கோ.சுகுமாரன் |
முதலில் அவர் திருமாவளவனின் இக்கூற்றை எடுத்துக்காட்டி பிரச்சினைக்குரியதாகக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறு உண்மை கூட பெரியார் என்னும் திருவுரு மீதான விமர்சனமாக மாறிவிடக்கூடாது என்ற அச்சம் அவருக்கிருக்கிறது. இதேபோல்தான் முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஆராதிப்பதற்காக அக்கட்சி சமத்துவப் பெரியார் என்ற பட்டத்தைத் தந்தபோது அச்சீரழிவைப் பற்றி ஒருவரி கூட விமர்சிக்காமல் சமத்துவப் பெரியார் என்ற பெயரைப் பற்றி மட்டுமே அவர் வல்லினம் இதழில் விமர்சித்து எழுதியிருந்தார். அதாவது கருணாநிதியைச் சமத்துவப் பெரியார் என்று சொன்னால் பெரியார் ஈ.வே.ரா. 'சமத்துவமற்றவரா?' என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் எழுதியிருந்தார்.
காஞ்சி மடத்தைப் பற்றிப் பேசுவோர் கிராமக் கோயில்களில் தலித்துகள் நுழையமுடியாமலிருப்பதைப் பேசுவதில்லை என்று முன்பொருமுறை திருமாவளவன் கூறியிருந்தபோது "இரண்டும் ஒன்றா?" எனக் கேட்டு அக்கூற்றைப் பிராமண ஆதரவு கொண்டது என்ற அளவிற்கு மாற்றியிருந்தார் ஓர் அறிவுஜீவி. மேலிருப்பவரை மட்டுமே எதிரியாகக் காட்டிக்கொண்டு கீழிருக்கும் தலித்துகளுக்குச் சமத்துவம் அளிக்காததுதான் இன்றைய பிராமணரல்லாத அரசியல் என்கிற பொருள் கொண்டது திருமாவின் அவ்விமர்சனம்.
பிராமணர் அடையாளங்களை மட்டுமே எதிரியாகக் காட்டும்போது இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் பொத்தாம்பொதுவாகப் பேசி தப்பித்துக்கொள்பவர்களுக்கு, பதிலளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். ஆனால் இப்படியொரு விமர்சனம் செய்தாலே பிராமணர் ஆதரவு என்றாக்கிவிடும் எளிமைப்படுத்தல்தான் இங்கிருக்கிறது. "தலித்துகள் பேசும் கருத்து பிராமண ஆதரவாகிவிடக் கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்டோரின் ஆதிக்கத்தைப் பேசாமல் அவர்களையும் அரவணைத்துப் பேசவேண்டும்; இவ்வாறு பேசினாலும் அவர்கள் கிராமந்தோறும் வெட்டிக்கொண்டே இருப்பார்கள். தலித்துகள் செத்துக்கொண்டே இருக்கவேண்டும்" என்பதுதான் நியதியாக இருக்கிறது.
கிராமப்புறக் கோயில்களின் தலித் புறக்கணிப்பு போன்றவற்றை அவ்வப்போதான கூற்றுகளாக உதிர்க்காமல் செயல்திட்டமாகக் கொண்டுசெல்லாமலிருப்பது அக்கட்சியின் குறைபாடுகளாக இருந்தாலும் எப்போதாவது இப்படியொரு கேள்வியை எழுப்புவதையும் மறுக்கவேண்டுமா? தலித்துகள் பாதிக்கப்பட்டால் அவர்கள் சார்பாக உண்மையறியும் குழு செல்வது மட்டுமே உண்மையறிதலாகிவிடாது. அவர்களை ஒடுக்கிய / ஒடுக்கும் சக்திகள், அதில் நடந்துள்ள சமகால மாற்றங்கள், சாதிமுறையால் பலன்பெறும் சாதிகள் - அவற்றிற்குக் கிடைக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் பரிசீலனை செய்வதும் உண்மையறிதல்தான்.
திருமாவளவன் |
தலித்துகள் உட்சாதிகளாகவே இருக்கிறார்கள், தலித் அரசியல் தலைமைகள் அவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்று கூறி, குறிப்பாக திருமாவளவனையே சுட்டிவிட்டு, ஆனால் உ.பி.யில் தலித்துகளை மாயாவதி ஒருங்கிணைத்ததாலேயே முதல்வரானார் என்கிறார். மற்றெந்த காரணத்தையும் அவர் கூறவில்லை. சுகுமாரனின் இப்பதிவிற்கு "முதல்வர் பதவிக்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?" என்று பின்னூட்டமிட்டு, அதைத்தான் சுகுமாரனும் கேட்கிறார் என்று சுகுமாரனை ஆமோதித்து பின்நவீன 'அறிஞர்' ஒருவரின் கூற்றும் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் தலித் சாதி ஒருங்கிணைப்பு பற்றி பல்வேறு தலித் தலைவர்களின் நிலைபாடும், முயற்சியும், வரையறையும் என்ன? தலித் சாதிகளின் ஒருங்கிணைவில் தலித் அல்லாதோரின் தலையீடும் பங்களிப்பும் என்ன? போன்றவற்றை விரிவாகப் பேசும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் வெளிப்படும். அவ்வாறு வெளிப்பட்டால் தலித் ஒருங்கிணைப்பில் தலித் தரப்பு குறைபாடு மட்டுமல்ல, தலித் அல்லாத தரப்பின் குறைபாடும் தெரியவரலாம். எனவே என்னுடைய குறிப்பு அதை விடுத்து சுகுமாரனின் மறுப்பில் அடங்கியுள்ள வேறுசில பிரச்சினைப்பாடுகளைச் சொல்ல முயற்சிக்கிறது.
தலித்துகளின் அதிகாரம் பற்றிய கருத்தில் தலித்துகளின் ஒற்றுமைக்குறைவை மட்டுமே காரணம் காட்டி தலித் அதிகாரத்திற்கு எதிராக உள்ள மற்ற பிரச்சினைகளைப் பேசாமல் விடுவது அல்லது மறைப்பது நியாயமல்ல. அதிலும் தலித்துகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதும் யாரும் தங்கள் தரப்பின் குறைபாடுகளை விவாதிக்காமல் தலித்துகளையே குறைகூறுவது தலித் மக்களுக்கு நன்மை செய்வதாகாது என்பதைப் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.
முதலில் சுகுமாரனும் அவரை ஆதரிப்போரும் திருமாவளவனின் கூற்றை எளிமைப்படுத்தி, தாங்கள் பதிலளிப்பதற்கு ஏதுவாகக் குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் கூற்று பெரியாரை மட்டுமே காரணமாக்கியிருக்கிறது என்று கொள்வதைக் காட்டிலும், அவர் நடத்திய அரசியல் பணிகளின் விளைவு, அவருடைய அரசியல் வாரிசுகளின் தலித் பற்றிய மனோபாவம், அவருடைய கருத்தியல் மற்றும் பணி, சாதி எதிர்ப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்றெல்லாம் அதை விவரிக்கமுடியும். அதில் எந்தப் பெரியார் புறக்கணிப்பும் இல்லை. பெரியாரை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் அவர் மீதான சிறு விமர்சனமாகவும் அது அமைந்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. ஆனால் இந்த அளவிலான விமர்சனத்தைக் கூட ஒடுக்கப்பட்டோர் அரசியல் இயக்கம் முன்வைக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பது மோசமான மனோபாவம்.
இங்கு செல்வாக்கு செலுத்திவரும் பிராமண எதிர்ப்புவாதம் பிராமணரல்லாத சாதிகளின் பெரும்பான்மையை வலியுறுத்துகிறது. இப்பெரும்பான்மைவாதம் ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள எண்ணிக்கைப் பெரும்பான்மை இடைநிலை சாதியினரை வலிமையாக்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்துவந்த நிலவுடைமை, பிராமண இந்து மதத்திற்கான ராணுவ சேவை போன்றவற்றால் சமூக அதிகாரம் பெற்றிருந்த பிராமணரல்லாத சாதியினருக்கு, திராவிட இயக்கம் பேசிய கருத்தியல் "அரசியல் அதிகாரத்தை"க் கொண்டுவந்திருக்கிறது. வட்டார அளவில் தலித்துகளை ஒடுக்கிவந்த பெரும்பான்மை இடைநிலைச் சாதியினருக்குக் கிடைத்த இந்த அரசியல் அதிகாரம் தலித்துகளை அதிக பலத்தோடு ஒடுக்குபவர்களாக மாற்றியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகாலத்தில் அரசியல் தளத்தில் நடந்துள்ள மாற்றம் இது. இதற்குப் பிராமணரல்லாத அரசியல் பெரும் காரணம் என்பதை மறுக்கமுடியாது. பிராமணரை அகற்றமுடிந்த இவர்களால் சாதி என்கிற அளவில் தங்களுக்குக் கீழிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளை அரவணைக்க முடிவதில்லை.
தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களில் மட்டுமல்ல; உள்ளாட்சி பிரதிநிதித்துவம், கட்சிகளின் கிளை, ஒன்றிய, வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகங்களிலும் கோலோச்சிவரும் பிற சாதியினர் தலித்துகளைப் புறக்கணித்து வருகின்றனர். இப்போக்கைப் பிரதிபலிப்பதில் திராவிடக் கட்சிகளும், அவர்கள் நடத்தும் நிறுவனங்களும் முதன்மை; தற்போதிருக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் மட்டுமே தலித்துகளுக்குப் பாதுகாப்பு. இச்சலுகைகள் கிடைத்ததில் திராவிட இயக்கங்களுக்கு எவ்விதப் பங்கும் இருந்ததில்லை. மாறாக இச்சலுகைகள் அமுல்படுத்தப்படாமல் இருப்பது இவர்கள் ஆட்சியிலேதான். தற்போது பெரியாரிடமிருந்து திராவிடக் கட்சிகள் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அதிகாரம் பெற்றிருப்பதும், அதிகாரத்தைத் தக்க வைப்பதும் அவர் உருவாக்கிய பிராமண எதிர்ப்புக் கருத்தியல் மற்றும் பணியின் விளைவுதான் என்பதை மறுக்கமுடியாது. இவ்விடத்தில் பெரியாரை முற்றிலுமாகப் புறக்கணிப்பது நம் நோக்கமில்லை என்றாலும் அவரை விமர்சிக்காமல் செல்லவேண்டும் என்று கோருவது நியாயமல்ல.
பிராமணர்களால் ஒதுக்கப்பட்டவர்களென்று அரசியல் நியாயம் கோரிய பிராமணரல்லாதார் தற்காலத்தில் அதிகாரம் பெற்று, பிராமணர்களைக் கட்டுப்படுத்தியிருப்பதோடு, தலித்துகளையும் ஒடுக்குகிறார்கள் என்கிற உண்மை, மாற்றத்திற்குட்படாத பிராமணரல்லாதோர் என்ற கருத்தியலால் தற்கால அதிகாரத்துவத்தை மறைக்கப்படுகிறது. அதே வேளையில் கிராம அளவில் இந்த பிராமணரல்லாத சூத்திரச் சாதியினரால் கடுமையாக ஒடுக்கப்படுகிறவர்களாக இருந்தும் தலித் கட்சிகளால் இம்முரண்பாடு அரசியல் தளத்திற்குக் கொண்டுவரப்படும்போது நாமெல்லாம் பிராமணரல்லாதார் / திராவிடர் / தமிழர் என்ற அடையாளங்களால் முடக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த பிராமணரல்லாதார் என்ற அரசியலின் வரலாறு, அதில் தலித்துகள் இருத்தி வைக்கப்பட்ட இடம் போன்றவற்றையெல்லாம் பேசும்போது பெரியாரும் அதில் வருவார். அவர் பேசி வந்த பிராமணரல்லாதார் அரசியலால் அவர் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார். அதை மீறுவதற்கு அவர் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் செய்ததாகக் கூறமுடியாது. தன்னுடைய அரசியல் வரலாற்றில் குறிப்பான தலித் பிரச்சினை என்ற அளவில் ஒரு போராட்டத்தைக் கூட அவர் நடத்தியதில்லை. மற்றபடி அவர் நடத்திய வேறு சில போராட்டங்களை மொத்தத்தில் பார்க்கும்போது அது தலித்துகளுக்கும் சாதகமானதாக அமைந்திருந்தது என்று வேண்டுமானால் கூறலாம்.
பெரியார் |
பெரியார் போன்றோர் பணியாற்றாத உ.பி.யில் சாதி இந்துக்களை எதிர்கொள்வது தமிழகத்தைவிட எளிமையாக இருக்கலாம். அங்கு தலித்துகளைக் கட்டுப்படுத்த பிம்பங்களோ கருத்தியல்களோ இல்லை. இந்த அர்த்தத்தில்தான் திருமாவளவன் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் இத்தகைய வாசிப்பிற்கே அதிக சாத்தியம். சுகுமாரன் கொண்டிருந்த அர்த்தத்தை இங்கிருந்தும் மறுக்கமுடியும்.
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சூத்திரசாதியினரின் வன்முறை பற்றி சுகுமாரனோ, அவருடைய நண்பர்களோ அறியாதவர்கள் என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனால் சூத்திரர்களின் ஏகபோகம், வன்முறை பற்றிய சிக்கல் வரும்போது அதை ஒத்துக்கொள்வதோ, கடுமையாகக் கண்டனம் செய்வதோ மட்டும் அதற்கு எதிராகச் செயல்பட்டதாக முடியாது. இச்சூழலைக் காப்பாற்றிவரும் / மௌனமாக்கிவரும் அரசியல் சூழல், கருத்தியல் எவையெவையெனப் பேசுவதும் தேவை. ஆனால் இங்கே ஒரு அரசியல்வாதி அறிவுஜீவியைப் போல் பேசியிருப்பதும், அறிவுஜீவியென்போர் அரசியல்வாதியைப் போல் வாதத்தை எளிமைப்படுத்தி ஒற்றையான பதிலைச் சொல்வதும்தான் நம் அறிவுச்சூழலின் கதி போலும்!
சுகுமாரனின் மறுப்பில் சூத்திர சாதியின் பெரும்பான்மைவாதம், தலித்துகளின் மீதான அரசியல் புறக்கணிப்பு பற்றி ஒருவரி விமர்சனம் கூட கிடையாது. உ.பி.யில் மாயாவதியின் வெற்றி தலித் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல. தலித்துகளை நேரடியாக ஒடுக்கும் பெரும்பான்மை சாதியைக் குறிப்பாக அடையாளம் காட்டி, அப்பெரும்பான்மை சாதியைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்டோரின் தலைமையில் பிற எண்ணிக்கைச் சிறுபான்மையினரை ஒன்று சேர்த்ததால் பெற்ற வெற்றி அது என்பதை அவர் கூறவில்லை. கூறவிரும்பவும் மாட்டார். தமிழகத்தில் ஒரு தலித் கட்சியை அப்படி விடுவார்களா? எப்பாடுபட்டாவது அக்கட்சியைப் பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்குள் உள்ளடக்காமல் விடமாட்டார்கள். இப்போது கூட ஒரு சிறு விமர்சனத்திற்குதான் இத்துணை மறுப்பு.
அதே போல தமிழகத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மை இல்லாத சாதிகளின் கூட்டு, அதற்கான தலித் கட்சிகளின் முயற்சி என்பதெல்லாம் எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதோடு அப்படியான முயற்சி கூட இல்லை. மேலும் உ.பி.யில் தலித் உட்சாதிகளிடம் முரண்பாடே இல்லையென்பதும் சரியல்ல. எனவே, திருமாவளவனின் கூற்றை மறுப்பதற்கு நியாயமற்ற காரணத்தையும் அர்த்தத்தையும் கைக்கொண்டது தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள சுகுமாரனுக்குப் பயன்பட்டிருக்கிறது எனலாம். இதையெல்லாம் எழுதினால் சுகுமாரனின் மனித உரிமைச் செயற்பாடுகளை மறந்துவிட்டு எழுதுகிறார்கள் என்று பதில்கள் வரும். ஒருவரை விமர்சிக்கிறோம் என்று சொன்னால் அவரது பிற செயற்பாடுகளையும் மறுக்கிறோம் என்று எதிர்கொள்வது தமிழ்ச்சூழலில் விமர்சனத்திற்கு எதிராகக் கையாளப்படும் ஓர் கவசம் மட்டுமே.
- ஸ்டாலின் ராஜாங்கம்
- ஸ்டாலின் ராஜாங்கம்