Sunday, 20 January 2013

தர்மபுரி வன்முறை: மாறும் அரசியல் முகங்கள்


ஸ்டாலின் ராஜாங்கம்

நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள்மீது வன்னியர்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் சாதி முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும் குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசை வலியுறுத்துவதைவிட நடைபெற்ற வன்முறையை முன்வைத்து சமூக அரங்கில் உருவாகிவரும் புதிய அணிசேர்க்கைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.


ராமதாஸ்
தர்மபுரி வன்முறைக்குப் பாமகவின் சாதி அரசியலும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் கலப்புமணத்திற்கு எதிரான கருத்துகளும்தாம் காரணம் என்பதை முதன்முதலில் வெளிப்படையாகச் சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். லண்டனிலிருந்து திரும்பிய திருமாவளவன் உடனடியாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டுவிட்டு சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வன்முறைக்கு பாமகவே காரணம் எனக் குற்றம்சாட்டினார். திருமாவளவனின் நேரடிக் குற்றச்சாட்டு ராமதாஸைப் பதற்றத்திற்குள்ளாக்கியது. வருத்தம் தெரிவிப்பதற்குப் பதில் வன்னியர்களின் வன்முறையை வெளிப்படையாக ஆதரித்தார். அதற்கான நியாயங்களை அடுக்க முற்பட்டார். நடந்த வன்முறைக்கு பாமக காரணமல்ல என்றதோடு தலித்துக்கள்மீது குற்றம் சுமத்துவதற்கும் அவர் தயங்கவில்லை. தன்னை விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் கடுமையாகச் சாடினார். வன்முறைக்குப் பிறகு திருமாவளவன், ராமதாஸ் இருவருமே பொறுமை காப்பதுபோல் தோன்றியது. இருவருக்கும் இடையிலான கடந்தகால அரசியல் உறவுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். சூழலில் ஏதாவது சாதகமான மாற்றம் உருவாகக்கூடும் என இருவருமே நம்பியிருக்கலாம். ஆனால் கள நிலவரமும் சாதிசார்ந்த முரண்பாடுகளும் இப்போது அவர்கள் இருவரையும் எதிரெதிராக நிறுத்தியுள்ளன. பாமகவின் செய்பாடுகளால் தமிழகத்தில் சாதிய வன்முறைக்கான களம் தயார் செய்யப்பட்டுவிட்டது. அந்த வகையில் ராமதாஸின் சமீபத்திய செயல்பாடுகள் மற்ற சாதிவெறியர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் ராமதாஸை ஆதரிக்கவில்லை என்றாலும் இப் பிரச்சினையில் பூடமாகவே போகும் போக்கில் கருத்து தெரிவிக்கின்றன. ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கான ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஒடுக்கும் சாதிகளுக்கு முரணில்லாத வகையிலேயே இக்கட்சிகள் நடந்துகொள்ள விரும்புகின்றன. வெகு சில இடதுசாரித்தன்மையுடைய தமிழ்த் தேசிய இயக்கங்களைத் தவிர ஈழப் பிரச்சினைக்குப் பின்பு தலையெடுத்த புதிய தமிழ்த் தேசிய அமைப்புகளிடம் வலதுசாரித் தன்மையே மேலோங்கி இருக்கிறது.

தலித் வெறுப்பைக் கொண்டிருக்கும் தலித் அல்லாத சாதிகளைக் கலப்புமண எதிர்ப்பு, வன்கொடுமை தடுப்புச் சட்ட எதிர்ப்பு போன்ற வற்றின் மூலம் ராமதாஸ் ஒருங்கிணைக்க முயல்கிறார். இதற்கு முன்பு தலித்துகள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோதெல்லாம் தலித் இயக்கங்களே எழுச்சிபெற்று வந்துள்ளன. ஆனால் தர்மபுரி வன்முறைக்கெதிரான தலித் இயக்கங்களின் செயல்பாடுகள் ஒரு எல்லைக்குமேல் அரசியல்ரீதியாக விரிவடையவில்லை. ஆனால் பாமக உள்ளிட்ட சாதிய அமைப்புகளின் அரசியல் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ராமதாஸின் இம்முயற்சிக்குக் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை என்னும் பெயரில் கோவைப் பகுதியில் செயல்படும் புதிய அமைப்பைத் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ஆதரவளிக்கவில்லை என்பதே உண்மை. ராமதாஸ் கூட்டிய தலித் அல்லாத சாதிகளின் கூட்டத்திற்குப் பெரும்பான்மைச் சாதிகளிலிருந்து அவற்றைப் பிரதி நிதித்துவப்படுத்தும் சக்திகள் என்று யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு இரண்டு காரணங்களைக் சொல்லலாம். பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு ராமதாஸைப் போன்ற வலுவான தலைமை எதுவும் இல்லை. ராமதாஸின் தலித் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பிற சாதித் தலைவர்கள் மறுப்பவர்கள் அல்ல என்றாலும் ராமதாஸின் அரசியல் தலைமைமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் விடுத்த அறிக்கையில் இப்பிரச்சினை ராமதாஸின் சொந்த அரசியல் நோக்கம் பாற்பட்டது என்று கூறியிருந்ததைக் கவனிக்க வேண்டும். ஆனால் தனக்கு வன்னியர்களின் ஆதரவு பெருகியிருப்பதாக ராமதாஸ் நம்புகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகள் மூலமாகவே வன்னியர்களை ஓரணியில் திரட்ட முடியும் என்று ராமதாஸ் கருதுகிறார். ஓட்டு வங்கி அரசியல் கட்சிகளுக்குப் பொதுவாக உள்ள பலவீனங்கள் விடுதலைச் சிறுத்தைகளிடமும் உள்ளன. ராமதாஸ் அவற்றைச் சுட்டிக்காட்டி அக் கட்சியை ஒரு சமூகவிரோதக் கட்சியாகக் கட்டமைக்க முயல்கிறார். தலித்துகளைப் படிக்கவைப்பதற்கும் ஒழுங்காக வேலைக்குச் செல்வதற்கும் அறிவுரை வழங்குமாறு திருமாவளவனுக்கு அறிவுரை வழங்குமளவுக்கு ஒருகாலத்தில் பெரியாரியவாதியாகவும் பிறகு அம்பேத்காரியவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்ட ராமதாஸ் ஞானம் பெற்றிருக்கிறார். ராமதாஸ் தலித்துகள் பற்றி எந்த அளவிற்கு அருவருப்பான கருத்துகளைக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது தற்போதைய இத்தகைய சாதிவெறிப் பேச்சுகளே சான்று. உண்மையில் தலித் மக்களின் பிரச்சினைகளை விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அரசியல் கட்சியின் எல்லைக்குள் வைத்து குறுக்கிப் பார்க்க முடியாது. தருமபுரியில் தாக்குதலுக்குள்ளான தலித்துகள் அனைவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை. வன்னியர்-தலித் கலப்புமணம் மட்டுமல்ல பல்வேறு சாதிகளுக்கிடையேயான கலப்பு மணமும் இங்கு நீண்ட காலமாக நடந்து வந்திருக்கின்றன. இந்நிலையில் ராமதாஸ் தலித்துகளின் பிரச்சினையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாகக் காட்டுவது தலித்துகளை அவமதிக்கும் செயல். அவர் கட்டமைக்க விரும்பும் தலித் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடு. அதே வேளையில் தருமபுரி வன்முறைக்கு எதிரான விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கைகள் கூட்டணி அரசியலின் தேவைகளுக்கு உட்பட்டு அமைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இன்றைய சூழல்சார்ந்த அரசியல் நிலைப்பாட்டுக்குச் சில காரணங்கள் உண்டு. அதிகாரம், அதிகாரத்திற்கான வழி என்பவற்றைத் தேர்தல் என்பதாக மட்டுமே அது புரிந்திருக்கிறது. மேலும் சாதிச் சமன்பாடுகளை ஒருங்கிணைப்பதில் தலித்துகளின் கட்சியாக அது சந்திக்கும் சவால், சமகாலச் சூழலில் தாக்கம் செலுத்திவரும் அரசியல் நிலைபாடுகளை எதிர்கொள்வதிலுள்ள சிக்கலும் முக்கியமானதே. குறிப்பாகத் திராவிட இயக்கங்கள் அடையாள அளவில் தலித்துகளை உள்ளடக்கியும் அதிகார அளவில் விலக்கியும் நடத்திவரும் அரசியலைக் கருத்தியல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எதிர்கொள்வதிலுள்ள சிக்கலே அது. பாமகவோடு அடையாள அளவில் இணைந்து நின்று மோசமான பாடத்தைப் பெற்றிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அடுத்தடுத்து தேர்தல் கூட்டணிக்காகத் தொடர்ந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியைச் சார்ந்தேயிருக்கும் அரசியலை அது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சராசரி அரசியல் கட்சிக்கான குணாம்சங்களோடு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் சமரசங்களுக்கு அக்கட்சி ஆளாகியிருக்கிறது. எனவே தற்போது சில தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டணி, அதைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவிலான போராட்டம், நிகழ்ச்சிகள் என்ற அளவில் அக்கட்சியின் எல்லை குறுகிவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் தலித் பிரச்சினைகள் விரிந்த பார்வையில் தலித் அரசியல் அதிகாரம் பெறுவதை நோக்கி எடுத்துச் செல்லப்படத்தக்க வகையில் கையாளப்பட வேண்டியவை. அதைத் தேர்தல் நோக்கம் போன்ற உடனடி லாப நட்ட கணக்குகளைச் சார்ந்து மட்டும் பார்க்க முடியாது.

தருமபுரி வன்முறையை ஒட்டி ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுள் முக்கியமானது திராவிட இயக்கங்களின் தலித் ஆதரவு நிலைப்பாடு. வருத்தம் தெரிவித்த அதிமுகவைத் தவிர திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளன. பெரியார் திராவிடர் கழகமும் தற்போதைய திராவிடர் விடுதலை கழகமும் தலித் பிரச்சினைகளில் ஏற்கனவே அக்கறை செலுத்தி வந்தவையே. திமுகவோடு சேர்ந்தியங்கும் திராவிடர் கழகம் தலித் பிரச்சினையொன்றில் வெளிப்படையாகத் தன் கண்டனத்தை இப்போதுதான் வெளியிட்டது. தருமபுரியிலேயே மாநாடு ஒன்றையும் நடத்தியது. திராவிட இயக்கங்கள் இப்பிரச்சினையில் குறிப்பான நிலைபாட்டிற்கு வந்திருக்கின்றன.

திராவிட இயக்கங்களின் இத்தகு ஆதரவு நிலைபாட்டை ஒட்டி திராவிட இயக்கங்களே தலித்துகளின் நிரந்தர அரண் என்ற கருத்து எழத் தொடங்கியுள்ளது. திராவிட இயக்கங்களின் தலித் ஆதரவு அரசியல் மட்டத்தோடு மட்டுமே நிற்கும் நிலையில் திராவிட இயக்கங்களின் தலையீட்டை வரவேற்க வேண்டிய அதே வேளையில் அதற்கான காரணங்களையும் இதிலிருக்கும் வரையறைகளையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது. இத்தலையீடு அரசியல் ரீதியானதாக மட்டுமே இருக்குமானால் பாமகவுடனான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறவைப் போன்று தற்காலிகமானதாகவே முடியும். மாறாகத் தலித் எழுச்சியின் வழி உருவாகியிருக்கும் கருத்தியல் மாற்றங்களையும் கணக்கில் கொண்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்புவது முக்கியமானது. இந்தக் கேள்வி அரசியல் தளத்தில் இல்லாமல் போகலாம் ஆனால் கருத்தியல் தளத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் தலித் இயக்கங்களின் எழுச்சி திராவிடர் இயக்கங்களின் போதாமையால் எழுந்தது மட்டுமல்ல திராவிடக் கட்சிகளின் அரசியலாலும் அடையாளத்தாலும் சாதிமயமாகிவிட்ட மொத்த சூழலுக்கும் எதிராக முளைவிட்ட கலகம் அது. அடுத்து சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதில் தலித் இயக்கங்கள் கிளப்பிவிட்ட புதிய எதார்த்தங்கள் திராவிட இயக்கக் கருத்தியல் வரையறைகளைத் தாண்டியது.

இந்நிலையில் தலித் இயக்கங்களின் கடந்தகால அரசியல் உறவு தந்த அனுபவங்களின் அடிப்படையில் இக்கேள்விகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் இங்கு இது போன்ற கேள்விகளும்கூட எழுப்பப்படக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தர்மபுரி வன்முறை சம்பவத்திற்கு எதிராகக் கிடைக்கும் ஆதரவும் இல்லாமல் போய்விடும் என்று காரணம் கூறப்படுகிறது. விமர்சனம் இல்லாமல் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதே அரசியல் ஆதரவுக்கான நிர்ப்பந்தமாக இருக்குமானால் அரசியல் ஆரோக்கியம் பேணுபவர்கள் என்று நம்மைச் சொல்லிக்கொள்வதில் எந்த நியாமும் இல்லை. தருமபுரி வன் முறைக்கு எதிரான திராவிட இயக்கக் குரல்களில் கலப்புமண ஆதரவு, ராமதாஸ் எதிர்ப்பு, தலித் ஆதரவு ஆகிய மூன்றும் பேசப்படுகின்றன. கடந்த காலங்களில் திராவிடர் கழகத்தின் நிலைபாடுகளுள் ஒன்றாகயிருந்த கலப்புமணம் பற்றிய மறுபேச்சைத் தொடங்குவது அவர்களுக்கு கடினமானதல்ல. அடுத்து திராவிடக் கட்சிகளையும் மொழி அடையாள நோக்கில் திராவிட அடையாளத்தையும் தொடர்ந்து சாடிவரும் ராமதாஸை வன்மையாக எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ள திராவிட இயக்கம் அவருக்கு எதிரான வாய்ப்பாகவும் இச்சூழலில் நிற்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றன. ராமதாஸ் இறுகப் பற்றியிருக்கும் சாதிப் பெரும்பான்மைவாதம் பற்றியோ அப் பெரும்பான்மைவாதத்திற்குக் கருத்தியல் வலிமைதந்த பிராமண எதிர்ப்பு அரசியல் பற்றியோ எந்தவிதப் பரிசீலனையும் இல்லாமல் இதை ராமதாஸ் எதிர்ப்பு பிரச்சினையாகவே பார்ப்பதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற சனநாயக முறை சார்ந்து உருவான சாதிப்பெரும்பான்மை வாதத்தைக் கருத்தியில் சார்ந்து பிராமணர்களை மட்டுமே ஆதிக்க சாதிகளாகக் காட்டிப் பிற சாதிகளைக் காப்பாற்றின என்பதால் இச்சூழல்மீது திராவிட இயக்கங்கள் கருத்துகூற வேண்டியவையாக உள்ளன. ஆனால் அத்தகைய பேச்சே இல்லை.

மாறாக இப்போக்கு ராமதாஸ் என்னும் அரசியல்வாதியின் தவறான நிலைப்பாடாக சொல்லப்பட்டு அவ்விடத்தில் தலித் சார்பாக நின்றுகொள்கிறார்கள். தலித் ஆதரவு என்பதுகூட தலித்துகளிடம் செல் வாக்குப் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அருகே வைத்துக்கொள்வதாகவே இருக்கிறது. மேலும் திராவிட, தலித் கட்சிகளின் இக்கூட்டுக் குரல் திமுக கூட்டணி அரசியல் நலனோடும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

திராவிட கட்சிகளின் இந்த அளவிலான தலித் ஆதரவு நிலைப்பாட்டிற்குக்கூடக் கடந்த இருபதாண்டுக் கால தலித் அரசியல் எழுச்சியும் ஒரு காரணம். பிராமணரல்லாத சூத்திர சாதிகளின் வன்முறைக்கு எதிராக அடித்தட்டு மக்களை அரசியல்மயப்படுத்தியதின் மூலம் பிராமணரல்லாதார் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தலித் இயக்கத்தை அரவணைப்பதன் மூலம் அதன் தனித்த சொல்லாடலை உள்ளிழுத்து அதைத் தமிழ்நாட்டுப் பிராமணரல்லாதார் அடையாளத்தின் அங்கமாக்கிவிடும் அபாயம் இதிலிருக்கிறது. சாதிவன்முறை இவர்களால் கண்டிக்கப்பட்டாலும் பிராமணரல்லாதோரின் சாதிவெறி பிராமண சூழ்ச்சியின் விளை வாகவே சொல்லப்பட்டு இன்றைய சாதிமுரண்பாடுகளுக்கு ஏதாவதொரு வகையில் பிராமண ‘டச்’ தரப்படுகிறது. சமகால அரசியல் தேவை என்ற முறையிலும் அரசியல் தனிமைப்படுத்தலுக்கு எதிரான உடனடி ஆதரவு என்ற முறையிலும் திராவிடக் கட்சிகளின் இக்கூட்டணி திருமாவளவனுக்குத் தேவைப்படும் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் அவரின் கூட்டணி நிலைப்பாடு திராவிட அரசியலின் குரலாக ஒலிப்பதையும் தவிர்க்க முடியாத தாக்கிவிடலாம். இவ்விடத்தில் தலித்துகளை ஒடுக்கும் சூத்திரர்கள் மீதான கோபம் மடைமாற்றப்பட்டு சூத்திர சாதிகளின் சமகால அதிகாரம் பற்றிய ஸ்தூலமான எதார்த்தம் மறைக்கப்படும் நிலைமை கேள்வியில்லாமல் தங்கி நிற்கும்.

திருமாவளவன்
இந்நிலையில் அரசியல் தளத்தில் ஏற்பட்டுள்ள திராவிட இயக்கம் மற்றும் தலித் அமைப்பு சார்ந்த இக்கூட்டணிக்கான கருத்தியல் முகம் போன்று அ. மார்க்ஸ் எழுதி வருகிறார். இதைக் குறித்து அவர் தனது முகப் புத்தகத்தில் இரண்டு முக்கியக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். ஒன்று, தலித் அல்லாத சாதிகளைக் கொண்டு தான் ஏற்படுத்த விரும்பும் சமூகக் கூட்டணி பற்றி ராமதாஸின் கூற்று குறித்தது. ராமதாஸின் தமிழியம் சாதிய நோக்கம் கொண்டதாக இருப்பதால் அவரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் திராவிடம்தான் பார்ப்பன எதிர்ப்பு குணம் கொண்டது என்பதால் சரியானது என்று அவர் வாதாடுகிறார். அதோடு இக்கருத்திற்குத் திராவிட இயக்கத்தை விமர்சித்துவரும் தலித் அறிவுஜீவிகளும் பதிலளிக்க வேண்டும் என்று கூறுகிறார். தலித் நிலைபாட்டிலிருந்து பார்க்கும்போது இந்த இரண்டு அடையாளங்களின் தற்போதைய மோதலும் உள்ளீடு அற்றது. எண்ணிக்கை பெரும்பான்மை பலம்கொண்ட சாதிகளுக்குகிடையேயான அதிகார மோதலே அது. சாதி உணர்வை வெவ்வேறு வகைகளில் மறைத்துக்கொள்ளும் அடையாளங்கள் என்ற வகையில் இரண்டுமே விமர்சனபூர்வமாக அணுகப்பட வேண்டியவை. திராவிடமும் தமிழியமும் சாதிப் பெரும்பான்மை வாதத்தையே நியாயமாக்குகின்றன. இந்நிலையில் தமிழியத்தின் சாதியப் பண்பைக் காட்டி தலித்துகளைத் திராவிட இயக்கக் கருத்தியல் பக்கம் இழுக்கும் நோக்கம்தான் அ. மார்க்ஸிடம் இருக்கிறது.

அ. மார்க்ஸ் தரும் மற்றொரு குறிப்பு டிசம்பர் ஒன்பதாம் தேதி கி. வீரமணி தருமபுரியில் நடத்திய சாதித் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை தொடர்பானது. திமுக, திக ஆகிய கட்சிகளோடு சேர்ந்து தன் கட்சியும் மூன்று குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று கூறிய திருமாவளவனின் கூற்றை எடுத்துக் காட்டிச் சிலாகிக்கும் அவர் திராவிட இயக்கங்களோடு தலித் இயக்கம் கொண்டுள்ள கூட்டணி இயற்கையானது என்று குறிப்பிடுகிறார். அத்தகைய கூட்டணி தொடர வேண்டுமென்று அங்குப் பேசியதோடு இடையில் சில காலம் ஏதோ பெரியாரும் திராவிட இயக்கமும் தலித்துகளுக்கு எதிரானது என்பதுபோலச் சிலர் சுயலாபங்களுக்காகப் பரப்பிவந்த கருத்தைத் தருமபுரி கலவரம் உடைத்துள்ளது என்கிறார். தருமபுரி வன்முறையை எதிர்கொள்வதும் தமிழியத்தை எதிர்கொள்ளும் திராவிட ஆதரவும் ஒன்றே என்பதைப் போல் அவரால் காட்டப்பட்டாலும் உண்மையில் அவர் பேச விரும்புவது தருமபுரியை பற்றியல்ல. மாறாக அவரின் நீண்ட நாளைய அறிவுஜீவி ஈகோவைச் சமன்செய்யும் வாய்ப்புப் பற்றியே. அதாவது கடந்த காலத்தில் பெரியாரை அ. மார்க்ஸ் மாற்று சிந்தனையாளராக முன்னெடுத்ததும் ரவிக்குமார் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் முற்றிலுமாகப் புறக்கணித்து விமர்சித்ததையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. பெரியார் பற்றிய விமர் சனத்தை ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழியாக முன்வைத்தார். பெரியார் மற்றும் திராவிட இயக்க விமர்சனத்திற்கு தலித் இயக்கத்ங்களின் கருத்தியல் குரலாக ரவிக்குமார் விளக்கியதைப் போன்று திராவிடம் பெரியார் ஆதரவிற்கான கருத்தியல் குரலாக அ. மார்க்ஸ் இங்கே வெளிப்படுகிறார். இதன் மூலம் தன் பழைய கருத்தியல் நிலைபாட்டைத் தூசுதட்ட முடியாத அரசியல் நலனோடு பிணைந்திருக்கும் ரவிக்குமாரின் கடந்த கால விமர்சனங்களைத் தகர்ப்பது அவருக்கு எளிமையாகிவிடுகிறது. திமுகவுடனான கூட்டணி, தர்மபுரி வன்முறைக்கு எதிரான ஆதரவு என்ற வகைகளில் திராவிட இயக்கங்களோடு கூட்டைப் பேணும் திருமாவளவன் இடம்பெற்றுள்ள மேடையிலேயே இதை செய்யும்போது இக்கூற்று இரண்டு தரப்பின் ஒப்புதலையும் பெற்றதாகிவிடுகிறது. தன் தரப்பிற்காகக் காத்திருந்து வாய்ப்பைப் பயன்படுத்தும் அரசியல்வாதி நிலையில் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து தலித்துகளுக்கு ஆதரவளிக்கும் இயக்கங்கள் கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வலுப்பெற்று வந்திருக்கும் தலித் கருத்தியலை முடக்குவதற்கான வாய்ப்பாக இதை மாற்ற முயல்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் சனநாயகம் சார்ந்து உருவாகியிருக்கும் சாதிப் பெரும்பான்மை வாதம் திராவிட இயக்கத்தால் சமூக நீதி என்னும் பெயரால் வளர்த்தெடுக்கப்பட்டது. இப்பெரும்பான்மை வாதம் தலித்துகளின் அரசியல் எழுச்சியை இன்றளவும் கட்டுப்படுத்தி வருகிறது. திராவிட இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்தை எவ்வித விவாதமும் இல்லாமல் அது சாதி எதிர்ப்புதான் என்று ஒற்றைச் சொல்லால் நியாயப்படுத்திவிட்டு அ. மார்க்ஸ் நகர்ந்துவிடப் பார்க்கிறார். ஆனால் தமிழகப் பிராமண எதிர்ப்பு இயக்கம் உள்ளடக்கத்தில் பிராமண வெறுப்பைப் பேசிய சூத்திர எழுச்சியே என்பதை விமர்சனபூர்வமாக ஒத்துக்கொண்டால் அவருடைய தற்போதைய இந்த அவசரமான கருத்துகளிலுள்ள பிரச்சினையைப் புரிந்துகொள்ளலாம். எம்எல்ஏ, எம்பி ஆகிய அரசியல் பிரதிநிதித்துவத்தை மட்டுமல்ல அரசுசார்ந்த திட்டங்கள், பொது ஏலம், அரசு மூலதனம் போன்றவையும் பெரும்பான்மைச் சாதியினருக்கானதாக ஆக்கப்பட்டுவிட்டது. இவையாவும் திராவிட இயக்க கட்சிகளின் ஆட்சிகளில் நடந்தவையே.

மேலும் இன்றைய சாதிமுரண்பாடு என்பதே ஒவ்வொரு வட்டாரத்தின் பெரும்பான்மை சாதிக்கும் அங்கிருக்கும் தலித்துகளுக்குமானதே. அதோடு சாதியின் தோற்றம் தொடங்கி இன்றைய சாதிய அதிகாரப் பரிமாற்றம் வரையிலும் பலன்பெற்ற/ பெறும் பல்வேறு சாதிகளின் பங்கும் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் பிராமண எதிர்ப்பு என்னும் ஒற்றை அணுகுமுறையால் தலித்துகளைக் கட்டுப்படுத்த நினைப்பது என்பது தான் சார்ந்த அறிவுஜீவித நிலைப்பாட்டின் அரிப்பே தவிர வேறல்ல.

திராவிட இயக்கம் பற்றிய மார்க்சின் விமர்சனம் ரவிக்குமார் சார்ந்தது மட்டுமல்ல தன் சக அறிவுஜீவியை எதிர்கொள்வதற்கான விமர்சனம். தலித் இயக்கத்திற்கான கருத்தியல் தேவையாகவும் இருப்பதை அறிந்து கொண்டு செயற்பட்டது மட்டுமே ரவிக்குமாரின் புத்திசாலித்தனம். மேலும் அன்பு பொன்னோவியம், தி. பெ. கமலநாதன் போன்ற தலித் முன்னோடிகளும் திராவிட இயக்கத்தை விரிவாக விமர்சித்து எழுதியுள்ளனர். தலித்துகளின் இத்தகைய விமர்சனத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக ரவிக்குமாரைக் காட்டி தலித்துகள் வளர்த்தெடுத்து வந்த கருத்தியல் தொடர்ச்சி அனைத்தையும் பொய்யென்று பேசுவது தலித்துகள்மீது தொடுக்கப்படும் உள்நோக்கம் கொண்ட தாக்குதல் என்றே சொல்ல வேண்டும். 1990களில் தமிழகக் கிராமப்புற தலித்துகளின் குரலாக எழுந்த தலித் அமைப்புகளின் எழுச்சியோடு உருப்பெற்ற கருத்தியலே அது. தலித் மக்களை அணி திரட்டிய திருமாவளவனின் ஆரம்ப கால பேச்சு ஒன்றில்கூட பிராமணர் மீதான தாக்குதலைக் கேட்டுணர முடியாது. பிராமணர்களை எதிரியாகக் காட்டவேண்டிய எதார்த்தம் ஏதும் உள்ளுர் அளவில் இல்லாததால் இந்நிலை. இந்த உண்மையை ஒத்துக்கொள்வதற்கும் இந்நிலைமையே தலித் அமைப்புகளின் குரலாக நீடிப்பதிலும் திராவிட இயக்க ஆதரவாளர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. பெரியார், திராவிட இயக்க விமர்ச்சனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்ந்த தளத்திலும் வெளியிலும் முன்வைத்தபோது ரவிக்குமார்மீதும் கட்சிமீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கொஞ்சமல்ல. ஆனால் திராவிட இயக்கம், பெரியார் சிந்தனைகளைத் தொகுப்பதற்கும் பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் தலித்துகளுக்காக இரட்டைக் குவளை முறை ஒழிப்பு முதலான நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தியதற்கும் அந்த விமர்சனமே காரணமாகியது. ரவிக்குமார்மீதான அ. மார்க்ஸ் உள்ளிட்டோரின் ஆத்திரம் திருமாவளவன்மீதான தாக்குதலாகவும் இருந்தது. இத்தகு எதிர்வினைகள் பற்றித் தனிநூலே எழுத முடியும். வெகுஜன கட்சியாக இயங்க வேண்டிய திருமாவளவன் நம் சூழல் உருவாக்கிய எதிர்ப்புக்கு பணிந்துபோனதோடு ரவிக்குமாரும் அக்கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகித் தான் மேற்கொண்ட விமர்சனங்களுக்கு மருதலாகி நின்றுவிட்டார். ஒருவகையில் தலித் இயக்கத்திற்கான கருத்தியல் தளத்தின் தொடக்க முயற்சி இவ்வாறு நீர்த்துப்போனது என்றே சொல்ல வேண்டும்.

திராவிட இயக்கம் பற்றிய விமர்சனம் கைவிடப்பட்டு தேர்தல் சார்ந்த உறவுகளுக்கேற்ப முழுமையாகத் தன்னை தகவமைத்துக்கொண்ட பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமீது தொடுத்து வந்த தாக்குதல் முற்றாகக் கைவிடப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகுதான் அக்கட்சி பெரிய அளவில் சமரசங்களைச் சந்தித்ததோடு தலித் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டிய நிலையிலிருந்தும் பிறழ்ந்தது. அவர்கள் விரும்பும் அரசியல் சட்டகத்திற்குள் தலித்துகள் இருந்துகொண்டால் போதும் என்று மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி அவர்களின் எந்தவித நடவடிக்கைகளும் பிரச்சினையாகப் பார்க்கப்படுவதில்லை. சுப. வீரபாண்டியன் போன்ற திராவிட கட்சி ஆதரவு அறிவாளிகள் அந்த அரசியல் சட்டகத்தைத் தலித்துகள் தாண்டி விடாமல் பார்த்துக் கொள்வதற்காகவே தலித் அரங்குகளில் இயங்குகிறார்கள். பெரியார் பிறக்காத உத்தரப் பிரதேசத்தில் தலித் ஒருவர் முதல்வராக முடிகிறது. தமிழகத்தில் அது முடியவில்லை என்ற வெகு எதார்த்தமான திருமாவளவனின் கூற்றுகூட இங்கே உடனே மறுக்கப்படுகிறது. அண்மையில் ஆனந்த விகடனில் அவரளித்த கேள்வி பதில் பகுதியில் பெரியார் பிறந்த தமிழகத்தில் தலித் முதல்வராக முடியவில்லை என்பதைக்கூடச் சொல்ல முடியவில்லை என்று கூறியிருந்தமை நம் சூழலில் தலித்துகளின் அரசியல் விமர்சனம் பிராமணரல்லாத அரசியல் சட்டகத்தால் கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதாக இருந்தது. அரசியலில் மட்டுமல்லாது கருத்தியல் தளத்திலும் செல்வாக்குப் பெற்றுள்ள திராவிட இயக்கத்தின் இத்தகைய ஏகபோகத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவதே நடைமுறை அரசியலுக்குப் பயன்படும் என்ற நிலையிருக்கும் திருமாவளவனைச் சாட்சியாக வைத்துக்கொண்டு தலித்துகள் நடத்திவந்த கருத்தியல் தனித்துவத்தை முடக்க நினைப்பது நியாயமல்ல. இங்கே தலித் அல்லாத அறிவுஜீவிகள் தலித் பிரச்சினைகளைப் பேசுவதில்லை என்றும் யாரும் சொல்லிவிட முடியாது. அதோடு தலித்துகளுக்காக நாங்களே எழுதுவோம், பேசுவோம், தலித்துகள் அதையெல்லாம் கேட்டுச் செயற்பட்டால் போதுமானது என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.
நன்றி : காலச்சுவடு

தமிழைத் தின்ற சாதி (தருமபுரி வன்முறை பற்றிய குறிப்புகள்)

- ஸ்டாலின் ராஜாங்கம்

புகைப்படங்கள்: ஜெய்கணேஷ்

நவம்பர் 7ஆம் தேதி வன்னியர்களால் மிக மோசமாகத் தாக்கப்பட்ட தருமபுரியின் மூன்று கிராமங்களுக்கு எழுத்தாளர் குழுவாக நவம்பர் 10ஆம் நாள் சென்றிருந்தோம். செப்பனிட முடியாத அளவுக்கு எல்லா வீடுகளும் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருந்தன. உடல்மீதான வன்முறையைத் தவிர்த்துவிட்டு வீடுகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய திட்டமிட்ட சம்பவம் இது. மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் வற்றவில்லை. எங்கள் குழுவில் மறைமுகமாகவேனும் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளாதவர் யாருமில்லை. வாழ்விடத்தை இல்லாமலாக்குவது சாகடிப்பதைவிட மோசமான வன்முறை. இந்நிலைமை பாதிக்கப்பட்டவனின் இருப்பையே அழிக்கிறது. உயிரை மட்டும் விட்டுவைப்பதன் மூலம் இழப்பு ஏற்படுத்திய வலியிலேயே அவனை உழலவைக்கும் உளவியல் தந்திரம் இது. எலி வளையானாலும் தனிவளை என்பது தமிழ்ப் பழ மொழி. தலித் ஒருவன் வீடு கட்டுவது அசாதாரணமானது. முதலீடும் உழைப்பும் கால அளவும் அளப்பரியன. குறைந்தபட்ச வசதிகளோடு ஒரு வீட்டைக் கட்டிவிடுவது தலித்தின் வாழ்நாள் சாதனையாகிவிடுகிறது. மூன்று கிராமங்களிலும் எல்லா வீடுகளும் சீர்குலைக்கப்பட்டிருப்பதோடு ஒரு வீட்டின் எல்லாப் பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளன. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு 1987இல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டம் தொடங்கி இன்றுவரையிலும் தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்துவதும் வீடுகளை அழிப்பதும் வன்னியர்களின் வன்முறை வடிவங்களாக இருந்து வருகின்றன.

மூன்று கிராமங்களில் கொண்டம்பட்டி என்னும் ஊரில் ஒரு வீட்டில் முழுக்கக் கருகல் நெடி. ஏறக் குறையப் பத்து மூட்டை நெல் தீக்கிரைக்கிரையாக்கப்பட்டுள்ளது. எரிந்து சிதைந்த வீட்டிற்கு வெளியே வீடிழந்த பெண் குத்துக்காலிட்டுக் கதறியழுதுகொண்டிருந்தார். அவருக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காததுதான் வியப்பு என்றார் ஒருவர். மறுபுறம் பக்கத்துக் கிராமங்களின் உறவினர்களும் ஆர்வலர்களும் திரட்டித் தந்த உணவையும் உடைகளையும் பெற்றுக்கொள்ளப் பாதிக்கப்பட்ட மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். வரிசையில் வந்துகொண்டிருந்த ஒரு பெண் என்ன நினைத்தாரோ அவற்றை வாங்க மறுத்துக் கதறியழுதார். இத்தகு அழிவுகளையும் வலிகளையும் புரிந்துகொள்ள ஒருவர் தலித்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது. ஆனால் தலித்துகளின் துயரக் குரலை எந்தவிதத்திலும் பொதுச் சமூகம் பொருட்படுத்துவதில்லை. இத்தகைய அழிவிற்குப் பின்னும் அம்மக்கள் யார்மீதும் சிறு கல்லும் எடுத்தெறியவில்லை. சாதியமைப்பின் பகுதியாகிய இத்தகைய ‘சகிப்புணர்வைப்’ பயன்படுத்திக் கொண்டு நம் சமூகம் தலித்துகளைத் தொடர்ந்து சுரண்டுகிறது.

நாங்கள் சென்றிருந்தபோது மூன்று கிராமங்களிலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மட்டும் இருந்தனர். அடுத்தடுத்துத் தலித் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும் அப்பகுதிக்கு வந்துவிட்டனர். சில நாட்கள் கழித்துச் சில அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன. எனினும் தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் இப்பிரச்சினையில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அல்லது தலித்துகளுக்கு முகம் காட்டி, வன்னியர்களுக்கும் பாதகமில்லாமல் பேச விரும்புகிறார்கள். தலித் ஆணும் வன்னியப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதையொட்டி இப் பிரச்சினை ஏற்பட்டது. வன்னியர் சங்கமான பாட்டாளி மக்கள் கட்சியும் கொங்கு வேளாளக் கவுண்டர் அமைப்புகளும் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக விடுத்த சவாலைக் கண்டுகொள்ளாமலிருந்த தமிழகத்தின் பெருவாரியான அமைப்புகளையும் அறிவுஜீவிகளையும் தருமபுரிச் சம்பவம் பேசவைத்துள்ளது. இதற்கு மூன்று தலித் கிராமங்கள் அழிய வேண்டியுள்ளது. தலித்துகள்மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாது சேதத்தின் அளவும் அரசியல் நெருக்கடியும் சேர்ந்தே இவ் விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.

பெரியார் முன்னெடுத்த அரசியல் கருத்தாக்கத்திற்கே பெரிய நெருக்கடி என்ற முறையில் பெரியார் இயக்கங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. ஏற்கனவே போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகம் தவிரத் தமிழகத்தில் கடந்தகாலங்களில் நடந்துவந்த பல்வேறு சாதி வன்முறைகளுக்கு உரிய எதிர்வினையை ஆற்றாத திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி போன்றோர் சம்பவப் பகுதிகளுக்கு வந்ததோடு, கலப்பு மணத்திற்கு ஆதாரவான மாநாடு, போராட்டங்களை அறிவித்துள்ளனர். எனினும் தருமபுரிப் பிரச்சினையைக் கண்டிக்க அவர்களுக்குப் பிராமண எதிர்ப்பு அடையாளமும் தேவைப்படுகிறது. ‘பிராமணர்கள் கபே’ எதிர்ப்பு மட்டுமே போதாது, பிற ஆதிக்கச் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் எனத் தலித் செயல்பாட்டாளர்கள் பேசத் தொடங்கிய பிறகே எல்லாச் சாதிப் பெயர்களையும் நீக்குவதென்னும் மாற்றம் ஏற்பட்டது. எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஆதிக்கச் சாதிகளின் எதிர்ப்பைச் சார்ந்து பல்வேறு ஆதிக்கச் சாதிகளும் கலப்பு மணத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ள நிலையில், கொளத்தூர் மணியின் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் போராட்ட அறிவிப்பில் எதிர்ப்பிற்குரிய முதல் சாதியமைப்பாகப் பிராமணர் சங்கத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. பிராமணர் சங்கம் எதிர்க்கப்படக் கூடாதது என்பதும் நம் கருத்தல்ல. மாறாகப் பெரும்பான்மை வன்முறையை எதிர்ப்பதற்குப் புழக்கத்திலிருந்து வரும் அரசியல் நம்பிக்கை தேவைப்படுகிறது. இங்குப் புதிதாய் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள யாரும் தயாராயில்லை.

கலப்புத் திருமணத்துக்கு எதிரான காடுவெட்டி குருவின் பேச்சைக் கண்டிப்பதிலும் போராட்டம் நடத்துவதிலும் அக்கறை காட்டும் பெரியாரிய அமைப்புகளும் பல்வேறு முற் போக்கு அமைப்புகளும் கவுண்டர், வன்னியர் போன்ற பெரும்பான்மைச் சாதியினர் இம்முடிவுக்கு வந்தடைந்த விதத்தையும் அவர்களிடம் தீவிரம்பெற்றுள்ள தலித் வெறுப்பையும் ஆராய வேண்டும். இட ஒதுக் கீட்டுக்காகப் போராடிய சாதிகள் என்பது முதற்கொண்டு இன்றுவரையிலும் அச்சாதிகளிடம் இட ஒதுக்கீடும் அரசியல் அதிகாரமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அளவிலும் அச்சாதிகள் மத்தியிலும் செயல்பட்டுவந்த சாதி சாராத அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் தீண்டாமையையும் தலித்துகள் பற்றிக் கொண்டிருந்த சித்தரிப்புகளையும் பரிசீலிக்க வேண்டும். இத்தகு மாற்றங்களையெல்லாம் கொண்டு அதற்கேற்பச் சாதி மறுப்புச் சொல்லாடல்களைக் கட்டமைக்காதபட்சத்தில் இதுபோல் ஆண்டுக்கொரு காடுவெட்டி குருவை நாம் கண்டிக்க வேண்டிவரலாம். இந்திய அளவிலான பிராமண அதிகாரம் தகர்ந்துவிடவில்லையெனினும் வட்டார அளவிலான பெரும்பான்மை ஆதிக்கச் சாதி அதிகாரம் வலுவடைந்திருப்பதையும் தேவையெனில் அது பிராமண அதிகாரத்தோடு கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதோடு பிராமணர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்கிறது. இவ்வாறு சாதி தரும் அதிகாரம் ஒடுக்கப்பட்ட சாதிகளை அமுக்கிவைப்பதோடு இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. இந்திய ஜனநாயகத்திற்குச் சாதிப் பெரும்பான்மைவாதம் பெருந்தடையாக மாறும் என்ற அம்பேத்கரின் கவலை நடை முறையில் நிரூபணமாகிவருவதைப் பார்க்கிறோம்.

காடுவெட்டி குருவின் கலப்பு மண எதிர்ப்பு உரையோடு முரண்படும் அமைப்புகள் பலவும் சாதிப் பெரும்பான்மைவாதத்தைக் கண்டுணராதது மட்டுமல்ல அதையே கடந்த காலங்களில் சமூக நீதி என்று பேசியும் செயல்பட்டும்வந்துள்ளன என்பதுதான் சாதிசார்ந்து இன்றைக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கிலெடுக்காமல் போவதற்கான முக்கியக் காரணமாகும். மொத்தத்தில் இன்றைக்குச் சாதி என்பது தீண்டாமையா பண்பாட்டு அடையாளமா அதிகாரமா அல்லது இவையெல்லாம் இணைந்த வடிவமா? இத்தகு அம்சங்களில் கூர்மையடைந்திருப்பதும் மழுங்கிப் போயிருப்பதும் எவையெவை? இப்படியெல் லாம் இன்றைய உலகமயமாதல் சூழலில் ஆழமாக அணுகிச் சாதியச் சொல்லாடலைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. அத்தகு அக்கறை நம் சூழலில் அழுத்தம் பெறாததாலேயே நம் சமூகம் சாதிய வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி, திராவிட அமைப்புகளில் பெரியாரிய அமைப்புகள் தவிரப் பிரதானக் கட்சிகள் வன்முறையை மட்டும் கண்டித்திருக்கின்றன. காடுவெட்டி குருவின் பேச்சையோ சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பையோ அவை பேசாமல் தவிர்த்துள்ளன. மதிமுக சார்பாகக் குழுவொன்று அக்கிராமங்களுக்குச் செல்லும் என்னும் வைகோவின் அறிக்கை சாதி, தலித், ஒடுக்குமுறை போன்ற எந்தச் சொல்லும் இடம்பெறாமல் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ராமதாஸின் சாதி மறுப்புத் திருமண எதிர்ப்பைவிடத் திராவிட அடையாளம்மீதான அவரது எதிர்ப்பே திராவிடக் கட்சிகளை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது. ராமதாஸுக்கு எதிரான பெரியாரிய இயக்கங்களின் எதிர்ப்பில் இந்த அம்சத்திற்கும் இடமுண்டு. கடந்த நவம்பர் 18ஆம் தேதி மறைமலைநகர் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி திராவிட அடையாளத்துக்கு எதிரான ராமதாஸின் விமர்சனத்தை மறைமுகமாகச் சாடியிருந்தாரே ஒழிய அவரது அண்மைக்காலச் சாதியப் பேச்சுக்கு எதிராக எந்தச் சொல்லும் உதிர்க்கவில்லை. திராவிட அடையாளத்தின் முக்கிய அம்சமாகக் கொள்ளப்பட்டிருந்த பிராமண எதிர்ப்பினூடான சாதிய எதிர்ப்பை மீண்டும் பேசிச் சாதி சார்ந்த ஓட்டுகளை இழப்பதை விடத் திராவிடமா தமிழனா எனப் பேசிவிடுவது கருணாநிதிக்குச் சுலபம். அதிகாரிகளால் வழங்க முடிந்திருக்கிற அரசு உதவித் தொகையை அமைச்சர் ஒருவரை அனுப்பி வழங்கச்செய்வதன் மூலம் தன் தரப்பை நிறுவிக்கொள்ளப் பார்க்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆதிக்க சாதிகள் பற்றியோ வட்டாரரீதியான பெரும்பான்மை சாதிகள் பற்றியோ வெளியாகும் தவறான சித்தரிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டமும் கண்டனங்களும் தெரிவிப்பது மட்டுமல்ல ஒரு அரசே அவற்றுக்கு ஆதரவாக எதிர்வினையில் ஈடுபடுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கோ வாழிடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டாலும் அந்த நியாயம் பொருந்துவதில்லை. ஓட்டு சாராத ‘தமிழ்த் தேசிய’ அமைப்புகள் பலவும் இதைக் குறித்துப் பேசுவதையே தவிர்த்துள்ளன. கண்டனம், எதிர்ப்பு என்ற வகையில் திராவிட இயக்கம் சாதகமாகத் தெரிகிறபோதிலும், தலித் அக்கறை என்ற அளவில் திராவிடத் தேசியத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் தூரம் அதிகமில்லை என்பதே உண்மை.

                                                                                  o

தர்மபுரி நாயக்கன் கொட்டாய்ப் பகுதியில் நடந்த வன்முறை என்ற அளவில் இந்தப் பிரச்சினை அரசியல்ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது. 1980களில் நக்சல்பாரி இயக்கம் செயல்பட்ட பகுதி இது. இரட்டைத் தம்ளர் ஒழிப்பு போன்ற தீண்டாமை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்ட நக்சல்பாரிச் செயல்பாட்டாளர்கள் காவல் துறையால் கொல்லப்பட்டனர். அதேபோல வன்னியர்களைப் பொறுத்தவரை கடலூர், அரியலூர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய தமிழ்த் தேசிய குழுக்கள் செயல்பட்டுள்ளன. இது போன்ற காலங்களில் அமுங்கிப் போயிருந்த சாதி உணர்வு 1987 வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது ஒன்று திரட்டப்பட்டது. வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டபோது, சிதறிக்கிடந்த தமிழ்த் தேசிய குழுக்களும் கட்சி சாராமல் செயல்பட்டுவந்த மார்க்சியர்களும் அக்கட்சியை ஆதரித்தனர். எஸ்சி - பிசி ஒற்றுமை மேடைகளில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாமக தேர்தல் கட்சியாக மாற்றம்பெற்றபோது, அது வன்னியர்களின் சாதி உணர்வை முன்னெடுத்தது. நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அதிகாரத்தை எட்டுவதற்காகச் சாதித் திரட்சியும் அதற்கான சாதி உணர்வும் பயன்படும் என்கிறபோது சாதி மறுப்பு போன்று சவாலான நிலைப்பாட்டை எடுக்காமல் சமூகத்தின் சாதியப் புத்தியைப் பயன்படுத்திக்கொள்வதோடு அதைக் கூர்மைப்படுத்தும் செயல்பாடுகளிலும் பாமக ஈடுபட்டது. அக்காலகட்டத்தில்தான் கடலூர் மாவட்டத்தில் தலித்துகள் மத்தியில் பரவிய விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் வன்னியர்களால் வன் முறையோடு எதிர்கொள்ளப்பட்டது.

தர்மபுரி வன்முறையில் கணக்கில்கொள்ள வேண்டிய மற்றுமொரு அரசியல் காரணி பாமக - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி பற்றியதாகும். வன்னியர்களையும் தலித்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்களாகச் செயல்பட்ட இக்கட்சிகள் கடந்த பத்தாண்டுகளாக அரசியல் தளத்தில் இணைந்து செயல்பட்டதால் இச் சமூகங்களிடையே சாதகமான மாற்றங்கள் உருவாகும் என எதிர் பார்க்கப்பட்டது. தங்கள் கூட்டணிக்கான நியாயமாக அக்கட்சிகளும் சமூக நல்லிணக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தின. ஆனால் இக்கூட்டணி வெறும் தோற்றமே என்பதைத் தருமபுரி எதார்த்தம் காட்டியிருக்கிறது. வன்னியர்கள் மத்தியில் இக்கூட்டணி எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே அறிய முடிகிறது.

இவ்விரண்டு கட்சிகளின் அடையாளரீதியான கூட்டணி, உள்ளூர் நிலவரம் ஆகியவற்றை அறிந்தவர்களுக்கு இத்தகைய அனுபவம் வியப்பானதாக இருக்க முடியாது. முரண்படும் இரண்டு வகுப்பினரின் கட்சிகள் என்ற முறையில் முரண்பாட்டுக்கான காரணம், அதைக் களைவதற்கான தொடர்முயற்சிகள் என்பதாக இக்கட்சிகளின் கூட்டுச் செயல்பாடுகள் அமையவில்லை. மாறாகத் மொழி போன்ற எளிதில் உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினைகளின் அடிப்படையில் இக்கூட்டணி அமைந்தது. தமிழ் அடையாளம் என்னும் அளவில் கல்விமொழி, நிர்வாக மொழி என்றுகூட ஆக்கபூர்வமாக அமையாமல் சினிமா பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்ற அளவில் உணர்ச்சிபூர்வமான செயல்களோடு நின்றுகொண்டன. சாதி மறுப்பு என்ற செயல்திட் டத்தோடு முரண்பட்டு வாழும் மக்கள் குழுவினரிடம் சென்று செயலாற்றும் சவாலான நிலைமையை அக்கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உண்மையில் இக்கூட்டணி தேர்தலில் இரு பெரும்பான்மை வகுப்பினரின் ஓட்டுகளைத் திரட்டும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. எனவே சாதிய அமைப்பு ஒழுங்கில் எவ்வித உடைவையும் ஏற்படுத்தாமல் முற்றிலும் வேறொரு அடையாளத்தின் பெயரால் இக்கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல் நம்பிக்கையான தமிழ் அடையாளம்தான் இக்கூட்டணிக்கான காரணமாக அமைந்தது. அக முரண்பாடுகளை மறைத்துப் பொது எதிரியொருவரைக் காட்டி ஒன்று திரளும் அரசியல் உத்தி, உணர்ச்சிபூர்வமாக ஒன்று திரளுதல் என்ற வகையில் தமிழ் அடையாளம் அவர்களுக்கு உதவ முடியும் எனக் கருதப்பட்டது. இரண்டு வகுப்பினரின் அரசியல் அதிகார நிலைப்பாடுகளோடு தமிழ் அடையாளத்தை இணைப்பதில் நிறைய முரண்பாடுகள் இருந்தன. தேர்தல் மூலமான அரசியல் அதிகாரம் என்னும்போது சாதியாகவும் பிறவேளைகளில் தமிழ் உள்ளிட்ட முற்போக்கு அடையாளமாகவும் மாறிவந்ததே ராமதாஸின் கடந்தகால வரலாறு. பெரும்பான்மை சாதி என்ற முறையில் வன்னியர்களின் கட்சி ஆளும் கட்சியாக மாற வேண்டுமானால் முதலில் திராவிடக் கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு பெரும்பான்மைச் சாதி ஒன்றோடு சேர வேண்டும். இந்த நிலைமையில் வன்னியர்களுக்கு அடுத்துப் பெரும்பான்மையான தலித்துகளோடு கூட்டு சேர ராமதாஸ் விரும்புகிறார். சொந்தச் சாதித் திரட்சியையும் விட்டுவிடாமல் மற்றுமொரு சாதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தமிழ் அடையாளம் ராமதாஸுக்குக் கைகொடுத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரையில் திராவிடக் கட்சிகளின் பெரும்பான்மைவாத அரசியலால் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் குரலைப் பிரதிபலித்து எழுச்சிபெற்ற அமைப்பாகும். தலித்துகளைத் திரட்டுவதில் வேகம் காட்டிய அந்த இயக்கம் அரசியலில் தலித் சார்பான குரலெழுப்பும் குழுவாக மாறியது. எனினும் தேர்தல் கட்சியாக வடிவமெடுத்த இக்கட்சியும் பாமகவின் அரசியல் நோக்கத்தை ஒத்த பண்புக்கு இணங்கியது. பெருவாரியான மக்கள் திரட்சியின் நோக்கமான சாதி ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான செயல்பாடு என்பதை விடுத்துத் திருமாவளவனின் சொந்த விருப்பமான தமிழ் அடையாளம் கட்சியின் பிரதான முழக்கமாயிற்று. தமிழ் அடையாளமானது ராமதாஸைச் சார்ந்து வன்னியர்களிடம் பெற்றிருக்கும் அழுத்தத்தைவிடத் திருமாவளவனைச் சார்ந்து தலித்துகளிடம் பெற்றிருக்கும் அழுத்தம் அதிகம். எனவே இங்கே தமிழ் அடையாளம் அரசியல் நோக்கத்திற்கேற்பக் கையாளப்பட்டு உண்மையில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய சாதி மறுப்பு சார்ந்த செயல்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில்தான் தருமபுரியில் தமிழைச் சாதி தின்று தீர்த்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தை முன்னெடு¢த்த காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்காக அதிக விலை கொடுத்திருக்கிறது. சாதி எதிர்ப்பை எதிர்கொள்வதில் ஏற்பட்டுவிட்ட சமரசங்களே அவை. மாவீரர் தினத்திற்குத் தன்னெழுச்சியாகப் போஸ்டர் ஒட்டும் அக்கட்சியினரிடமிருந்து தருமபுரிச் சம்பவத்திற்கு எதிராகத் தமிழகத்தில் எங்கும் சிறு சுவரொட்டியோ மறியலோகூட இல்லாமல் போனது இயல்பானதல்ல. தருமபுரியில் பத்திரிகையாளர் ஒருவர் வன்முறைக்குப் பிறகு வன்னியர்கள் பயப்படுவது எஸ்சி-எஸ்டி சட்டத்திற்கு மட்டுமே என்று என்னிடம் கூறியது பொய்யல்ல.

ஈழ அரசியல் விஷயத்திலும் ராமதாஸுடன் கசப்பான அரசியல் அனுபவம் என்ற முறையிலும் திருமாவளவன் அனுதாபம் தேடுவதை விடுத்து ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் தலைவர் என்னும் முறையில் பொறுப்போடு கற்றுக்கொள்வதற்கான அனுபவங்களை இந்த அரசியல் சூழல் அவருக்குத் தந்திருக்கிறது. தர்மபுரி வன்முறைக்குப் பிறகு ராமதாஸை நோக்கிய சீறல், ஆர்ப்பாட்டம் என்பதைத் தாண்டி மற்ற எவற்றையும் அவர் செய்யத் தெரியாமல் இருப்பதையே பார்க்கிறோம். இப்பிரச்சினையை அவர் மைய நீரோட்ட அரசியல் லாபியில் வைத்தே பேச முனைகிறார். தலித் பிரச்சினைகளை உடனடி தேர்தல் நோக்கில் இல்லாமல் பரந்த அளவிலான அணுகுமுறையை நோக்கி எடுத்துச்செல்லும் தொலைநோக்கு எதுவும் அவரிடம் இல்லை. தர்மபுரிப் பிரச்சினையில் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்க விரும்பும் ஊடகங்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக நின்றுகொள்ள விரும்புகின்றன. வன்முறைக்கு பிறகான ராமதாஸ் கருத்துகளையும் திருமாவளவன் கருத்துகளையும் ஒப்பிட்டு திருமா வளவனின் பக்குவம் பற்றி பேசப்படுகிறதே ஒழிய சாதி எதிர்ப்பு அரசியல் பயணத்தில் திருமாவளவனின் கடந்தகால செயல்பாடுகளின் விளைவுகள், தர்மபுரி போன்ற பிரச்சினைகளின்போது சடங்காகிவிட்ட ஆர்ப்பாட்டங்கள் என்பதைத் தாண்டி இப்பிரச்சினைகளில் அவரின் ஆக்கபூர்வ அழுத்தம் என்னவாக அமையப்போகிறது என்ற விமர்சனக் கண்ணோட்டத்திலான அணுகுமுறை முன்வைக்கப்படவில்லை.

ஏறக்குறையப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணியைக் காட்டித் தலித்துகளை எதிர்கொள்ளும் அரசியல் முயற்சி எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது. கொங்கு வேளாளர் பேரவையின் மணிகண்டன் கலப்புத் திருமண எதிர்ப்பை வலியுறுத்தி மாநாடு அறிவித்திருப்பதும் ஏனைய சாதி இந்துச் சமூகங்களை ஒன்றிணைக்க முயல்வதாகக் கூறுவதும் சாதிச் சங்கத்தின் குரல் மட்டுமல்ல. தமிழகத்தில் கடந்தகால முற்போக்கு நடவடிக்கைகளின் பலனை அறுவடைசெய்து கொண்ட இயக்கங்களின் குரலாகவும் மாறியிருப்பதைப் பார்க்கிறோம். தர்மபுரி வன்முறை குறித்துக் கருத்து தெரிவித்த ராமதாஸ் வன்முறையை நியாயப்படுத்தியிருப்பதோடு தலித்துகளுக்கு எதிரான மற்ற சாதி இந்துச் சமூகங்களின் பிரதிநிதியாகவும் குரலெழுப்பத் தயாராகி நிற்பதையும் பார்க்க முடிகிறது. தர்மபுரி தலித் மக்களின் துயரம் இவர்களை அசைக்காதது மட்டுமல்ல அதைத் தலித் மக்களுக்கான எச்சரிக்கை யாகவும் சாதி இந்துக்களுக்கான முன்னு தாரணமாகவும் மாற்ற இவர்கள் தயாராகிவருகின்றனர். இச்சூழல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டியதாகவும் இருக்கிறது. பிராமணர் x பிராமணர் அல்லாதார் என்ற எதிர்வைக் காட்டிக் கொண்டிருந்தாலும் நம் சூழல் தலித் x தலித் அல்லாதார் என்னும் எதிர்வாக மாறியிருப்பதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம். நம் விவாதத்தை வேரிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

நன்றி :  காலச்சுவடு