-
ஸ்டாலின் ராஜாங்கம்
சுகுமாரனுக்கும் எனக்கும்
இடையில் விவாதத்தின் அடிப்படையிலேயே முக்கிய வேறுபாடு இருக்கிறது. பிராமணர்
x
பிராமணரல்லாதோர்
என்கிற எதிர்வு அவருடையது. இந்த எதிர்வைக் கேள்வி எழுப்பும் நான்
சாதி x சாதி எதிர்ப்பு அல்லது தீண்டப்படுவோர் x தீண்டப்படாதோர்
என்கிற எதிர்விலிருந்து
பேசுகிறேன். பிராமண எதிர்ப்பின் தேவையை மறுக்காமலேயே, ஆனால் அவர்களின்
அதிகாரத்தைக் கட்டுக்குள் கொணர்ந்துள்ள பிராமணரல்லாதோர், தலித்துளைக் கூடுதலாக ஒடுக்குவோராக
மாறியுள்ள நிலையில், பிராமணரல்லாதோர் அடையாளத்தை விமர்சனப்படுத்துகிறோம். ஆனால்,
இப்போக்கைப் பிராமணரல்லாத அறிவுஜீவிகள் பிராமண ஆதரவு என்று மட்டுமே தட்டையாகச்
சித்தரிக்க விரும்புகிறார்கள். தலித்துகளின் எதிரி / நண்பர் என்ற வகையில்
பிராமணர்களும் பிராமணரல்லாதோரும் ஒன்றே. ஏனெனில் இங்கு சாதியுணர்வை எதிர்ப்பது மட்டுமே
மையம். ஆனால், பிராமணர்களோடு சமூக, அரசியல் ஊடகத் தளத்தில் பிராமணரல்லாதோர்
கலந்திருப்பதை மிக இயல்பாகக் கருதும் பலரும் தலித்துகள் சிறிய அளவில் பங்குபெறுவதை
மட்டும் பிராமண சதியாகவும் தலித் குறையாகவும் விளக்குகிறார்கள்.
புதுவை கோ.சுகுமாரனின்
கூற்றொன்றினை ஒட்டி நான் எழுப்பியிருந்த விவாதத்திற்கு அவர் தன் முகநூலில்
“ராசாங்கத்தின் ராஜாங்கம்” (மே23) என்ற தலைப்பில் ‘பதில்’ எழுதியிருக்கிறார்.
தலித் பிரச்சினைகளின் போது அவர்களுக்கு ஆதரவாயிருந்தால் மட்டும் போதாது.
ஒடுக்குமுறையைச் செலுத்தும் சக்திகளை மறைக்கும் தத்துவம், ஆளுமை, அடையாளம்
பற்றியெல்லாம் பரிசீலிக்கவேண்டும். எனவே, ஒடுக்கப்படுவோரிலிருந்து பிரச்சினையை
அணுகுவதைக் காட்டிலும் ஒடுக்குவோரிலிருந்தே மதிப்பிடவேண்டும் என்பதே என்னுடைய
விவாதத்தின் சாரமாக இருந்தது. சுகுமாரனின் பதிவொன்றினை முன்வைத்து எழுதப்பட்ட
இவ்விவாதம் பிராமணரல்லாதோர் என்ற அரசியல் நம்பிக்கையை நோக்கி எழுப்பப்பட்ட
கேள்வியே. மற்றபடி சுகுமாரனையோ, அவருடைய பணிகளையோ நான் அவதூறு செய்யவில்லை. ஆனால்,
நான் எழுப்பிய பிரதான கேள்விகளிலிருந்து அவர் விலகியிருப்பதோடு, விவாதத்தில் என்னை
மையப்படுத்தி தமிழ் அறிவுலகில் விலைபோகும் சில பெயர்களை ஏவியிருக்கிறார். ஏற்கனவே,
என்னைப் பற்றிய பல பொய்கள், நான் மறுக்காததால், மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு
உண்மையாக்கப்பட்டுள்ளன என்பதால் இக்குறிப்பை எழுதவேண்டிவந்தது.
புதுவை சுகுமாரன் |
சாதி x சாதி எதிர்ப்பு
என்னும்போது, அதில் பிராமரைக் காட்டி பிராமணரல்லாதோரோ, பிராமணரல்லாதோரைக் காட்டி
பிராமணரோ தப்பமுடியாது. அதனால்தான் பிராமணியத்தை விரிவாகக் கட்டுடைத்த அம்பேத்கர்
பிராமணர் x பிராமணரல்லாதோர் என்ற எதிர்வைப் பிரதானமாக்காமல் தீண்டப்படாதோர் x
தீண்டப்படுவோர் என்ற எதிர்வைப் பேசினார். அது மட்டுமல்ல. அவர் பிராமணியம் என்பதை
பிராமணர் என்ற சாதியிலிருந்து மட்டும் வரையறுக்கவில்லை. பார்ப்பனியமும்
முதலாளியமும்தான் இந்தியப் புரட்சியின் எதிரிகள் என்று சுகுமாரன் காட்டியுள்ள
அம்பேத்கர் மேற்கோளின், அவர் காட்ட விரும்பாத அடுத்த வரிகளை நான் காட்டுகிறேன்.
“இந்நாட்டுத் தொழிலாளர்கள்
இரண்டு எதிரிகளோடு போராட வேண்டியுள்ளது. பிராமணியமும் முதலாளியமும்தான் அந்த
இரண்டு எதிரிகள். பிராமணியத்தைப் பற்றிச் சொல்லும்போது பிராமணர்கள் ஒரு
வகுப்பினராக இருந்து பெறும் அதிகாரம், உரிமைகள் ஆகிய நலன்களைச் சொல்லவில்லை. சுதந்திரம்,
சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான பண்பையே பிராமணியம் என்கிறேன். இந்த
எதிர்மறைப் பண்பு எல்லா வகுப்பினரிடையேயும் உண்டு. பிராமணர்களோடு மட்டும் அது
நின்றுவிடவில்லை. பிராமணர்களே இதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும் மற்ற
வகுப்பினரின் சிந்தனை, செயல்களிலும் ஊடுருவியிருப்பதை மறுக்கமுடியாது”
என்பதே அவரது மொத்தக்
கூற்று.
ஆனால், சாதிக்
கோளாறுகளுக்குப் பிராமணரை மட்டுமே காரணமாக்கிவிட்டு, மற்றவர்கள் வெளிப்படுத்தும்
சாதிவெறியையும், அதற்கான அரசியல் தத்துவப் பின்னணியையும் உரியமுறையில்
எடுத்துரைக்காமல் மறைக்க விரும்பும் சுகுமாரன் போன்றோர் முதல் இரண்டு வரிகளோடு
நகன்றுவிடுகின்றனர். அடுத்த வரிகள் தமக்கு ஆபத்து விளைவிப்பன என்பதால்
காட்டுவதில்லை. மேலும் இவை அம்பேத்கரைப் படித்துக் கண்டுபிடித்த வரிகளல்ல. யாரோ
ஒருவர் எப்போதோ கையாண்ட இம்மேற்கோளைச் சூத்திரம் போல ஒப்புவிப்பவர்கள் இவர்கள்!
இந்நிலையில்,
பிராமணர்களுக்கு எதிரணியாகக் காட்டப்படும் பிராமணரல்லாதோர் பகுப்பிலுள்ள
தலித்துகள் மட்டும் பிராமண எதிர்ப்பை மட்டுமே பேச நிர்ப்பந்திக்கப்படுவதும்,
முக்குலத்தோர் உள்ளிட்ட பல்வேறு இடைநிலைச் சாதிகள் அத்தகைய ஓர்மையையே அறியாமல்
சாதிபலத்தில் ஆகிருதியாகிக் கொண்டே போவதும், அவர்கள் தலித்துகளை மோசமாக
ஒடுக்குவதும் அதிகரித்துக்தகொண்டே போவதும்தான் நடந்துகொண்டிருக்கின்றன.
(மொத்தத்தில் சாதியின் தோற்றம், வளர்ச்சி பற்றியே மறுஆய்வு
செய்யவேண்டியிருக்கிறது.)
இந்நிலையில்தான்
பிராமணரல்லாதோர் அடையாளம், அதைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவம், ஆளுமை பற்றியெல்லாம்
கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது. நாம் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்ததும் திராவிட
அடையாளத்தை – பிராமணரல்லாதோர் அரசியலைத் தாங்கிப் பிடிப்பவர்கள் பெரியாரும்
திராவிட இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்ற வாக்கியத்தை
முன்னொட்டாக மட்டும் எழுதிவிட்டு, அது என்ன விமர்சனம் என்று கடைசி வரை சொல்லாமலேயே
எழுதிச் செல்கிறார்கள். சுகுமாரனும் அப்படித்தான் எழுதியிருக்கிறார். நான்
கேட்கிறேன் : பெரியார் – திராவிட இயக்கம் பற்றிய தங்களின் விமர்சனம்தான் என்ன?
0 0 0
என்னுடைய விமர்சனத்திற்குப்
‘பதிலெழுத’ வந்த சுகுமாரன் பதிலெழுதுவதைக் காட்டிலும் முதலில் எனக்குச் சில
முத்திரைகளைக் குத்தி எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகிறார் (அரசுக்கு எதிராகப்
போராடுகிறவர் மீது பயங்கரவாதி, மாவோயிஸ்ட் என்றெல்லாம் முத்திரை குத்தி
மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட்டு, பிறகு அவர்களைக் கேள்வியேதுமின்றி
அழித்தொழிக்க அரசு சதி செய்வதைப் போல). அவை : பார்ப்பன அடிவருடி, அருந்ததியர்
விரோதி என்ற இரண்டுமேயாகும். தமிழில் பிராமணரல்லாதோர் அடையாளம் பற்றி கேள்வியெழுப்புவோர் மீது தேடித் தேடி
சுமத்தப்படும் பழிகளே இவை. பழிசுமத்தக் ‘காரணம்’ கிடைக்காவிட்டால் பொய்யாகப்
புனையவும் தயங்கமாட்டார்கள். இந்த பதிவில் சுகுமாரன் செய்திருப்பதும் அதைத்தான்.
என்னைப் பற்றிய முதல்
குறிப்பையே ‘காலச்சுவடு ஆசிரியர் குழு’ என்றுதான் சுகுமாரன் தருகிறார்.
காலச்சுவட்டில் இருப்பதால் நான் ஒரு பிராமண அடிவருடி என்பது அவர் தரவிரும்பும்
சித்திரம். முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் காலச்சுவட்டில்
இருப்பதால் பிராமணரல்லாதோர் அடையாளம் பற்றி விமர்சிக்கிறேன் என்றில்லை. பிராமணர்
எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பல்ல என்பதைப் புரிந்ததால்தான், காலச்சுவடு
ஆசிரியர் குழுவில் மட்டுமல்லாது, என் கருத்தைப் பேச வாய்ப்புள்ள அனைத்து
ஊடகங்களிலும் பங்குபெறுகிறேன். இதற்கு காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இடம்பெறும்
முன்பிருந்த என் எழுத்துகளே ஆதாரம். என்னுடைய தனித்துவத்திற்கும் காலச்சுவடு
பங்கேற்பிற்குப் பிறகும் எவ்வித முரணும் ஏற்பட்டதே இல்லை. ஆனால் காலச்சுவட்டிடம்
நான் விலைபோயிருப்பதாகப் பின்னூட்டம் தருகிறார்கள் (விலைபோவதைப் பற்றி யாரெல்லாம்
பேசுவது?).
என் மீதான அடுத்த
குற்றச்சாட்டு ‘அருந்ததியர் விரோதி’(?) என்பது. திராவிட இயக்கத் – பிராமணரல்லாதோர்
அடையாளம் மீது விமர்சனம் எழுந்தபோது தங்களைக் காத்துக்கொள்ள இடைநிலைச் சாதிகள்
கடைசியாகக் கண்டுபிடித்த கேடயம்தான் அருந்ததியர் ஆதரவு. அதுவரை அருந்ததியர்கள்
தனியாகவும் – பிற தலித் அமைப்புகளுடனும் போராடிய போது பேசாதவர்கள் – தாங்கள்
செயற்படும் தளங்களில் அவர்களைப் பற்றிச் சிறிதும் யோசித்திராதவர்களெல்லாம் தலித்
அரசியலின் விமர்சனம் வந்தவுடன் ஒரு சேர சென்று சேர்ந்த இடம்தான் அருந்ததியர்
பிரச்சினை. இருந்தும் கூட அருந்ததியர் பிரச்சினையை அவர்கள் மீதான அக்கறையிலிருந்து
பேசாமல், பிற தலித் சாதிகளைக் குறை கூறவும், அதன் மூலம் தங்களைக்
காத்துக்கொள்ளவும்தான் பேசினார்கள். தங்களுக்குத் தேவையான போதெல்லாம் தலித்துகளைச்
சேர்ப்பது நீதிக்கட்சி காலத்திலிருந்து வரும் நடவடிக்கைதான்.
அருந்ததியர்களுக்கும் பிற
தலித் சாதிகளுக்கும் ஏற்பட்டது அரசியல் முரண். உள் ஒதுக்கீடு கோரிக்கையின்போது
இம்முரணுக்கு அழுத்தம் தேவைப்பட்டது. இது புரிந்துகொள்ள முடியாத ஒன்றல்ல. அதற்காக
ஒரு ஊரில் வாழும் தலித்துகளுக்கிடையே நல்லுறவு நிலவுகிறது என்பது என் கருத்தல்ல.
அதே வேளையில் முரணும் நிலவுவதில்லை. ஒவ்வொரு தலித் சாதியும் தனித்தனியாக
வாழ்கிறார்கள். சமூக அதிகாரம் என்ற அளவிலும், உடைமை ஆதிக்கம் என்ற அளவிலும்
அருந்ததியர்களை ஒடுக்கும் தன்மை பெற்றவர்களாகப் பிற தலித் சாதிகள் இருப்பதில்லை.
மிகக் கொடூர வன்முறையான கரடிச்சித்தூர் போன்ற சில சம்பவங்கள் நடந்திருப்பதை
மறுக்கமுடியாது. ஆனால், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமாக ஒரு ஆய்வென
எடுத்துக்கொள்வோமானால், அருந்ததியர்களையும் பிற தலித் சாதிகளையும் ஒடுக்குவோர்
யார்? இடைநிலைச் சாதிகள்தானே! ஆனால், அது இங்கு போதுமான அளவு – பிற தலித்
சாதிகளைப் பேசிய அளவிற்கேனும் - பேசப்பட்டிருக்கிறதா?
எதார்த்தம் இவ்வாறு
இருக்கும்போது இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கவேண்டியது என்ன?
உண்மையிலேயே அருந்ததியர்கள் மீதான ஒடுக்குமுறைகளைப் பேசுவதென்றால், தங்கள் சொந்த
சாதிக்கு எதிராகப் பேசியிருக்கவேண்டும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும்
மேலாகத் தமிழில் அருந்ததியினர் தொடர்பான இடைநிலைச் சாதியினரின் பேச்சுகளை –
எழுத்துகளை – நடைமுறைகளை ஆராய்ந்து பாருங்கள். பிற தலித் சாதிகளைக் குற்றம் சாட்டி
இடைநிலைச் சாதியினரைக் காப்பாற்றும் / மௌனமாக நகரும் பதிவுகள் மட்டுமே இருப்பதைப்
பார்க்கமுடியும். மேற்கு மாவட்டங்களில் சேவைச் சாதிகளாக – விவசாயக் கூலிகளாக
அருந்ததியர்களைக் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஒடுக்குவதைப் பற்றி விரிவான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு தொடர் விவாதங்களோ – தொடர் போராட்டங்களோ நடத்தப்படவில்லை.
இங்கு அரசியல் முரண்
பற்றிப் பேசுவது எளிது. சமூக அதிகார முரண் பற்றிப் பேசுவதுதான் கடினம். அதனால்தான்
இடைநிலைச் சாதியினரின் அருந்ததியர் உள்ளிட்ட தலித் வகுப்பினர் மீதான சமூக அதிகாரம்
பற்றி மௌனம் நிலவுகிறது.
இப்படியான இடைநிலைச் சாதி
மனநிலையிலிருந்துதான் சுகுமாரன் என் மீது மற்றுமொரு முத்திரை குத்தி, நான்
எழுப்பிய விமர்சனத்திலிருந்து தப்ப முயற்சிக்கிறார். முதலில் அவர் காட்டுவது
சாதிவாரிக் கணக்கீடு குறித்த என் கருத்தைத்தான். முத்திரை குத்துவது என்று
முடிவெடுத்துவிட்டால் விவாதவெளிக்கு அப்பாலிருந்தெல்லாம்
விஷயத்தைக் கொணர்வது இவர்களுக்குக் கைவந்த கலை. கணக்கெடுப்பு தொடர்பான என் கருத்தை
விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் அதைச் செய்வதை விட கணக்கெடுப்பை
அருந்ததியர்கள் ஆதரிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டவே அவர் ஆர்வம் காட்டுகிறார்.
அதாவது அருந்ததியர் ஆதரிப்பதால் நான் எதிர்க்கிறேன் என்ற சித்தரிப்பைத் தர
முயற்சிப்பதே அவர் நோக்கம். கணக்கெடுப்பைப் பள்ளர் – பறையர் வகுப்பினரிலும் சில
குழுவினர் ஆதரக்கின்றனர். என்னை யார் பக்கம் என்று சொல்வது? இதுபோன்ற
வாதங்களுக்குப் பின்னாலிருப்பது வெறும் சூத்திர சூதுதான்.
அடுத்ததாக, அருந்ததியர்
ஒதுக்கீட்டிற்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற வழக்கில், நான் உள்ளிட்ட பலரும்
பின்னணியில் இருக்கிறோமென்றும், அதற்காக இரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும்
சொல்லியிருக்கிறார் சுகுமாரன். இது அப்பட்டமான பொய். பொய்யைச் சொல்லித்
தலித்துகளைக் கொச்சைப்படுத்தும் சாதி உளவியல் இது. உண்மையிலேயே இவ்விவாதம் என்னை
மையப்படுத்தி அமைவதற்கு நானும் காரணமாகிவிட்டதை நினைக்கும்போது வருந்துகிறேன். இருந்தும்
இக்குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
சுகுமாரன் கூறும் இரகசியக்
கூட்டம் யாரால் எங்கு எந்த தேதியில் கூட்டப்பட்டது? அங்கு எடுக்கப்பட்ட முடிவு என்ன?
கலந்துகொண்டோர் யார் யார்? உயர்நீதிமன்ற வழக்கைத் தொடுத்தவருக்கும் எனக்கும் என்ன
தொடர்பு? அவர் என்னையோ – நான் அவரையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்ததோ – பேசியதோ
உண்டா? ஆம் எனில், எங்கு? எந்த தேதி? இக்கேள்விகளுக்கு உரிய – தகுந்த – சரியான –
நம்பும்படியான ஆதாரங்களை அளித்து ‘உண்மையறியும் நிபுணரான’ கோ.சுகுமாரன்
நிறுவவேண்டும் என்பதே இந்தக் குறிப்பை நான் எழுதியதின் நோக்கம்.
0 0 0 0 0