ப்புக்குரிய காரணமெனக் குறிப்பாக எதையும் சொல்லவில்லை.  அந்தவகையில் இக்கோஷங்கள் யாவும் பிராமண எதிர்ப்புப் பட்டியலில் அடக்கப்பட்டு எல்லாவற்றுக்கும் அவர்கள் பார்ப்பனர்களாய் இருப்பதே காரணம் என்று சொல்லி முடிக்கப்படுகிறது.  அரசியல் காரணம் என்ற வகையிலும், காலச்சுவடுக்கு எதிரான குற்றச்சாட்டு என்ற வகையிலும் இவை  புதிதல்ல.  இந்தசாகசத்தை’ப் படம்பிடித்து அடுத்த சிலநிமிடங்களில் இணையத்தில் உலவவிட்டு தங்களுக்குரிய ஈழ ஆதரவுப் பட்டாவைக் கெட்டியாகக் காப்பாற்றிக் கொண்டார்கள் அந்த அமைப்பினர்.

அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களில் காலச்சுவடு தலித்துகளைப் பயன்படுத்துகிறது என்பதும் ஒன்று.  இதுவரை தலித்துகளுக்கு ஆதரவாகக் காலச்சுவடு எதையும் செய்ததில்லை;  தலித்துகளுக்கு எதிரான அது அவர்களை ஏமாற்றிப் பயன்படுத்துகிறதுஎன்பது இதன் பொருள்.  தலித்துகளுக்காகக் கவலைப்படுவதைப் போல அமையும் இக்கூற்றில் தலித்துகள் சுயமற்றவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.  அவர்களின் அறிவோ, தன்னிலையோ இங்கு அங்கீகரிக்கப்படுவதில்லை.  இது தமிழக பிராமண எதிர்ப்பு அரசியலின் தலித்துகள் பற்றிய வழக்கமான சாதிய மனப்பதிவு.  தங்களை மட்டுமே தெளிவானவர்களாகவும், பிராமணர்களோடு சேர்ந்தாலும் சோரம் போகாதவர்களாகவும் காட்டிக்கொள்வது இவர்களின் வாடிக்கை.  காலச்சுவடு, ஆனந்தவிகடன், இந்து மட்டுமல்ல.  அதிமுக, பாஜக போன்ற எவற்றில் இவர்கள் இருந்தாலும் தங்களை இவ்வாறே சொல்லிக் கொள்ள விரும்புகிறார்கள்.  அதன் மூலம் தங்களைச் சுயமுள்ளவர்களாகவும், தன்னிலையானவர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.

தலித்துகள் தொடர்பான இக்குற்றச்சாட்டைக் காலச்சுவடு மீது கூறும் இவர்கள் யார்? இதுவரையிலும் நடந்துவந்த தலித் பிரச்சினைகளுக்கும், அது தொடர்பான போராட்டங்களுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?  இவர்கள் இதுநாள்வரை எங்கிருந்தார்கள்?  தலித்துகளைப் பற்றி இவர்களுக்கோ, இதுபோன்ற புதிய அமைப்புகளுக்கோ ஏதும் தெரியுமா?  தலித்துகள் சார்ந்து நடந்துவந்த மாற்றங்களுக்கும், விளைவுகளுக்கும் பின்னால் இவர்களின் ஆய்வு, கூட்டம், வெளியீடு, விவாதம் என்று எவையேனும் இருந்ததுண்டா?  2009 முள்ளிவாய்க்காலுக்கு முன் தமிழகத்தில் தலித் பிரச்சினைகள் இருந்ததில்லையா?  அன்றாடம் சாகவில்லையா?  ஒரு வகையில் மே 17 இயக்கம் ஆரம்பித்த பின்னாலாவது தலித்துகளுக்காக ‘அக்கறைகொண்டதுண்டா? 

காலச்சுவடை எதிர்ப்பதற்கான காரணத்தைத் தவிர தலித் பிரச்சினையைப் பற்றி எப்போதாவது பேசியதுண்டா?  அந்த வகையில் தலித்துகளைப் பயன்படுத்தியது மே 17 என்ற இந்த அமைப்புதான்.  எனவே காலச்சுவடை நோக்கிக்கூறும் குற்றத்தைச் செய்தது இவர்களே.  தாங்கள் சார்ந்த குறிப்பான பிரச்சினை ஒன்றிற்காக மற்றொரு தரப்பை எதிர்க்கும்போது, தானே கண்டுகொள்ளாதிருந்த அம்சத்தை எதிர்ப்பின் வலிமைக்காகக் கையாளுவது ஒருவகை தந்திரம். இவ்வாறு சேர்த்துப் பேசுவது, தலித் பிரச்சினைகளுக்காகப் போராடாமல் / இணையாமல் பிராமணர் எதிர்ப்பு போன்றபொதுஎதிரிக்காக எண்ணிக்கைப் பெரும்பான்மை கருதி தலித்துகளையும் இணைத்துப் பேசிய கடந்தகாலத் திராவிட இயக்கத்தின் பாணி.  இது பிராமணர் அல்லாதார் அரசியலின் தொடர்போக்காக நீடிக்கிறது.

காலச்சுவடு மீது தலித் பற்றி கூறும் குற்றச்சாட்டு எதுவென தேடிப் பார்த்தால் அக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தில்சுந்தரராமசாமி பிள்ளை கெடுத்தாள் விளை என்ற கதையெழுதி தலித்துகளை இழிவுப்படுத்தினார்.  அதைத் தலித்துகள் எதிர்த்தனர்.  அதற்கு அவர் பதில் சொல்லவில்லைஎன்ற காரணத்தைக் கண்டடைந்திருந்தனர்.  இது ஒரு பழைய குற்றச்சாட்டு.  அக்குற்றச்சாட்டை இப்போதைய எதிர்ப்பு ஒன்றின் போது ஒரு அம்சமாக சேர்த்துக் கொள்கிறார்கள்.  அக்கதை பற்றி அப்போது எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் இவர்களில் யார்?  அக்கதையைப் படித்ததுண்டா?  அதைப்பற்றி இதற்குமுன்பு எப்போதாவது பேசியதுண்டா?  கதை எதிர்ப்பு மீதான எதிர்வினைகளை அறிந்ததுண்டா?  கதை எதிர்ப்பில் ஈடுபட்டவர்களின் தற்போதைய கருத்து என்ன?  தலித்துகள் தரப்பிலிருந்து எதையாவது சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றுக் கருதி இவர்கள் கண்டடைந்த காரணமாகவே இது இருக்க முடியும்.  தலித்துகள் மீது அன்றாடம் ஏவப்படும் வன்முறைகளைப் பற்றி பிராமணரல்லாத / தமிழ் ஏடுகளில் ஒரு சதவிகிதம் இடமும் அளிக்கப்படாமல் சாதிவெறி கடைபிடிக்கப்படுகிறது.  அதற்கு மாறாக தலித் பிரச்சினைகளுக்கு பிராமண / ஆங்கில ஏடுகளில் தரப்படும் ஓரளவு இடத்தையும் முடக்குவதுதான் இச்செயல்பாடுகளின் நோக்கம்.  இது தான் சாதிவெறி; தலித் எதிர்ப்பு.

பொதுவாக, 1980களின் தொடக்கத்தில் ஈழப்பிரச்சினை எழுந்தபோது தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும், விவாதங்களும், வெளியீடுகளும் உருவாயின.  தேசிய இனப் போராட்டம் பற்றிய பார்வை கட்சிகள் மத்தியிலும் விவாதிக்கப்பட்டன.  அச்சூழலிலிருந்து உருவான சொல்லாடல்களில் ஓர் இடதுசாரித்தன்மை இருந்தது.  ஈழப்பிரச்சினையோடு சமூகத்தின் பிற பிரச்சினைகள் பற்றிய ஓர்மையும் இருந்தது.  2000-த்தின் இறுதியில் ஈழப்போர் உச்சத்தை அடைந்திருந்தபோதும் தமிழகத்தில் கொந்தளிப்பு இருந்தது.  அதையொட்டி நாம் தமிழர், மே 17 போன்ற பல்வேறு அமைப்புகள் தோன்றின.  இவை இயல்பானதே.  ஆனால் இந்த அமைப்புகளிடம் இடதுசாரித் தன்மை இல்லாதது மட்டுமல்ல விவாதத்திற்கும், கருத்துரிமைக்கும் எதிரான போக்குதான் மேலோங்கியுள்ளது.  சமூகத்தின் பிற பிரச்சினைகளை இனவாதத்தால் மூடிமறைக்கும் போக்கு மட்டுமல்ல, வட்டார பெரும்பான்மை சாதிகளின் பின்னணியும் அடர்ந்து இருக்கிறது.  இவர்களுக்குச் சாதி ஒழிப்பு, தலித்துகள் மீதான வன்முறை, தமிழ் வாழ்வின் சமகால நெருக்கடிகள் பற்றி எந்தவித அக்கறையும் இருப்பதில்லை.  சவாலில்லாத இடத்தில் அட்டைக்கத்தியை வீசுவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்க முயற்சிப்பவர்கள்.

தலித்துகளின் ஓர்மையுள்ள அறிவுச் செயற்பாடுகளையோ அதற்கான தளங்களையோ மறுக்கும் வகையில் சமயத்திற்கேற்ப தலித் அடையாளத்தைப் பயன்படுத்தும் சாதியவாதிகளான இவர்களே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
                                                                                                                                                           (தொடரும்)