(சாதியின் இன்றைய பரிமாணங்களைக் கணக்கில் கொண்டு
அதன் இருப்பை மதிப்பிடும் ‘சாதி
இன்று’ என்கிற நூல் வடிவிலான
அறிக்கை 2013இம் ஆண்டு நவம்பர்
26ந் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது.
சி.லஷ்மணன், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம் ஆகியோரின் கூட்டுப்பார்வையில் உருவான இந்த அறிக்கை
வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் ராஜாங்கம் பேசிய ஏற்புரை திருத்தங்களோடு
எழுத்து வடிவமாக்கி கீழே தரப்படுகிறது.)
நூலை எழுத்தாளர் சிவகாமி வெளியிட மாரியப்பன் அருளானந்தம் பெறுகிறார். |
அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் நவம்பர் 26. அம்பேத்கர் வரைந்தளித்த இந்திய அரசியல் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் எற்றுக்கொள்ளப்பட்ட இந்நாளில் ‘சாதி இன்று’ என்ற இந்த அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் சாதிகள் (1916) என்கிற ஆய்வறிக்கையை அம்பேத்கர் எழுதி நூறாண்டுகளை எட்டவிருக்கும் தருணம் இது. சாதி ஒழிப்பு போன்ற அரசியல் நிலைப்பட்ட சிந்தனைகளை எட்டுவதற்கு முன்பே சாதியின் தோற்றம், அதன் அமைப்பியக்கம் போன்றவற்றை மானுடவியல் மாணவராக இருந்து அவ்வறிக்கையில் அவர் ஆராய்ந்திருப்பார். அதில் சாதியின் தோற்ற நிலைக்கான பல்வேறு காரணிகளை அவர் விவாதிக்கிறார். சாதியின் தோற்றத்திற்கான பல்வேறு சாத்தியங்களை அணுகியிருக்கும் விதத்திலும், இந்தியாவில் நவீன ஆய்வு அணுகுமுறையோடு சாதி பற்றி எழுதப்பட்ட முன்னோடி முயற்சி என்ற விதத்திலும் அந்நூல் அவருடைய முக்கியமான பங்களிப்பு. தமிழில் அம்பேத்கரின் இந்நூல் வந்துவிட்ட பின்னாலும், சாதி பற்றி வரன்முறையான ஆய்வுநூல் இன்று வரையிலும் வெளியாகவில்லை என்றே சொல்லலாம். தமிழில் ஆங்காங்கு வெளியாகியிருக்கும் ஓரிரு நூல்கள், கட்டுரைகள் தவிர குறிப்பிடத்தக்க நூல்கள் ஏதுமில்லை.
இங்கு பொதுவாக சாதி
பற்றிய விவாதமென்றாலே சாதிக்கொடுமையை எடுத்துச் சொல்வதாகவும், சாதி கூடாது என்பதை
அரசியல்ரீதியாக விளக்கும் கருத்துகளாகவும் மட்டுமே காணப்படுகின்றன. மேலும்
இவை எல்லாம் உடனடி எதிர்வினைகளாக
மட்டுமே இருந்துள்ளன. நெடிய பிராமண எதிர்ப்பு
அரசியல் வரலாற்றைக் கொண்ட தமிழ்நாட்டில் இத்தகைய
ஆய்வுகள் முளைவிடாதது ஏனென்பது முக்கியமான கேள்வியாகும். இங்கு சாதியின் அமைப்பியக்கமும்,
அதற்கான எதிர்ப்பும் அரசியல் ரீதியாக மட்டுமே
விளக்கப்பட்டு வருகின்றன. அதாவது பிராமணர் x பிராமணர் அல்லாதார் என்கிற எளிமைப்படுத்தப்பட்ட எதிர்வு
சிந்தனையே சாதியை விளங்கிக் கொள்வதற்குப்
போதுமானதாக இருந்திருக்கிறது. இந்த எதிர்வுக்கு அப்பாலும்
சாதியம் செயல்படுகிறது. தலித்துகள் மீது ஏவப்பட்டு வரும்
வன்முறைகளில் அவற்றிற்கான பங்கே அதிகம். அவற்றையும்
சாதி பற்றிய சொல்லாடல்களில் சேர்க்கவேண்டும்
என்ற நோக்கத்தில்தான் இந்த அறிக்கை எழுதப்பட்டிருக்கிறது.
பேரா.நடராஜ், ஸ்டாலின் ராஜாங்கம், சிவகாமி, பேரா.பத்மினி |
தலித்துகளுக்கும் தலித் அல்லாத சாதிஇந்துகளுக்குமான
இடைவெளி அதிகரித்திருக்கிறது. கடந்தகால மாற்றங்களினூடாக புதிய சாதியவாதம் உருவாகியிருக்கிறது. அது தலித்துகளின் மீது
உடைமை, உடல் மட்டுமல்லாது உளவியல் ரீதியான வன்முறையாகவும்
மாறியிருக்கிறது. 1990களின் தலித் எழுச்சி
என்பது வட்டார ரீதியான ஆதிக்கசாதிகளின் அதிகாரத்திற்கு எதிராகவே முளைவிட்டது. அதுவரையிலும் தமிழகத்தில் சாதியை புரிந்து கொள்வதற்காக
நம்ப வைக்கப்பட்டு வந்த பிராமணர் - பிராமணரல்லாதோர்
என்கிற சட்டகம் அரசியல் ரீதியாக
கேள்விக்குள்ளானது. ஆனால் இப்புதிய கேள்வி
சாதிபற்றிய விவாதங்களில் கணக்கில் கொள்ளப்படவில்லை. மாறாக அறிவுலகம் சாதி
பற்றிய பழைய சட்டகத்தை நீட்டிக்கும் விதமான சொல்லாடல்களிலேயே இயங்கி
வருகிறது. தலித் எழுச்சி ஏற்படுத்திய
புதிய கேள்விகளால் பழைய சட்டகம் உடைந்து
விடக்கூடாது என்கிற
பதட்டமும், அதற்கேற்ப சில பல அம்சங்களைத் தங்கள்
கருத்தியலின் அங்கமாக்கிக் கொண்டு அதை அப்படியே
தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பும்தான் இவற்றில் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் சாதி
சார்ந்து எற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கணக்கில் கொண்ட பேச்சுகளும் எழுத்துகளும்
கடுமையாக எதிர்கொள்ளப்பட்டன. முன்முடிவு சார்ந்து புறந்தள்ளப்பட்டன. அவதூறு செய்யப்பட்டன. புதிய
கருத்தொன்றிற்கு ஏற்படும் சவாலான நிலைதான் அது.
இச்சிக்கலை நாங்கள் தொடர்ந்து சந்தித்து
வருகிறோம். எனினும் செயல்படவேண்டிய தருணம்
இது என்பதைத் தீவிரமாக உணர்ந்திருக்கிறோம்.
2012
நவம்பர் 7ல் தருமபுரியில் தலித்
கிராமங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த
அறிக்கை எழுதுவதற்கான உடனடிக்காரணம். அச்சம்பவம் எங்களைப் பெரும் மன அவசத்திற்கு
ஆளாக்கியது. உண்மை அறியும் குழுக்களின்
வரையறை, அதில் ஈடுபடுவதால் ஏற்படும்
திருப்தி ஆகியவற்றை அறிந்திருந்த போதிலும், அங்கு சென்று பார்க்கவேண்டும்
என்பதற்காக உண்மை அறியும் குழுவாகச்
சென்று திரும்பினோம். தர்மபுரி வன்முறை ஒரு கட்சியின்
அல்லது ஒரு தலைவரின் உடனடித்
தாக்குதல் மட்டுமல்ல. அது மாற்றங்களினூடாக உருவாகி
வந்திருக்கும் புதிய சாதியவாதத்தின் விளைவாகும்.
தலித்துகள் மீது பிறசாதிகள் எல்லாவற்றிற்கும்
வெறுப்பு இருக்கும் நிலையில், தற்போது அவ்வெறுப்பை வெளிக்காட்ட
இப்போது ஒரு கட்சிக்கு அல்லது
சாதிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவே. ராமதாஸையோ, வன்னியர்களையோ கண்டிப்பது உடனடி அரசியல் எதிர்வினை
மட்டுமே. அரசியல் உலகம் மட்டுமல்ல,
அறிவுலகமும் இதைத்தான் செய்கிறது.
இந்நிலையில்தான் உடனடி எதிர்வினை என்பதைத்
தாண்டி புதிய சாதியவாதத்தின் பரிமாணங்களை
அறிவார்ந்த நிலையிலாவது விவாதத்திற்குக் கொணர வேண்டும் என்று
கருதி, புதிய சாதியவாதம் பற்றிய தொடக்கநிலை அறிக்கை
ஒன்றை விவாதித்து உருவாக்குவது என்று முடிவெடுத்தோம். தலித்துகள் தாக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியான அரசியல் ஆதரவு தேவை.
ஆனால் அறிவுஜீவிகளுக்கு அவற்றோடு வேறு சில பொறுப்புகளும் உண்டு. இனால் அவர்களில்
பலரும் கூட அறிக்கை, கூட்டம்
என்று சுருங்கிக் கொள்கின்றனர். உடனடி எதிர்வினையென்பது ஒரு
பிரச்சினையை அரசியல் மட்டத்தோடு நிறுத்திவிட்டு
வேறு பரிமாணங்களை மறைத்துவிடுகிறது. மேலும் பிரச்சினையை தாண்டி
அதன் வேரைப் பார்க்காமல் நிறுத்திவிடுகிறது.
சாதி வன்முறை எழுந்தாலே அதன் கொடூரம் பேசப்படுகிறதே
ஒழிய அதன் வேர், அவற்றின் அரசியல் போன்றவை ஆராயப்படுவதில்லை.
பிரச்சினைக்கு மட்டும் எதிர்ப்பு என்றால்
ஒவ்வொரு முறையும் எதிர்வினை செய்துகொண்டே இருக்கமுடியும். உடனடி அரசியல் எதிர்வினையாகக்
கூட்டம், அறிக்கை போன்றவற்றைச் செயற்படுத்துவது
போராளி பிம்பத்திற்குதான் வழிவகுக்கும். மற்றபடி பிரச்சனை இருந்து
கொண்டேதான் இருக்கும். இன்றைய தமிழ்ச் சூழலின் அரசியல்
உலகமும் அறிவுலகமும் இவ்வாறுதான் ஒன்றேபோல் இயங்கி வருகிறது. இச்சூழலில்தான் கூட்டம், அறிக்கை என்பதையெல்லாம் விடுத்து
இன்றைய சாதியவாதத்தின் அரசியலை ஆராய்கிற விதத்தில்
செயல்படுவதே அறிவார்ந்த எதிர்வினையாக இருக்கமுடியும் என்று கருதி இந்த
அறிக்கையை ஓராண்டு முழுதும் சிறிது
சிறிதாக விவாதித்து
110 பக்கத்தில் ஒரு நூலாகக் கொணர்ந்திருக்கிறோம்.
இன்றைய சாதியவாதத்தின் அரசியலை
ஆராய விரும்பாமல் தலித்துகளுக்காக நடத்தப்படும் பெரும்பான்மையான கூட்டங்களும் அறிக்கைகளும் தலித் அல்லாதவர்களின் குற்றவுணர்வைக்
கழுவிக் கொள்வதாகவும் ஆதிக்கசாதிகள் மீதான தலித்துகளின் கோபத்தைத்
தணிக்கும் சமாதானக் கூட்டங்களாகவும் இருப்பதையே பார்க்கமுடிகிறது. இங்கு தலித்துகளுக்குத் தேவை
கழிவிரக்கமல்ல. இதுபோன்ற தருணங்களில் தலித் அல்லாத சனநாயக
சக்திகளின் ஆதரவைக் காட்டி தலித்துகளின்
பார்வையிலிருந்து ஆதிக்கசாதிகள் மறைக்கப்படுகின்றனர். இன்றைய சமூகப் பரப்பின் சாதி
உளவியல் மற்றும் அதிகாரம் என்பது
வெகுசில சனநாயக சக்திகளின் வரம்பில்
இல்லை. சாதியின் சமகால அதிகார பலத்தையும்,
அதன் விளைவையும் மதிப்பிடுவது உண்மையான சனநாயக சக்திகளை மறுப்பதாகாது.
எங்களின் இந்த அறிக்கை முழுமையானதல்ல.
இதன்மீது இக்கபூர்வமான எதிர்வினைகளை எதிர்பார்க்கிறோம். இதில் சாதி பற்றி இதுவரை
பேசப்பட்டு வந்த பல்வேறு விஷயங்களைக்
கைவிட்டிருக்கிறோம். சில புதிய விஷயங்களைப்
பேசியிருக்கிறோம். அவற்றில் நிறையும் குறையும் இருக்கின்றன. அதோடு வளர்த்தெடுப்பதற்கான கூறுகளும்
இடைவெளிகளும் சேர்ந்தே இருக்கின்றன. அறிக்கை அச்சாக்கம் ஆன
பின்னால் எங்களுக்கே கூட அறிக்கை மீது
விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டு அறிக்கை மறுதிருத்தம் செய்யப்படலாம்.
அறிவார்ந்த தளத்திலான எதிர்வினையென்றாலும் இன்றைய புதிய சாதிய வாதத்தை
எதிர்கொண்டு அதைப் புரிந்து கொண்டிருக்கும்
இந்தத் தலைமுறை தலித்துகளுக்கான எழுத்து
ரீதியான கையளிப்பாகவே
இந்த அறிக்கையை அணுகியிருக்கிறோம். கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றி.
- ஸ்டாலின் ராஜாங்கம்