Saturday, 20 October 2012

அவசர ஊடகவியலா? அவசர இதழியலா?

(கம்மாபட்டி பற்றிய ‘அவசர ஊடகவியல்’ என்ற அ. முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைக்கான எதிர்வினை)

-    - ஸ்டாலின் ராஜாங்கம்

      கடந்த ஜூலை மாதம் (2012) ராஜபாளையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள கம்மாபட்டி என்ற கிராமத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர்கள் சமைத்த உணவை அவ்வூர் கம்பளத்து நாயக்கர் புறக்கணித்தனர் என்ற செய்தி வெளியானது. ஒரிரு நாட்களில் ஊடகம் மற்றும் அரசியல் அமைப்புகளின் கவனம் அங்கு திரும்பியதால் அப்பிரச்சினை ஓரளவு வெளியில் வந்தது. புறக்கணித்த வகுப்பினருக்கு நெருக்கடி உண்டானது. தமிழில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் பற்றி எழுதுபவரும், அதனாலேயே மாற்றுக் கருத்துகளுக்கான ஊடக அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டிருப்பவருமான .முத்துக்கிருஷ்ணன் கம்மாபட்டி பிரச்சினையைப் ;பற்றி மாற்றுக் கருத்தொன்றினை உயிர்மை இதழில் எழுதி அவரது வலைப்பக்கத்திலும் உலவவிட்டிருக்கிறார்.

      தலித் சத்துணவு பணியாளர்கள் புறக்கணிப்பு பற்றி செய்திச் சேனலில் கருத்துரைத்த அவ்வூர் கம்பளத்து நாயக்கரின் இது தீண்டாமை அல்ல என்ற கூற்று உறுத்தியதால் அவ்வூருக்கு களஆய்வாக சென்று திரட்டிய தகவல்களைப் பல்வேறு உலகம் தழுவிய உதாரணங்களோடு நிறுவும் அவர் ஆய்வில் பிறரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றைத் தான் சரியாகக் கண்டறிந்து விட்டதாகப் பூரிக்கிறார். இப்பிரச்சினையைத் தீண்டாமையாகக் கருதி ஞாநி பேசியதை மகிழ்ச்சி யென்றும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயற்பாட்டாளர் சாமுவேல்ராஜ் பிபிசி வானொலியில் ஆவேசமாகப் பேசினாரென்றும், விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு கட்டுரை எழுதினாரென்றும் அவர் எழுதிகாட்டிவிட்டு, அவர்களின் இம்முடிவுகளுக்கு எதிராக தம்முடைய ஆய்வு அமைந்திருப்பதை கூறிச் செல்வதை உற்றுக் கவனித்தால் மேற்கண்டவர்களின் கூற்றைப் பகடிசெய்யும் விதத்தில் தம்முடைய கட்டுரையைத் தொடங்குகிறார்.

அவருடைய களஆய்வின் வழியாகக் கண்டறிந்த முடிவுகள் இவைதாம்: கம்பளத்து நாயக்கர்கள் இனக்குழு பண்போடு வாழ்ந்து வருகிறார்கள், அப்பண்பின் உள்ளார்ந்த இயல்பு காரணமாகவே பிறரால் சமைக்கப்பட்ட உணவைப் புறக்கணிக்கிறார்களே ஒழிய, தீண்டாமையினால் அல்ல என்பதே அம்முடிவுகள்.  இந்நிலையில் இன்றைய புரிதலின்படி, அதைத் தீண்டாமையாகப் பார்க்க வேண்டாம், தீண்டாமையாகப் பார்த்து அவர்களைத் திருத்தி இன்றைய நாகரிக வாழ்விற்குட்படுத்தி அழுக்குப்படாத இனக்குழு வாழ்வைச் சிதைக்கவேண்டாம் என்று இன்றைய சமூகம் ஊடகம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றைக் கேட்டுக் கொள்கிறார்.

அவரின் விளக்கத்தின்படி, சட்டத்திற்குட்படாத இப்பழக்க வழக்கங்களைச் சட்டத்திற்குட்படுத்தி இன்றைய சனநாயக அமைப்புக்கு மாற்றுவது என்பதே இன்றைய நவீன வாழ்வுக்கு மாற்றிவிடுவதாகிவிடுகிறது. நவீன வாழ்வு தரும் அவஸ்தைகளைப் பிரதானப்படுத்திப் பராம்பரியக் கேடுகளை மறைத்து விடுவதோடு நியாயப்படுத்தவும் செய்கிறார்.  பாரம்பரியக் கேடு பற்றிய கேள்விகளை முற்றிலுமாக கைவிட்டிருக்கிறார். அந்தமான் பழங்குடிகள் நகரத்திற்கு வந்து போனதும் நோய்கள் பரவி இறந்து போனார்கள் என்பதைக் காட்டி, கம்பளத்து நாயக்கர்களின் இனக்குழு வாழ்வைச் சிதைக்க வேண்டாம் என்கிறார்.  அதற்கு தோதாக நாயக்கர்களை அதிகாரிகள் மிரட்டினர், இரவு முழுவதும் நிம்மதியும் நித்திரையும் இல்லாமல் தவித்தனர், 10 ஆண்டுகளாக இவ்வூரில் சமைத்த அதே சாதிப் பெண்களுக்கு சம்பளம் தந்ததில்லை, மேலும் சத்துணவுப் பணி இனச்சுழற்சி அடிப்படையில் பிற்படுத்தப்படட வகுப்பினருக்கே வந்திருக்க வேண்டும் என்றெல்லாம் அவர்தம் துயரங்களை அடுக்குகிறார்.  இதுவரை உலகுதழுவிய அரசியல் ஒடுக்குமுறையில் புறக்கணிக்கப்பட்டவர்களின் சார்பாக எழுதிய .முத்துக்கிருஷ்ணன் உள்ளுர் பிரச்சினையில் புறக்கணிப்பவர்களின் நியாயத்தைத் தேடியலைந்திருக்கிறார்.  தமிழ் சினிமாவில் முழுக்கக் கேடுகளைக் காட்டிவிட்டு கடைசி காட்சியில் அதைக் கூடாது என்று உபதேசம் செய்வதைப் போல கட்டுரை முழுக்க நாயக்கர்களின் நிலைப்பாட்டை இனக்குழுவின் தலையில் நாம் துப்பாக்கியை வைத்து மாற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்டு நியாயப்படுத்திவிட்டு இறுதியில் அவர்கள் மாறிவருகிறார்கள், அவர்களுக்கு அவகாசம் தேவை என்று முடிக்கிறார்.

      இக்கட்டுரை வாதத்தின்படி பார்த்தால் ஒடுக்கும் ஒவ்வொரு சாதியும் ஒடுக்குவதற்கெனக் கூறும் நியாயத்தை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.  எல்லா இடங்களிலும் ஒடுக்குகிற சாதி இதுபோன்ற நியாயங்களைக் கூறியே தன் அதிகாரத்தை காப்பாற்ற முயற்சித்தும் வருகிறது.  ஆனால் சட்டம் அதற்கு வளைந்து கொடுத்தால் அரசியல் சட்டம் கூறும் சனநாயகம் சாத்தியமில்லை, சட்டம் நீதியோடு நடந்து கொள்ள வேண்டுமென்றே போராடுகிறோம். இந்நிலையில் சட்டத்தின் தலையீடுதான் அவர்களின் பாரம்பரிய நிலையைக் குலைக்கிறது. இப்போது முத்துக்கிருஷ்ணனின் வாதப்படி, நாயக்கர்களின் சாதி நம்பிக்கையை (அதாவது இனக்குழுநிலை) சிதைக்கும் நவீன வடிவமென்றால், அது இந்திய அரசியல் சட்ட விதிகளைக் குறிப்பதாகிவிடுகிறது.  இத்தகைய விவாதமும், அதை ஒட்டிய முரண்பாடும் நம் அறிவுலகம் உரிய விதத்தில் விவாதிக்கத் தயங்கும் புள்ளியாகவும் இருக்கிறது.

      அனைவருக்கும் பொதுவான சட்டம் - நீதி - சனநாயகம் என்பதே நவீனத்தின் கொடைதான்.  இன்றைய சாதி ஒழிப்பு’ என்ற சொல்லாடல் கூட நவீன அரசியல் எண்ணம்தான். மார்க்சியம் உள்ளிட்ட கோட்பாட்டாளர்கள் பேசும் எண்ணங்களும் நவீனம் சார்ந்தவையே என்பதில் அய்யமில்லை.  நம்முடைய பாரம்பரிய அடையாளங்கள் நவீனத்தினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதகமாகவும் - சாதகமாகவும் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. சாதியமைப்பு என்னும் பாரம்பரிய எண்ணங்களை இடையீடு செய்ததில் சட்டம் - சனநாயகம் உள்ளிட்ட நவீன கருத்துகளைச் சாதகமாக பார்க்க முடியும். இந்நிலையில்தான் தீட்டு என்ற பாரம்பரிய நம்பிக்கையைப் பேசும்போது .முத்துக்கிருஷ்ணன் அவர்தம் பாரம்பரிய இனக்குழுப் பண்புக்கு எதிரான நவீன வாழ்வைக் கேடு மிக்கவை என்று கூறுவதில் பிரச்சினையிருக்கிறது.

      தீட்டு, பழங்குடி வாழ்வு ஆகிய பெயர்களிலும் பிறர் தலையிடாத தனித்த வாழ்வை மேற்கொள்ளும் குழுவினர் உள்ளனர். இன்றைய சாதியமைப்பில் இப்போக்கிற்கும் இதுபோன்ற குழுவினருக்கும் அதிகளவு பங்கிருக்கிறது. ஆனால் அது ஆராயப்படுவதில்லை.  ஏனெனில் சாதியமைப்பு என்றாலே இந்திய அளவிலானது. மனு நூலின் விதிக்குகந்த வகையில் மட்டுமே சாதியமைப்பு செயற்படுகிறது என்ற எண்ணமே நமக்கிருக்கிறது.  ஆனால் சாதி பகுதிகேற்ப வேறுபடுகிறது. அந்தந்த பகுதி சார்ந்த சாதியினாpன் முரண்பாட்டிற்கேற்ப அது வினைபுரிகிறது. எனவே இனக்குழு பண்பைக் காப்பது என்பதே சாதியைக் காப்பதாக மாறிவிடுகிறது. தத்தம் இனக்குழு தனித்தன்மையை காப்பாற்ற வன்முறை, முரட்டுத்தனம் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். இன்றைய பல்வேறு சாதிகளை இனக்குழு பண்பு கொண்டது என்றே கூறமுடியும்.

உசிலம்பட்டி பிரமலைக்கள்ளரின் சாதிய பண்பு வைதீகப் பண்பிலிருந்து பிறந்தது அல்ல. இனக்குழு பண்புதான் அது. பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும் அவர்கள் காட்டிய வன்முறை அந்தவகையிலானதே. சட்டத்தின் அலகுகள் (அதாவது நவீனம்) தொடர்ந்து போராடியிருக்காவிட்டால்; இன்றைக்கு அங்கு பெயரளவில் சாத்தியமாகியுள்ள தலித் பஞ்சாயத்து பிரதிநிதித்துவம் உருவாகியிருக்காது.

கம்மாபட்டி கம்பளத்து நாயக்கர்களின் பிடிவாதமும் இனக்குழு பண்புதாம். அது சாதியாக மட்டுமே உருப்பெறும். கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த தேவேந்திரர் வகுப்பினரின் பந்தப்புளி கோவில் நுழைவு மறுப்பு’ கம்பளத்து நாயக்கர்களால் உருவாக்கப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். பந்தப்புலி கம்பளத்து நாயக்கர்களும் இனக்குழு பண்பு கொண்ட அல்லது அதிலிருந்து மாறினாலும் அதை இன்றைய சாதியமைப்புக்கு மாற்றிக் கொண்டவர்களே.  எனவே கம்மாபட்டி கம்பளத்து நாயக்கர்களின் மீதான நவீன அரசு வடிவங்களின் தலையீட்டை அந்தமான் பழங்குடிகளையெல்லாம் ஒப்பிட்டுக் காப்பாற்ற வேண்டாம்.
     
      இனக்குழு தனித்து வாழும் போது தங்களுக்குள் பிறரை அனுமதில்லை. பிறரோடு வாழ நேரும்போது பொது சமூகத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ள சிவில் சமூகம் பின்பற்றும் ஒழுங்குகளைத் தவறாமல் பின்பற்றுகிறது.  உதாரணமாக சாதிய ஒழுங்கு. நான் பிறந்த கிராமத்தின் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். வசதியிலும் வாழ்க்கை முறையிலும் தலித்துகளைக் காட்டிலும் பின்தங்கியவர்களாக உள்ள ஒட்டர், இருளர், நரிக்குறவர் போன்ற வறிய - பழங்குடித் தன்மையுள்ள குழுவினர் தலித்துகளிடம் தீட்டைக் கையாளுகி;ன்றனர். பெரும்பான்மையும் கிராமத்திலுள்ள சாதி இந்துகளிடம் நெருக்கம் கொள்கின்றனர். அம்பேத்கர் சொல்லியிருப்பதைப் போல் இது போலச் செய்தல் செயல்தாம். ஆனால் இச்செயலுக்கும் சாதியவிதியில் முக்கிய இடமிருக்கிறது. இது போன்ற விசயங்களை யாரும் விவாதிப்பதில்லை.

      இனக்குழுவின் மற்றுமொரு ஆதாரம் அதன் சடங்கார்த்தம். சடங்கு என்பது தீட்டை விலக்குவது போன்ற அம்சங்களோடு தொடர்பு கொண்டுள்ளது. தங்களின் தெய்வம் ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் பாப்பாப்பட்டியில் கள்ளர்கள் தலித்துகளைப் பஞ்சாயத்துத் தலைவராக ஏற்றுக் கொள்ளாமைக்குக் கூறிய ஒரு காரணம். கம்பளத்து நாயக்கர் உள்ளிட்டோரிடமும் இதே போன்ற காரணங்கள் இருக்கக்கூடும். இந்நிலையில் இனக்குழுவின் சடங்கும் சாதிய சுத்தியோடு தொடர்புகொண்டுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமலோ, விவாதிக்காமலோ இருப்பது நம்முடைய சுயமுரண்பாடு.  ஒருவகையில் உலகு தழுவிய மானுடம் பற்றிப் பேசும் மார்க்சியம் என்ற நவீனத்தின் ஆதரவாளர்கள் கூட உழைக்கும் மக்கள் அடையாளம், வட்டார அடையாளம், வைதீகத்திற்கு எதிரான அவைதீக சடங்கு என்றெல்லாம் பாரம்பரிய அடையாளத்தின் ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில் நவீனம் X மரபு என்ற எதிர்வை, வைதீக மற்றும் அவைதீக மரபுவிதிகள் X நவீன சட்டம் என்ற எதிர்வோடு முரண்படுவதை வைத்து விவாதிக்க வேண்டியிருக்கிறது.  அந்த கேள்விகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தான் புதியதாய் கண்டறிந்துவிட்டதாக ஒற்றை நோக்கில் முத்துக்கிருஷ்ணனின் கட்டுரை பயணிக்கிறது.

      இவ்வாறு கட்டுரை முழுவதும் நாயக்கர்களுக்காக எழுதிய முத்துக்கிருஷ்ணன் அவர்களை முற்போக்காகக் காட்டவும் தவறவில்லை. அதற்காக இரண்டு அடையாளங்களைத் தருகிறார். இரண்டும் நம்கால முற்போக்கு முகாம்களில் விலைபோகும் மலிவான சரக்கு.  ஒன்று, மொழிவழிச் சிறுபான்மையினரான நாயக்கர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். (இக்கூற்றை நான் கூறுவது மொழிபெரும்பான்மைவாத ஆதரவில் அல்ல. ஒடுக்குமுறையை மறைக்கும் எந்தச் சொல்லையும் மறுக்கவேண்டும் என்ற பொருளில்தான்). மற்றொன்று நாயக்கர்களிடம் பார்ப்பன எதிர்ப்பும் உண்டு என்கிறார். எல்லாவற்றிற்கும் ஆதாரம் தரும் இக்கட்டுரை இக்கூற்றைத் தகவலாக சொல்லுகிறதேயொழிய ஆதாரம் தரவில்லை.  (நம்மூரில் இப்படிச் சொன்னால் போதும்) இக்கட்டுரையின் விளக்கப்படி பார்த்தால் அது பார்ப்பன எதிர்ப்பு அல்ல.  எந்த சாதியோடும் சேராமல் தன் தனித்துவத்தைக் காப்பது என்றே அதைச் சொல்லவேண்டும். அதாவது தானல்லாத பிறவற்றை எதிர்ப்பது.  இதில் பார்ப்பன எதிர்ப்பு எங்கு வருகிறது?  தலித் வகுப்பினரின் சத்துணவுப் பணியை புறக்கணிக்கும் வகுப்பினரின் செயலைப் பிற்போக்காக சொல்லாத இக்கட்டுரை, பார்ப்பன எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்லுவதின் மூலம் நம்மூரின் நியதிப்படி அவர்களை முற்போக்காகக் காட்ட முயற்சிக்கிறது.

      உண்மையில் முத்துக்கிருஷ்ணனின் இக்கட்டுரைக்கு எதிர்வினை செய்வதற்கு காரணம் இனக்குழு, நவீனம் என்று பலவற்றைப் பேசும் விதத்தில் சாதியப் பண்பை என்னவாக விளங்கிக் கொள்ளப் போகிறோம்? விளக்கப் போகிறோம்? என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும் என்பதற்காகவே. ஒரு பிரச்சினை பற்றி இதழியல் அவசரத்திற்கு ஒரு கட்டுரை எழுதுவது போன்றதல்ல இது. சாதி போன்ற சவாலான பிரச்சினை பற்றி அம்பேத்கர் போன்றோர் கூறியிருப்பதென்ன என்பதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். முற்போக்காளர் மத்தியில் தன்னை மேலும் முற்போக்காக காட்டிக்கொள்ள அம்பேத்கர் பெயரைக் கையாளுவல்ல இது. அம்பேத்கருடைய சிந்தனைகளை அறிவதும் அவற்றில் இன்றைக்குப் பொருத்தக்கூடிய அதேவேளையில் பேசத் தயங்கும் கருத்துகளை எடுத்து இது போன்ற சிந்தனைகளின்போது பொருத்துவதும் அவசியம். ஆனால் அவரின் பெயரும் படமும் கையாளப்படுமளவிற்கு சிந்தனை கையாளப்படுவதில்லை.

      இத்துணை ஆபத்துகள் கொண்ட இக்கட்டுரை இதுவரை கண்டுகொள்ளப்படாதது ஏன்? இதை எழுதியவரோ எழுதிய தளமோ பிராமணர்களுடையது அல்ல என்பதே இதற்கு முக்கிய காரணம். மேலும் இது போன்றவர்கள் மற்றொருபுறத்தில் பிராமண எதிர்ப்பும் பேசிக்கொள்ளலாம். ஏனென்றால் நம்மூரில் பிராமணன் பேசினால்தான் (பேசாவிட்டாலும்) தவறானதாகயிருக்க முடியும் என்ற புத்தி நமக்கிருக்கிறது.  இப்படிதான் பிராமணரல்லாத சூத்திர சாதிவெறியினர் வெட்டுவதால் எங்கும் செத்துக் கொண்டிருப்பது ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தும், அதைப் போதிய அளவில் சாதியமைப்பு குறித்த சொல்லாடல்களில் இணைத்து சாதியின் பரிமாணத்தை விவாதிக்காமல் அவற்றோடு ஏதாவது பிராமணத் தொடர்பைக் காட்டி, பிரச்சினையையும் அதுபற்றிய சிந்தனையையும் எளிமைப்படுத்த முடியுமா என்றே நம் அறிவுலகம் யோசித்துக் கொண்டிருக்கிறது.