- ஸ்டாலின் ராஜாங்கம்
நீதிக்கட்சி முன்னோடிகளைச் சொல்லும்போது நடேச முதலியார், தியாகராயச் செட்டியார், டி. எம். நாயர் ஆகிய மூவரைப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இம் மூவரைக் குறித்து விவரிக்கும்போது திராவிடச் சங்கம் தொடங்கியவரான நடேச முதலியாருக்கும் பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டவரான தியாகராயச் செட்டியாருக்கும் தரப்படும் அழுத்தம் டி. எம். நாயருக்குத் தரப்படுவதில்லை. டி. எம். நாயரின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் உரிய அளவில் சொல்லப்படாமல் பெயரளவிலான இடமே தரப்படுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றம் பற்றி இன்றைக்குத் தரப்படும் சித்தரிப்பிற்கு நாயரின் பங்களிப்பு பற்றிய செய்திகள் தோதாக அமைவதில்லை என்பதே இதற்குக் காரணம். தற்போதைய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பற்றிய அறிவிப்பிலும் அதையொட்டி வெளியாகும் எழுத்துக்களிலும் இக்குறையே தென்படுகிறது. நீதிக்கட்சியின் தோற்றத்தையும் அதன் பிந்தைய திசை மாற்றத்தையும் புரிந்துகொள்ள டி. எம். நாயரின் பணிகளை ஆராய்வது மட்டுமே உரிய வழியாக இருக்க முடியும். குறிப்பாகத் திராவிட இயக்க நூற்றாண்டு அறிவிப்புமீதான தலித்தரப்பு விமர்சனத்தைப் புரிந்துகொள்ள டி. எம். நாயர் வழிநடத்திய நீதிக்கட்சியின் பணிகளை அறிய வேண்டியுள்ளது.
நீதிக்கட்சியைத் தோற்றுவிப்பதற்கான தொடக்கக் கூட்டமாக அறியப்படும் சென்னை வேப்பேரிக் கூட்டம் 1916ஆம் ஆண்டின் கடைசி நவம்பர் 20ஆம் தேதி நடந்தது. இக் கூட்டத்தில் நீதிக்கட்சி மூலவர்களாக
அறியப்படும் இம்மூவர் உள்ளிட்ட 26 பேர் கலந்துகொண்டனர். 1916ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இக்கட்சி 1917ஆம் ஆண்டில் சில கூட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. நீதிக்கட்சிக்கு முன்பு நடேச முதலியார் கணிசமான உறுப்பினர்களைக் கொண்டு நடத்திய திராவிடச் சங்கம் பிராமணரல்லாதோரின் கல்வி மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது. அதன் செயற்பாடு பெயரளவிலேயே அமைந்திருந்தது. அடுத்து வந்த நீதிக்கட்சியின் ‘தொடக்கம்கூட முதலில் சிறப்பாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதற்கான நோக்கத்தைப் பிராமணரல்லாதார் அனைவரிடமும் எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்நிலை சற்றொப்ப 1909ஆம் ஆண்டின் நிலையை ஒத்ததாகவே இருந்தது என்கிறார் கு. நம்பியாரூரன். எனவே நீதிக் கட்சியைக் கருத்தியல் மற்றும் மக்கள் திரட்சிநோக்கி வடிவமைக்கும் பணி பிந்தைய ஆண்டுகளிலேயே நடந்தது. இந் நிலையில் 1917, 1918, 1919 ஆகிய மூன்றாண்டுகளின் நீதிக்கட்சிக்கான பூர்வாங்கப் பணிகள் டி. எம். நாயருடையதாகவே இருந்தன. இதனாலேயே கட்சியின் முதல் மூன்றாண்டுக் காலத்தை நாயரின் சகாப்தம் என்கிறார் ராஜாராமன். (The Justice Party; A Historical
Perspective 1916 - 1937) 1920ஆம் ஆண்டு கட்சி ஆட்சிக்கு வரும்வரையிலும் நாயரின் கருத்தியலிலிருந்தும் பணிகளிலிருந்தும்தான் கட்சி இயங்கியது. ஆனால் அதிகாரத்தை எட்டுவதற்கான முயற்சியாகவே அவற்றிற்கு எதிரான பேச்சுகளும் செயற்பாடுகளும் அமைகின்றன என்ற வழக்கத்தின்படி நீதிக்கட்சியும் ஆட்சிக்கு வந்த பின்பு அதுவரையில் தான் கட்டமைக்க முயன்ற கருத்தியலைக் கைவிட்டதோடு அப்பணிகளில் ஈடுபட்டு வந்த டி. எம். நாயர் 1919ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனார்.
நீதிக்கட்சிக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமல்ல அவை எத்தகையனவாகக் கட்டமைக்கப்பட்டன என்பதாலும் தான் நாயருடைய மூன்றாண்டு காலம் முக்கியத்துவம் பெறுகிறது. பிராமணரல்லாதார் அடையாளத்தின் உள்ளடக்கம், அப்பகுப்பில் உள்ளடங்கும் வகுப்பினர் குறித்தெல்லாம் நாயர் கொண்டிருந்த எண்ணங்களைப் பிற பிராமணரல்லாத தலைவர்கள் கொண்டிராதது மட்டுமல்ல ஆட்சிக்கு வந்த பின்பு கட்சி நாயர் காலத்தின் கருத்துகளை முற்றிலுமாகப் புறக்கணித்தே இயங்கியது.
தாராவத் மாதவன் நாயர் (1868-1919) எனப்படும் டி. எம். நாயர் இங்கிலாந்தில் மருத்துவம் பயின்ற காது, மூக்கு, தொண்டை நிபுணர். ஆங்கிலேயர் வழி அறிமுகமான அரசியல் நிர்வாகச் சீர்திருத்தத்தின் மீது அழுத்தமான நம்பிக்கைகொண்டிருந்த அவர் அப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் செய்தார். 1904ஆம் ஆண்டு முதல் 12 வருடங்கள் சென்னை நகராட்சியின் உறுப்பினராகத் திருவல்லிக் கேணிப் பகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டுப் பணியாற்றிய அவர் 1912இல் நகராட்சி பிரதிநிதிகள் சார்பாக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915இல் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் ஆனார். தாம் பங்கேற்ற பல்வேறு தளங்களிலும் தீவிரமான இடையீடு செய்பவராகவும் விவாதங்களில் ஈடுபடுபவராகவும் நாயர் இருந்தார். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த அவர் அம்மொழியில் எழுத்தாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். அரசியல் அமைப்புகளைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார்.
தன்னுடைய தமிழன் இதழில் டி. எம். நாயர் பற்றி நேர்மறையான பதிவுகளை எழுதிய (1910 ஜனவரி) அயோத்திதாசர் சென்னை முனிசிபல் உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டுவதோடு இந்துக்களுடைய தராதரம் பற்றி ஆங்கில இதழொன்றில் அவர் விமர்சித்து எழுதியதையும் குறிப்பிட்டு விட்டு நாயரின் இப்பண்புக்குக் காரணம் இவர் இங்கிலாந்து சென்று படித்து ஆங்கிலேயர்களின் அரசியல் கண்ணோட்டத்தை உள்வாங்கியதால்தான் ஆங்கிலேயர்களைப் போன்று எவ்விதப் பாகுபாடும் பாராமல் செயற்படுவதாக அறிகிறோம் என்கிறார். ஆங்கிலேயர்களின் நவீன அரசியல் சீர்திருத்தங்களை இங்கிருந்த பிராமணிய அதிகாரத்திற்கு எதிராக வரவேற்ற அயோத்திதாசர் டி. எம். நாயரின் நற்பணிகளுக்கு பின்னணியாய் இருப்பதும் அப் பண்புகளே என்று சிலாகிப்பதைப் பார்க்க முடிகிறது. ஏறக்குறைய டி. எம். நாயரைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய மதிப்பீடாக இதைக் கொள்ளலாம். நாயர் பற்றிய பிறபதிவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. பிராமணரல்லாதார் கட்சியின் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் வகையில் நாயர் செய்த முதல் காரியங்களில் ஒன்று, கல்விக் கொள்கையின் அநீதிகள் என்னும் தலைப்பில் ஜஸ்டிஸ் இதழில் தொடர் கட்டுரைகளை எழுதியதாகும் என்று எம். சி. ராஜாவும் அயோத்திதாசரைப் போன்று நாயருடைய எழுத்துக்களைப் பற்றிப் (1922 நவம்பர் சட்டமன்ற உரை) பாராட்டியுள்ளார்.
‘திராவிடம் என்ற சொல்லை அமைப்பு என்ற அளவில் முதலில் கையாண்டவரான நடேச முதலியாருக்கு’ முக்கியத்துவம் அளிப்பது திராவிட இயக்க மரபுக்குத் தமிழ் மற்றும் திராவிட அழுத்தம் தருவதற்கே. நீதிக்கட்சியை உருவாக்கியதில் நடேச முதலியாரும் தியாகராயச் செட்டியாரும் கூட்டாளிகளாக இருந்திருப்பினும் கட்சியின் அமைப் பொழுங்குக்குப் பெரும்பான்மையும் நாயரே பொறுப்பாவார். நீதிக் கட்சியை வடிவமைத்ததில் உள்ளூர்த் தாக்கங்களைவிட மேற்கத்திய அரசியல் மதிப்பீடுகளின் தாக்கமே அவரிடம் மிகுதியும் செல்வாக்கு செலுத்தின. நீதிக்கட்சி கொள்கையில் பிரிட்டீஷ் ஜனநாயகவாதிகளின் மரபும் பிரெஞ்சுத் தீவிரவாதிகளின் மரபும் மணம் பரப்புவதைக் காணலாம். அதனால்தான் கட்சியின் பெயர் South Indian Liberal Federation என வைக்கப்படலாயிற்று என்று முரசொலிமாறன் குறிப்பிடுவது (திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1, 1991) கவனிக்கத்தக்கது. நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிளாட்ஸ்டன் என்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரின் லிபரலிசக் கோட்பாடுகளால் கவரப்பட்டவர் என்கிறார் பெ. சு. மணி (நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் - ஆய்வு, 2007).
பிரெஞ்சு நாட்டின் Radical Rebudilican Party என்ற அமைப்பின் தாக்கம் நாயருக்கு இருந்தது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அமைப்பின் பெயர் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைக்கப்படுவதற்கு அக்கட்சி ஆங்கிலத்தில் நடத்திய Justice என்ற ஏடுதான் காரணம். தென்னிந்திய நலவுரிமைச்சங்கத்தைத் தொடங்குவதென்று முடிவுசெய்யப்பட்ட முதல் கூட்டத்திலேயே கட்சிக்கான முதல் பணியாகப் பத்திரிகை தொடங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி நடத்திய தமிழ் மற்றும் தெலுங்கு ஏடுகளுக்கு முறையே பக்தவச்சலம் பிள்ளையும் பார்த்தசாரதி நாயுடுவும் ஆசிரியர்களாயிருக்க 26. 02. 1917இல் தொடங்கப்பட்ட ஆங்கில ஏடான யிustவீநீமீக்கு நாயரே ஆசிரியராக இருந்தார். நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் என்ற முறையில் நாயரின் ஜஸ்டிஸ்தான் கட்சியின் கொள்கைகளைப் பூர்வாங்கமாகப் பிரதிபலித்தன. ஒருமுறை நாயர் எழுதிய கட்டுரைகளுக்காக அவர்மீது அன்னி பெசண்ட் மானநட்ட வழக்கு தொடுத்தார் என்ற அளவிற்கு அந்த ஏடு தீவிரமாக இயங்கியது. இந்த ஏட்டிற்கான பெயரை நாயர் பிரெஞ்சு நாட்டு கிளமென்சோ (Georges Clemenceau 1841-1929) 1880 முதல் நடத்திய La Justice என்ற ஏட்டின் பெயரைத் தழுவி அமைத்திருந்தார் என்ற அளவிற்கு அவருக்குத் தாக்கமிருந்தது. 1881இல் இந்து சட்டத்திற்கான தனது பணியில் ஜே. எச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பகுப்புசார்ந்த சொற்களைப் பயன்படுத்தியது முதல் 1916ஆம் ஆண்டுவரை பலரும் அச் சொல்லை ஆங்காங்குப் பயன்படுத்தி வந்தனர் என்றாலும் பிரெஞ்சு நாட்டு ராடிக்கல் ரிபப்ளிகன் பார்ட்டி பயன்படுத்திய பிரபுகள் அல்லாதார் என்ற சொல்லின் தாக்கமும் சேர்ந்து தான் நாயரிடம் பிராமணரல்லாதார் என்ற அடையாளமாக உறுதிபெற்றது. கட்சியின் மூலத்தில் நடேச முதலியாருக்குப் பங்கிருந்தாலும் கூட்டு நிறுவனர்களாக நாயரும் தியாகராயச் செட்டியாரும்தான் அறிவிக்கப்பட்டனர். சென்னை டவுன்ஹால் கூட்டத்தில் திரு. வி. க. எழுப்பிய கேள்வியொன்றிற்குப் பதிலளித்த நாயர் ‘காங்கிரஸில் விளையும் தீமை கண்டு நண்பர் தியாகராயருடன் சேர்ந்து ஜஸ்டிஸ் கட்சியை அமைத்தேன்’ என்று கூறியதிலிருந்து கட்சியின் பிரதான நிறுவனர்களில் நடேசர் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என்பதை அறிகிறோம். சங்கத்தின் முதல் மாநாட்டில் (15.12.1919) பேசிய தியாகராயர் ‘அவர் காட்டிய வழியின்படியே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம்” என்று நாயரின் தலைமையைச் சுட்டிப் பேசினார். பின்னாளில் தியாகராயச் செட்டியாருக்கும் நடேச முதலியாருக்கும் பனிப்போர் இருந்தது என்பதும் நடேச முதலியார் கட்சியால் புறக் கணிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
டி. எம். நாயர் பெற்றிருந்த நவீனச் சிந்தனைகளை உள்ளீடாகக் கொண்ட அரசியலறிவு நீதிக்கட்சியின் வடிவத்தில் மட்டுமல்லாது பிராமணரல்லாதார் அடையாள உள்ளடக்கத்திலும் பிரதிபலித்தது. பிராமணரல்லாதார் பிரிவில் பல்வேறு வகுப்பினரையும் உள்ளடக்குவதில் நாயர் ஆர்வம் காட்டினார். குறிப்பாக ஆதிதிராவிடர்களையும் இசுலாமியர்களையும் இணைத்துப் பேசினார். ஆனால் டாக்டர் நாயரைத் தவிர்த்துப் பெரும்பாலான பார்ப்பனரல்லாத தலைவர்கள் பஞ்சமர்களை நீக்கியே பார்த்தனர் என்கிறார் கு. நம்பியாரூரன். திராவிட இயக்கத்தின் தொடக்கம் பற்றிய ஆய்வுகள் செய்துள்ள யூஜின் இர்ஷிக், கு. நம்பியாரூரன் ஆகிய இருவரும் நாயரின் இப்பண்பு பற்றிக் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். பின்னாளில் நீதிக்கட்சி ஆட்சியும் நீதிகட்சித் தலைவர்களும் எடுத்த தலித் விரோத நிலைப்பாடுகளை விமர்சித்த எம். சி. ராஜா கடைசிவரையிலும் நாயர் பற்றி மட்டுமே சாதகமான கருத்தைக் கொண்டிருந்தார் என்பது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. நாயர் மட்டும் இவ்வியக்கத்தின் தலைவராக இன்று இருந்திருந்தால் இவ்வியக்கத்திலும் ஆட்சியிலும் ஜனநாயக முறையைப் பாதுகாத்திருப்பார் (4 ஜூலை 1937, வட ஆற்காடு மாவட்ட ஆதிதிராவிட மாநாடு) எனக் குறிப்பிட்ட எம். சி. ராஜா பிறிதோரிடத்தில் 1917இல் பிராமணரல்லாதார் கட்சி தொடங்கியபோது நாயர் தமது அரசியல் திட்டத்தின் முதல் படியாகத் தீண்டாமை ஒழிப்பை முன்வைத்தார் (எம். சி. ராஜா சிந்தனைகள், எழுத்து வெளியீடு, மதுரை) என்று நினைவுகூர்ந்தார்.
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு முன்பும் சமகாலத்திலும் சென்னை நகரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் அமைப்புகள் இருந்தன. 1980 தொடங்கித் திராவிட மகா ஜனசபா, ஆதிதிராவிட ஜனசபா, பறையர் மகாசபை போன்ற பெயர்களில் அமைப்புகள் செயற்பட்டு வந்தன. இந்த அமைப்புகள் சார்பாக நடந்த கூட்டங்கள், அரசுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், இதழ்கள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு மட்டுமல்லாது பிராமணர் எதிர்ப்பு, இடஒதுக்கீடு, திராவிடர் அடையாளத்தின் மீதான உரிமை கோரல் போன்றவையும் வலியுறுத்தப்பட்டன. ஏறக்குறைய பிந்தைய பிராமண எதிர்ப்பு அமைப்புகளின் முன்னோடி முயற்சிகளாக இவையே அமைந்திருந்தன. இந்நிலையில்தான் 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் பிராமணர் எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவளிப்பவர்களாக ஆதிதிராவிடர்களும் அவர் தம் அமைப்புகளும் இருந்தனர்.
முரசொலிமாறன் சொல்வதைப் போன்று நீதிக்கட்சிக்கு இவர்கள் ஆதரவைப் பெறுவதற்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஏனெனில் அந்தச் சமுதாயமும் வெகு காலமாகவே திராவிட உணர்வு பெற்றிருந்தது. மேலும் அச்சமூகம் பிராமணர் எதிர்ப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் அரச ஆதரவையும் பேசிவந்தது. இக்காலக்கட்டத்தில் ‘சென்னை நகரில் ஆதிதிராவிட ஜனசபா, பறையர் ஜனசபா ஆகிய இரு அமைப்புகள் முன்னணியில் இருந்தன. இவ்விரு அமைப்புகளும் முறையான கூட்டங்கள் நடத்திச் சுதந்திரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தன’ என்பதை 1916, 1917ஆம் ஆண்டுகளின் மெயில் ஏட்டுச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கு. நம்பியாரூரன் எடுத்துக்காட்டுகிறார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடு ஒன்றை சென்னை நகர ஆதிதிராவிடர் அமைப்புகள் நடத்தின. இக்கூட்டம் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (The Spur Tank Meeting) என்று அழைக்கப்படுகிறது. பெரும் மக்கள்திரள் என்ற முறையிலும் நாயரின் ஆவேசமான உரை என்ற விதத்திலும் இக்கூட்டம் நீதிக்கட்சி வளர்ச்சியிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. தலைவர்கள் மட்டுமே கூடும் கூட்டங்களைக் கண்ட நீதிக்கட்சியைப் பெருவாரியான மக்கள் திரட்சி நோக்கி அணியப்படுத்தியது இக்கூட்டமே. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் நடந்த கூட்டங்களைக் கவனித்தால் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். 14. 03. 1917இல் இசுலாமிய அமைப்பு சார்பான உள்ளரங்குக் கூட்டம் 19. 08. 1917இல் கோயம்புத்தூரில் நடந்த முதல் பிராமணரல்லாதார் மாநாடு, 1917 அக்டோபரில் கொள்கை வெளியீடு உள்ளிட்ட வெகுசில கூட்டங்களே நடந்திருந்தன. இவை எவையும் வெகுமக்கள் கூட்டங்கள் அல்ல. நீதிக்கட்சியின் பெருவாரியான வெற்றிக்கு ஆதிதிராவிட மக்களும் அதன் தலைவர்களும் காரணம் என்று கூறும் முனைவர் கோ. தங்க வேலு நீதிக்கட்சியென்பது ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை அளிக்கும் கட்சியெனத் தம்மக்களிடையே ஆதிதிராவிடத் தலைவர்கள் கூறி அவர்களை அடித்தளத் தொண்டர்களாக்கியதோடு பொதுமக்களைச் சந்தித்தறியாத நீதிக்கட்சித் தலைவர்களைப் பொதுமக்கள் அறியும்படி செய்தனர் என்று விளக்குவது இங்கு எடுத்துக்காட்டத்தக்கது.
தன்னுடைய பிற்கால உரைகளில் இம்மாநாட்டின் சாதனையை எம். சி. ராஜா பலமுறை நினைவுகூர்ந்தார். ‘தனித்தொகுதி வேண்டும்; அம்பேத்கர் தான் எங்கள் பிரதிநிதி’ என்பதை வலியுறுத்தி 1931ஆம் ஆண்டு அக்டோபரில் அதே சென்னை எழும்பூர் ஏரி மைதானத்தில் 20,000 பேர் கூடிய மாநாட்டில் பேசிய எம். சி. ராஜா இம்மாநாட்டைக் காணும்போது சுமார் 13 வருடங்களுக்கு முன்பு நம்மை ஆழ்ந்த நித்திரையிலிருந்து தட்டியெழுப்பி இவ்வளவு உன்னத நிலையில் இருக்கத் தூண்டிய நாயர் தலைமை வகித்து நடத்திய கூட்டத்தின் ஜனக்கூட்டத்தைப் போல் இருக்கிறது என்றும் 1937 ஜூலையில் நடந்த வடார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாட்டில் பேசும்போது 1917இல் நான் சென்னையில் கூட்டியிருந்த ஆதிதிராவிடர்களின் கூட்டத்தை நினைத்துப்பார்க்கிறேன். ஆதிதிராவிடர்களிடையே உரையாற்றிய நாயர் இம்மக்களை விழித்தெழுந் திருமாறு வேண்டுகோள் விடுத்தார். அங்ஙனம் எழுந்து நிற்காவிடின் என்றென்றுமாக வீழ்ந்துபோவோம் என்றும் எச்சரித்தார் என்றும் எம்.சி. ராஜா ஸ்பர்டாங்க் கூட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவராக எம். சி. ராஜா தன்னைக் குறிப்பிடுவதையும் பார்க்கலாம். நீதிக்கட்சி அரசியல்ரீதியாகத் தங்களுக்குக் கடமைப்பட்டிருப்பதை டி. எம். நாயரோடு தங்களுக்கிருந்த தொடர்பைச் சுட்டுவதன் மூலம் எம். சி. ராஜா நினைவுபடுத்தி வந்தார்.
ஸ்பர்டாங்க் கூட்டத்தில் நாயர் நிகழ்த்திய ஆவேச உரை பிராமணரல்லாதார் அடையாளத்தில் தலித்துகளை இருத்துவதில் ஆர்வம் காட்டியது. ஆனால் இம்மாநாட்டில் பேசிய பஞ்சமர் மகாசபைத் தலைவர் அன்சஸ், பிராமணரல்லாதாரும் நீதிக்கட்சியினரும் எண்ணங்கள் மீது அதிருப்தியை வெளியிட்டார். அதாவது பிராமணரல்லாதார் வேறுபாடு பாராமல் பஞ்சமர்களைச் சகோதரர்களாக ஏற்காதவரையில் அவர்கள் பஞ்சமர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றார். மேலும் அன்னிபெசண்ட்டின் ஹோம்ரூல் தலைமையைப் போல பிராமணரல்லாதார் தலைமைமீதும் தங்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்றார். இவ்வாறு டி.எம். நாயர் போன்றோரைஅழைத்து கூட்டம் நடத்திய போதிலும் தங்களின் இருப்பு பற்றிய கேள்விகளோடும் விவாதங்களோடும்தாம் தலித்துகள் அரசியல் உறவை மேற்கொண்டனர். உயர்வகுப்பு பார்ப்பனரல்லாத இந்துகளுக்குப் பஞ்சமர்களின் நாணயத்தின் மீது அய்யம் இருந்தது. பஞ்சமர் அமைப்புகளை நடத்திய தலைவர்களுக்கும் நீதிக்கட்சிக்கு ஆதரவளிப்பதில் விருப்பம் இல்லை என்பதை யூஜின் இர்ஷிக்கும் நம்பியாரூரனும் கூடக் குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் எழும்பூர் ஏரி மைதானத்தில் இம்மாநாடு நடத்துவதற்கு மைதானத்தில் விளையாட வரும் உயர்வகுப்பினர் தடை ஏற்படுத்தியபோது அத்தடைவிலக்கப்பட்டு மாநாடு நடப்பதற்கு டி.எம்.நாயர் உதவினார். மாநாட்டில் பேசிய டி. எம். நாயர் பஞ்சமர்கள் இது போன்று அடக்கப்படுவார்களானால் அதை மீறுவதற்கானவழி வன்முறையற்றதாகவே இருக்குமென்று எதிர் பார்க்க முடியாது என்றதோடு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தன்கையிலுள்ள ஊன்றுகோல் பேசத் தயங்காது என்றும் பேசினார். டி. எம். நாயரின் ஆங்கில உரையைச் சோமசுந்தரம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அன்னி பெசண்ட்டின் ஹோம்ரூல் கட்சிக்கு எதிர்வினையாகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவரான டி. எம். நாயர் ஹோம்ரூல் இயக்கத்திற்கு எதிரான கோபத்தைத் தம் ஆவேசப் பேச்சின் மூலம் கூர்மைப்படுத்தினார். நாயரைப் பின்னாளில் நினைவுகூர்ந்த எம். சி. ராஜா அப்போது நாம் ஒற்றுமையுடனிருந்து ஹோம்ரூல் ஆட்சியாரை விரட்டி அடித்தோம் என்று இதைக் குறிப்பிட்டார். இவ்வாறு பலவகைகளில் இக்கூட்டம் நீதிக்கட்சிக்குக் கை கொடுத்தது. மேலும் இந்தியர்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பது குறித்த மாண்டேகு அறிக்கை (1917) வெளி யான சூழலில் நீதிக்கட்சிக்கு பெரும்மக்கள் திரண்ட இக்கூட்டம் பேருதவியாக இருந்தது. பஞ்சமர்கள் தங்களது ஆதரவை நீதிக்கட்சியினருக்கும் மற்றும் முஸ்லிம்கள் இந்தியக் கிறிஸ்தவர்கள் ஆகிய அமைப்பினருக்கும் வழங்கினர். அதோடு நீதிக்கட்சி நடத்தும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் சுதந்திரமாகப் பங்கேற்றனர் என்கிறார் கு. நம்பியாரூரன். தலித்துகள் மற்றும் இசுலாமியர்களைச் சாதகமாகப் பார்த்த நாயரின் நோக்கு நீதிக் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கத்திற்கும் உதவியது. ஸ்பர்டாங்க் கூட்டத்தின் உரை தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசியதைவிடப் பிராமணர்களைத் தாக்கிப் பேசுவதிலேயே அதிகம் கவனம் செலுத்தியது. நாயர் உருவாக்கிக் காட்ட விரும்பிய பிராமணரல்லாத கூட்டணியின் எதிரியாகப் பிராமணர்களை நிறுத்தினார். இரா. நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ள 12 பக்க உரையிலும் அதாவது 350 வரிகளில் 7 வரிகளிலும் க.திருநாவுக்கரசு நூலில் 836 வரிகளில் 4 வரிகளிலும் தான் நாயர் தலித்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பற்றிக் கூறும் அன்புபொன்னோவியம் ‘தாழ்த்தப்பட்டோர்களைப் பற்றி எழுதநேரும் போதெல்லாம் நீதிக்கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் ஸ்பர்டாங்க் சாலை கூட்டத்தின் டாக்டர் நாயரின் உரையைக் குறிப்பிடுவார்கள். அதில் நாயர் தாழ்த்தப்பட்டோர்களைப் பற்றியும் தீண்டாமையைப் பற்றியும் மிகத் தீவிரமாகப் பேசியதாக மிகைப்பட எழுதுவார்கள். டாக்டர் நாயர் அக் கூட்டத்தில் பிராமணர்களைப் பற்றி கேலியாகப் பேசியதும் அன்னி பெசண்ட் அம்மையாரை நையாண்டி செய்ததும்தான் செய்திகளே தவிர தாழ்த்தப்பட்டோர்கள் பற்றியல்ல என்பதை படிப்போர் உணரலாம்” என்று கூறுவது சரியே. எனினும் ஏற்கனவே அரசியல் உணர்வோடு செயலாற்றி வந்தவர்கள் என்ற முறையிலும் பரந்த அரசியல் கூட்டணி என்ற அரசியல் நோக்கத்திற்காகவும் தலித்துகளை அரவணைப்பதைத் தவிர்க்க முடியாததாக டி. எம். நாயர் உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இது நவீன அரசியல் வடிவத்தின் அம்சமே.
பிராமணரல்லாதார் தரப்புக்குப் பெரும் உற்சாகத்தை அளித்த டி. எம். நாயரின் ஸ்பர்டாங்க் உரை கடும் எதிர்வினையை உண்டாக்கியது. அக்கூட்டத்தில் பிராமணர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கூட்டத்திற்கு அவர்கள் வந்திருந்தார்களா? யார் யாருக்கு இடையே மோதல் நடந்தது என்பதை அறிய முடியவில்லை. வன்முறை பற்றி மங்கலான குறிப்புகளே கிடைக்கின்றன. ஆனால் தாக்குதல் நடைபெற்றதை இக்குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. யான் ஒரு துண்டு அறிக்கை வரைந்து விடுத்தேன். அதனால் கலகம் விளைந்தது. ஐஸ்டிஸ் கட்சி யாருக்கும் சுய ஆட்சியாருக்கும் சண்டை மூண்டது. அங்கே எழுந்த மூர்க்க சக்திக்கு நாயர் தமது பேச்சில் வரவேற்புக் கூறினார். அது ஸ்பர்டாங்க் கூட்டத்துக்கு இன்பம் மூட்டியது, அவ்வின்பம் சென்னையை விழிக்கச் செய்தது. விழிப்பு சுய ஆட்சி இயக்கத்துக்கு ஆக்கம் தேடியது (பக் : 212) என்று மட்டுமே திரு. வி. க. குறிப்பிடுகிறார்.
கோ.வடிவேலு செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த லோகோபகாரி இதழ் காவல் துறையினர் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்தாகவும் அவர்கள் உடனடியாகத் தலையிட்டிருந்தால் இந்த அநியாயத்தைப் பஞ்சமர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்றும் கண்டித்தது. இந்த வன் முறைக்கு எதிராக வந்த கருத்துகளுள் முக்கியமானது பாரதியாருடையது. சென்னைப் பட்டணத்தில் நாயகர் கஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித்தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம் என்று பாரதியார் கூறுவது ஸ்பர்டாங்க் கூட்டத்தைப் பற்றியேயாகும். பறையர்களை அவமதிப்பாக நடத்தும் பிராமணரல்லாதோரின் நீதிக்கட்சியால் பறையர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்படுகிறார்கள் என்னும் தேசியவாத புரிதலைக் கொண்டிருந்த பாரதியார் தான் விவரிக்கும் அரசியல் நோக்கத்திற்கேற்ப இக்கூட்டத்தை நீதிக்கட்சி நடத்தியதாகவும் பறையர்கள் தூண்டிவிட்டதாகவும் எழுதிக் காட்டுகிறார். ஆனால் இக்கூட்டம் நீதிக்கட்சி ஏற்பாடு செய்த கூட்டமல்ல. அது முழுக்க தலித்துகள் முன்னின்று நடத்திய கூட்டம்.
டி. எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் கூட்டம் பற்றிக் குறிப்பிடும் பெரும்பாலான திராவிட இயக்க வரலாற்றுப்பதிவுகளும்கூடப் பொத்தாம் பொதுவாகப் பஞ்சமர் மாநாடு என்றே குறிப்பிடுன்றனவேயொழிய இக்கூட்டத்தை நடத்தியவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தரவில்லை. சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் கருவூலத்தில் பஞ்சமர் கூட்டம் என்ற குறிப்போடு நாயர் பேசும் படம் இடம்பெற்றுள்ளது. நீதிகட்சி பற்றி ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய ராஜாராமனும் ஓ. பி. ராலானும் ஸ்பர்டாங்க் கூட்டம் பற்றிப் பல்வேறு தகவல்களை தருகின்றபோதிலும் கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களென்று யாரையும் குறிப்பிடவில்லை. திராவிட இயக்க வரலாறு எழுதிய மாறன், நெடுஞ்செழியன் ஆகியோர் நூல்களில் நாயர் உரையாற்றும் படத்தோடு உரையில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம்முடைய நூலில் பன்னிரண்டு பக்க அளவில் டி. எம். நாயரின் உரையை வெளியிட்டுள்ள இரா. நெடுஞ்செழியன் கூட்டம் பற்றித் தரும் தகவல்கள் பிழையானவையாக இருக்கின்றன. கூட்டம் இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் நடந்ததென்றும் எம். சி. ராஜா நன்றி கூறினார் என்றும் தியாகராயரும் கலந்துகொண்டார் என்றும் கூறுகிறார். இம்மூன்று தகவல்களும் உறுதிப்படுத்தப்படாதவை. இக்கூட்டம் நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமான சென்னை வேப்பேரி கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே தலித் தலைவரான எம். சி. ராஜா முன் முயற்சியால் நடத்தப்பட்டதாகும். ஆங்கிலக் கல்வி பயின்று நாயரைப் போன்றே நவீனத்துவ அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வெள்ளையரின் நிர்வாகத்தை ஆதரித்துச் செயற்பட்ட எம். சி. ராஜா 1916இல் சென்னை ஆதிதிராவிட மகாஜனசபாவில் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த அமைப்போடு பிற ஆதிதிராவிட அமைப்புகளும் சேர்ந்து இக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. டி. எம். நாயரின் செயற்பாடுகளை அறிந்து வந்த எம். சி. ராஜா நாயர் நீதிக்கட்சியை உருவாக்கியபோது தம்முடைய வகுப்பினரையும் அவர் தம் கோரிக்கைகளையும் அவர் மூலம் பிராமணரல்லாத அரசியலில் பொருத்த முயன்றார். ஆனால் டி. எம். நாயரின் மரணத்தோடு சீர்திருத்த நோக்கு நீதிக்கட்சியில் அமுங்கிப் போனது. பிராமணரல்லாத அரசியலில் தம் கோரிக்கைகளை இணைப்பதில் தலித்துகள் தோல்வி கண்டனர். கட்சியின் பூர்வாங்கப் பணிகளின் போது தேவைப்பட்ட தலித்துகள் கட்சியின் ஆட்சிக்காலத்தில் புறக் கணிக்கப்பட்டனர். நீதிக்கட்சி பதவியிலமர்ந்தவுடன் தலித்துகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதோடு பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டன. இரண்டாண்டின் முடிவிற்குள் சென்னை புளியந்தோப்பு கலவரத்தை (1921) ஒட்டி, பறையர்களைச் சென்னையை விட்டே அப்புறப்படுத்த வேண்டுமென்று தியாகராய செட்டியார் தலைமையிலான நீதிக்கட்சி அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றதோடு அந்த ஆட்சி கலைந்தபோது இறைவனுக்கு நன்றி என்று எம். சி. ராஜா கூறும் நிலைமை தான் உருவாகியிருந்தது.
நன்றி : காலச்சுவடு
நீதிக்கட்சி முன்னோடிகளைச் சொல்லும்போது நடேச முதலியார், தியாகராயச் செட்டியார், டி. எம். நாயர் ஆகிய மூவரைப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. ஆனால் இம் மூவரைக் குறித்து விவரிக்கும்போது திராவிடச் சங்கம் தொடங்கியவரான நடேச முதலியாருக்கும் பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டவரான தியாகராயச் செட்டியாருக்கும் தரப்படும் அழுத்தம் டி. எம். நாயருக்குத் தரப்படுவதில்லை. டி. எம். நாயரின் பங்களிப்பு பற்றிய தகவல்கள் உரிய அளவில் சொல்லப்படாமல் பெயரளவிலான இடமே தரப்படுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தின் தோற்றம் பற்றி இன்றைக்குத் தரப்படும் சித்தரிப்பிற்கு நாயரின் பங்களிப்பு பற்றிய செய்திகள் தோதாக அமைவதில்லை என்பதே இதற்குக் காரணம். தற்போதைய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பற்றிய அறிவிப்பிலும் அதையொட்டி வெளியாகும் எழுத்துக்களிலும் இக்குறையே தென்படுகிறது. நீதிக்கட்சியின் தோற்றத்தையும் அதன் பிந்தைய திசை மாற்றத்தையும் புரிந்துகொள்ள டி. எம். நாயரின் பணிகளை ஆராய்வது மட்டுமே உரிய வழியாக இருக்க முடியும். குறிப்பாகத் திராவிட இயக்க நூற்றாண்டு அறிவிப்புமீதான தலித்தரப்பு விமர்சனத்தைப் புரிந்துகொள்ள டி. எம். நாயர் வழிநடத்திய நீதிக்கட்சியின் பணிகளை அறிய வேண்டியுள்ளது.
டி.எம்.நாயர் |
நீதிக்கட்சிக்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமல்ல அவை எத்தகையனவாகக் கட்டமைக்கப்பட்டன என்பதாலும் தான் நாயருடைய மூன்றாண்டு காலம் முக்கியத்துவம் பெறுகிறது. பிராமணரல்லாதார் அடையாளத்தின் உள்ளடக்கம், அப்பகுப்பில் உள்ளடங்கும் வகுப்பினர் குறித்தெல்லாம் நாயர் கொண்டிருந்த எண்ணங்களைப் பிற பிராமணரல்லாத தலைவர்கள் கொண்டிராதது மட்டுமல்ல ஆட்சிக்கு வந்த பின்பு கட்சி நாயர் காலத்தின் கருத்துகளை முற்றிலுமாகப் புறக்கணித்தே இயங்கியது.
தாராவத் மாதவன் நாயர் (1868-1919) எனப்படும் டி. எம். நாயர் இங்கிலாந்தில் மருத்துவம் பயின்ற காது, மூக்கு, தொண்டை நிபுணர். ஆங்கிலேயர் வழி அறிமுகமான அரசியல் நிர்வாகச் சீர்திருத்தத்தின் மீது அழுத்தமான நம்பிக்கைகொண்டிருந்த அவர் அப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் செய்தார். 1904ஆம் ஆண்டு முதல் 12 வருடங்கள் சென்னை நகராட்சியின் உறுப்பினராகத் திருவல்லிக் கேணிப் பகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டுப் பணியாற்றிய அவர் 1912இல் நகராட்சி பிரதிநிதிகள் சார்பாக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915இல் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் ஆனார். தாம் பங்கேற்ற பல்வேறு தளங்களிலும் தீவிரமான இடையீடு செய்பவராகவும் விவாதங்களில் ஈடுபடுபவராகவும் நாயர் இருந்தார். ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த அவர் அம்மொழியில் எழுத்தாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். அரசியல் அமைப்புகளைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார்.
தன்னுடைய தமிழன் இதழில் டி. எம். நாயர் பற்றி நேர்மறையான பதிவுகளை எழுதிய (1910 ஜனவரி) அயோத்திதாசர் சென்னை முனிசிபல் உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டுவதோடு இந்துக்களுடைய தராதரம் பற்றி ஆங்கில இதழொன்றில் அவர் விமர்சித்து எழுதியதையும் குறிப்பிட்டு விட்டு நாயரின் இப்பண்புக்குக் காரணம் இவர் இங்கிலாந்து சென்று படித்து ஆங்கிலேயர்களின் அரசியல் கண்ணோட்டத்தை உள்வாங்கியதால்தான் ஆங்கிலேயர்களைப் போன்று எவ்விதப் பாகுபாடும் பாராமல் செயற்படுவதாக அறிகிறோம் என்கிறார். ஆங்கிலேயர்களின் நவீன அரசியல் சீர்திருத்தங்களை இங்கிருந்த பிராமணிய அதிகாரத்திற்கு எதிராக வரவேற்ற அயோத்திதாசர் டி. எம். நாயரின் நற்பணிகளுக்கு பின்னணியாய் இருப்பதும் அப் பண்புகளே என்று சிலாகிப்பதைப் பார்க்க முடிகிறது. ஏறக்குறைய டி. எம். நாயரைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய மதிப்பீடாக இதைக் கொள்ளலாம். நாயர் பற்றிய பிறபதிவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன. பிராமணரல்லாதார் கட்சியின் கொள்கைகளைத் தெளிவுபடுத்தும் வகையில் நாயர் செய்த முதல் காரியங்களில் ஒன்று, கல்விக் கொள்கையின் அநீதிகள் என்னும் தலைப்பில் ஜஸ்டிஸ் இதழில் தொடர் கட்டுரைகளை எழுதியதாகும் என்று எம். சி. ராஜாவும் அயோத்திதாசரைப் போன்று நாயருடைய எழுத்துக்களைப் பற்றிப் (1922 நவம்பர் சட்டமன்ற உரை) பாராட்டியுள்ளார்.
‘திராவிடம் என்ற சொல்லை அமைப்பு என்ற அளவில் முதலில் கையாண்டவரான நடேச முதலியாருக்கு’ முக்கியத்துவம் அளிப்பது திராவிட இயக்க மரபுக்குத் தமிழ் மற்றும் திராவிட அழுத்தம் தருவதற்கே. நீதிக்கட்சியை உருவாக்கியதில் நடேச முதலியாரும் தியாகராயச் செட்டியாரும் கூட்டாளிகளாக இருந்திருப்பினும் கட்சியின் அமைப் பொழுங்குக்குப் பெரும்பான்மையும் நாயரே பொறுப்பாவார். நீதிக் கட்சியை வடிவமைத்ததில் உள்ளூர்த் தாக்கங்களைவிட மேற்கத்திய அரசியல் மதிப்பீடுகளின் தாக்கமே அவரிடம் மிகுதியும் செல்வாக்கு செலுத்தின. நீதிக்கட்சி கொள்கையில் பிரிட்டீஷ் ஜனநாயகவாதிகளின் மரபும் பிரெஞ்சுத் தீவிரவாதிகளின் மரபும் மணம் பரப்புவதைக் காணலாம். அதனால்தான் கட்சியின் பெயர் South Indian Liberal Federation என வைக்கப்படலாயிற்று என்று முரசொலிமாறன் குறிப்பிடுவது (திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1, 1991) கவனிக்கத்தக்கது. நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிளாட்ஸ்டன் என்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரின் லிபரலிசக் கோட்பாடுகளால் கவரப்பட்டவர் என்கிறார் பெ. சு. மணி (நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் - ஆய்வு, 2007).
பிரெஞ்சு நாட்டின் Radical Rebudilican Party என்ற அமைப்பின் தாக்கம் நாயருக்கு இருந்தது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அமைப்பின் பெயர் நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் பார்ட்டி என்றழைக்கப்படுவதற்கு அக்கட்சி ஆங்கிலத்தில் நடத்திய Justice என்ற ஏடுதான் காரணம். தென்னிந்திய நலவுரிமைச்சங்கத்தைத் தொடங்குவதென்று முடிவுசெய்யப்பட்ட முதல் கூட்டத்திலேயே கட்சிக்கான முதல் பணியாகப் பத்திரிகை தொடங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி நடத்திய தமிழ் மற்றும் தெலுங்கு ஏடுகளுக்கு முறையே பக்தவச்சலம் பிள்ளையும் பார்த்தசாரதி நாயுடுவும் ஆசிரியர்களாயிருக்க 26. 02. 1917இல் தொடங்கப்பட்ட ஆங்கில ஏடான யிustவீநீமீக்கு நாயரே ஆசிரியராக இருந்தார். நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் என்ற முறையில் நாயரின் ஜஸ்டிஸ்தான் கட்சியின் கொள்கைகளைப் பூர்வாங்கமாகப் பிரதிபலித்தன. ஒருமுறை நாயர் எழுதிய கட்டுரைகளுக்காக அவர்மீது அன்னி பெசண்ட் மானநட்ட வழக்கு தொடுத்தார் என்ற அளவிற்கு அந்த ஏடு தீவிரமாக இயங்கியது. இந்த ஏட்டிற்கான பெயரை நாயர் பிரெஞ்சு நாட்டு கிளமென்சோ (Georges Clemenceau 1841-1929) 1880 முதல் நடத்திய La Justice என்ற ஏட்டின் பெயரைத் தழுவி அமைத்திருந்தார் என்ற அளவிற்கு அவருக்குத் தாக்கமிருந்தது. 1881இல் இந்து சட்டத்திற்கான தனது பணியில் ஜே. எச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பகுப்புசார்ந்த சொற்களைப் பயன்படுத்தியது முதல் 1916ஆம் ஆண்டுவரை பலரும் அச் சொல்லை ஆங்காங்குப் பயன்படுத்தி வந்தனர் என்றாலும் பிரெஞ்சு நாட்டு ராடிக்கல் ரிபப்ளிகன் பார்ட்டி பயன்படுத்திய பிரபுகள் அல்லாதார் என்ற சொல்லின் தாக்கமும் சேர்ந்து தான் நாயரிடம் பிராமணரல்லாதார் என்ற அடையாளமாக உறுதிபெற்றது. கட்சியின் மூலத்தில் நடேச முதலியாருக்குப் பங்கிருந்தாலும் கூட்டு நிறுவனர்களாக நாயரும் தியாகராயச் செட்டியாரும்தான் அறிவிக்கப்பட்டனர். சென்னை டவுன்ஹால் கூட்டத்தில் திரு. வி. க. எழுப்பிய கேள்வியொன்றிற்குப் பதிலளித்த நாயர் ‘காங்கிரஸில் விளையும் தீமை கண்டு நண்பர் தியாகராயருடன் சேர்ந்து ஜஸ்டிஸ் கட்சியை அமைத்தேன்’ என்று கூறியதிலிருந்து கட்சியின் பிரதான நிறுவனர்களில் நடேசர் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என்பதை அறிகிறோம். சங்கத்தின் முதல் மாநாட்டில் (15.12.1919) பேசிய தியாகராயர் ‘அவர் காட்டிய வழியின்படியே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம்” என்று நாயரின் தலைமையைச் சுட்டிப் பேசினார். பின்னாளில் தியாகராயச் செட்டியாருக்கும் நடேச முதலியாருக்கும் பனிப்போர் இருந்தது என்பதும் நடேச முதலியார் கட்சியால் புறக் கணிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
எம்.சி.ராஜா |
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு முன்பும் சமகாலத்திலும் சென்னை நகரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் அமைப்புகள் இருந்தன. 1980 தொடங்கித் திராவிட மகா ஜனசபா, ஆதிதிராவிட ஜனசபா, பறையர் மகாசபை போன்ற பெயர்களில் அமைப்புகள் செயற்பட்டு வந்தன. இந்த அமைப்புகள் சார்பாக நடந்த கூட்டங்கள், அரசுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், இதழ்கள் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு மட்டுமல்லாது பிராமணர் எதிர்ப்பு, இடஒதுக்கீடு, திராவிடர் அடையாளத்தின் மீதான உரிமை கோரல் போன்றவையும் வலியுறுத்தப்பட்டன. ஏறக்குறைய பிந்தைய பிராமண எதிர்ப்பு அமைப்புகளின் முன்னோடி முயற்சிகளாக இவையே அமைந்திருந்தன. இந்நிலையில்தான் 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் பிராமணர் எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவளிப்பவர்களாக ஆதிதிராவிடர்களும் அவர் தம் அமைப்புகளும் இருந்தனர்.
முரசொலிமாறன் சொல்வதைப் போன்று நீதிக்கட்சிக்கு இவர்கள் ஆதரவைப் பெறுவதற்கு எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை. ஏனெனில் அந்தச் சமுதாயமும் வெகு காலமாகவே திராவிட உணர்வு பெற்றிருந்தது. மேலும் அச்சமூகம் பிராமணர் எதிர்ப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் அரச ஆதரவையும் பேசிவந்தது. இக்காலக்கட்டத்தில் ‘சென்னை நகரில் ஆதிதிராவிட ஜனசபா, பறையர் ஜனசபா ஆகிய இரு அமைப்புகள் முன்னணியில் இருந்தன. இவ்விரு அமைப்புகளும் முறையான கூட்டங்கள் நடத்திச் சுதந்திரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தன’ என்பதை 1916, 1917ஆம் ஆண்டுகளின் மெயில் ஏட்டுச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கு. நம்பியாரூரன் எடுத்துக்காட்டுகிறார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடு ஒன்றை சென்னை நகர ஆதிதிராவிடர் அமைப்புகள் நடத்தின. இக்கூட்டம் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (The Spur Tank Meeting) என்று அழைக்கப்படுகிறது. பெரும் மக்கள்திரள் என்ற முறையிலும் நாயரின் ஆவேசமான உரை என்ற விதத்திலும் இக்கூட்டம் நீதிக்கட்சி வளர்ச்சியிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. தலைவர்கள் மட்டுமே கூடும் கூட்டங்களைக் கண்ட நீதிக்கட்சியைப் பெருவாரியான மக்கள் திரட்சி நோக்கி அணியப்படுத்தியது இக்கூட்டமே. நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் நடந்த கூட்டங்களைக் கவனித்தால் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம். 14. 03. 1917இல் இசுலாமிய அமைப்பு சார்பான உள்ளரங்குக் கூட்டம் 19. 08. 1917இல் கோயம்புத்தூரில் நடந்த முதல் பிராமணரல்லாதார் மாநாடு, 1917 அக்டோபரில் கொள்கை வெளியீடு உள்ளிட்ட வெகுசில கூட்டங்களே நடந்திருந்தன. இவை எவையும் வெகுமக்கள் கூட்டங்கள் அல்ல. நீதிக்கட்சியின் பெருவாரியான வெற்றிக்கு ஆதிதிராவிட மக்களும் அதன் தலைவர்களும் காரணம் என்று கூறும் முனைவர் கோ. தங்க வேலு நீதிக்கட்சியென்பது ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை அளிக்கும் கட்சியெனத் தம்மக்களிடையே ஆதிதிராவிடத் தலைவர்கள் கூறி அவர்களை அடித்தளத் தொண்டர்களாக்கியதோடு பொதுமக்களைச் சந்தித்தறியாத நீதிக்கட்சித் தலைவர்களைப் பொதுமக்கள் அறியும்படி செய்தனர் என்று விளக்குவது இங்கு எடுத்துக்காட்டத்தக்கது.
தன்னுடைய பிற்கால உரைகளில் இம்மாநாட்டின் சாதனையை எம். சி. ராஜா பலமுறை நினைவுகூர்ந்தார். ‘தனித்தொகுதி வேண்டும்; அம்பேத்கர் தான் எங்கள் பிரதிநிதி’ என்பதை வலியுறுத்தி 1931ஆம் ஆண்டு அக்டோபரில் அதே சென்னை எழும்பூர் ஏரி மைதானத்தில் 20,000 பேர் கூடிய மாநாட்டில் பேசிய எம். சி. ராஜா இம்மாநாட்டைக் காணும்போது சுமார் 13 வருடங்களுக்கு முன்பு நம்மை ஆழ்ந்த நித்திரையிலிருந்து தட்டியெழுப்பி இவ்வளவு உன்னத நிலையில் இருக்கத் தூண்டிய நாயர் தலைமை வகித்து நடத்திய கூட்டத்தின் ஜனக்கூட்டத்தைப் போல் இருக்கிறது என்றும் 1937 ஜூலையில் நடந்த வடார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மாநாட்டில் பேசும்போது 1917இல் நான் சென்னையில் கூட்டியிருந்த ஆதிதிராவிடர்களின் கூட்டத்தை நினைத்துப்பார்க்கிறேன். ஆதிதிராவிடர்களிடையே உரையாற்றிய நாயர் இம்மக்களை விழித்தெழுந் திருமாறு வேண்டுகோள் விடுத்தார். அங்ஙனம் எழுந்து நிற்காவிடின் என்றென்றுமாக வீழ்ந்துபோவோம் என்றும் எச்சரித்தார் என்றும் எம்.சி. ராஜா ஸ்பர்டாங்க் கூட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவராக எம். சி. ராஜா தன்னைக் குறிப்பிடுவதையும் பார்க்கலாம். நீதிக்கட்சி அரசியல்ரீதியாகத் தங்களுக்குக் கடமைப்பட்டிருப்பதை டி. எம். நாயரோடு தங்களுக்கிருந்த தொடர்பைச் சுட்டுவதன் மூலம் எம். சி. ராஜா நினைவுபடுத்தி வந்தார்.
ஸ்பர்டாங்க் கூட்டத்தில் நாயர் நிகழ்த்திய ஆவேச உரை பிராமணரல்லாதார் அடையாளத்தில் தலித்துகளை இருத்துவதில் ஆர்வம் காட்டியது. ஆனால் இம்மாநாட்டில் பேசிய பஞ்சமர் மகாசபைத் தலைவர் அன்சஸ், பிராமணரல்லாதாரும் நீதிக்கட்சியினரும் எண்ணங்கள் மீது அதிருப்தியை வெளியிட்டார். அதாவது பிராமணரல்லாதார் வேறுபாடு பாராமல் பஞ்சமர்களைச் சகோதரர்களாக ஏற்காதவரையில் அவர்கள் பஞ்சமர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்றார். மேலும் அன்னிபெசண்ட்டின் ஹோம்ரூல் தலைமையைப் போல பிராமணரல்லாதார் தலைமைமீதும் தங்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என்றார். இவ்வாறு டி.எம். நாயர் போன்றோரைஅழைத்து கூட்டம் நடத்திய போதிலும் தங்களின் இருப்பு பற்றிய கேள்விகளோடும் விவாதங்களோடும்தாம் தலித்துகள் அரசியல் உறவை மேற்கொண்டனர். உயர்வகுப்பு பார்ப்பனரல்லாத இந்துகளுக்குப் பஞ்சமர்களின் நாணயத்தின் மீது அய்யம் இருந்தது. பஞ்சமர் அமைப்புகளை நடத்திய தலைவர்களுக்கும் நீதிக்கட்சிக்கு ஆதரவளிப்பதில் விருப்பம் இல்லை என்பதை யூஜின் இர்ஷிக்கும் நம்பியாரூரனும் கூடக் குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் எழும்பூர் ஏரி மைதானத்தில் இம்மாநாடு நடத்துவதற்கு மைதானத்தில் விளையாட வரும் உயர்வகுப்பினர் தடை ஏற்படுத்தியபோது அத்தடைவிலக்கப்பட்டு மாநாடு நடப்பதற்கு டி.எம்.நாயர் உதவினார். மாநாட்டில் பேசிய டி. எம். நாயர் பஞ்சமர்கள் இது போன்று அடக்கப்படுவார்களானால் அதை மீறுவதற்கானவழி வன்முறையற்றதாகவே இருக்குமென்று எதிர் பார்க்க முடியாது என்றதோடு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் தன்கையிலுள்ள ஊன்றுகோல் பேசத் தயங்காது என்றும் பேசினார். டி. எம். நாயரின் ஆங்கில உரையைச் சோமசுந்தரம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அன்னி பெசண்ட்டின் ஹோம்ரூல் கட்சிக்கு எதிர்வினையாகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தலைவரான டி. எம். நாயர் ஹோம்ரூல் இயக்கத்திற்கு எதிரான கோபத்தைத் தம் ஆவேசப் பேச்சின் மூலம் கூர்மைப்படுத்தினார். நாயரைப் பின்னாளில் நினைவுகூர்ந்த எம். சி. ராஜா அப்போது நாம் ஒற்றுமையுடனிருந்து ஹோம்ரூல் ஆட்சியாரை விரட்டி அடித்தோம் என்று இதைக் குறிப்பிட்டார். இவ்வாறு பலவகைகளில் இக்கூட்டம் நீதிக்கட்சிக்குக் கை கொடுத்தது. மேலும் இந்தியர்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பது குறித்த மாண்டேகு அறிக்கை (1917) வெளி யான சூழலில் நீதிக்கட்சிக்கு பெரும்மக்கள் திரண்ட இக்கூட்டம் பேருதவியாக இருந்தது. பஞ்சமர்கள் தங்களது ஆதரவை நீதிக்கட்சியினருக்கும் மற்றும் முஸ்லிம்கள் இந்தியக் கிறிஸ்தவர்கள் ஆகிய அமைப்பினருக்கும் வழங்கினர். அதோடு நீதிக்கட்சி நடத்தும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் சுதந்திரமாகப் பங்கேற்றனர் என்கிறார் கு. நம்பியாரூரன். தலித்துகள் மற்றும் இசுலாமியர்களைச் சாதகமாகப் பார்த்த நாயரின் நோக்கு நீதிக் கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கத்திற்கும் உதவியது. ஸ்பர்டாங்க் கூட்டத்தின் உரை தலித்துகளின் பிரச்சினைகளைப் பேசியதைவிடப் பிராமணர்களைத் தாக்கிப் பேசுவதிலேயே அதிகம் கவனம் செலுத்தியது. நாயர் உருவாக்கிக் காட்ட விரும்பிய பிராமணரல்லாத கூட்டணியின் எதிரியாகப் பிராமணர்களை நிறுத்தினார். இரா. நெடுஞ்செழியன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ள 12 பக்க உரையிலும் அதாவது 350 வரிகளில் 7 வரிகளிலும் க.திருநாவுக்கரசு நூலில் 836 வரிகளில் 4 வரிகளிலும் தான் நாயர் தலித்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதைப் பற்றிக் கூறும் அன்புபொன்னோவியம் ‘தாழ்த்தப்பட்டோர்களைப் பற்றி எழுதநேரும் போதெல்லாம் நீதிக்கட்சியினரும் அதன் ஆதரவாளர்களும் ஸ்பர்டாங்க் சாலை கூட்டத்தின் டாக்டர் நாயரின் உரையைக் குறிப்பிடுவார்கள். அதில் நாயர் தாழ்த்தப்பட்டோர்களைப் பற்றியும் தீண்டாமையைப் பற்றியும் மிகத் தீவிரமாகப் பேசியதாக மிகைப்பட எழுதுவார்கள். டாக்டர் நாயர் அக் கூட்டத்தில் பிராமணர்களைப் பற்றி கேலியாகப் பேசியதும் அன்னி பெசண்ட் அம்மையாரை நையாண்டி செய்ததும்தான் செய்திகளே தவிர தாழ்த்தப்பட்டோர்கள் பற்றியல்ல என்பதை படிப்போர் உணரலாம்” என்று கூறுவது சரியே. எனினும் ஏற்கனவே அரசியல் உணர்வோடு செயலாற்றி வந்தவர்கள் என்ற முறையிலும் பரந்த அரசியல் கூட்டணி என்ற அரசியல் நோக்கத்திற்காகவும் தலித்துகளை அரவணைப்பதைத் தவிர்க்க முடியாததாக டி. எம். நாயர் உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். இது நவீன அரசியல் வடிவத்தின் அம்சமே.
பிராமணரல்லாதார் தரப்புக்குப் பெரும் உற்சாகத்தை அளித்த டி. எம். நாயரின் ஸ்பர்டாங்க் உரை கடும் எதிர்வினையை உண்டாக்கியது. அக்கூட்டத்தில் பிராமணர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கூட்டத்திற்கு அவர்கள் வந்திருந்தார்களா? யார் யாருக்கு இடையே மோதல் நடந்தது என்பதை அறிய முடியவில்லை. வன்முறை பற்றி மங்கலான குறிப்புகளே கிடைக்கின்றன. ஆனால் தாக்குதல் நடைபெற்றதை இக்குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. யான் ஒரு துண்டு அறிக்கை வரைந்து விடுத்தேன். அதனால் கலகம் விளைந்தது. ஐஸ்டிஸ் கட்சி யாருக்கும் சுய ஆட்சியாருக்கும் சண்டை மூண்டது. அங்கே எழுந்த மூர்க்க சக்திக்கு நாயர் தமது பேச்சில் வரவேற்புக் கூறினார். அது ஸ்பர்டாங்க் கூட்டத்துக்கு இன்பம் மூட்டியது, அவ்வின்பம் சென்னையை விழிக்கச் செய்தது. விழிப்பு சுய ஆட்சி இயக்கத்துக்கு ஆக்கம் தேடியது (பக் : 212) என்று மட்டுமே திரு. வி. க. குறிப்பிடுகிறார்.
கோ.வடிவேலு செட்டியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த லோகோபகாரி இதழ் காவல் துறையினர் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்தாகவும் அவர்கள் உடனடியாகத் தலையிட்டிருந்தால் இந்த அநியாயத்தைப் பஞ்சமர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்றும் கண்டித்தது. இந்த வன் முறைக்கு எதிராக வந்த கருத்துகளுள் முக்கியமானது பாரதியாருடையது. சென்னைப் பட்டணத்தில் நாயகர் கஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித்தூண்டியதாகப் பத்திரிகையில் வாசித்தோம் என்று பாரதியார் கூறுவது ஸ்பர்டாங்க் கூட்டத்தைப் பற்றியேயாகும். பறையர்களை அவமதிப்பாக நடத்தும் பிராமணரல்லாதோரின் நீதிக்கட்சியால் பறையர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்படுகிறார்கள் என்னும் தேசியவாத புரிதலைக் கொண்டிருந்த பாரதியார் தான் விவரிக்கும் அரசியல் நோக்கத்திற்கேற்ப இக்கூட்டத்தை நீதிக்கட்சி நடத்தியதாகவும் பறையர்கள் தூண்டிவிட்டதாகவும் எழுதிக் காட்டுகிறார். ஆனால் இக்கூட்டம் நீதிக்கட்சி ஏற்பாடு செய்த கூட்டமல்ல. அது முழுக்க தலித்துகள் முன்னின்று நடத்திய கூட்டம்.
டி. எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் கூட்டம் பற்றிக் குறிப்பிடும் பெரும்பாலான திராவிட இயக்க வரலாற்றுப்பதிவுகளும்கூடப் பொத்தாம் பொதுவாகப் பஞ்சமர் மாநாடு என்றே குறிப்பிடுன்றனவேயொழிய இக்கூட்டத்தை நடத்தியவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தரவில்லை. சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் கருவூலத்தில் பஞ்சமர் கூட்டம் என்ற குறிப்போடு நாயர் பேசும் படம் இடம்பெற்றுள்ளது. நீதிகட்சி பற்றி ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய ராஜாராமனும் ஓ. பி. ராலானும் ஸ்பர்டாங்க் கூட்டம் பற்றிப் பல்வேறு தகவல்களை தருகின்றபோதிலும் கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களென்று யாரையும் குறிப்பிடவில்லை. திராவிட இயக்க வரலாறு எழுதிய மாறன், நெடுஞ்செழியன் ஆகியோர் நூல்களில் நாயர் உரையாற்றும் படத்தோடு உரையில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தம்முடைய நூலில் பன்னிரண்டு பக்க அளவில் டி. எம். நாயரின் உரையை வெளியிட்டுள்ள இரா. நெடுஞ்செழியன் கூட்டம் பற்றித் தரும் தகவல்கள் பிழையானவையாக இருக்கின்றன. கூட்டம் இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் நடந்ததென்றும் எம். சி. ராஜா நன்றி கூறினார் என்றும் தியாகராயரும் கலந்துகொண்டார் என்றும் கூறுகிறார். இம்மூன்று தகவல்களும் உறுதிப்படுத்தப்படாதவை. இக்கூட்டம் நீதிக்கட்சி தோன்றுவதற்குக் காரணமான சென்னை வேப்பேரி கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே தலித் தலைவரான எம். சி. ராஜா முன் முயற்சியால் நடத்தப்பட்டதாகும். ஆங்கிலக் கல்வி பயின்று நாயரைப் போன்றே நவீனத்துவ அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வெள்ளையரின் நிர்வாகத்தை ஆதரித்துச் செயற்பட்ட எம். சி. ராஜா 1916இல் சென்னை ஆதிதிராவிட மகாஜனசபாவில் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இந்த அமைப்போடு பிற ஆதிதிராவிட அமைப்புகளும் சேர்ந்து இக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. டி. எம். நாயரின் செயற்பாடுகளை அறிந்து வந்த எம். சி. ராஜா நாயர் நீதிக்கட்சியை உருவாக்கியபோது தம்முடைய வகுப்பினரையும் அவர் தம் கோரிக்கைகளையும் அவர் மூலம் பிராமணரல்லாத அரசியலில் பொருத்த முயன்றார். ஆனால் டி. எம். நாயரின் மரணத்தோடு சீர்திருத்த நோக்கு நீதிக்கட்சியில் அமுங்கிப் போனது. பிராமணரல்லாத அரசியலில் தம் கோரிக்கைகளை இணைப்பதில் தலித்துகள் தோல்வி கண்டனர். கட்சியின் பூர்வாங்கப் பணிகளின் போது தேவைப்பட்ட தலித்துகள் கட்சியின் ஆட்சிக்காலத்தில் புறக் கணிக்கப்பட்டனர். நீதிக்கட்சி பதவியிலமர்ந்தவுடன் தலித்துகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதோடு பல்வேறு சலுகைகள் நிறுத்தப்பட்டன. இரண்டாண்டின் முடிவிற்குள் சென்னை புளியந்தோப்பு கலவரத்தை (1921) ஒட்டி, பறையர்களைச் சென்னையை விட்டே அப்புறப்படுத்த வேண்டுமென்று தியாகராய செட்டியார் தலைமையிலான நீதிக்கட்சி அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நீதிக்கட்சியிடமிருந்து விலகி நின்றதோடு அந்த ஆட்சி கலைந்தபோது இறைவனுக்கு நன்றி என்று எம். சி. ராஜா கூறும் நிலைமை தான் உருவாகியிருந்தது.
நன்றி : காலச்சுவடு
No comments:
Post a Comment