Thursday, 22 November 2012

நவம்பர் 7, 2012 அன்று தருமபுரியின் 3 தலித் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை


தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்கள் நவம்பர் 7ஆம் தேதி மாலை தொடங்கி முன்னிரவு வரையிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி வன்னிய கிராமத்தினரால் கொள்ளையிடப்பட்டு கொளுத்தப்பட்டன. இத்தாக்குதல் தொடர்பாக உண்மை அறியும் களஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10-ஆம் தேதி கல்வியாளர்கள் - எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு நேரில் சென்றது. மூன்று கிராமங்களில் தாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் கண்ணுற்றதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளையும், சில அரசு ஆவணங்களையும் கண்டு இக்குழு தயாரித்த அறிக்கை இது.

களஆய்வில் பங்கேற்றோர் :

1. முனைவர் சி. இலட்சுமணன் (Co-ordinator, Dalit Intellectual Collective)
2. எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் (Intellectual Circle for Dalit Actions)
3. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர், புதுவிசை)
4. பேரா. கி. பார்த்திபராஜா
5. கவிஞர் சுகிர்தராணி
6. எழுத்தாளர் யுவபாரதி மணிகண்டன் (தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு)
7. பத்திரிகையாளர் ஜெய்கணேஷ்
8. மருத்துவர் திராவிடன் அம்பேத்கர்
மற்றும் பெங்களுரு சுதந்திர மென்பொருள் இயக்கம் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்
9. செந்தில்
10. ரகுராம்
11. சரத்
12. ரமீஷ்

காரணமும் தாக்குதலும் :

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (23) என்ற தலித் இளைஞனும் செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா (21) என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக உருவான பிரச்சினை, மூன்று தலித் கிராமங்களுக்கு எதிரான பெருந்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது. ‘தங்கள் சாதிப் பெண்ணைப் பறையன் காதலிக்கக் கூடாது’ என்று கடந்த ஜனவரி மாதத்திலேயே இளவரசன் வீட்டின் மீது வன்னியர்கள் தாக்குதல் தொடுத்தனர். தொடர் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் மீறி 14-10-2012ஆம் தேதி இளவரசனும் திவ்யாவும் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி சேலம் கோட்ட டி.ஐ.ஜி.யிடமும் தருமபுரி மாவட்ட காவல் துறையிலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திவ்யா குடும்பத்தினர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலிருந்தனர். ஆனால் இப்பிரச்சினையில் திவ்யாவின் உறவினர்களும் அவர்களைச் சேர்ந்த வன்னியர்களும் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்திவந்தனர். அக்டோபர் 25-ஆம் தேதி முதலே இப்பகுதியில் இது தொடர்பாக பதற்றம் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக 04-11-2012-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன் தலைமையில் வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற பா.ம.க. நிர்வாகிகளும், மாவட்ட வன்னியர் சங்கத்தினரும் நாயக்கன்கொட்டாயைச் சுற்றியிருந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் ‘சாதி மீறித் திருமணம் செய்யும் போக்கை வளரவிடக்கூடாது, இதற்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்’ என்று உணர்ச்சிவசமான பேச்சுகள் பேசப்பட்டன. பஞ்சாயத்து முடிவின்படி, ‘7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் காலனியில் ஒரு வீடு கூட இருக்காது’ என்று நத்தம் காலனியைச் சேர்ந்த சேட்டு என்பவரிடம் கூறி அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 7-ஆம் தேதி திவ்யாவின் குடும்பம் சார்பாக ஐந்து பேர் சென்று திவ்யாவைத் தங்களோடு வரும்படி கேட்டபோது, அவர் “நான் என் கணவரை விட்டு வரமாட்டேன். வந்தால் என்னைக் கொன்றுவிடுவீர்கள்” என்று கூறி வர மறுத்துவிட்டார். இதற்குப் பிறகே, முழுபோதையிலிருக்க வைக்கப்பட்டிருந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் அன்று மாலை இறந்துள்ளார்.

மாலை 4 மணியளவில் நாகராஜின் பிணத்தைச் செல்லங்கொட்டாயிலிருந்து தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குக் கொணர்ந்த வன்னியர்கள், தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி ராஜா, கொட்டாவூர் மாது ஆகியோர் தலைமையில், அப்பிணத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு பிரதான சாலையின் வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டது. அதே போல பிரதான சாலையின் தெற்கே எஸ்.கொட்டாவூரிலும் மரம் வெட்டி சாலை மறிக்கப்பட்டது. சாலைக்கு அருகே செங்கல் சூளைக்காக வெட்டிப் போடப்பட்டிருந்த பனைமரங்களையும் சாலையின் குறுக்கே போட்டு சாலையை முழுமையாக மறித்தனர். போலீசார் அம்மரங்களைத் தாண்டி வராமல் அங்கேயே நின்று கொண்டனர்.

இந்நிலையில்தான், திட்டமிட்டபடி ஆங்காங்கிருந்து வரத்தொடங்கியிருந்த வன்னியர்களும், மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்களும் சேர்ந்து நத்தம் காலனியில் புகுந்து எல்லா வீடுகளையும் தாக்கத் தொடங்கினர். காலனியின் பெரும்பாலான ஆண்கள் வேலை காரணமாக வெளியூர்களில் இருந்தனர். ஊரிலிருந்த பெண்கள் உள்ளுரில் வேலைக்குச் சென்றிருந்தனர். குழந்தைகள் பள்ளிகளை விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம். நத்தம் காலனியைத் தாக்கி முடித்த பின்பு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா நகர், அங்கிருந்து உள்ளடங்கியுள்ள கிராமமான கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்களுக்கும் வாகனங்களில் தேடிச் சென்று தாக்குதல் நடத்தினர். மாலை 4.30 மணிக்கு மேல் தொடங்கிய தாக்குதல் ஒவ்வொரு ஊராக, இரவு 9.30 மணி வரை நீடித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் எல்லா வீடுகளும் தவறாமல் தாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டையும் மறுபடி செப்பனிட முடியாத அளவிற்குத் தீயிட்டு அழித்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் மற்றும் சில உணவுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிறகு பீரோ முழுமையாக உடைக்கப்பட்டிருக்கிறது அல்லது எரிக்கப்பட்டிருக்கிறது. கணிசமான வீடுகளிலிருந்த மோட்டார் சைக்கிள்கள், வாஷிங் மெஷின்கள் போன்றவையும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளிலுமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர், ஆடுகள் போன்றவற்றை வன்னியர்கள் தாம் கொண்டுவந்திருந்த வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். 4 கார்கள் மற்றும் 72 பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளன. கடப்பாரை, தடி, வெயிட் லிஃப்டிங் இரும்புத் தண்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், திறந்து விடப்பட்ட சில சிலிண்டர்கள் போன்றவை மூலம் தாக்குதலும் தீவைப்பும் நடந்துள்ளன. வன்னியர்கள் இத்தகைய தாக்குதலைச் சிறு எதிர்ப்பின்றி நடத்தியள்ளனர்.

தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையும் அதன் மீதான தாக்குதலும் :

தாக்குதல் நடந்த மூன்று ஊர்களிலுமுள்ள 98 சதவீதம் தலித்துகளுக்கு நிலம் இல்லை. இரண்டொருவர் தவிர வேறு எவருக்கும் அரசு வேலையோ நிரந்தர உத்தியோகமோ கிடையாது. கூலிகளாகவும் முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆண்கள் பெரும்பான்மையும் பெங்களுரில் கட்டிட வேலையிலும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற நகரங்களில் பிறவேலைகளும் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பணத்தில்தான் வீடு, ஓரளவு வீட்டுபயோகச் சாமான்களை ஈட்டியுள்ளனர். சாதி இந்துக்களின் சார்பின்றி தன்னிறைவுடன் சுயமாகப் பொருளாதார ரீதியாகச் சிறிதளவு முன்னேறியுள்ளனர். இந்நிலையில்தான் இக்கிராமங்களில் முழுக்க முழுக்க இந்த வீடுகளும் வீட்டுச் சாமான்களும் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. ஊரில் வெகு சில குடிசைகளைத் தவிர மற்றவை காங்கிரீட், மாடி மற்றும் ஓட்டு வீடுகள். இவற்றில் பெரும்பாலானவை அரசு உதவியோடு தம் பணத்தையும் கொண்டு கட்டிய வீடுகள். இத்தாக்குதலில் வன்னியர் தரப்பில் 2000 பேர் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர். ஏராளமான பைக்குகளும் வேன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய இத்தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட வன்னியர் கிராமங்களின் பெயர்கள் நம் குழுவினரிடம் தரப்பட்டன.

அவை:

1.செல்லங்கொட்டாய்
2.வாணியன்கொட்டாய்
3.கதிர்நாயக்கனஹள்ளி
4.புளியம்பட்டி
5.மொளகானூர்
6.நாயக்கன்கொட்டாய்
7.வெள்ளாளப்பட்டி
8.கொண்டம்பட்டி
9.சீராம்பட்டி
10.கிருஷ்ணாபுரம்
11.வன்னியக்குளம்
12.திம்பம்பட்டி
13.கம்மையநல்லூர்
14.சவுக்குத்தோப்பு
15.கொல்லம்பட்டி
16.குப்பூர்
17.செங்கல்மேடு
18.மாரவாடி பழையூர்
19.செம்மாந்தகுப்பம்
20.குறும்பட்டி
21.கொட்டாவூர்
22.செட்டியூர்
23.சோலைக்கொட்டாய்

மொத்தத்தில் 7-ஆம் தேதி இத்தாக்குதலை முதலில் தொடங்கிவைத்தவர்களில் ஒருவரான முருகன் என்பவர் ஏற்கனவே தலித் பெண் ஒருவரைப் பாலியல் வன்முறை செய்து கொன்ற வழக்கில் தொடர்புடையவர். மற்றொருவர் வாணியன்கொட்டாயைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சீனிவாசன் ஆவார்.

ஏற்கனவே, தலித் மக்களோடு பழகுவதோடு, அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்லும் வன்னியர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று தலித் மக்கள் கூறும்போது சாதியின் ஆகிருதி எந்த பூச்சுகளாலும் மறைந்துவிடுவதில்லை என்பதையே அறியமுடிந்தது. ‘ஒண்ணா மண்ணா பழகினால் சாதி ஒன்றாகிவிடுமா?’ என்று கேட்டு தாக்கியதாக அழுதார் ஒரு பெண். ‘சேர்த்து வைச்சிருந்ததெல்லாம் வெந்துபோச்சு. இனி எங்களைத்தான் வேகவைக்கணும்’ என்று அழுதார் இன்னொரு பெண். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் திருமணம் மற்றும தீபாவளிப் பண்டிகைக்காக முன்பணமாக எடுக்கப்பட்ட 20,000 ரூபாயும், சிறு வியாபாரமாக இயங்கிவந்த கடை, மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவரின் ஒரு வார வசூல்நிதி போன்றவையும் கொள்ளையில் பறிபோனதை அறியமுடிந்தது. மொத்தத்தில் தலித்துகளின் பொருளாதார மேம்பாடு இத்தாக்குதலில் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதே போன்று 31-08-1995இல் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் 300 தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும், அம்மக்களின் பொருளாதாரத் தற்சார்பே குறிவைத்துத் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலிலும் அதுவே நடந்துள்ளது. ஏறக்குறைய பத்து கொடியங்குளத்திற்கு இணையாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.


கண்டறிந்தவை :

1. இப்பகுதியில் தலித்-வன்னியர் சாதிக் கலப்பு மணங்கள் மட்டுமின்றி, பிற சாதிக் கலப்பு மணங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அவற்றிற்கு ஆதிக்கச் சாதித் தரப்பின் ஏற்பின்மையோ, அவ்வப்போதான எதிர்ப்போ மட்டுமே இருந்து வந்துள்ளன. மாறாக, இதுபோன்ற பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை இத்தகைய வன்முறை நடத்தப்பட்டதற்குப் பின்னணியாய் அரசியல் காரணம் இருந்திருக்கிறது. அதாவது, 2012 சித்திரா பௌர்ணமியன்று வன்னியர்களின் சாதி உணர்ச்சியை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு “வன்னியர் பெண்களைக் காதலித்து மணக்கும் பிற சாதியினரை (தலித்துகளை) அடக்கவேண்டும். அவ்வாறு அடக்குபவர்களுக்குக் கட்சி துணை நிற்கும்” என்று பேசினார். இதுவரையிலும் சாதிக்கலப்பு மணத்திற்கு எதிராகப் புழுங்கிக் கொண்டிருந்த வன்னியர்களுக்கு குருவின் இப்பேச்சு, உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது. தருமபுரி தாக்குதலுக்கும் இப்பேச்சே முக்கியக் காரணமாய் இருந்திருக்கிறது.

2. மேலும் நவம்பர் 4-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் திவ்யா-இளவரசன் திருமணத்திற்கு எதிராகக் கூடிய வன்னியர்களின் கூட்டத்திலும், 7-ஆம் தேதி 3 தலித் கிராமங்கள் மீதான தாக்குதலிலும் தாக்குதலுக்குப் பிறகு வன்னியர்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், பா.ம.க. முன்னாள் எம்.பி., கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பதிலிருந்து இந்தப் பின்னணியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வன்னியர்களின் இந்த வெறிச் செயல்களுக்கு குருவின் இப்பேச்சு நேரடியாகவும் மறைமுகமாகவும் உளவியல் பலத்தைத் தந்திருக்கிறது. இளவரசன்-திவ்யா திருமணத்திற்கு மட்டுமல்ல, நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த காலங்களில் இதுபோன்ற சாதிக் கலப்பு மணங்கள் மீதான கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவும் இந்தத் தருணத்தையே வன்னியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

3. நத்தம் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு வெகு தொலைவிலிருந்த கொண்டம்பட்டியைத் தேடிச் சென்று தாக்கிய காரணம் எதுவென்றும் அறியமுடிந்தது. அதாவது, கடந்த ஆண்டு கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி என்ற தலித் இளைஞர், வன்னியர்; சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடியமர்ந்துவிட்டார். அப்போது நேதாஜி வீட்டை மட்டும் தாக்கிவிட்டுச் சென்ற வன்னியர் கூட்டம், இப்பொழுது இதுபோன்று திருமணம் நடந்த ஊர்களையெல்லாம் நினைவுபடுத்திச் சென்று தாக்கியிருக்கிறது. அந்த வகையில்தான் கொண்டம்பட்டி முழுஊரையும் துவம்சம் செய்திருக்கிறது. குறிப்பிட்ட ஒருவர் மீதான கோபத்திற்காக கூட்டு வன்முறையைத் தலித் சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. வயல்களில் தானியக் கதிர்களை எந்தப் பறவைகளும்; நெருங்கிவிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காக, ஒரு காகத்தைக் கொன்று வயலின் நடுவே கட்டித் தொங்கவிடுவார்கள் விவசாயிகள். அதுபோன்று தனித்தனியே அச்சுறுத்தி இதுபோன்ற காதல் மணங்களைத் தடுப்பதைவிட, ஒரு ஊரையே அழிப்பதன் மூலம், அதுபோன்ற எண்ணமே இனி தலித்துகளுக்கு எழக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

4. இத்தாக்குதல் திவ்யாவின் தந்தை நாகராஜ் இறந்ததை ஒட்டி நடந்த உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு போன்று காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறாக, நாகராஜின் சாவை ஒரு சாக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப நாகராஜ் மரணத்திற்குத் தூண்டப்பட்டிருக்கலாம் என்று எங்கள் குழு கருதுகிறது. நாகராஜின் பிணத்தோடு மறியல் செய்யப்பட்டது என்பதுதான் உண்மையே தவிர, அவரது மரணம் தற்கொலைதானா என்று ஆராய வேண்;டியுள்ளது. எனவே, நாகராஜின் பிரேதப் பரிசோதனை, அவர் இறப்பதற்கு முன்பு அவருக்குச் சொந்த சாதியினரால் தரப்பட்ட நெருக்கடிகள், அவமானங்கள் பற்றியெல்லாம் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டுமென்று, தலித்துகளை நோக்கிக் கெடு விதிக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி திவ்யா வரமறுத்த நிலையிலும், நாகராஜின் மரணத்தினாலும் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது. முதலில் நாகராஜின் மரணமே தற்கொலைதானா? என்று ஆராயவேண்டியிருக்கிறது. நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் நடந்ததிலிருந்தே அவருக்கு மனரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. அந்த நிலையில்தான் 7-ஆம் தேதி தன் மகள் திரும்பி வரமறுத்த நிலையில் அவர் இறந்திருக்கிறார். இந்த மரணம் ஊர்க்காரர்களின் நெருக்கடிகளுக்குப் பயந்து கூட நடந்திருக்கலாம். மேலும் அவர் கடைசி 4 நாட்களாகத் தொடர்ந்து குடிபோதையில் வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் இறந்திருக்காவிட்டாலும் கூட அன்று மாலை தாக்குதலுக்கு வாய்ப்பிருந்தது என்றே அந்த ஊர்க்காரர்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால், நாகராஜின் சாவு அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகிப் போனது. அதனால்தான் கடப்பரை உள்ளிட்ட ஆயுதங்கள், மூன்று கிராமங்களை எரிக்கக் கூடிய அளவிற்குப் பல லிட்டர் பெட்ரோல், தின்னர் முதலியவை சேகரிக்கப்பட்டு, அதற்கான ஜனத்திரட்சியும் அங்கே மையம் கொண்டது. நத்தம் காலனியில் மட்டும் 150 பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலொழிய இவ்வளவு பெட்ரோல், பாட்டில்கள், திரிகள், ஆயுதங்கள் கொண்டு இத்தகைய பெருந்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கமுடியாது. இரண்டொருவர் தாக்கப்பட்டதைத் தவிர்த்து, யாதொரு உயிர்ச்சேதமும் ஏற்படாவண்ணம் தலித்துகளின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

5. இத்தாக்குதலைத் தடுப்பதில் காவல்துறையும் அதன் உளவுப்பிரிவும் மாவட்ட நிர்வாகமும் பெரிய அளவில் தோல்வியடைந்திருக்கின்றன. நாகராஜின் பிணத்தை வைத்துக்கொண்டு வன்னியர்கள் மறியல் செய்யும்போது, சாலையில் வெட்டிப்போட்ட மரத்தைத் தாண்டி போலீஸ் வராமல் நின்றுகொண்டது. சாலையில் மரங்களைப் போட்டிருந்தபோதே அங்கே 300 போலீஸ் வந்துவிட்ட போதிலும், அவற்றைத் தாண்டிவந்து, சில மணிநேரங்கள் நீடித்த தாக்குதலைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
6. தருமபுரி மாவட்டத்தில் 1987-இல் பிசிஆர் சட்டத்தின் கீழ் ஒரு புகார் மற்றும் 1989 முதல் 2012 வரையில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 291 புகார்கள்; என பதிவானவை மொத்தம் 292 புகார்கள். இவற்றில் காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டவை 166 மற்றும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவை 81 என்ற நிலையில் வெறும் 10 புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பதிவான புகார்களில் 3.3 சதவீதப் புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மீதான காவல்துறையின் அக்கறையின்மைக்குச் சான்றாக அமைகிறது.

7. இப்பகுதி முன்பு நக்சல்பாரிகள் இயக்கம் செயற்பட்ட பகுதி என்ற முறையில், கியூ பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்ற முறையில் கடந்த ஒரு மாதமாகப் புகைந்து வந்துள்ள இப்பிரச்சியை அது அறியத் தவறியிருக்கிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து 7 பேர் கொண்ட போலீஸ் காவல் இருந்துவந்தும் முன்கூட்டியே அறிந்து அத்தாக்குதலைத் தடுக்கத்தவறியிருக்கிறது காவல்துறை. ஏறக்குறைய 3 டிஎஸ்பி-க்களுடைய கவனத்தின்கீழ் இப்பகுதி இருந்தபோதிலும் இத்தாக்குதல் தடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


8. இரவு 9.30 மணிவரையிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இரவு 11 மணியளவில் லாரி ஒன்றை எடுத்துவந்து அண்ணா நகர் தலித் குடியிருப்புகளிலிருந்த ஆடுகளை வன்னியர்கள் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, தாக்குதல் நடந்துமுடிந்த நெடுநேரம் வரையிலும் கூட காவல்துறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதையே அறியமுடிகிறது. மறுநாள் கைது செய்யப்பட்ட 92 பேரையும் கூட, வெளியூர் பணியிலிருந்து திரும்பிய மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க் வந்துதான் கைது செய்திருக்கிறார். அஸ்ரா கர்க்கின் பணியைப் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூர்ந்ததைப் பார்க்கமுடிந்தது.

பரிந்துரைகள் :

1. கற்பனைக்கெட்டாத தாக்குதல் என்ற வகையில் இக்கிராமங்களின் சேதங்களைப் பார்வையிடத் தமிழக முதலமைச்சர் அங்கு நேரடியாகச் செல்லவேண்டும். அவரது வருகையினால் அரசு எந்திரம் துரிதமாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனரீதியான ஆறுதலும் கிடைக்கும்.

2. தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (1989) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுவதோடு, தாக்குதல் நடத்தியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3. அரசு உடனடியாக அதிவிரைவு தனிநீதிமன்றத்தை இம்மூன்று கிராமங்களில் ஏதேனுமொன்றில் அமைத்து, நீதிவிசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். (உ-ம்) ஆந்திர மாநிலம் சுண்டூர்ப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிநீதிமன்றம்.
4. 2012 சித்திரா பௌர்ணமியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு கலப்புமணத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேச்சே, இத்தகைய தாக்குதலுக்கு ஊக்கமளிக்கிறது. எனவே, காடுவெட்டி குரு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
5. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும் அண்மைக் காலமாக இதே போன்று கலப்புமணத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சடடத்திற்குப் புறம்பான இது போன்ற பேச்சுகளையும், அமைப்புகளையும் தடை செய்யவேண்டுமென்று கோருகிறோம்.

6. கடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள இம்மூன்று கிராமங்களையும் பேரிடர் அழிவாக அறிவித்து, புதிய வீடுகளை முழுமையான அளவில் கட்டித்தரவேண்டும். மறுகுடியமர்வு நடத்தப்படும் வரை அம்மக்களுக்கான மாற்று வாழிடத்தை அரசே உறுதி செய்து தரவேண்டும். சேதங்களை உரிய முறையில் மதிப்பிடும் வகையில், தகுதிவாய்ந்த இழப்பு மதிப்பீட்டுக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7. தாக்குதலாலும் தீயினாலும் மாணவர்களின் சான்றிதழ்களும் மக்களின் குடும்ப அட்டை, சொத்துப்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தரும் வகையில் தனி அதிகாரிகளை அந்தந்த ஊர்களிலேயே அமர்த்தி வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8. பொருளாதார ரீதியான தாக்குதல் என்ற முறையில் சேத மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்குமென்று இக்குழு கருதுகிறது. அதனால் அரசு வழங்கியுள்ள ரூ.50,000/- போதுமானதல்ல. எனவே, வீட்டிற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், நிலமும் வழங்கவேண்டும்.

9. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை இனங்கண்டு அவற்றைத் தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.

10. இத்தாக்குதலைத் தடுக்க மாவட்ட காவல்துறையும் நிர்வாகமும் தவறின என்ற முறையில் அவர்கள் மீது தனிவிசாரணை மேற்கொள்ளவேண்டும். மேலும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அடிப்படையில் கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இப்பாதிப்புகளிலிருந்து உளவியல் ரீதியாக அவர்களை மீட்டெடுக்கும் வகையில், உரிய ஆற்றுப்படுத்தலுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கத் (Guidance and Counselling) தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.

********

தொடர்புக்கு :

1. Dr.C.Lakshmanan,
Co-ordinator, Dalit Intellectual Collective, Chennai 
lchinnaiyan@gmail.com
9884527359

2. Stalin Rajangam, Writer,
Intellectual Circle for Dalit Actions, Madurai
stalinrajangam@gmail.com
9994335339

(புகைப்படங்கள் : யுவபாரதி)


********

தொடர்புடைய சுட்டி  : புகைப்படங்கள்

https://www.facebook.com/media/set/?set=a.439572466108870.106695.100001683617765&type=1

Monday, 19 November 2012

கலப்புமண எதிர்ப்பு அரசியல் - விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

- ஸ்டாலின் ராஜாங்கம்

2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் சாதிமீறிக் காதலித்த காரணத்திற்காகத் தலித்தான முருகேசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகி ஆகிய இருவரையும் ஊரின் ஆதிக்க சாதியினர் கொடூரமாகக் கொலைசெய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமுகமான ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது. இக்கொடூரக் கொலையில் ஈடுபட்ட ஊர்க்காரர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அக்கட்சி சட்டரீதியாக உதவியதாகவும் கூறப்பட்டது. புகாரை அந்தக் கட்சி இதுவரை மறுக்கவில்லை. ஆனால் கடந்த 2012 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில் வன்னியர் பெண்களைப் பிற சாதி ஆண்கள் காதலிக்கவோ மணக்கவோ அனுமதிக்கக் கூடாது என அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு பேசிய சாதிமறுப்புத் திருமணம் குறித்த அக்கட்சியின் நிலைபாடு தெளிவாகிவிட்டது. புதுக்கூரைப்பேட்டைக் கிராமத்தில் நடந்த இரட்டைக்கொலை விவகாரத்தில் அக்கட்சியின் மௌனத்திற்கான காரணத்தையும் குரு இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.

அரசியல் மேடையொன்றில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக இது வெளிப்படையாக விடுக்கப்பட்ட அறைகூவல். வடமாவட்டங்களில் அரசியல் ஆதரவோடும் சாதி வெறியோடும் ஆதிக்க சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இப்படுகொலைகளைக் குறித்து இமையம் எழுதியுள்ள ‘பெத்தவன்’ என்ற தேர்ந்த சிறுகதையும் (உயிர்மை, செப்டம்பர் 2012) அண்மையில் வெளியாகியுள்ளது.

இதேபோலக் கடந்த சில வருடங்களாகக் கொங்கு மண்டலத்தின் ஆதிக்க சாதியான கொங்குவேளாளர் அமைப்புகளில் சில வெளிப்படையாகச் சாதி மறுப்புத் திரு மணத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன. சாதி கடந்த காதல், திருமணங்களைக் கொலை உள்ளிட்ட கொடூரமான வழிமுறைகளின் மூலம் தடைசெய்துவரும் அச்சாதியினர் அரசியல்ரீதியில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு சாதிமறுப்புத் திருமணங்களுக்கெதிரான தம் சட்ட விரோதச் செயல்பாடுகளுக்கு அரசின் அங்கீகாரத்தை வெளிப்படையாகக் கோரத் தொடங்கியுள்ளனர். ஆதிக்க சாதியினரிடமிருந்து தலித்துகளைப் பாதுகாக்கும் தலித் வன் கொடுமைச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி கடந்த பல வருடங்களாக அரசை வலியுறுத்திவரும் சில கொங்கு வேளாளர் அமைப்புகள் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி கோவையில் நடத்திய கூட்டமொன்றில் கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகச் செய்திகள் வந்தன. கலப்பு மணச் சட்டத்தை ரத்துசெய்யும்படி அரசைக் கோரியுள்ள இந்த அமைப்புகள் தமக்கென இணையதளம் ஒன்றையும் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.

கொங்குப் பகுதியின் முதன்மை ஆதிக்க சாதியினரான கொங்கு வேளாளர்களை அரசியல்ரீதியில் ஒன்றிணைக்கவும் சாதி அடையாளத்தை ஓட்டுவங்கி அரசியலுக்குப் பயன்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இது போன்ற நடவடிக்கைகள். சமூக மாற்றத்தின் காரணமாக இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காதல், கலப்பு மணங்களைக் கண்டு ஆதிக்கச் சாதிகள் பதற்றமடைந்திருப்பதன் அடையாளமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம். எண்ணிக் கையில் பெரும்பான்மைச் சாதிகள் மட்டுமல்லாது எண்ணிக்கையில் சிறுபான்மை இந்து சாதி அமைப்புகளும் இதே கோரிக்கையை ஆங்காங்கு எழுப்பத் தொடங்கியுள்ளன. சாதி ஒதுக்கீடுகளும் பிரதிநிதித்துவமும் ‘சமூகநீதி’யாகிவிட்ட நம் சூழலில் தத்தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு சாதியும் தங்களின் எண்ணிக்கையைச் சிதறிவிடாமல் காக்க விரும்புகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் பெரும் எழுச்சிபெற்றுவரும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல், ஆதிக்க சாதியினருக்குப் பெரும்பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காதல் திருமணங்கள் மூலம் சாதியமைப்பு சிதைவதைக் கண்டு சாதியமைப்புகள் வெளிப்படையாக இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளன. சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் இறுக்கமானதாக மாற்றுவதற்குமான முயற்சிகளை ஆதிக்க சாதி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இவை போன்ற நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் வாழும் தலித்துகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமில்லை. இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் அந்த அமைப்பு இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கங்களுக்கு வெளிப்படையாகச் சவால்விட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அறிவு ஜீவிகளும் ஜனநாயக சக்திகளும் அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அம்பேத்கர் 1916ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் இந்தியாவில் சாதியின் அமைப்பியக்கம் பற்றிச் சமர்ப்பித்த கட்டுரையில் சாதி முறையின் தோற்றுவாய்க்கும் அது நீடித்திருப்பதற்குமான காரணங்களில் முக்கியமானதாக அகமணமுறையைக் குறிப்பிட்டார். ஒத்த குழுவில் ஆண் பெண் விகிதத்தில் நிகழும் வித்தியாசம் அதையொட்டிப் பெண்கள்மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை ஏறுதல், ஆண்களின் துறவு, வயது குறைந்த பெண்ணை மணம் முடித்தல் போன்ற போக்குகளை இதன் தொடர்ச்சியாக விவரித்தார். 1936இல் சாதிஒழிப்பு என்ற தலைப்பில் தயாரித்த உரையொன்றில் சாதி யொழிப்புக்கு உண்மையான வழி கலப்புமணம்தான் என்னும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார். இதைத் தவிர வேறெதுவும் சாதியைப் பலவீனப்படுத்த முடியாது என்றும் இதைப் புரிந்துகொள்வதே நோயின் மூலத்தைக் கண்டறிவதாகும் என்றும் அறிவித்தார்.

சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதியைவிடத் தீரம்மிக்கவன். இச்சூழல் சார்ந்து ஏற்படும் சவாலான நிலையையும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சமூகத்தின் பொதுப் புத்தியாகிவிட்ட சாதியச் சூழலைச் சமரசமில்லாமல் எதிர்கொள்ளும் சீர்திருத்தவாதியென்று யாரையும் நம்மால் குறிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளிலிருந்து நூலிழை இடைவெளியிலேயே அறிவுலகமும் உலகமும் செயற்பட்டுவருகிறது.

பிராமணரல்லாதோரின் சாதியமைப்பு பற்றிய அறிவுத்துறை விவாதங்கள் சாதியமைப்பைப் பாதுகாப்பதில் அவற்றுக்குள்ள பங்களிப்பைக் குறித்து முறையாக விவாதிப்பதைத் தவிர்க்கின்றன. இந்த விஷயத்தில் எல்லோருமே மௌனம் காக்க விரும்புகிறார்கள். கலப்பு மணத்திற்கு எதிரான தற்போதைய சாதி இந்துக்களின் குரல்கள் அரசியல் தளத்தில் பேசப்பட்டு வந்த சாதி ஒழிப்பு அல்லது சாதி மறுப்பு என்னும் கருத்தியலை தீவிரமாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.

சாதி மறுப்புத் திருமணம் என்பது கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழக அளவில் இயக்கரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்த ஒன்று. பிராமண ஆதிக்கத்திற்கெதிராகத் தமிழகத்தில் உருவான பிராமணரல்லாத இயக்கத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்தது. இப்போது அந்த அடையாளத்தின் எச்சங்கள்கூட இல்லை. சாதி மறுப்பு கைவிடப் பட்டுச் சடங்கு மறுப்பு என்பதாகச் சுய மரியாதைத் திருமணங்களின் சீர்திருத்த எல்லை சுருங்கிவிட்டது. தாலி மறுப்பு, சடங்கு மறுப்பு போன்ற சாதியக் கட்டுமானத்தில் எந்த விரிசலையும் ஏற்படுத்தாத சுயமரியாதைத் திருமணங்களைக் கண்டு ஆதிக்கசாதியினர் ஒருபோதும் பதற்றமடைவதில்லை. அத்தகைய திருமணங்கள் சமூகக் கட்டமைப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாதவரை அவற்றை வரவேற்பதிலும் அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இருந்து வந்த சமூகப் பாதுகாப்பு பலவீனமடைந்ததற்குப் பின்னால் உள்ள அரசியல்ரீதியான காரணங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

ஆனால் சாதாரண மனிதர்களிடையே சாதி கடந்த காதல், கலப்பு மணங்கள் இயல்பான செயல்பாடுகளாக நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இத்திருமணங்கள் பற்றிய பிரகடனங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதுமில்லை. சாதி கடந்த காதல், கலப்புமணத்திற்கு எதிரான ஆதிக்க சாதியினரின் வன் முறை சாதியத்தின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. சாதிக்கட்டுமானத்தை மீறும் சொந்தக் குழந்தைகளைக் கொலைசெய்தாவது சாதியின் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஆதிக்க சாதியினர் தயங்குவதே இல்லை. அதைப் பற்றிய பெருமிதமும் சாதிய மனத்தின் ஒரு கூறு என்றே சொல்லலாம். நாகரிகச் சமுதாயம் சாதிய வன்முறைகளுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் எதிராக இருப்பதுதான் சாதியத்திற்குப் பெரிய சிக்கல். முன்புபோல அவற்றை எளிமையாகச் செய்ய முடியவில்லை. ஆகவேதான் அதற்குச் சட்ட அங்கீகாரத்தைக் கோருகிறார்கள். இதற்கு முதல் காரணம் சமூக அடிநிலைச் சக்திகளான தலித்துகளுக்குக் கல்விரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. நவீன வாழ்வு சார்ந்த மாற்றங்கள் மற்றொரு முக்கியக் காரணம். இதன் விளைவாகக் காதலும் கலப்பு மணங்களும் திட்டமிடப்படாத, இயல்பான போக்காக வளர்ந்து வரு கின்றன. காதல், திருமணம், குடும்பம் சார்ந்த மதிப்பீடுகளும் கருத்தியல்களும் வேகமாக மாறிவருகின்றன.

சாதி கடந்த திருமணங்களுக்கு ஆதரவாக இருந்துவந்த, முன்பு சாதி ஒழிப்பை ஒரு வேலைத்திட்டமாகக் கொண்டிருந்த திராவிடக் கட்சிகள் இவ்விசயத்தில் மேற்கொண்டு வரும் மௌனம் பரீசிலிக்கத்தக்கது.

சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எழுந்துள்ள இக்குரல்களில் தீவிர தலித் எதிர்ப்பு வேர்கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதனால்தான் திராவிட இயக்க அமைப்புகளோ தமிழ்த் தேசிய அமைப்புகளோ சாதியமைப்புகளின் கலப்புமண எதிர்ப்பைத் தீவிரமாக எதிர்கொள்ளவில்லை. பெரியார் திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மேற்படி கூட்டம் நடந்த மண்டபத்துக்கு வெளியே அதைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களைத் தமிழகக் காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற பிரச்சினைகளின்போது அவற்றைக் கண்டனம் செய்வதன் மூலம் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். கண்டனம் தெரிவிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சடங்காக மாறிவிட்ட சூழலில் குறிப்பிட்ட பிரச்சினையின் கருத்தியல் பின்னணியையும் அது ஏற்படுத்தி வரும் மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்வது அவசியம். இதற்கான விவாதங்களை அறிவுஜீவிகள் மட்டுமே உருவாக்க முடியும். மேற்கண்ட சாதியினர் சாதியமைப்பால் பயன்படுத்தப்படுகிறவர்கள் என்ற கருத்தைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இன்றைய சாதியமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதில் இவர் களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இந்நிலையில் பிராமணரல்லாத சாதிகளின் குரலாகச் செயல்பட்ட திராவிட இயக்கங்களின் கருத்தியல் பின்னணிகளைப் பேசுவதில் ஈடுபட்டு வந்த எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ் உள்ளிட்ட திராவிட சார்பு மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் தற்போதைய சூழலில் இயக்கக் கருத்தியல் குறுக்கீடுகளை நிகழ்த்த வேண்டியது அவசியம்.

ஒரு காலக்கட்டத்தில் திராவிட இயக்கத்தால் சாதி மறுப்புத் திருமணங்கள் கொள்கையளவில் வற்புறுத்தப்பட்டிருந்தாலும் அந்த இயக்கத்தின் மையச் சக்திகளாக விளங்கிய ஆதிக்க சாதிகள் அதை ஏற்கவில்லை. சாதியை ஒழிப்பதற்கான வழிமுறைகளில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட சமபந்தி போஜனம், கலப்புமணம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் ஆதரவில்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியைத் தன்னுடைய சாதி ஒழிப்பு (1936) என்னும் நூலில் எழுப்பும் அம்பேத்கர் இவ்விரண்டு கொள்கைகளும் இந்துக்களின் புனிதமான நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருப்பதானாலேயே அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிறார். இங்கிருக்கும் ஒவ்வொரு சாதியினரும் தங்களை இந்துக்களாகக் கருதிக்கொள்கிறார்கள். இந்து மதத்தின் மொத்தப் பிரதிநிதியாகப் பிராமணர்கள் காட்டப்பட்டு எதிர்க்கப்பட்டாலும் பிற இந்து சாதிகளிடம் இந்து மனோபாவமே செயற்படுகிறது. ஓர் இந்துவுக்கு சாதியே முதல் அடையாளம். கலப்புமணம் பற்றிப் பேசும் அம்பேத்கர் சாதியைப் போற்றும் மதத்தைக் கற்பிக்கும் சாஸ்திரங்களை எதிர்க்க வேண்டும் என்கிறார்.

சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது, அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும் என்றார். இங்குச் சாஸ்திரத்தின் குறியீடான பிராமணன் மட்டுமே புறக்கணிக்கப்பட்டான். மாறாக சாஸ்திரம் கற்பிக்கும் சாதி அதிகாரம் புறக்கணிக்கப்படவில்லை. ஒவ்வொரு சாதி இந்துவின் உளவியலிலும் சாதி என்னும் அதிகாரம் இவ்வாறுதான் குடிகொண்டிருக்கிறது. அதுதான் இன்றைய எதிர்ப்பின் கருத்தியல் அடிப்படை. இவ்விடத்தில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வந்த சாதி அமைப்புகளே இப்போது கலப்புமண எதிர்ப்பிலும் ஒருசேரக் குரலெழுப்புகின்றன. கலப்புமண எதிர்ப்பைக் கூர்மையாக்கும் கொங்கு வேளாளர் அமைப்பும் தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரிவரும் தேவரினப் பாதுகாப்புப் பேரவை போன்ற பிற சாதி அமைப்புகளும் அணிசேர்க்கத் தொடங்கியுள்ளதை இங்குக் கவனிக்க வேண்டும். மறுபுறம் தம் சாதி பற்றி இந்த அமைப்புகள் உருவாக்கிப் பரப்பிவரும் பிம்பங்கள் கூர்ந்து கவனக்கத்தக்கவை. தம்மை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பு ஒவ்வொரு சாதிக்கும் இருக்கிறது. அதற்கான வரலாற்றுச் சான்றுகளை அவை தேடுகின்றன. ஆனால் இட ஒதுக்கீடு முதலான சலுகைகளைக் கோருவதற்காகத் தங்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்ளவும் முற்படுகின்றன. தீரன் சின்னமலையைக் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்தவர் என நிறுவுவதில் வெற்றி பெற்றுவிட்ட கொங்கு வேளாளர் அமைப்புகள் தம்மை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென நீண்ட காலமாகக் கோரி வருகின்றன. ஆதாயங்களுக்காகத் தம்மைத் தலித்துகளைவிட மோசமாக ஒடுக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்வதற்கும் தயங்குவதில்லை. பலவேளைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு இணையாகத் தங்களுக்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர்.

பெரியாரியத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் சாதி கடந்த திருமணத்திற்கெதிரான இத்தகைய அமைப்புகளின் நடவடிக்கைகளைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்குக் காரணமுண்டு. வாக்கு வங்கி அரசியல் முக்கியக் காரணம். சாதி ஆதிக்கத்தையும் தங்களுடைய நலனையும் ஒருசேரத் தக்கவைத்துக்கொண்ட இக்கட்சிகள் இச்சாதியினரையோ சாதி அமைப்புகளையோ பகைத்துக்கொண்டு அரசியல் நடத்த முடியாது. இந்நிலையை உருவாக்கியது இக்கட்சிகளே. அரசியல் பெரும்பான்மைக்காக எண்ணிக்கை சிதையாமல் காப்பது, சிறு சிறு குழுக்களை ஒன்றாக்குவது என்றெல்லாம் சாதிப் பெரும்பான்மை வாதம் கூர்மை பெற்று வருகிறது. தமிழகத்தில் மதச் சார்புடைய கட்சி செல்வாக்குப் பெறமுடியாமல் போகலாம். ஆனால் சாதியைப் பகைத்துக்கொள்ளும் எந்தக் கட்சியும் இங்கு ஆட்சிக்கு வர முடியாது என்பதே கசப்பான உண்மை.


(நவம்பர் 2012 காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை)

Wednesday, 7 November 2012

பறையன் என்னும் சொல் மீதுள்ள பகை

- ஸ்டாலின் ராஜாங்கம்

கடந்த செப்டம்பர் 1, 2008 தேதியிட்டு வெளியான 'அவுட்லுக்' இதழில் காஷ்மீரில் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையைக் குறிக்கும் கட்டுரைக்கு A Pariah's Profession (பறையர் தொழில்) என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் ஷபா நக்வி. இச்சொல் இந்தியாவின் தென்கோடியில் வாழும் தீண்டப்படாத சாதியைக் குறிக்கக்கூடிய ஒன்றென இந்தியாவின் முன்னணி ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007 பிப்ரவரி ஐந்தாம் தேதி அவுட்லுக்கில் புகைபிடிப்பவர்கள் குறித்து வெளியான அட்டைப்படக் கட்டுரையில் Pariah's என்னும் சொல்லைக் கையாண்டிருந்தனர். தமிழகத்திலிருந்து தலித் அறிவுஜீவிகள், இயக்கங்கள், அக்கறையுடைய ஊடகங்கள் தெரிவித்த எதிர்ப்பினை ஒட்டி இருவாரங்கள் கழித்து இரண்டு மறுப்புக் கடிதங்களை வெளியிட்டிருந்தது. இதோடு சென்னையில் தன் கிளையைத் தொடங்கியுள்ள 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் தலைப்பாகவும் வாக்கியத்தில் இடம்பெறும் சொல்லாகவும் இதனைப் பலமுறை கையாண்டுவிட்டது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியாவின் நடுப்பக்கக் கட்டுரைத் தலைப்பிலும் (Nuclear Pariah No More) செப்டம்பர் 14ஆம்தேதி பக்கம் 13இல் வெளியாகியுள்ள From Pariah To Pasha a film journalist என்னும் தலைப்பிலும் பத்தாம் பக்கம் வெளியான செய்திக்கட்டுரை ஒன்றிலும் இப்பெயரைக் கையாண்டுள்ளது. இப்போது NDTV மீதும் இதே புகார் எழுந்துள்ளது. முன்பொருமுறை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை 'இண்டர்நேஷனல் பறையன்' என்று கூறிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிமீது இப்பெயரைப் பயன்படுத்தியதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு அகில இந்தியப் பிரச்சினையாக மாறியது. அப்போதே இச்சொல்லின் பொருள் குறித்த கவனம் ஏற்பட்டிருக்கிறது. SC / ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (1989) இச்சொல்லைப் பயன்படுத்துவது குற்றமாகும். இட ஒதுக்கீடு போன்றவற்றிற்கு எதிரான கொள்கையையுடைய வட இந்திய ஊடகங்கள் இச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை இயல்பானதாகப் பார்க்க இயலவில்லை. இந்நிலைமையை மாற்றப் பெரிய அளவிலான எதிர்ப்பு இருந்தாலொழிய வழியேதும் பிறக்காது. ஆனால் இதைக் குறித்துத் தமிழகத்தில் அரசியல்ரீதியான எதிர்வினைகள் மட்டுமல்ல அறிவுஜீவிகளின் எதிர்வினைகளும் இல்லையென்பதுதான் சூழலின் தேக்கத்தைக் காட்டுகிறது.

பறையன் (Pariahs) என்னும் சொல் தமிழகத்தின் பூர்வகுடியினரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதோடு, இந்திய அளவில் தீண்டப்படாத சாதியினரைக் குறிக்கும் பொதுச்சொல்லாகவும் சர்வதேச அளவில் விலக்கப்பட்டவர்களையும் ஏதாவதொரு வகையில் இழிவானவர்களைக் குறிக்கும் எதிர்மறைச் சொல்லாகவும் கையாளப்படுகிறது. விரிவான பொருளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் இச்சொல் தமிழிலிருந்து சென்றதாகும். தமிழில் புரிந்துகொள்ளப்படும் பொருளிலேயே எல்லா இடங்களிலும் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்பது உண்மையேயாயினும், பயன்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் மோசமான பொருளைத் தரும் விதத்திலேயே கையாளப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். தமிழகத்தில் பறையன் என்னும் சொல்லின் பொருள் என்ன? சாதியா இனமா கருத்தா என்று தேடிப் பார்த்தால் இவை எல்லாவற்றோடும் தொடர்புடைய சொல்லாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தான் இப்பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினையை உள்ளடக்கிய சமூகப் பண்பாட்டுப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

 ஐரோப்பிய மொழிகளுக்குள் நுழைந்து ஆங்கிலத்தில் அகராதிச் சொல்லாக மாறிவிட்டது இச்சொல். அதனால் சாதியடிப்படையைக் குறிக்கும் சொல் என்பதையறியாமலேயே உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய மொழிகளுக்குள் இச்சொல் சென்ற மூலத்தினைச் சரியாகக் கண்டுணர முடியவில்லை. போர்த்துக்கீசிய அல்லது பிரெஞ்சு மொழிவழியாக ஆங்கிலத்திற்குச் சென்றிருக்க வேண்டும் எனத் தோன்று கிறது. கி.பி 1613இல்தான் ஆங்கிலத்தில் இச்சொல் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்டது என்று கூறுகிறார் ரவிக்குமார் ('தலித்' பிப்ரவரி 2007). மேலும் பிரெஞ்சுப் புரட்சியின் 'பயங்கர'ங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்தியாவுக்கு ஓடிவந்து 1729 முதல் 1823 வரை தென்னிந்தியாவில் கிறித்துவ மதப் பிரச்சாரம் செய்த கிறித்துவப் பாதிரியாரான ஜே. . துபுவா (1770-1838) பறையர்களைக் குறித்த இழிவான சித்திரத்தோடு பறையன் என்னும் சொல்லை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியதாக ராஜ்கௌதமன் கூறுகிறார். ('தலித்திய விமர்சனக் கட்டுரைகள்', பிப்ரவரி 2005, காலச்சுவடு) இதைக் குறித்து மேலும் அறிய ஐரோப்பியர்களின் பயணக் கட்டுரைகளையும் மிஷினரிகளின் குறிப்புகளையும் ஆவணக்காப்பகத்தின் ஆதாரங்களையும் ஆழமாகத் தேட வேண்டியிருந்தது. கி.பி 1498இல் இந்தியாவின் தென் பகுதியில் வந்திறங்கிய ஐரோப்பியர்களில் போர்த்துக்கீசியர்களின் அரசியல், சமய, பண்பாட்டு நடவடிக்கைகள் அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகள் இங்கிருந்தன. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் மொழியோடு, சாதிய அடுக்குகளின் சமூகப் பாத்திரத்தையும் கற்றுக்கொண்ட நொபிலி என்னும் மதபோதகர் அதன் அடிப்படையிலேயே மறைப்பணியினைச் செயல்படுத்தினார். சமூகத்தை மேலிருந்து கீழாக நோக்கும் அணுகுமுறை ஐரோப்பியர்களால் வரிந்துகொள்ளப்பட்டதும் இக்காலத்தில்தான். பறையன் என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளுக்குள் சென்றதை இப்பின்னணியில் வைத்துத் தேடவும் வாய்ப்பிருக்கிறது. இச்சூழலைப் பூரணமாக விவரிக்க முடியவில்லை என்றாலும் இக்காலத்திற்குப் பிறகே மேற்கத்திய அறிவுலகச் சட்டகமும் இலக்கியப் பிரதிகளும் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஐரீஷ் போராளிகளை இழிவுக்குள்ளாக்க இங்கிலாந்து இச்சொல்லைப் பெருமளவில் பயன்படுத்தியிருக்கிறது. அவை எல்லாவற்றையும் கடந்து இச்சொல்லின் வேர்ப்பாகுபாட்டைக் கற்பிக்கும் சாதியமைப்பையும் பாகுபடுத்தப்பட்ட சமூகம் குறித்த இழிவையும் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்பொழுது அதன் அர்த்தம் மறு உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வுடைய யாரும் இதனை மறுப்பதை ஏற்றுக்கொள்வர்.

 ஐரோப்பிய மொழியில் இச்சொல் கொண்டுசெல்லப்பட்டமை தற்செயலானதாக இருக்க வாய்ப்பில்லை. பாகுபாட்டைக் கற்பித்து நிலவச் செய்வதால் பலன்பெறும் பிரிவினரே இச்சொல்லின் பரவலாக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இச்சொல்லை மிகவும் இழிவான பொருளில் இங்கு ஆதிக்க இந்து சாதியினர் பரப்பிவந்தனர் என்பதை அறிந்தால் மட்டுமே இத்தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும். இதன் பின்னணி குறித்துத் தேடுவது சாதி, தீண்டாமை குறித்த வேறுவகையான புரிதல்களை நமக்குத் தரக்கூடும். இதற்கான தேடலில் பயன்படும் ஒரே ஆதாரமாகக் கிடைப்பது அயோத்திதாசரின் எழுத்துகள்தாம். பறையன் என்னும் சொல்மீது இந்துக்கள் வெளிப்படுத்திய வெறுப்பு, இழிவான பொருளில் அச்சொல்லைப் பரப்பிய முறை குறித்து மிக விரிவாகவே அவர் எழுதியிருக்கிறார். பறை என்பது பெயர்ச்சொல் அல்ல. மாறாகப் புத்த தன்மத்தைப் பறைசாற்றும்-சாதிபேதமுள்ளோரின் உண்மைத் தோற்றத்தைப் பறைந்து சொல்லும் வினைச் சொல்லாகவும் பிறந்தது என்பது அவருடைய முதல் கருத்து.

 பிராமணர், பறையர் ஆகிய சாதிகளுக்கிடையேயான முரண்களை ஏடுகளின் மூலமாகவும் வழக்காறுகள் மூலமாகவும் கண்டுகொண்ட அவர், அதற்கான காரணங்களையும் முரண்பாடு செயல்படும் வேறுதளங்களையும் தேடினார். சாதிபேதத்தின் அடிப்படையிலேயே இம்முரண்பாடு செயல்படுவதாகக் கருதிய அயோத்திதாசர், இம்முரண்பாட்டில் சாதிபேதத்தை ஏற்க மறுத்து, சாதியமைப்பிற்கு வெளியே நின்றவர்கள் தீண்டப்படாதார் ஆனார் என்று விளக்கினார். சாதியமைப்பு தோன்றுவதற்கு முன்னர் "இன்றைய இழிவுகளைச் சுமக்காதவர்களாய் இவர்கள் இருந்தனர் என்றும் சாதியமைப்பின் காலம் சில நூறாண்டுகளுக்கு உட்பட்டதே என்றும் சொன்னார். இதற்குப் பின்னரே தீண்டப்படாதார்மீது இழிவான சாதிப்பெயர்களையும் இழிதொழில்களையும் சுமத்தி அவையே நிலையானவை என்னும் கருத்துகளை ஓயாமல் பரப்பினர் என்றார். இந்தப் பரவலாக்கம் குறித்து அயோத்திதாசர் நுட்பமான பதிவுகளைத் தந்திருக்கிறார். முரண்பாடுடைய இவ்விரண்டு சாதிகளை எதிரெதிராக நிறுத்தி, பறையர் வகுப்பினரை இழிவாகவும் பிராமண வகுப்பினரை உயர்வாகவும் கற்பித்துக் கதைகளும் பாடல்களும் புனையப்பட்டுள்ளதை அவர் கண்டித்ததோடு அவற்றை மறுத்தும் எழுதினார். பாரதியாரின் கவிதைகளும் 'சுதேசமித்திர'னின் பதிவுகளும்கூட அவரால் இக்காரணத்திற்காகக் கண்டிக்கப்பட்டன. பறையன் என்னும் பெயர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப்படுவதினால் அச்சாதி குறித்த இழிவு, நிலைத்த உண்மையாகிவிடுகிறது என்னும் எச்சரிக்கை அவரிடமிருந்தததை இதனால் அறிய முடிகிறது. பாப்பார மயினா ஜ் பறை மயினா, பாப்பார காகம் ஜ் பறை காகம் என்றெல்லாம் எதிர்வுகளைக் கட்டமைத்தவர்கள் நாயைக் குறிக்கும்போது, பறை நாய் என்னும் சொல்லை மட்டும் உருவாக்கிவிட்டு இழிவாக இருக்குமெனக் கருதிப் பாப்பார நாய் என்னும் சொல்லை உருவாக்கவில்லை என்பதையும் சுட்டிச் சென்றுள்ளார்.

 தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும் மற்ற அடித்தட்டுச் சாதிகளைவிடப் பறையர் எனப்படும் சாதியைக்கொண்டே அதிகமும் நிறுவப்பட்டுள்ளதை இச்சொல்லின் புழக்கமும் பரவலாக்கமும் காட்டுகின்றன. இவ்விரண்டு சாதியினரைக் கொண்டு அயோத்திதாசர் கூறிய விளக்கங்கள் பிற சான்றுகளாலும் நிறுவப்பட்டுள்ளன. பறையர்கள் குருமார்களாக இருக்கும் சிறுதெய்வக் கோயில்கள் பலவற்றை இன்றும் காண முடியும். அண்மைக்காலம்வரை திருவாரூர் கோவிலில் யானையேறும் பெரும்பறையன் என்னும் பெயரில் இச்சாதியாருக்கு இருந்துவந்த உரிமை பலருக்கும் தெரிந்ததுதான். பறையர்கள் குருமார்களாக இருந்தனர். அதுவே பிறகு, பிராமணர்களிடம் பெயர்ந்தது என்று ஜார்ஜ் எல். ஹார்ட் போன்றவர்களும் சொல்கிறார்கள். குருமார்களாக இருந்த பறையர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காகவே பிற்காலத்தில் குருமார்களான பிராமணர்களை இளமை பொருந்திய பார்ப்பு எனும் சொல்லின் அடியாகப் பார்ப்பான், பார்ப்பனர் என அழைத்தனர் என்கிறார் தொ. பரமசிவன். மேலும் தென்மாவட்டங்களில் பனம் பழத்தின் ஒரு முனையினைப் பார்ப்பான் முனை என்றும் மற்றொரு முனையைப் பறையன் முனை என்றும் கேலிசெய்து நகையாடும் வழக்கம் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ('பண்பாட்டு அசைவுகள்', காலச்சுவடு, பக். 180, 181) பனம் பழத்தின் முனைகளுள் சுவையற்ற பகுதியையே பறையன் முனை என்று அழைப்பதிலிருந்து அயோத்திதாசர் கூறும் இழிவு கருதும் அர்த்தம் தொக்கியிருப்பதை அறியலாம். "பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச் சாதியானான்என்னும் பழமொழியும் தமிழகத்தில் பரவலாக வழக்கிலுள்ளது. பறையர் சாதி குறித்த இன்றைய இழிவாழ்வு என்றென்றைக்குமானதாக இருந்ததில்லை என்பதை இன்றைய கல்வெட்டுச் சான்றுகளும் ஆய்வாளர்களும் மெய்ப்பித்திருக்கிறார்கள். இதையெல்லாம் புரிந்து கொண்டால்தான் அதன் பரவலாக்கத்திற்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியும். மேலும் பறையர் சாதியாரை அடிப்படையாகக் கொண்டு சாதியமைப்பை ஆராயும் அயோத்திதாசரின் அணுகுமுறையைக்கூட இதன் பின்னணியில் புரிந்துகொள்ளலாம்.

 இந்து வேதங்களையே இந்தியத் தத்துவங்களென நம்பி எழுதிய கர்னல் போலியர், ராபார்ட் சேம்பர், ஜெனரல் மார்ட்டீன், வில்லியம் ஜோன்ஸ், கோல்புரூக் போன்ற ஐரோப்பிய அறிஞர்களை விமர்சித்து எழுதிய அயோத்திதாசர் இந்து உயர்சாதிப் பிராமணர்கள் கொடுத்த பொய்யான தகவல்களே இதற்குக் காரணம் என்றார். ஐரோப்பியர்களிடம் நெருக்கம் காட்டி வாழும் இப்பிராமணர்களால்தான் சாதி சார்ந்த பொய்களும் பரப்பப்படும் என்று அவர் கூறினார். இதற்கான சான்றுகளெனச் சிலவற்றை அவர் எடுத்துவைத்தார். அதாவது "சீவசெந்துகளின் மூலமாகவும் புராணங்களின் மூலமாகவும் கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச்செய்தது மட்டுமின்றி, ரெவரண்ட் ஜெ.பி ராட்லர் என்னும் துரை, அகராதி எழுதிய காலத்தில் அவருக்கு உதவியவர்கள் 13 வகையான பறையர்களின் பெயர்களோடு, இன்னுஞ் சில நூதனப் பெயர்களை வகுத்துப் புத்தகத்தில் பதியவைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தார்கள். ஆனால் பார்ப்பார்களில் இன்னின்ன பார்ப்பார்கள் என்று குறிப்பிடவில்லைஎன்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் Tamil Lexicion எழுதப் பயன்படுத்தப்பட்ட அகராதிகளில் ஒன்றான Rottler's Dictionary (1840) யையே அவர் இங்குக் குறிப்பிடுகிறார். பறையர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் சாதிய அநீதி குறித்துப் பிராமணர்கள் மூலம் ஐரோப்பியர்கள் அறிந்திருந்தார்கள் எனக் கூறும் அவர், 1853இல் . ஆரிங்டன் என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் சொல்லித் தந்த பிராமண ஆசிரியர்கள் பறையர்கள்மீது வஞ்சம் கொண்டு கூறியதையும் சான்றாக நிறுவுகிறார். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இங்கு ஐரோப்பிய ஆய்வாளர்களையும் மதபோதகர்களையும் அதிகாரிகளையும் இந்து உயர் சாதியினரின் இந்நடைமுறை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதன் விளைவாகவே அவர்களிடம் சாதி என்னும் கருத்தாக்கத்தைக் கொண்டு இந்தியச் சமூகத்தை மதிப்பிடும் ஓரியண்டலிசப் பார்வை உருவாகியிருக்கிறது. சான்றாக: அபே துபேய். இதையே தம் வார்த்தைகளில் விவரிக்கும் அயோத்திதாசர் "பின்புவந்து தோன்றிய துரை மக்கள் யாவரும் பெரிய சாதிகள் என்போர் வார்த்தைகளையே பெரிதென்றெண்ணிக் கொண்டு தாழ்ந்த சாதி என்றழைக்கப்பட்டார்களைத் தாழ்ந்தவர்கள் என்றே எண்ணிக்கொண்டும் தலையெடுக்கவிடாமலும் ஏழைகளை ஈடேற்றாமலும் விட்டு விட்டார்கள்என்றார். அயோத்திதாசரால் பறையர் என்னும் சொல் பல்வேறு தளங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பரப்பப்படுவது குறித்து எழுதப்பட்டிருந்தாலும் ஆங்கில அகராதிச் சொல்லாக மாறியதைக் குறித்து நேரடியாகத் தகவலேதும் இல்லை. ஆனால் இச்சொல் பரப்பப்பட்டதற்கான அரசியலை அவரிடமிருந்து பெற முடிகிறது. சில நூறாண்டுகளுக்கு முன்பே இச்சொல் சார்ந்த அரசியல் தொடங்கிவிட்டது என்று அவர் கூறுவதைவைத்துப் பார்க்கும்பொழுது காலப்பொருத்தம் கிட்டுகிறது.

 பறையன் என்னும் பெயரைச் சொல்லி எழுதுவது சட்டப்படி குற்றமாகும். சென்னையிலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் இப்போக்கு தொடர்வது நல்லதல்ல. ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் தமிழன் என்பதற்கான வரையறையாக Tamil Lexicion. Vol III 'பறையனொழிந்த தமிழ்ச்சாதியான்' என்றுதான் விளக்கம் அளித்தது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சாதாரண மக்களாலும் வசைச் சொல்லாக இது கையாளப்படுகிறது. இச்சொல் மட்டுமல்ல, சாதியை அடிப்படையாகக் கொண்ட எல்லாச் சொற்களும் அடையாளங்களும் இல்லாதொழிய வேண்டும். ஊடகங்களில் கையாளப்படும் பல்வேறு சொற்பிரயோகங்களும் கருத்துகளும் பழமையான சமூகத்தின் மரபுகளைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. இப்போக்கு நீடிப்பது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆதிக்கத்திற்கு வலுசேர்க்கக் கூடியவையாக ஊடகங்களே இருக்கின்றன. கறுப்பின மக்களை நீக்ரோ என்று அழைத்துவந்த அமெரிக்கா கறுப்பினத்தவர்களின் கோரிக்கையை ஏற்று, "ஆப்ரோ அமெரிக்கர்கள்என்றே அழைக்கிறது. இம்மாற்றத்திற்குக் கறுப்பின மக்களின் போராட்டமே அடிப்படைக் காரணமென்றாலும் அதனை ஏற்கும் மனநிலையை அமெரிக்க அரசும் ஊடகங்களும் பெற்றிருந்தன என்பது முக்கியமானதாகும். மதச் சார்பின்மை, சனநாயகம் குறித்து ஓயாமல் முழங்கும் நம் சூழலில் இந்தச் சுரணை ஏனில்லை?